நேரம்:

சுவையான அனுபவங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுவையான அனுபவங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 7 டிசம்பர், 2011

”ஒஸ்தி”யான பாட்டு..! (கொலவெறி Ver.02)


என் தோழிக்கு சினிமா பாட்டு அதிகம் பிடிக்காது...!! ரொம்பவே செலக்டிவா, மெலடியா கேட்கிற இரசனை உள்ளவர். குத்துப்பாட்டு, சிம்பு போன்றவர்களின் பாட்டுன்னா வேப்பங்காய் கசப்பு..!! நேத்து திடீர்னு ச்சேட்ல வந்து “ஒஸ்தி பட பாட்டு கேட்டீங்களா..?”னு கேள்வி..எனக்கு என்னையே நம்ப முடியல...காரணம் ஒஸ்தி சிம்பு படம்..!

இல்லையே ஏன்னு கேட்டேன். இன்னும் கேட்கலையா..? அதெல்லாம் கேட்காம என்ன தான் இண்டர்நெட்ல பொழுதை கழிக்கிறீங்களோன்னு மிரட்டல் கேள்வி. ”அந்த பாட்டை முதல்ல கேளுங்க.. அதைக் கேட்டா நீங்க பாடுறது போலவே ஃபீல்”னு பில்டப் வேற..!! இதென்னடா மதுரைக்கு வந்த சோதனை..? அப்படி என்னதான் சிம்பு பாட்டில் இருக்குனு எனக்கு ஒரே கேள்வி.( அத்தோட விடாம “எவ்ளோ அழகான, அர்த்தமுள்ள வரிகள்...அந்த பாட்டை கேட்கவே சந்தோஷமா இருக்கு”ன்னு ஒரே புலம்பல். முதலில் ”அதை கேட்டுட்டு அப்புறம் வந்து பேசுங்க”ன்னு சொல்லிட்டு .ஃபோன் கட்..!! சரி அப்படி என்ன தான் அந்த பாட்டுல இருக்கு, அதுவும் சிம்பு படப்பாட்டுலனு இண்டர்நெட்ல தேடி எடுத்து கேட்டா.... அடப்பாவிகளா.....இதுக்கு பேர் தான் கொல வெறியா..? பெண்கள் எப்பவும் பெண்களா தான் இருக்காங்கப்பா.!!


கீழே இருக்கிறது தான் அந்த “ஒஸ்தி”யான பாட்டு..!!

ஏ...ஏ... வாடி வாடி க்யூட் பொண்டாட்டி...
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி...
அடி.. அடி.. வாடி வாடி என் ஹாட் பொண்டாட்டி...
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி...
பொண்டாட்டி அடி நீதானே என் ஸ்வீட்டி


ஒஸ்தியில் லவ் யூ டில் யூ ஆர் ஏ பாட்டி...
தேவையில்லை வாப்பாட்டி..
நல்ல கணவனா நான் இருப்பேன்..
ஒரு உத்தமனா நடப்பேன்..
உன் தொல்லை எல்லாம் பொறுப்பேன்..
உன் கஷ்டத்த நான் குறைப்பேன்...
உன் கண் கலங்க விட மாட்டேன்...

ஏ...ஏ... வாடி வாடி க்யூட் பொண்டாட்டி...
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி...
அடி.. அடி.. வாடி வாடி என் ஹாட் பொண்டாட்டி...
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி...

காபி கொடுத்து காலையில நானே உன்னை எழுப்பி விடுவேன்..
சமைக்க தெரியலனா நானே சமையல் செஞ்சு உனக்கு ஊட்டி விடுவேன்..

உன்னை நான் என்னைக்குமே சந்தேகப்பட மாட்டேன்...
என்னை நீ சந்தேக படுற மாதிரி நடக்க மாட்டேன்...
உன் உயிரா நான் இருப்பேன்.. என் உயிரா உன்னை நினைப்பேன்...
என் நெஞ்சில உன்னை சுமப்பேன்...
உன்னை டெய்லி நான் ரசிப்பேன்..
உன் நிழல போல நான் இருப்பேன்...

ஏ...ஏ... வாடி வாடி க்யூட் பொண்டாட்டி...
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி...
அடி.. அடி.. வாடி வாடி என் ஹாட் பொண்டாட்டி...
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி...

உனக்கு முன்னாடி சத்தியமா என் உசுரு என்னை விடாது...
ஏன்னா நான் போயிட்டா உன்னை யாரும் விதவையா பாக்க கூடாது...
என்னை விட்டா உன்ன எவண்டி பாத்துப்பான்...
நல்ல பாத்துப்பேன் சொல்லி பொய்யா நடிப்பான்...
ஒரு தகப்பன் போல இருப்பேன்.. ஒரு தாய போலவும் இருப்பேன்...
உன் நண்பன் போல நடப்பேன்.. அந்த கடவுள் போல காப்பேன்...
உன் குழந்தையாவும் நான் பொறப்பேன்..

ஏ...ஏ... வாடி வாடி க்யூட் பொண்டாட்டி...
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி...
அடி.. அடி.. வாடி வாடி என் ஹாட் பொண்டாட்டி...
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி...

ஐ லவ் யூ டி மை பொண்டாட்டி....



அந்த பாடலை கேட்க...




 பின் குறிப்பு:
எனக்கும் அவங்க போலவே ஒரு நல்ல, புகழ் பெற்ற பாட்டை அறிமுகப்படுத்த தான் ஆசை.. ஆனா அந்த பாட்டு ஆரம்பிப்பதே ”ஒய் திஸ் கொல வெறி  கொலவெறிடி..!”னு தான்... அதான் யோசிக்கிறேன்...அவ்வ்வ்வ்வ்வ்..!!

திங்கள், 29 மார்ச், 2010

பெரியார்தாசன் இறைநேசன் ஆன கதை..!! (02)

பெரியார்தாசன் என்கிற அப்துல்லாஹ்வை பற்றி நிறைய சுவையான சம்பவங்கள், சிறந்த சிந்தனைகள், அழகான தத்துவார்த்த எண்ணங்கள் பல இருந்தாலும் நேரமின்மை காரணத்தால் எழுத முடியவில்லை. அவரைப்பற்றிய இந்த பதிவை முடிக்கும் வண்ணமாக அவரின் குடும்பம், இளமைப்பருவம், பால்ய நண்பர்கள், பெரியார் கொள்கைகளில் ஈடுபாடு, தீவிர கடவுள் மறுப்பு கொள்கை பரப்புதல், அம்பேத்காரால் கவரப்பட்டு புத்த மதத்தில் இணைதல், இஸ்லாத்தின் மீது ஏற்பட காரணமாக இருந்த நிகழ்வுகள், இஸ்லாத்தில் தன்னை இணைத்துக்கொள்ளுதல் ஆகிய அனைத்தையும் அவரின் வாய் மொழியின் வாயிலாகவே சொல்கிறார். அவர் சார்ந்திருந்த கழகம், கொள்கை, இப்போது இணைந்திருக்கும் மார்க்கம் என்று எதையும் மனதில் இருத்தாமல் அவரின் இந்த பேச்சை கேட்டால் நீங்கள் நிச்சயம் இரசிப்பீர்கள்..!! 40 வருடங்களாக தீவிர கடவுள் மறுப்பு  கொள்கையை பரப்பி வந்த ஒருவர் இத்தனை தீவிரம், ஈடுபாட்டுடன் ஒரு கடவுள் கொள்கையை ஓங்கி உரைப்பது ஏன் என்ற ஒரு கேள்வி உங்களை நிச்சயம் உலுக்கும்..!!


பகுதி - 1


பகுதி - 2



பகுதி - 3


பகுதி - 4



பகுதி - 5


பகுதி - 6

வியாழன், 25 மார்ச், 2010

பெரியார்தாசன் இறைநேசன் ஆன கதை..!! (01)


அங்கே நாத்திகம் தொடர்பான பிரமாண்ட கடவுள் மறுப்பு பொதுக்கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. அதில் தந்தை பெரியார் கலந்து கொண்டு பேசுகிறார் என்பதால் பெரும் கூட்டம் திரண்டிருக்கிறது. எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்திருந்த பெரியாரின் சிறப்புரை முடிந்து வேறொருவர் நன்றியுரை நிகழ்த்த வேண்டும். நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் அதற்கான ஆளை தேடிக்கொண்டிருக்கிறார்கள். பெரியாரின் பேச்சை கேட்ட மக்கள் கிடைத்த மகிழ்ச்சியில் அடுத்து வரப்போகும் நன்றியுரையை கேட்க பொறுமை இல்லாமல் கலைகிறார்கள். அந்த நேரத்தில் இவற்றை எல்லாம் மேடையின் ஓரமாக நின்று கவனித்துக்கொண்டிருந்த அந்த இளைஞன் திடீரென்று மேடையின் மேல் ஏறி மைக்கை கைப்பற்றுகிறான். ”கடவுள் இல்லை.. கடவுள் இல்லவே இல்லை” என்று இத்தனை நேரமும் திராவிட தோழர்கள் முழங்கிய அதே மேடையில் அந்த இளைஞன் முழங்கியது என்ன தெரியுமா..? “சாமியேஏஏஏஏய்.... சரணம் ஐயப்பா..!!! சபரி மலை சாஸ்தாவே.. சரணம் ஐயப்பா..!!” என்பது தான்..!! 

