நேரம்:

புதன், 15 மே, 2013

நடப்பதெல்லாம் அவலம்..!!



இன்றைய காலத்தில் தொலைக்காட்சிகள் தொல்லைக்காட்சிகளாக மாறிவிட்ட நிலையில் அதில் வன்முறை, முறையற்ற பாலுறவு, கலாச்சார சீர்கேடுகள் இல்லாத நிகழ்ச்சிகளை, தொடர்களை திரைப்படங்களை பார்ப்பது என்பது அரிதாகி விட்டது. குறிப்பாக குழந்தைகள், இளம் வயதினர் இருக்கும் குடும்பங்களில் தொலைக்காட்சியை மிகவும் கவனத்துடன் பயன்படுத்துவது என்பது இன்றைய காலத்தின் கட்டாயம்.

ரியாலிட்டி ஷோ மற்றும் டாக் ஷோ என்ற பெயரில் தொலைக்காட்சியின் மூலம் வெளிப்படும் உண்மைகள் நம் சமூகம் எத்தனை சிதைந்தும், சீர்குலைந்தும் போய் இருக்கிறது என்பதை காட்டுகிறது. விஜய் டிவியின் நீயா நானா மற்றும் ஜி தமிழ் தொலைக்காட்சியின் சொல்வதெல்லாம் உண்மை போன்ற நிகழ்ச்சிகளை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம். அதுவும் குறிப்பாக சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி ஏற்படுத்தும் அதிர்வுகள், வெளிப்படுத்தும் அவலங்கள் காண்பவர்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. குடும்ப உறவுகளுக்குள் எத்தனை கோபம், குரோதம், வன்முறை, துரோகங்கள் இருக்கின்றன என்பதை உணரும் போது குடும்ப உறவுகள் பாதுகாப்பானவை, பிரச்சினைகள் அற்றவை என்ற எண்ணமே பலவீனப்படுகிற உணர்வே ஏற்படுகிறது.

சமீபத்தில் ஒளிபரப்பப்பட்ட சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியில் வெளிப்பட்ட உண்மைகளை அறிந்தால் நீங்கள் அதிர்ந்தே போவீர்கள். ராஜி என்ற 35 வயதுக்கு மேலான ஒரு பெண். அவளின் கணவன் ஒரு குடிகாரன் மற்றும் சந்தேகப் புத்திக்காரன். வேலைக்கு போவதில் இஷ்டமில்லாதவன், அப்படியே போனாலும் சம்பாத்தியத்தை மனைவிக்கு தராதவன். அவர்களுக்கு 4 குழந்தைகள். அதில் 2 வயதுக்கு வந்த மகள்கள் மற்றும் 2 மகன்கள். இதில் ஒரு மகன் ஏதோ காரணத்தால் இறந்து விட்டான். அடுத்த மகன் ஒரு கொலையில் சம்பந்தம் என்று குற்றம் சாட்டப்பட்டு ஜெயிலில் இருக்கிறான். அவனுக்கு ஒரு நண்பன். ஆண் பிள்ளை துணை இல்லாத வீட்டில் உதவிகள் செய்ய வருகிறான் புஷ்பராஜ் என்கிற 20 வயதிற்குட்பட்ட நண்பன். கணவனால் பல வகைகளில் கஷ்டப்பட்ட, ஏமாற்றம் அடைந்த ராஜிக்கு புஷ்பராஜ் உறவு ஆறுதலாக அமைகிறது. நண்பனின் தாய் என்பதால் அவளை அம்மா என்றே அழைக்கிறான்.

ஒரு கட்டத்தில் இருவரின் நெருக்கம் கூடி போய் அவர்களுக்குள் தவறான உறவு உண்டாகிறது. கணவன், தாய், புஷ்பராஜின் பெற்றோர், உறவுகள் என்று பலரும் கண்டித்தும் இருவரும் உறைவை முறித்துக்கொள்ள தயாரில்லை. இந்த சூழ்நிலையில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் வந்து கலந்து கொண்டார்கள் இருவரும். தாயை போன்ற நண்பனின் தாயோடு கள்ள உறவு என்ற அதிர்ச்சியில் நாம் உறைந்து இருக்கும் பொழுது அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக வருகிறது மேலும் சில அசிங்கமான உண்மைகள்.

ராஜியோடு நெருங்கி பழகியதால் அவர்கள் குடும்பத்தில் ஒன்றிய புஷ்பராஜ் அடுத்து செய்த காரியம் ராஜியின் மூத்த மகளான கல்கியை காதலிப்பதாக கூறி ஏமாற்றியிருக்கிறான். அந்த அப்பாவி பெண்ணும் நம்பி மோசம் போய் இருக்கிறாள். ஒரே நேரத்தில் அந்த அயோக்கியன் தாய், மகளை ஏமாற்றி இருக்கிறான் என்பதறிந்து அனைவருக்கும் பேரதிர்ச்சி. இந்நிலையில் நிகழ்ச்சியில் ராஜி, அவளின் கள்ளக்காதலன் புஷ்பராஜ், அவளின் இரு மகள்கள், ராஜியின் கணவன், புஷ்பராஜின் பெற்றோர் கலந்து கொண்டனர். நடந்த விஷயங்கள் அனைத்தும் வெளிச்சத்துக்கு வந்தது, புஷ்பராஜ் ராஜியின் மகளை காதலிப்பதாக ஏமாற்றியதை தவிர. அதுவும் இறுதியில் அனைவருக்கும் தெரிந்து போனது.

ராஜியின் கணவன் அவள் திருந்தி வந்தாள் ஏற்றுக்கொள்ள தயார் என்று கூறினான். ஆனால் ராஜிக்கு அவனோடு வாழ்வதில் இஷ்டமில்லை. புஷ்பராஜின் பெற்றோரோ தங்கள் பிள்ளை தனக்கு வேண்டும் என்று கண்ணீர் விட்டனர். ஆனால் புஷ்பராஜ்க்கு ராஜி இல்லாமல் வாழ முடியாது என்று (கள்ளக்)காதல் வசனம் பேசினான். நிகழ்ச்சியின் போது புஷ்பராஜ் ராஜியின் மகளை ஏமாற்றிய விஷயம் வெளிவந்த போது ராஜிக்கு பெரும் அதிர்ச்சி. தன்னிடம் நடித்து துரோகம்(!) செய்த "அவன் இனி எனக்கு வேண்டாம்" என்று சொன்னாள். இதனால் பெரும் வேதனையான புஷ்பராஜ் தன்னை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் படி கண்ணீருடன் அவள் காலில் விழுந்து மன்றாடினான்.

இந்த நிகழ்ச்சியை நடத்தும் லட்சுமி ராமகிருஷ்ணன் இந்நிகழ்ச்சியில் செய்ய முயற்சி செய்த முடிவுகள்:

1. ராஜியின் மகள் காதலில் ஏமாற்றிய புஷ்பராஜின் பக்கமே இனி போகக்கூடாது. இடையில் நிறுத்திய பள்ளிப்படிப்பை தொடர வேண்டும்.

2. புஷ்பராஜ் ராஜியை மறந்து பெற்றோருடன் வாழ வேண்டும்.

3. ராஜி நடந்ததை மறந்து கணவனுடன் சேர்ந்து வாழ வேண்டும்.

இறுதியில் புஷ்பராஜ் பெற்றோருடன் சேர்ந்து வாழ ஒத்துக்கொண்டு அவர்களுடன் கிளம்பி சென்றான். ஆனால், ராஜி இறுதி வரை கணவனுடன் வாழ மறுத்துவிட்டாள்.

இத்தனை அசிங்கங்கள் அரங்கேறிய அந்த நிகழ்ச்சியில் ஆறுதலான விஷயம் என்றால் புஷ்பராஜ்க்கு விழுந்த அடிகள் மற்றும் கிடைத்த அவமானம் தான்.

இது போன்ற நிகழ்ச்சிகள் சம்பந்தவர்களை திருத்திவிடும் என்றோ, பெரும் சமூக மாற்றத்தை ஏற்படுத்தி விடுமென்றோ எனக்கு தோன்றவில்லை. ஆனால், நாம் அறியாத, நம் எண்ணங்கள் மற்றும் கற்பனையையும் தாண்டிய கேவலமான விஷயங்கள் சமூகத்தில் இன்றும் நடந்து கொண்டிருக்கிறது என்பதை உணரவும், சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி இது போன்ற கலாசார அதிர்ச்சி தரும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி தன் டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்திக்கொள்ளவும் மட்டுமே பயன்படும் என்பது தான் உண்மை. 


கணவன் மனைவி இருவருக்கிடையே இருக்க வேண்டிய காதல், அன்பு, பாசம், புரிதல், விட்டுக்கொடுத்தல், அர்ப்பணிப்பு, சம உரிமை, அதே போல் குழந்தைகள் மேல் பெற்றோர் காட்ட வேண்டிய பாசம், அக்கறை, கண்டிப்பு ஆகியவை இல்லாத பட்சத்தில் எந்த குடும்பத்திலும் இது போன்ற அவலங்கள் ஏற்பட வாய்ப்புண்டு என்பது தான் இந்நிகழ்ச்சிகள் மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.!!!
Related Posts with Thumbnails