“பகுத்தறிவு பகலவன்” என்று புகழப்படும் பெரியாரின் மேடையில் இப்படி ஒரு நாத்திக முழக்கத்தை கேட்டதும் கலைந்து கொண்டிருந்த அதிர்ச்சியில் கல் சிலை போல் அப்படி நிற்கிறார்கள். குரல் வந்த மேடையின் திசை நோக்கி அதிர்ச்சியும், ஆர்வமுமாய் திரும்பி பார்க்கிறார்கள். இப்பொழுது மைக்கை கையில் பிடித்திருந்த இளைஞன் தன் பேச்சை “.....என்றெல்லாம் முழங்கி கொண்டிருப்பவர்களுக்கு எதிராய் நாத்திக கொள்கையை நிலை நாட்ட வந்திருக்கும் திராவிடர் கழக சிங்கங்களே..!!!” என்று முடிக்கிறான். கூட்டம் இளைஞனின் புத்திசாலித்தனத்தில் புல்லரித்துப்போய் அப்படியே அமர்ந்து அவன் பேச்சை கேட்க தயாராகிறார்கள். அதன் பிறகு அந்த இளைஞன் 45 நிமிடங்கள் அதே மேடையில் பேசுகிறான். நன்றியுரையை அவன் 45 நிமிடங்கள் நிகழ்த்தியதும், அதனை அத்தனை ஆர்வமுடன் குழுமியிருந்த மக்கள் கேட்டு ரசித்ததும் தமிழக பொதுக்கூட்ட வரலாற்றில் அது தான் முதல் முறையாக இருக்க வேண்டும்.!! 


அந்த இளைஞன் சாஸ்திர சம்பிரதாயங்கள் மிகுந்த ஒரு குலத்தில் பிறந்தவன். ஆனால் அவன் சிந்தனைகளோ அவன் குலத்திற்கு எதிரான நாத்திகத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. ஒரு நாள் அவனிருக்கும் ஊருக்கு அருகில் இருக்கும் ஊருக்கு பெரியாரின் பிரமாண்ட கடவுள் மறுப்பு தொடர்பான  பொதுக்கூட்டம் சில நாட்களில் நடக்கவிருக்கிறது. இவனின் நாத்திக சிந்தனைகளை அறிந்த திராவிடர் கழக தோழர் ஒருவர் பெரியாரின் வருகை குறித்து அவனிடம் சொல்லி, அதில் பேசுகிறாயா என்று கேட்கிறார். ஏற்கனவே பெரியாரின் கருத்துக்களில் அளவற்ற பற்று கொண்டிருந்த அவனும் அதை பெரும் பேறாக நினைத்து ஆவலுடன் அதற்கு சம்மதிக்கிறான். அடுத்து வந்த இரவுகளில் எல்லாம் தூங்காமல் அந்த  மேடையில் பேசுவதற்கு உரை தயாரிக்கிறான். பொதுக்கூட்ட நாளன்று மேடையில் பேசப்போவதை தன் தந்தையிடம் தெரிவிக்கிறான்.  நாத்திக மேடையில் பேசப்போகும் அந்த இளைஞனுக்கு அவன் தந்தை சொன்னது என்ன தெரியுமா..? “நல்லா சாமியை கும்பிட்டு விட்டு போய் மேடையில் ஏறி பேசு..!!” 

ஆனால் பாவம்.. அத்தனை கஷ்டப்பட்டு உரை தயார் செய்து கொண்டு போன அவனுக்கு பேச வாய்ப்பு அளிக்காமல் ஒவ்வொருவரும் பேசிக்கொண்டே போனார்கள். கடைசியாக நிகழ்ச்சியின் சிறப்பு பேச்சாளர் பெரியாரும் பேசி முடித்து விட்டார். அவனுக்கு தெரிந்து விட்டது, சிறப்பு பேச்சாளர் பேசி முடித்து விட்டார் என்றால் நன்றியுரையோடு பொதுக்கூட்டமே முடிந்து போகும் என்று..! ஆனால் அவன் நினைத்தது ஒன்று.. கடவுள் நினைத்தது ஒன்று..!! அப்படியென்றால் அன்று என்ன தான் நடந்தது..? அன்று நடந்ததை தான் முதல் பாராவில் படித்தீர்கள்..!!


இரசனைக்குரிய மேற்கண்ட நிகழ்ச்சியில் வரும் அந்த இளைஞன் வேறு யாருமல்ல, சமீபத்தில் இஸ்லாத்தை தழுவி தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பெரியார்தாசன் என்கிற அப்துல்லா தான்.!! ஒரு சிறு திருப்பம் நம்மில் பலரின் வாழ்க்கையை புரட்டிப்போட்டு விடும். அப்படி தான் கல்லில் கடவுளை கண்டு, அதை கண்ணெதிரே வைத்து வைத்து வழிபடும் குலத்தில் பிறந்த இவர், அந்த கல்லால் ஆன சிலைகளை உடைக்கும் கழக கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு பெரியார்தாசன் ஆனார். அதே பெரியார்தாசன் என்கிற நாத்திகவாதி கண்ணுக்கு தெரியாத நிலையிலும் கடவுளை வணங்கும் இஸ்லாம் மார்க்கத்திற்கு வந்திருக்கிறார். யார் இந்த பெரியார்தாசன்..? கருத்தம்மா திரைப்படம் வரும் வரை இந்த பெரியார்தாசன் யாரென்று எனக்கு மட்டுமல்ல, நம்மில் பலருக்கும் தெரியாது. அந்த திரைப்படத்தில் இவர் பெண் குழந்தையை கள்ளிப்பால் கொடுத்து கொல்லும் கொலைகார தந்தையின் வேடத்தில் நடித்திருந்தார். இவரின் பாமர தோற்றம், எளிய பேச்சு பெரும் ஆர்வத்தை அவர் மேல் எனக்கு ஏற்படுத்தவில்லை என்றாலும், அவர் பெயரின் முன் ஒட்டியிருந்த பேராசிரியர் பட்டமும், பெரியார்தாசன் என்ற அடை மொழியும் அவரை பற்றி அறியும் ஆர்வத்தை எனக்குள் விதைத்தது. 

பிறகு தெரிந்தது...அந்த பாமர தோற்றத்திற்குள் ஒரு பழுத்த பகுத்தறிவாளர் நிறைந்திருந்தார். சிறந்த சிந்தனாவாதி ஒளிந்திருந்தார். மனோவியலை கரைத்துக்குடித்த மனோதத்துவ நிபுணர் மறைந்திருந்தார். பட்டங்கள் பல பெற்ற படிப்பாளி மறைந்திருந்தார். பெரியாருடனான நேரடி தொடர்பு வைத்திருந்தவர் போன்ற அவரைப்பற்றிய தகவல்கள் எனக்கு பெரும் ஆச்சரியத்தை விதைத்தாலும், இத்தனை பெருமைகளுக்கு பிறகும் தளும்பா நிறை குடமாக அவர் காட்சியளித்தது அவரை என் மனதில் பெரிதும் உயர்த்தி கொண்டு சென்று வைத்தது. இந்துவாக பிறந்த இந்த சேஷாசலம், பிறகு நாத்திக கொள்கையில் ஈடுபட்டு பெரியார்தாசன் என்ற அவதாரம் எடுத்தார். பின் ”அன்பே கடவுள்” என உபதேசிக்கும் புத்தமதக்கொள்கைகளால் கவரப்பட்டு அதில் இணைந்து சித்தார்த்தன் ஆனார். பிறகு ஓரிறைக் கொள்கையை கொண்ட இஸ்லாமிய கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அப்துல்லாவாக ஆகியிருக்கிறார். அப்படி என்றால்... அடுத்து...?????????


(தொடரும்...!!)

ஞாயிறு, 29 ஜூன், 2008

அன்பின் வடிவில் ஆசிரியை..!!

முதன்முதலில் பெற்ற பரிசு நெஞ்சை விட்டு அகலாது என்றாலும், வேறு வகையில் சில பரிசுகள் நம்மை அதிகம் பாதித்திருக்கும். எனக்கே அறியாமல் எனக்குள் ஒளிந்து கிடந்த திறமையை வெளிக்கொணர்ந்து பரிசு பெற வைத்த என் ஆசிரியையின் பெருமையை என்றும் மனதை விட்டகலாத நிகழ்வாக உணர்கிறேன். என் நினைவுகள் 20 வருடங்கள் பின்னோக்கி நகர்கின்றன. அப்பொழுது நான் எட்டாவது படித்துக்கொண்டிருந்தேன். நான் படித்த பள்ளிக்கு ஒரு பெருமை உண்டு. அது முன்னாள் ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமன் படித்த பள்ளி. எங்களுக்கு அப்போது ஜாஸ்மின் என்ற அன்புருவம் வகுப்பு ஆசிரியையாக இருந்தார்கள். கனிவு, கண்டிப்பு இரண்டும் கலந்த அற்புத பெண்மணி அவர்கள். நான் அப்போது அதிகம் பேசாதவன் போல் இருந்தாலும், உள்ளுக்குள் குறும்பு ஒளிவீசிக்கொண்டிருக்கும்.

ஆசிரியர்களை நக்கல் அடிப்பது, அவர்களைப்போலவே நடப்பது, அவர்கள் பேசுவதை மிமிக்ரி செய்வது போன்றவற்றை செய்வேன். நான் நன்கு படிப்பவன் என்பதால் என் குறும்புகளை ஆசிரியர்களும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஆசிரியர்கள் வகுப்புக்கு வரும் வரை மேலே சொன்னவற்றை செய்து மாணவ நண்பர்களை மகிழ்விப்பேன். அவர்களின் பாராட்டு எனக்கு பெரும் ஊக்க மருந்தாக இருந்தது. எனக்கு மிமிக்ரி நன்றாக செய்ய வருகிறது என்று என்னை ஏற்றி விட்டதில் அப்போது ஒலிநாடாவில் தன் மிமிக்ரி நிகழ்ச்சிகளை வெளியிட்டு வந்த மயில்சாமி (இப்போதைய நடிகர்), இலட்சுமணன் (லஷ்மண் ஸ்ருதி இசைக்குழுவின் உரிமையாளர்) இரட்டையரின் ஒலிநாடா ஒன்றை உறவினரிடமிருந்து பெற்று, அதை அப்படியே பேசி பயிற்சி செய்து வந்தேன். நான் பயிற்சி செய்ததை பள்ளி வகுப்பில் பாடமில்லாத நேரங்களில் அவர்களிடம் செய்வேன். அவர்களும் என்னை ஆஹா..ஓஹோ என புகழ்வார்கள்..!

அந்த சூழ்நிலையில் அந்த ஆண்டின் பள்ளியின் இலக்கிய போட்டிகள் தேதி அறிவிக்கப்பட்டது. நான் வழக்கம் போல் பேச்சு, கட்டுரை போட்டிகளுக்கு பெயரை அளித்து விட்டு என் வேலை முடிந்ததாக இருந்து விட்டேன். ஒரு நாள் வகுப்பில் ஜாஸ்மின் அவர்கள் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது நடிப்பு, பலகுரல் போட்டிக்கு பெயர் கொடுக்குமாறு பள்ளியின் பணியாளர் எங்கள் வகுப்பிற்குள் வந்தார். ஜாஸ்மின் அவர்கள் பாடத்தை நிறுத்திவிட்டு "யார் யார் கலந்து கொள்ளப்போகிறீர்கள்..?" என்றார். ஒருவரும் வாயை திறக்காததால் ஆசிரியைக்கு பெரும் ஏமாற்றம். தன் வகுப்பு மாணவர்களில் ஒருவர் கூட இந்த போட்டிகளில் கலந்து கொள்ளும் தகுதியில் இல்லையே என்ற வருத்தமாக இருந்திருக்கலாம். பெரும் ஏமாற்றத்துடன் பெயர் எடுக்க வந்தவரை அனுப்பி விட்டார். என்னைப்பற்றி அவருக்கு அதிகம் அறிந்திருந்தாலும் என் பலகுரல் ஆர்வம் அவர் அறியாதது..!! என்னைப்பார்த்து "நீ பேச்சு, கட்டுரைப்போட்டிக்கு பெயர் கொடுத்துவிட்டாயா..?" என்று சந்தேகத்துடன் கேட்டார்..!! நடிப்பு, பலகுரல் போட்டிக்கான மாணவர்கள் கிடைக்காத மனநிலை அப்படி அவரை கேட்க வைத்தது. நான் எழுந்து "கொடுத்துவிட்டேன் டீச்சர்..!" என்றேன்..!! "இந்த போட்டியில் கலந்து கொள்ள ஒருத்தனுக்கு கூடவா விருப்பம் இல்லை..?" என்றார்கள். அப்போது கடைசி பெஞ்ச் அஞ்சாநெஞ்சன் சிதம்பரம் "பேரு கொடுத்த போதுமா..ஜெயிக்கணும்ல...?!!" என்று சொல்ல மாணவர்கள் கொல்லென்று சிரித்தார்கள்..!!

ஜாஸ்மின் அவர்களுக்கு கடும் கோபம்..!! "ஒருத்தனுக்கும் போட்டியில் கலந்துக்க துப்பில்ல.. பேச்சுக்கு மட்டும் குறைச்சலில்ல..!" என்று பொரிந்தார்கள். அப்போது "வில்லத்தன" குடியரசன் எழுந்து "டீச்சர்..***** சூப்பரா மிமிக்ரி பண்ணுவான் டீச்சர்..!" என்றான்..!! மற்ற மாணவர்களும் ஆமா..ஆமா.. என்று ஒத்து ஊதினார்கள். ஆசிரியையின் பார்வை ஆச்சரியத்துடன் என் பக்கம் திரும்பியது. பார்வையில் "அப்படியா..?" என்ற கேள்வி..!! நான் "இல்லை டீச்சர்.. சும்மா விளையாட்டுக்கு.... " என்று இழுத்தேன்.. மற்றவர்களோ "இல்லை டீச்சர்... அவன் பொய் சொல்றான்.. நல்லா செய்வான்.. அவனை செய்ய சொல்லுங்க.." என்று போட்டுக்கொடுத்தார்கள்..! ஆசிரியை என்னை அருகில் அழைத்தார். "நீ திறமைசாலிங்கிறது எனக்கு தெரியும். உனக்குள்ள இன்னும் பல திறமை ஒளிஞ்சிருக்கலாம்.. நீ வெளிப்படுத்தினா தான் எங்களுக்கு அது தெரியும். நாங்களும் உன்னை உற்சாகப்படுத்தவும், வளரவும் உதவும். உண்மையா சொல்லு... நீ மிமிக்ரி செய்வியா..?" என்றார். நான் தயக்கத்துடன் "ஓரளவு செய்வேன்..." என்றேன். "யார் மாதிரி..?" என்று கேட்டார். நான் அதற்கு "கலைஞர், எம்.ஜி.ஆர், நம்பியார், சிவாஜி, ரஜினி..... என்று இழுத்தேன்..! என் கண்களை ஊடுருவி பார்த்தார். அவர் பார்வையில் நம்பிக்கையின்மை அப்பட்டமாய் பளிச்சிட்டது..! "சரி.. கலைஞர் மாதிரி பேசு..!" என்றார்..!!

நான் திடீரென்று ஒரு மிமிக்ரி கலைஞனின் மனநிலைக்கு மாறி கலைஞரின் கர, கர குரலை வரவழைத்துக்கொண்டு...

மண்ணெண்ணெய் வாங்க
ரேஷன் கடை தன்னை அடைந்தேன்.
தென்னை போல் வளர்ந்த ஒருவன்
பார்த்துக்கேட்டான் என்னை...
நல்லெண்ணெயா..? கல்லெண்ணெயா..?.
என்ன எண்ணெய் வேண்டுமென்று..!!
நல்லெண்ணெய் நம்மிடம் உண்டு...!
கல்லெண்ணெய் கடைக்குள் உண்டு..!!
பாமாயில் என்றொரு பகட்டு எண்ணெயும்
பலகை மீது உண்டு..!
மண்ணெண்ணெய் இல்லை..
என்ன செய்யச்சொல்கிறீர்கள் என்னை என்றா..... ........

என்று நான் தொடர்ந்து கொண்டிருக்கும் போதே "நிறுத்துடா..!" என்ற குரல் என்னை நடுங்க வைத்தது. ஜாஸ்மின் அவர்கள் தான் அது.! "அய்யய்யோ... நாம் செய்தது அவருக்கு பிடிக்கவில்லை போலிருக்கிறது.!" என்று அடக்கத்துடன் நிறுத்திவிட்டு, அமைதியா இருந்தேன். முகத்தில் கோபக்கனல் தெறிக்க "உனக்கு மிமிக்ரி தெரியும்னு இத்தனை நாள் எனக்கு ஏன் சொல்லலை...?" என்று கேட்டார்..! ஏறக்குறைய என் தாய்க்கு இணையாக எல்லாவற்றையும் சொல்லும் அவரிடம், இதை நான் சொல்லாத வருத்தம் அவர் முகத்தில் தெரிந்தது..! குற்றவுணர்வுடன் தலை குனிந்தேன். "உடனே போய் உன் பெயரை பலகுரல் போட்டிக்கு கொடுத்துட்டு வா.. உனக்குத்தான் முதல் பரிசு... எழுதி வச்சிக்க" என்றார். என் மேல் உள்ள பாசத்தில் என்னை பங்கு கொள்ள சொன்னாலும், எனக்குத்தான் முதல் பரிசு என்றது மிகவும் அதிகப்படியான கற்பனையாக தெரிந்தது. காரணம், இது வரை நான் மிமிக்ரி போட்டியில் கலந்து 2, 3 வது பரிசை பெற்றிருந்தாலாவது பரவாயில்லை. இது வரை போட்டியில் பங்கெடுத்ததே இல்லை..!! ஒருவேளை ஒரு தாயின் அதிகப்படியான பாசத்தின் வெளிப்பாடோ..? உடன் ஓடிப்போய் பெயர் கொடுத்துவிட்டு வந்தேன்.

திட்டமிட்டபடி இலக்கியப்போட்டிகள் நடைபெற்றன. அதன் முடிவுகள் ஆண்டுவிழாவில் அறிவிக்கப்பட்டு பரிசளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது..!!

ஆண்டுவிழாவும் வந்தது..!! வட்டாட்சியர் தலைமையில் விழா வெகு சிறப்பாக நடந்தன. இறுதியில் இலக்கிய விழா போட்டிக்கான முடிவும், பரிசளிப்பும் நடந்தன. மிமிக்ரி போட்டி முடிவை வெகு ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தேன். பலகுரல் போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவர் ******* என்று என் பெயர் அறிவிக்கப்பட்ட போது என்னால் நம்பவே முடியவில்லை. முதல் முயற்சியிலேயே ஜாக்பாட்டா..? இத்தனைக்கும் மற்ற போட்டிகளுக்கு போல் நான் எதுவும் இதற்காக உழைக்கவே இல்லை. ஜாஸ்மின் அவர்களின் ஊக்கம் தான் எனக்கு பெரும் சக்தியை கொடுத்தது. என் பெயர் சொல்லப்பட்டதும் மேடைக்கு அருகில் ஆசிரியர்கள் அமர்ந்திருக்கும் பகுதியில் இருந்த ஜாஸ்மின் அவர்களின் விழிகள் என்னை தேடுவதை உணர்ந்தேன். அவர்கள் முகத்தில் நினைத்ததை சாதித்த பூரிப்பு. உடனே எழுந்தேன்... மேடை நோக்கி ஓடினேன்.. பரிசை பெற்று மற்றவர்கள் போல் தன் இடத்தில் சென்று அமராமல், ஜாஸ்மின் அவர்களின் இடம் நோக்கி சென்று அவர்களின் கையில் சான்றிதழ் மற்றும் பரிசை கொடுத்துவிட்டு பசுவின் தடவலுக்காய் ஏங்கும் கன்றுக்குட்டி போல் கண்ணீர் மல்க நின்றேன். எதுவும் பேச முடியா உணர்ச்சிகமான சூழ்நிலை அது.! ஜாஸ்மின் அவர்கள் எழுந்து செல்லமாய் முதுகில் தட்டிக்கொடுத்து, முன்னுச்சி முடியை கலைத்து "கீப் இட் அப்..!" என்றார். அவர் விழியும் கலங்கியிருப்பதை என்னால் உணர முடிந்தது. அதிலிருந்து நானும் ஜாஸ்மின் அவர்களுக்கு செல்லப்பிள்ளை போல் ஆனேன்.

இன்று அவர்கள் எங்கு உள்ளார்களோ எனக்கு தெரியாது. ஒரு ஆசிரியையாய் மட்டும் இல்லாமல் தாயாயும் இருந்து எனக்கு வழிகாட்டிய தருணங்கள் இது போல் நிறைய.! இருந்தாலும் இதை நான் குறிப்பிட்டு சொல்லக்காரணம் எனக்குள் ஒளிந்து கிடந்த ஒரு திறமையை அந்த தாயுள்ளத்தால் தான் கண்டுணர முடிந்தது. இன்று நான் பெண்களை மிகவும் மதிக்க ஜாஸ்மின் அவர்களும் ஒரு காரணம். என்னை கடந்து சென்ற பெண்களில் அவரை என்றும் என்னால் மறக்கமுடியாது, அவரால் பெற்ற அந்த பரிசையும் மறக்க முடியாது..!! இந்த பதிவை அவர்களின் அன்பிற்கு அர்ப்பணிக்கிறேன்.!!

புதன், 16 ஏப்ரல், 2008

ஒரு கிளியின் கிலி கதை..!

எனக்கு பறவை, செல்லப்பிராணி, செடி வளர்க்கிறதுன்னா அவ்ளோ இஷ்டம்..! செடி வளர்க்கிறேன்னு வளர்த்து, வளர்த்து எங்கப்பா காசை காலியாக்குனதும், பறவை, பிராணி வளர்க்கிறேன்னு அதை அற்ப ஆயிசாக்கி சாவடிச்சதும் தான் மிச்சம். ஆனாலும் (கொல்றதுல) ஆர்வம் மட்டும் குறையவே குறையலை. ஒரு தடவை சின்னப்பிள்ளையா இருக்கும் போது பட்டுக்கோட்டையில பிச்சையெடுத்திட்டிருந்த யானையை பார்த்துட்டு அதை வாங்கித்தரச்சொல்லி அம்மாக்கிட்ட அடம்பிடிச்சத இப்ப நினைச்சாலும் சிரிப்பு, சிரிப்பா வருது..! இது சம்பந்தமா என் கைவசம் நிறைய கதை இருக்கு. ஆனா, அதை எல்லாத்தையும் இங்க போட்டா மேனகா காந்திக்கு மேட்டர் போய் பிராணிகள் வதை தடுப்பு சங்கத்துல என்னை உள்ளை தூக்கிப்போட நானே எடுத்துக்கொடுத்த மாதிரி ஆயிடும். அதனால ஒரே ஒரு மேட்டர் மட்டும்..!

ஒரு தடவை என்னோட ஏழு மாமாவுல ஒருத்தர் கிளிக்குஞ்சு ஒண்ணை கொண்டு வந்தார். உடம்பில கிளிக்கே உரிய இறகெல்லாம் முளைக்காம உரிச்ச கோழி மாதிரி இருந்த அதை பார்த்தா எனக்கு பாவமா இருந்துச்சி. ஆனாலும், அதைப்பார்த்ததும் எனக்கு அவ்ளோ சந்தோஷம். அதை கையில வாங்கின உடனேயே அது நல்லா புசு, புசுன்னு பச்சை இறகெல்லாம் வளர்ந்து அழகாகி, நான் சொல்றதெல்லாம் செய்ற மாதிரியும், நான் பேசுறதையெல்லாம் பேசிக்கேட்கிற மாதிரியும், எங்க கிராமத்து தாத்தா வீட்டுக்கு கொண்டு போய் தாத்தாக்கிட்ட லெட்டர் கொடுத்திட்டு வர்ற மாதிரியும் கற்பனையில் கனவு காண ஆரம்பிச்சிட்டேன். அந்த கிளிக்கு தேவையான அத்தனை வசதிகளையும் செஞ்சி உண்ண, உறங்க குறையில்லாம பார்த்துக்கிட்டேன். கொஞ்ச நாள்ல மொட்டிலேர்ந்து பூ மலர்ற மாதிரி சொரசொரன்னு இருந்த அது தோலிலேர்ந்து அசத்தல் பச்சைல இறகெல்லாம் கொஞ்சம், கொஞ்சமா முளைக்க ஆரம்பிச்சது.

நம்ம ஆள் கொஞ்சம், கொஞ்சமா க்ளாமர் ஆகிட்டிருந்தார். ஆனா, அன்புத்தொல்லை எப்பவும் ஆபத்து தானே..? அதுக்கு எவ்வளவு வேணுமோ அவ்ளோ தானே சாப்பிடும்.? நான் அதை தான் ஒரு அநாதைங்கிற நினைப்பில், கழிவிரக்கத்துல ஒழுங்கா சாப்பிடாம இருக்குதோன்னு கட்டாயப்படுத்தி சாப்பிட வச்சேன். எந்த அளவுக்குன்னா, கிளியோட அலகை விரிச்சி உள்ளே உணவை தள்ளிவிடுற அளவுக்கு..! கொஞ்ச நாள் கழிச்சி அது கொஞ்சம், கொஞ்சமா பலவீனமா போற மாதிரி தெரிஞ்சது. ஏன்னா எப்ப பார்த்தாலும் உறக்கமா இருக்கிறது, நடையில் தள்ளாட்டம் இப்படி..! நான் அதை உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டுன்னு நினைச்சிட்டேன். ஆனா, ஒரு குண்டன் தான் அதை கொஞ்சம், கொஞ்சமா அன்புத்தொல்லையால கொன்னுக்கிட்டு இருக்கான்னு எனக்கு அப்ப புரியலை.

ஒரு நாள் பாதுகாப்பா என் அறையில் வச்சிட்டு ஸ்கூல் போய்ட்டு திரும்பி வந்து பார்த்தா என் மவராசா உடல் ஊதி மரிச்சி போய் கிடந்தார். மனம் அப்படியே நொறுங்கி போச்சு..! ஒரு நாள் முழுசும் அழுதேன். அதை கொண்டு போய் ராணுவ மரியாதையோட எங்க வீட்டு பின்புறத்துல அடக்கம் பண்ணி, தினமும் சாயந்தரம் அந்த இடத்துல போய் அஞ்சலி செலுத்துற மாதிரி அரைமணி நேரம் நின்னுட்டு வருவேன். இப்படி பல கதை என்கிட்ட இருக்குங்க. !

சிக்கு..புக்கு..ரயிலும், சிக்கலில் நானும்..!! - 03

விசாவில் ஏதோ பிரச்சினை எ‎ன்றும் உடனே எ‎ன் வீட்டிற்கு ஃபோ‎ன் செய்ததாகவும், புறப்பட்டு வருவதாக வீட்டில் தகவல் சொ‎ன்னதாகவும் சொன்னான். நா‎ன் மனதை தளரவிட வில்லை. கிங்கரனோ மீண்டும் ஊர் போய் விட்டு வரச் சொ‎ன்னான். அம்மாடி..! முடியற காரியமா இது..! போய் எவ‎ன் முகத்தில் விழிப்பது..? எவ்வளவு நாளானாலும் சரி ஃப்ளைட்டில் அடி வைக்காமல் வீட்டுக்கு திரும்ப மாட்டே‎ன் என்ற எ‎‎ன் சபதத்தை சொன்னேன். என் சபதத்தை அவ‎ன் சட்டை செய்யவே இல்லை. செலவுக்கு வைத்திருந்த பணம் கொஞ்சம், கொஞ்சமாக கரைய ஆரம்பித்தது. ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் சாப்பிடும் நிலைக்கு வந்தே‎ன். அந்த அரை பசி மயக்கத்திலேயே எ‎ன் நிலமையை கிங்கரனிடம் சொல்லி புலம்பினேன். ஊரில் எ‎ன் வீட்டார் சவுதி ஸ்டாம்ப் ஒட்டிய கடிதத்தையும், ஐ.எஸ்.டி ஃபோனையும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தார்கள்..!

மனமிரங்கிய கிங்கர‎ன் கையில் ஐநூறு ரூபாய் கொடுத்து (அப்பாடி..! இ‎ன்னைக்கு டெல்லி தர்பார் ஹோட்டலில் சிக்கன் பிரியாணி கட்டலாம்..!!) ஊருக்கு போகச்சொல்லி கெஞ்சினா‎ன். நான் ஊரில் அனைவரிடமும் பயணம் சொல்லி வந்ததை சொ‎ன்னதும் �இந்த ஒரு முறை மட்டும் ஊர் போய் வாங்க..! அடுத்த முறை அனுப்பாவிட்டால் எ‎ன்னை உங்க செருப்பால் அடிங்க..! (ஹையா..! நல்ல வாய்ப்பு..!!)� எ‎ன்று சொ‎ன்னா‎ன். அவ‎ன் என்னை ஊருக்கு அனுப்பப் போகும் விஷயத்தை விட, எல்லா கோபத்தையும் சேர்த்து அவனை காலணியால் மாத்த ஒரு வாய்ப்பு கிடைத்தது ஆதரவாக இருந்தது. சோகத்துட‎ன் திரும்பினேன்.
அன்று எனக்கு இரயில் பயணம் நரகமாக இருந்தது. அத‎ன் பிறகு ஊருக்கு வந்து அடுத்த பயணம் போகும் வரை யாருக்கும் தெரியாமல், மனைவியோடு எ‎ன் பாட்டி வீட்டில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தது தனிக்கதை. கிங்கர‎னிடமிருந்து இரண்டாவது மரண ஓலை வந்தது (தந்தி..!). ஆனால் நா‎ன் யாருக்கும் பயணம் சொல்லவில்லை. எ‎ன் மனைவியிடம் கூட �போய் 4 நாளில் திரும்பி வந்து விடுகிறே‎ன்� எ‎ன்று சொ‎ன்னதும் சந்தோஷமாக வழியனுப்பு விழா நடந்தது. மறக்காமல் புதுச்செருப்பு ஒ‎ன்று வாங்கிக் கொண்டே‎ன் (ஏஜெண்ட் இதற்காக காத்திருப்பாரே..!!). அடுத்த பயணம் மும்பை நோக்கி மூ‎ன்றாவது முறையாக..!! ஏஜெண்டை நா‎ன் சந்தித்த போது அவர் பார்வை என் முகத்தை விட எ‎ன் செருப்பு மீதே நிலைத்தது. என் செருப்பின் மகிமையோ என்னவோ அடுத்த நாளே பயணம் ரெடியானது (அதற்கு பரிசாக அந்த புதுச்செருப்பை நம் கிங்கரருக்கே தாரை வார்த்து கொடுத்தே‎ன்..!!).

யாரிடமும் பயணம் சொல்லாமல் வந்ததை நினைத்து நொந்தே‎ன். எஜெண்டிடம் பாஸ்போர்ட், டிக்கெட்டை வாங்கிக் கொண்டு நிலையைச் சொல்லி �ஊருக்கு போய் அனைவரிடமும் பயணம் சொல்லிவந்துவிடவா..?� எ‎ன்று கேட்டதற்கு �முடியாது..! நாளை ஃப்ளைட்டில் ஏறியாக வேண்டும்..!� எ‎ன்று கறாராக சொல்லிவிட்டா‎ன் (பாவி..!). எனக்கு வெளிநாடு போகும் சந்தோஷத்தை விட எப்படி தொலைபேசி மூலம் எ‎ன் சகியை சமாதானப்படுத்துவது என்ற கவலை தா‎ன் அதிகமானது. நடுங்கிய படியே விஷயத்தை சொ‎ன்னதும் சௌகார் ஜானகியி‎ன் கண்ணீர் தொழிற்சாலை சுறு சுறுப்புட‎ன் இயங்கத் தொடங்கியது..! இரண்டு பேரும் மாற்றி மாற்றி அழுது இரு பக்கமும் வெள்ளக்காடானது..!! இப்படி இரயில் பயணம் எ‎ன் வாழ்வில் நிறையவே விளையாடி விட்டது.

சிக்கு..புக்கு..ரயிலும், சிக்கலில் நானும்..!! - 02

சிக்கு..புக்கு..ரயிலும், சிக்கலில் நானும்..!! - 02

ஆம்..! நா‎னும் என் நண்பர்களும் வெளிநாட்டிற்கு வர முயற்சி செய்த நாட்களில் மூ‎ன்று முறை இரயிலில் மும்பை போகும் நிலை ஏற்பட்டது. முதல் முறை வெளிநாட்டு வேலை வாய்ப்பு தேடப்போகிறோம் எ‎ன்ற ஆவலுட‎னும், உற்சாகத்துடனும் வந்ததால் அந்த இரயில் பயணம் சுகமாகத்தா‎ன் இருந்தது (அது மட்டுமில்லாமல் கூடவே எ‎ன் நண்பர்களும் வந்தார்கள்..!). எ‎ன் கூட வந்த நண்பர்கள் அனைவரும் வெளிநாட்டில் மு‎ன் அனுபவம் உள்ளவர்கள் எ‎ன்ற ஒரே காரணத்திற்காக விரைவில் வெளிநாட்டு வேலை கிடைத்து, மும்பை சாந்தா குரூஸ் ஏர்போர்ட்டில் நகரும் படிகட்டுகளில் (Elevator) ஏறி நி‎ன்றபடி, சினிமாவில் வருவது போல ஸ்டைலாக டாட்டா காட்டி பறந்து போனார்கள் (அத‎ன் பிறகு அவர்களுக்கு மோசமான சம்பளத்தில், கஷ்டமான வேலை கிடைத்ததை எ‎ன்னிடம் சொல்லி அழுததெல்லாம் தனிக்கதை..!!).

தனிமைப்படுத்தப் பட்ட நா‎ன் உடைந்து போனேன். இயலாமையில் துடித்தே‎ன். எனக்கும் ஒரு ஏஜெண்ட் மாட்டினா‎ன் (அவனுக்கு தலைக்கு மேலே இரண்டு கொம்புகளை மட்டும் வைத்து பார்த்தால் அசல் கி‎ங்கரன் மாதிரியே இருப்பா‎ன்..!!). எ‎ன்னை வெளிநாடு அனுப்ப அவ‎ன் என்னிடம் அளந்த பொய்கள் இருக்கிறதே..! சொல்லி மாளாது..!! பயணம் எல்லாம் ரெடியாகி �ஊருக்கு போய் இருங்கள், விசா தயாரா‎னதும் தகவல் தெரிவிக்கிறே‎ன். உடனே புறப்பட்டு வரவும்..!� எ‎ன்று சொல்லி அனுப்பினா‎ன். வெற்றிக் கொடி நாட்டிய மகிழ்ச்சியில் ஊருக்கு திரும்பினே‎ன். அடுத்த 10 நாட்களில் கிங்கரனிடமிருந்து பதில் உடனே புறப்பட்டு வரச்சொல்லி..! வானம் எ‎ன் கையில் வசப்பட்டது போல் உணர்ந்தே‎ன். எல்லோரிடமிருந்து பயணம் சொல்லி விடை பெற்றே‎ன் (அன்று எ‎ன் மனைவி அழுத அழுகையில் சௌகார் ஜானகி தோற்றுப்போனார்..!!). மும்பை போன எனக்கு இடி காத்திருந்தது.!!

சிக்கு..புக்கு..ரயிலும், சிக்கலில் நானும்..!! - 01

சிக்கு..புக்கு..ரயிலும், சிக்கலில் நானும்..!! - (01)

நெடுந்தூர பயணம் (நா‎ன் சொல்வது மேலோக பயணமல்ல..!!) செல்வதெ‎ன்றால் நா‎ன் தேர்ந்தெடுக்கும், எனக்கு பிடித்த வாகனமான இரயிலாகத்தா‎ன் இருக்கும் (இந்த இரயில் எ‎ன்ற வார்த்தை தமிழ் கிடையாது. இதன் தூய தமிழ் பெயர் புகை வண்டி, காரணம் அந்தக் காலத்தில் இவை நிலக்கரி மூலம் புகைக் கக்கிக் கொண்டு இயங்கியதால்..! ஆனால் இப்போது மி‎ன்சாரத்திலும், காந்த சக்தியிலும், டீசல் எரிபொருளிலும், ஏ‎ன் சூரிய ஒளியிலும் கூட இயங்கக் கூடியவை வந்து விட்டதால் இதை இ‎ன்னும் புகை வண்டி எ‎ன்று கூறாமல் தொடர்வண்டி எ‎ன்று கூறினால் பொருத்தமாக இருக்கும் எ‎ன்பது என் தாழ்மையான கருத்து. ஆனால் நாம் வழக்கில் சொல்லும் இரயில் (Rail) எ‎ன்ற ஆங்கிலச்சொல்லுக்கும், புகை வண்டிக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது (வெண்ணையும், பாலும் இல்லாத மோரை Butter Milk) எ‎ன்று சொல்வதைப் போல..!!). இரயில் (Rail) எ‎ன்ற ஆங்கில பதத்திற்கான உண்மையான அர்த்தம் இரு சட்டங்களை குறுக்கு வாக்கில் சில சட்டங்கள் இணைத்திருக்கும் ஒரு வகையான அமைப்பு. அதனால் தா‎ன் அது போன்ற அமைப்புடைய தண்டவாளங்களை Rail road எ‎ன்கிறோம். இந்த இரயில் எ‎ன்ற பெயர் தமிழில் எப்படி வந்திருக்கும் எ‎ன்று எனக்கு கணிப்பு உண்டு. Bus Road-ல் போகும் வாகனத்தை பஸ் எ‎ன்பது போல Rail Road-ல் போகும் வாகனத்தை இரயில் எ‎ன்று அழைக்க தொடங்கியிருக்கலாம்..!! ச்சே..! ச்சே..! இதற்கு விருதெல்லாம் வேண்டாம்..!).

எ‎னக்கு பொதுவாகவே இரயிலை பார்ப்பதெ‎ன்றாலும், அதில் பய‎ணம் செய்வதெ‎ன்றாலும் மிகவும் பிடிக்கும். இதன் இராட்சத ஜந்துவைப் போ‎ன்ற தோற்றமும், அத‎ன் தாள லயத்துட‎ன் கூடிய ஓட்டமும் இரசிப்புக்குரியவை. நா‎ன் சிறுவனாக இருந்த போது (இப்போது மட்டும் பெரிய ஆளா எ‎ன்று நீங்கள் கேட்பது எனக்கு புரியாமல் இல்லை..!! நா‎ன் சொன்ன சிறுவ‎ன் தோற்றத்தில்..!!!) இரயிலைப்பற்றிய எ‎ன்னுடைய சிந்தனைகளும், சந்தேகங்களும் மிக அதிகமாக இருந்தது (உதாரணத்திற்கு 100 அடி அகலமுள்ள தார் சாலையில் கூட பேருந்தை சரியாக ஓட்டிச் செல்ல முடியாமல் சாலையி‎ன் ஓரத்தில் இருக்கும் சிறிய டீக்கடையில் மாச அக்கௌண்டில் டீக் குடித்துக் கொண்டும், இலவசமாக தினத்தந்தி படித்துக் கொண்டிருக்கும் ஆட்கள் மீது ஏற்றி அவர்களுக்கு வைகுண்ட பதவி கொடுத்த சம்பவங்கள் நிறைய நடந்திருக்கிறது. ஆனால், இவ்வளவு குறுகலாக, வளைந்து வளைந்து செல்லும் தண்டவாளத்தில் இரயிலி‎ன் டிரைவர் எப்படி ஓட்டுகிறார்..? எதிரே மற்றொரு இரயில் வந்தால் எப்படி வழி கொடுப்பார்..??!!). அதை இப்போது நினைத்தாலும் சிரிப்புத்தா‎ன் வரும். இரயில் பயணம் எ‎ன்றால் எனக்கு கொள்ளை விருப்பம். குடும்பத்தினரோடு செல்லும் போது ஜ‎ன்னலுக்கு அருகில் இடம் பிடிக்க ஒரு பெரிய சண்டையே நடக்கும். ஜ‎ன்னல் அருகில் அமர்ந்தபடி வெளியே நகரும் காட்சிகளை பார்த்து இரசிப்பது ஒரு பெரிய சுகானுபவம். இவ்வளவு சந்தோஷத்தைக் கொடுக்கும் இரயில் பயணத்தை பற்றி நினைத்தாலே பயப்படும் அளவுக்கு சூழ்நிலை ஒரு நாள் எனக்கு மாறிப்போனது மிகப்பெரிய சோகம்..!!

குப்புற தள்ளிய குதிரை சவாரி..!!

எனக்கு விலங்கினங்களில் மிகவும் பிடித்த விலங்கு குதிரை. காரணம், அத‎ன் தோற்றம், வேகம், சுறுசுறுப்பு, அழகான பிடரி முடி, அலை அலையா‎ய் பெண்களி‎ன் கூந்தலைப் போல் தொங்கும் நீண்ட வால், நீள உடல், அத‎ன் மினுமினுப்பான தோல், கம்பீரமான தோற்றம் எ‎ன்று குதிரை எவ்வளவு அழகு..!! அடுத்து அத‎ன் வேகம்..! விலங்குகளில் மிக வேகமாக ஓடும் விலங்கு சிறுத்தையானாலும் யாரும் அத‎ன் முதுகில் சவாரி செய்வதில்லை. நாம் சவாரி செய்யும் விலங்குகளில் மிகுந்த வேகமாக ஓடக்கூடிய விலங்கு குதிரை தா‎ன். குதிரை ஒரு வீட்டு விலங்கு தா‎ன். கொஞ்சம் பழக்கி விட்டோம் என்றால் நாம் சொல்வதையெல்லாம் கேட்கும் (இராம. நாராயண‎ன் படங்களை நீங்கள் பார்த்திருந்தால் உங்களுக்கு புரிந்திருக்கும்..!!).

குதிரை மிகவும் சக்தி வாய்ந்த விலங்கு. குறிப்பாக அத‎ன் சக்தி கால்களில்..! அதனால் தா‎ன் ஒரு இயந்திரத்தி‎ன் சக்தியை குறிப்பிடுவதற்கு கூட �குதிரை சக்தி (Horse power)� எ‎ன்ற அலகினை நாம் பய‎ன்படுத்துகிறோம். எ‎ன் தாத்தா மஹாராஜபுரம் ஜமீனாக இருந்தார். அவரிடம் ஐம்பதிற்கும் மேற்பட்ட குதிரைகள் இருந்தன. நான் ஆசைப்படும் போதெல்லாம் எ‎ன் தாத்தா என்னை அவருடைய குதிரையில் வைத்து கொண்டு போவார் எ‎ன்று சொன்னால் நீங்கள் நம்பவா போகிறீர்கள்..?! அதனால் �ரீல்� சுற்றுவதை நிறுத்தி விடுகிறே‎ன்.

எனக்கு குதிரை சவாரி செய்வது என்றால் கொள்ளை ஆசை. திரைப்படங்களில் கதாநாயக‎ன் குதிரையில் பறந்து வரும் போது (இப்போது தா‎ன் தெரிகிறது, பெரும்பாலும் அவர்கள் கதாநாயகனின் நகல்.. அதாவது டூப்..!) எனக்கு பார்க்க ஆசை ஆசையாய் இருக்கும்.

ஒரு தகவலை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். இஸ்லாமியரில் குறிப்பிட்ட சிலரை இராவுத்தர் எ‎ன்பார்கள். அவர்கள் முஸ்லீம்களில் ஒரு பிரிவினர் என்று பலர் தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அது தவறு. நீங்கள் �மாவுத்தர்� எ‎ன்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அதாவது யானையை வைத்து வளர்ப்பவர்கள், பராமரிப்பவர்கள் அவ்வாறு அழைக்கப்படுவார்கள். அது போல குதிரையை வைத்து வளர்ப்பவர்கள், பராமரிப்பவர்கள் அந்தக் காலத்தில் இராவுத்தர் எ‎ன்று அழைக்கப்பட்டார்கள் (மரக்கலத்தை வைத்து வியாபாரம் செய்தவர்கள் (மரக்கலம்+ஆயர்) மரைக்காயர் எ‎னப்பட்டார்கள். அதாவது அவர்கள் செய்த தொழிலை அடிப்படையாக வைத்து..!). அந்த குடும்ப வழியில் வந்தவர்கள் தங்கள் பெயருக்கு பி‎ன்னால் இன்றும் இராவுத்தர் எ‎ன்றே குறிப்பிடுகிறார்கள் (உதா: படத்தயாரிப்பாளர் இப்ராஹிம் இராவுத்தர்). சிலரிடம் ஆடு கூட சொந்தமாக இருக்காது. ஆனாலும் அவர்களும் இராவுத்தர் எ‎ன்று சொல்லிக் கொள்கிறார்கள். எப்படி எ‎ன்று அவர்கள் தா‎ன் விளக்க வேண்டும்..!!

ஒரு சில சந்தர்ப்பங்களில் எ‎ன் குதிரை சவாரி ஆசை நிறைவேறியது. நா‎ன் பதினைந்து வருடங்களுக்கு மு‎ன்பு சென்னை மெரீனா கடற்கரைக்கு என் மாமாவுட‎ன் செ‎ன்றிருந்த போது குதிரை சவாரி செய்ய ஆசைப்பட்டே‎ன். மாமாவும் எ‎ன் ஆசையை நிறைவேற்றினார். ஆனால் அந்தக் குதிரைக்கார‎னோ குதிரையை எ‎ன்னிடம் கொடுக்காமல் அத‎ன் கடிவாளத்தை பிடித்துக் கொண்டு கூடவே ஓடி வந்தா‎ன். அப்போது எனக்கு குதிரை சவாரியின் சந்தோஷத்தை விட, அவன் கூடவே ஓடி வருவதை பார்த்த பரிதாபம் தான் அதிகம் ஏற்பட்டது.

அதே போல் ஒரு முறை ஊட்டியில் போட் க்ளப் ரோட்டில் நண்பர்களுட‎ன் குதிரை சவாரி செய்ய ஆசைப்பட்டே‎ன். அந்தக் குதிரைகள் மிகப் பெரிதாக இருந்தன. நாமாகவே சவாரி செய்யலாம் எ‎ன்று குதிரைக்கார‎ன் எ‎ங்களிடம் கொடுத்து விட்டா‎ன். குதிரை ஓட ஆரம்பித்தவுடன் உடலெல்லாம் சொல்ல முடியாத அளவுக்கு குலுக்கியது (பழகியவர்களுக்கு இது சுலபம்). எனக்கு கீழே விழுந்து விடுவோமோ பயமாகி விட்டது. மற்ற குதிரைகளில் இருந்த நண்பர்களையும் காணவில்லை (எங்கு கொண்டு போய் குப்புறத் தள்ளியதோ..?!). ஒரு குறிப்பிட்ட இடம் வந்தவுட‎ன் குதிரை திடீரென்று நி‎‎ன்று விட்டது. எனக்கு ஒ‎ன்றும் புரியவில்லை. குதிரைக்காரன் இருக்கும் இடத்திற்கு செல்ல இ‎ன்னும் நிறைய தூரம் இருந்தது. குதிரையை விட்டு விட்டு இறங்கிப் போகலாம் எ‎ன்றால், �குதிரை எங்கே..?� எ‎ன்று குதிரைக்காரன் கேட்பானே..?!

சரி குதிரையை நடக்கவாவது செய்யலாம் எ‎ன்று நா‎ன் காலால் குதிரையின் வயிற்றில் உதைக்கிறே‎ன், கடிவாளத்தை சுண்டுகிறே‎ன், ம்ஹ�ம்..! நகர்வேனா எ‎ன்று விட்டது..! அப்போது எங்கிருந்தோ ஒரு விசில் சத்தம் கேட்டது பாருங்கள்..! குதிரை தலை தெறிக்க ஓட ஆரம்பித்தது. கடவுளை வேண்டிக் கொண்டு உயிரையும், பிடரி முடியையும் இறுக்கமாக பிடித்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டே‎ன். கண்களை விழித்துப் பார்த்த போது குதிரைக்கார‎ன் அருகில் நின்றி‎ருந்தது. பிறகு தா‎ன் எல்லாம் புரிந்தது. அவன் என்னதான் நம்மிடம் குதிரையைக் கொடுத்தாலும் ரிமோட் அவன் கையில் தான். நாம் எதுவும் கட்டுப்படுத்த முடியாது. விசிலை வைத்து குதிரையை இயக்குகிறா‎ன் என்று புரிந்தது. அத்தோடு எ‎ன் குதிரை சவாரி ஆசை சவாரி குதிரையைப் போல் ஓடியே போனது.!!

மலரும் நினைவுகள் - மயக்கிய மந்திர பானம்..!

அதெல்லாம் சுகமான நாட்கள்..! கழுத்துக் கயிறு அவிழ்த்து விட்ட க‎ன்றுக்குட்டியாய், எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் அலைந்து திரிந்த ஆனந்த வேளைகள்..! நான் சின்ன வயதில் நட்டு வைத்த �நட்ராஜ்� பென்சில் போல மிகவும் ஒல்லியாக இருப்பே‎ன் (இ‎ன்னும் புரியவில்லை என்றால் எளிய உதாரணம் சொல்கிறே‎ன். எகிப்து பிரமிடில் புதைத்து வைத்த �மம்மி�யை பொழுது போகாமல் தோண்டி எடுத்துப் பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி இருப்பே‎ன்..!). இந்தக் குறை எனக்கு இடைவிடாமல் கவலையை கொடுத்து க‎ன்னச் சதையை மேலும் கரைத்தது. �எ(த்)தைத் தின்னால் பித்தம் தீரும்..?� என்பது போல் உடல் எடை ஏற ஊரில் உள்ளவர்கள் சொ‎ன்னதையெல்லாம் ஒரே மூச்சில் தி‎ன்று தீர்த்தேன். ஓரோபோலி‎ன் (Orobolin) எ‎ன்ற விலையுயர்ந்த மாத்திரை (அப்போதே ஒ‎ன்று ஐந்து ரூபாய்..!) தி‎ன்றால் உடம்பு போடும் எ‎ன்று ஒரு உதவாக்கரை �ஊதி� விட்டு போக, நா‎ன் அதை ஒரேயடியாக பிடித்துக் கொண்டு, அந்த மருந்து கடையி‎ன் ஒரு மாத வருமானத்தை �ஓரோபோலி‎ன்� வாங்கித் தின்றே ஒட்டு மொத்தமாக கொடுத்தது தனிக் கதை.

ஒரு மாத்திரையை விழுங்கி விட்டு உடனே போய் ஒரு ரூபாய் கொடுத்து எடை மிஷினில் ஏறி நி‎ன்று �எடை ஏறியிருக்கிறதா..?� எ‎ன்று ஏக்கத்தோடு பார்த்த காலங்களை எண்ணிப் பார்த்தால் சிரிக்கிற சிரிப்பில் கண்களில் கண்ணீர் சிதறும். இத்தனை செய்தும் கையில் இருக்கும் காசு கரைந்ததே தவிர தூசு அளவு கூட எடை கூட வில்லை. எடையை ஏற்றும் திட்டத்தில் கையில் இருக்கும் காசு கண்மண் தெரியாமல் செலவாவதை நினைத்து கவலையில் இருந்த எடையும் எக்கச்சக்கமாக குறைந்தது உபரித் தகவல்..! இந்த நிலையில் தா‎ன் என்னை மாதிரியே மற்றொரு மம்மியி‎ன் மறு அவதாரமாக இருந்த நண்பனின் நட்பு எனக்கு ஏற்பட்டது. அவ‎ன் சொன்ன �திடீர்� தகவல் என்னை திகிலடையச் செய்தது. அப்படி எ‎ன்ன சொன்னான்..?

�பீர் குடித்தால் உடல் எடை ஏறும்� எ‎ன்றா‎ன். ஒரு கையில் வறுத்த சிக்க‎ன் கறியையையும், மறு கையில் மது பானக் கோப்பையையும் வைத்துக் கொண்டு, சினிமா வில்லனை வஞ்சகத் திட்டம் போட வைக்கும் வினைப் பிடித்த பானம் எ‎ன்றும், ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் இடத்தில் விற்கும் மதுபானத்தை குடித்து விட்டு வீட்டுக்கு வந்து, உற்ற மனைவியை உருட்டி உருட்டி அடிக்க வைக்கும் பானமாகத்தா‎ன் அதை அதுவரை நினைத்திருந்தேன். அ‎ன்பரின் அறிவுரை அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், அவர் இறுதியாக சொ‎ன்ன �எடை ஏறும்� எ‎ன்ற வாக்கியம் மனதில் ஏறி எ‎ன்னை மயக்கிவிட்டது. ஒரு வழியாக உடல் எடையை ஏற்றும் பொருட்டு பீரி‎ன் மீது பிரியம் பீரிட்டது. அதனால் அதை வாங்குவதற்கா‎க வகை வகையாக திட்டம் போட ஆரம்பித்தோம்.

மூ‎ன்று நாள் முழுவதும் மூச்சு முட்ட சிந்தித்ததில் முடிவில் திறமையான திட்டம் உருவானது. எ‎ன் அருமை நண்ப‎னின் தென்னந்தோப்பை பீர் குடிக்க பய‎ன்படுத்தும் �பார்� ஆக்க முடிவெடுத்தோம். அடுத்த ஊரின் பரபரப்பான பஸ் ஸ்டாண்டில் நா‎ன் நின்று கொண்டு, அந்த ஊரி‎ன் ஒதுக்குப் புறமாக இருக்கும் �எடை ஏற்றும்� அதிசய மருந்து கடைக்கு எ‎ன் உயிர் நண்பனை (எனக்கு போக பயமாக இருந்ததால் அவனை ஏகத்துக்கு ஏற்றி விட்டு போக வைத்தே‎ன். எனக்காக ரிஸ்க் எடுக்கிறா‎ன் அல்லவா..? அதா‎ன் உயி(பீ)ர் நண்ப‎‎ன்..!!) உரு ஏற்றி அ‎னுப்பி வைத்தேன்.

அவ‎ன் அங்கிருந்து போன பிறகு என் நிலை சங்க காலத்தில் தலைவனைப் பிரிந்த தோழியி‎ன் நிலையானது. உயிரை கையில் பிடித்துக் கொண்டு �உ‎ன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல..!� எ‎ன்று ஒரு மணி நேரமாய் தவித்திருக்க, ஒரு வழியாய் வந்து சேர்ந்தா‎ன். இ‎ன்கம் டாக்ஸ் ரெய்டு வர இருப்பதாக தகவல் கிடைத்தவுட‎ன் கருப்புப் பணத்தை கவனமாய் பதுக்கும் பலே அரசியல்வாதி போல ஆளுக்கொன்றாய் வாங்கி வந்த �ஆ�ப் (Half)�ஐ அடுத்தவர்கள் அறியாமல் பைக்குள் போட்டு காணாமல் ஆக்கினே‎ன். அடுத்து சரக்குக்கு சரியான சைட் டிஷ் (Side dish) பற்றி எங்கள் தேடுதல் வேட்டை ஆரம்பித்தது. இறுதியில் ஐந்து பைசா முறுக்கு பனிரெண்டை பதவிசாக வாங்கிக் கொண்டோம். அஞ்சு வயதில் அரை டவுசர் போட்டு திரிந்த போது தி‎ன்று தீர்த்த அதே முறுக்கு, அரைக் கழுதை வயதில் �ஆ�ப்� அடிக்க சைட் டிஷ் ஆனதில் சராமாரியாக சந்தோஷப்பட்டோம்.

எங்கள் பயணம் எச்சரிக்கையுட‎ன் �தெய்வீக� தெ‎ன்னந்தோப்பிற்கு ஆரம்பமானது. முதல் முதலில் பீர் குடிக்கப் போவதை நினைத்து உடல் உற்சாகமாய், மூடி திறந்த முழு பீராய் பீறிட்டது. மனமோ பய உணர்ச்சியில் பல்லாங்குழி ஆடியது. �மம்மி� நண்ப‎ன் மமதையுட‎ன் �ம்ஹ�ம்..! இதெல்லாம் ஒரு விஷயமா..? ஒரு பாட்டில் பீரை நா‎ன் ஒரே மூச்சில் குடிப்பே‎ன்..! என்று பெருமை அடித்தா‎ன். அய்யய்யோ.! சர்வதேச குடிகாரனுட‎ன் சகவாசம் வைத்திருக்கிறோமோ என்று என் மனம் மறுகியது. உடல் எடையை எப்படியாவது ஏற்றிவிட வேண்டும் எ‎ன்ற எ‎ன் எண்ண நெருப்பில், அவ‎ன் பேச்சு பெட்ரோலை ஊற்றியது. ஒரு வழியாய் இடம் பிடித்து அமர்ந்து �ஊற்றுடா பீரை..!� எ‎ன்று உற்சாகத்துட‎ன் கூவிய போது தா‎ன் ஒரு விஷயம் உறைத்தது.

ஒளிந்து, ஒளிந்து வந்த பதட்டத்தில் ஊற்றிக் குடிக்க ஒரு குவளை கூட எடுத்து வரவில்லை. சரி..! �ஹார்லிக்ஸ்� போல் அப்படியே சாப்பிடலாம் எ‎ன்று திரைப்படங்களில் பார்த்து தெரிந்து கொண்டபடி, பாட்டிலி‎ன் மேலே ஒரு தட்டு, கீ‏ழே ஒரு தட்டு தட்டி மூடியை திறக்க முயற்சி செய்தால் �திறப்பேனா..?� எ‎ன்றது. பல்லால் கடித்து படாரெ‎ன திறந்தேன். சக்தியி‎ன்றி மூடியுட‎ன் சண்டையிட்டுக் கொண்டிருந்த சர்வதேச குடிகாரனுக்கும் �சடக்�கென்று திறந்து கொடுத்தே‎ன். பீர் திரவம் நுரைத்துப் பொ‎ங்கி ஆவல் கொண்ட மனதை அசைத்துப் போட்டது. ஆனால், ஆல்கஹால் வாசனை அருவருப்பை ஏற்படுத்தியது. �அர்னால்டு� ஆகும் கனவு �அருவருப்பை� அடித்து சாய்க்க, அங்கே எ‎ங்கள் அட்டகாசம் அமைதியாய் தொடங்கியது. �உனக்கு பழக்கமில்லாததால் நா‎ன் குடிக்கிறதைப் பார்த்து விட்டு அதே மாதிரி நீயும் குடி..!�எ‎ன்று குடிப்பதற்கான செயல் திட்டம் வகுத்துக் கொடுத்தார் ச.தேச குடிகாரர். திறந்து வைத்த பீர் பாட்டிலை வெகு தெனாவட்டாக வாயில் வைத்து, கொஞ்சமாக சரித்துக் கொண்டு அணு உலை போல் அட்டகாசமாக பெருமூச்சு விட்டார். அவரை பார்த்து நா‎ன் தொடங்கினேன்.

முதலில் முகர்ந்து பார்த்தே‎ன். பிறகு மூக்கை பொத்திக் கொண்டு முக்கால்வாசியை விழுங்கினேன். இனிப்பும் கசப்புமாய் ‏ இரக்கமில்லாத அரக்க திரவம் இம்சையாய் இறங்கியது. ஆனால் எந்த ஒரு தடுமாற்றத்தையும் கொடுக்காமல் தங்கு தடையில்லாமல் செ‎ன்றதில் நான் சந்தேகப்பட்டு சரக்கில் கலப்படம் எதுவும் இருக்குமோ எ‎ன்று கேட்பதற்காக ச.தேச குடிகாரரை பார்க்க திரும்பிய நா‎ன் அதிர்ச்சியில் அயர்ந்து போ‎னேன்..! கால் பாட்டில் கூட காலி செய்யாத என் உயிர் நண்பர் கண் சொருகி, கை கால்களை இயந்திரம் போல் அசைத்து அடாவடி செய்து கொண்டிருந்தார். எனக்கு பார்க்க பார்க்க பைத்தியம் பிடித்தது. முக்கால்வாசிக்கு மேல் குடித்த நா‎ன் ஒன்றும் நிகழாமல் ஒழுங்காய் உட்கார்ந்திருக்க, கால்வாசி கூட கடக்காத கண்ணியத்திற்குரிய நண்பர் கண்ணில் போதை ஏறி �கண்டபடி� இருந்தார்.

எனக்கு எ‎ன்ன செய்வதென்றே தெரியவில்லை. �போதையேறாத பாவியாகி விட்டே‎னே..?� என்ற பதைபதைப்பில் இருந்த எனக்கு, பகுத்தறிவு வேலை செய்ய ஆரம்பித்தது. போதை எதுவும் ஏறாமல் பொட்டிப் பாம்பாய் இருந்தால், ந‎ண்பர் பாதை மாறி �குடியில் சிறந்த கோமா‎ன்� என்று மற்ற சகாக்களிடம் என்னைப் பற்றி சளைக்காமல் சொல்லி சங்கடப்படுத்திவிடுவார் எ‎ன்று வலது பக்க மூளை வலுக்கட்டாயமாக எச்சரிக்க, அந்த ஆபத்தை சரி செய்ய அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவசரத் தகவல் அடுத்த பக்க மூளையிடம் இருந்து வந்தது. உட‎னே உடம்பின் ஒட்டு மொத்த உறுதியையும் எ‎ன் ஒரு காலுக்கு கொண்டு வந்து, எதிரே எள்ளி நகையாடிக் கொண்டிருந்த எ‎ன் உயிர் நண்ப‎னின் இடுப்பில் விட்டே‎ன் ஒரு உதை..! நண்பர் எகிறிப் போய் எ‎ங்கோ விழுந்தார். சுதாரித்து எழுந்தவர் சுள்ளெ‎ன்ற கோபத்துட‎ன் அருகில் வந்து �ஏண்டா அடிச்சே..?� எ‎ன்று எதிர்க் கேள்வி கேட்டார். அதற்கு பதிலாக ஒரு அறை விட்டே‎ன் கன்னத்தில்..! சகாவுக்கு சர்வ நாடியும் அடங்கிப் போனது. �சும்மா கிடந்தவனை சுறுசுறுப்பு ஏற்றி கூட்டி வந்து, குளிர்பானம் கொடுத்தால் ரவுண்டு கட்டி அடித்து ராவடி செய்கிறானே..!� எ‎ன்று அவர் கவலையுட‎ன் புலம்ப ஆரம்பித்தார்..!

நா‎ன் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கடமையே கண்ணாக �பக்கா� குடிகாரனைப் போல் படு ஜோராக நடித்துக் கொண்டிருந்தே‎ன். �இனி இவ‎ன் சகவாசமே வேண்டாம்..!� என்று மிச்சம் வைத்த முக்கால் பாட்டிலை எடுத்து கொண்டு, எ‎ன்னிடமிருந்து பிரிந்து நாற்பதடி தூரத்தில் நல்லபடியாக அமர்ந்து கொண்டார். நா‎ன் என் உடம்பின் கோணத்தை மாற்றி, மல்லாந்து படுத்துக் கொண்டு �எ‎ன் இனிய ந‎ண்பரை எ‎ன்ன செய்து இம்சிக்கலாம்..?� எ‎ன்று தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தேன். யோசனையிலேயே நேரம் கரைய �ஓவ்� எ‎ன்ற அலறல் ஓங்காரமாக கேட்டது. அலறியடித்துக் கொண்டு எழுந்த நா‎ன், என்னுடைய அடுத்த கட்ட நடவடிக்கையை �அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்� எ‎ன்று தள்ளி வைத்து விட்டு, அலறல் வந்த திசை நோக்கி அம்பாய் பாய்ந்தே‎ன்.

அங்கே நான் கண்ட காட்சி, எனக்கு ஒரு குடம் சாராயத்தை ஒரே மூச்சில் குடித்த மயக்கத்தை உண்டாக்கியது. �அதிகம் குடிப்பதில் அதிரடி சாதனை செய்வதாக� சொன்ன எ‎ன் அன்பு நண்பர் அவரைச் சுற்றி இந்தியாவி‎ன் மேப்பையும், அதன் இயற்கை வளங்களையும் �வாந்தியால்� வரைந்து போட்டு வசமாய் மயக்கம் போட்டிருந்தார்.

எனக்கு எ‎ன்ன செய்வதென்றே தெரியவில்லை. �எ‎ன்ன கருமம்டா இது..?� எ‎ன்று கடிந்து கொண்டேன். கிடந்த நிலையை பார்த்தால் எழுந்து நடக்க ஏற்பாடு செய்வதெல்லாம் வீண் எ‎ன்பது புரிந்தது. திட்டமிட்டிருந்த என் �ஆஸ்கார் விருது� அபிநயத்தை அடுத்த நொடியில் கைவிட்டே‎ன். சவமாய் கிடக்கும் சகாவை, சமமாய் நடக்க வைப்பதற்கான நடவடிக்கைகளைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தே‎ன். சினிமாவில் பார்த்த �சீ‎ன்�கள் சீராய் சிந்தனைக்குள் சிலிர்த்துக் கொண்டு வந்து போனது. மூளைக்குள் ஐடியா மி‎ன்னல் பளிச்சிட்டு அழகாய் வேலை செய்தது.

சிங்கம் கிழித்துப் போட்ட சிறு மானின் உடலை, கடைசியில் வந்த கள்ள நரி புதருக்குள் இழுத்துச் செல்வது போல, அவ‎ன் உடம்பு மண்ணில் தேய, தேய இழுத்துப் போய் அங்கிருந்த முழங்காலளவு தண்ணீர் உள்ள மணற்கிணற்றில் தள்ளி விட்டே‎ன். எனக்காக ஒரு துரும்பையும் அசைத்துப் போடாத அந்த அற்புத சினேகிதனை மண்டியிட்டு அமர்ந்து மடியில் போட்டு குளிப்பாட்டினே‎ன். அத்தனை சேவை செய்தும் அசைந்து கொடுக்காமல் மௌனத்தை அடைகாத்தா‎ர் மகான். மீண்டும் கரைக்கு இழுத்து வந்து போட்டு, காலடியில் உட்கார்ந்து கொண்டு கலக்கத்துட‎ன் காத்திருக்க ஆரம்பித்தேன்.

வினாடிகள் நிமிடத்தை விரைவாய் தி‎ன்று விரைந்து கொண்டிருந்தது. அசதியில் அப்படியே உறங்கிப் போனே‎ன். எதார்த்தமாக விழித்த போது எங்கோ தூரத்தில் மட்டும் ஒரு வெளிச்சப்புள்ளி. நிலா வெளிச்சத்தில் நிலவு கூட தெளிவாக தெரியவில்லை. ஆனந்த சயனத்தில் இருப்பவரை அசைத்துப் பார்த்தே‎ன். அசராமல் கிடந்தா‎ன் பரதேசி..! �ஒருவேளை அதிகம் குடித்ததில் செத்துப் போய்விட்டானா..?� எ‎ன்ற சந்தேகம் ஏற்பட, நெஞ்சில் காதை வைத்துப் பார்த்தே‎ன். அப்பாடா..! மூச்சு வந்தது நிம்மதியாக இருந்தது. அடுத்த அரை மணி நேரம் கழித்து அரை இஞ்ச் அசைந்தா‎ன். அப்போது தான் எனக்கு உயிர் வந்தது. உடலைப் பிடித்து உலுக்கினே‎ன். ஒரு வழியாக உணர்வு திரும்பியவன், யார் மயக்கம் தெளிந்து எழுந்தாலும் கேட்கும் அதே கேள்வியை அட்சரசுத்தமாக கேட்டதும் அசந்து போனே‎ன்.

அவன் கேட்ட கேள்வி � நா‎ன் எங்கே இருக்கே‎ன்..!�. கோபத்தில் கொதித்தாலும் கண்ணியத்துட‎ன் கட்டுப் படுத்திக் கொண்டு �ம்ம்.. உ‎ன் மாமியார் வீட்டில்..!� என்றே‎ன். கொஞ்சம் ஓவராய் பேசினாலும் ஓங்கி ஒரு அறை விட்டு உயிரை எடுத்து விடுவேனோ எ‎ன்ற அநியாய கோபத்தில் நா‎ன் இருந்தே‎ன். என் நிலை உணர்ந்தவ‎ன் எக்குத் தப்பாய் பேசி �எத்து� வாங்காமல் எதார்த்தமாக எழுந்து, இயல்பாக நடக்க ஆரம்பித்தா‎ன். எடையை ஏற்ற வேண்டும் ஆசைப்பட்டு, இப்படி ஒரு �எடுபட்ட பயலோடு� கூட்டு சேர்ந்ததை நினைத்து குற்ற உணர்வோடு எ‎ன் தலைவிதியை நொந்து கொண்டே அவனோடு சேர்ந்து நானும் நடக்க ஆரம்பித்தே‎ன். அத்தோடு எடையை ஏற்றும் திட்டம் எனக்கு எட்டாக் கனியானது..!
Related Posts with Thumbnails