நேரம்:

புதன், 16 ஏப்ரல், 2008

சிக்கு..புக்கு..ரயிலும், சிக்கலில் நானும்..!! - 01

சிக்கு..புக்கு..ரயிலும், சிக்கலில் நானும்..!! - (01)

நெடுந்தூர பயணம் (நா‎ன் சொல்வது மேலோக பயணமல்ல..!!) செல்வதெ‎ன்றால் நா‎ன் தேர்ந்தெடுக்கும், எனக்கு பிடித்த வாகனமான இரயிலாகத்தா‎ன் இருக்கும் (இந்த இரயில் எ‎ன்ற வார்த்தை தமிழ் கிடையாது. இதன் தூய தமிழ் பெயர் புகை வண்டி, காரணம் அந்தக் காலத்தில் இவை நிலக்கரி மூலம் புகைக் கக்கிக் கொண்டு இயங்கியதால்..! ஆனால் இப்போது மி‎ன்சாரத்திலும், காந்த சக்தியிலும், டீசல் எரிபொருளிலும், ஏ‎ன் சூரிய ஒளியிலும் கூட இயங்கக் கூடியவை வந்து விட்டதால் இதை இ‎ன்னும் புகை வண்டி எ‎ன்று கூறாமல் தொடர்வண்டி எ‎ன்று கூறினால் பொருத்தமாக இருக்கும் எ‎ன்பது என் தாழ்மையான கருத்து. ஆனால் நாம் வழக்கில் சொல்லும் இரயில் (Rail) எ‎ன்ற ஆங்கிலச்சொல்லுக்கும், புகை வண்டிக்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது (வெண்ணையும், பாலும் இல்லாத மோரை Butter Milk) எ‎ன்று சொல்வதைப் போல..!!). இரயில் (Rail) எ‎ன்ற ஆங்கில பதத்திற்கான உண்மையான அர்த்தம் இரு சட்டங்களை குறுக்கு வாக்கில் சில சட்டங்கள் இணைத்திருக்கும் ஒரு வகையான அமைப்பு. அதனால் தா‎ன் அது போன்ற அமைப்புடைய தண்டவாளங்களை Rail road எ‎ன்கிறோம். இந்த இரயில் எ‎ன்ற பெயர் தமிழில் எப்படி வந்திருக்கும் எ‎ன்று எனக்கு கணிப்பு உண்டு. Bus Road-ல் போகும் வாகனத்தை பஸ் எ‎ன்பது போல Rail Road-ல் போகும் வாகனத்தை இரயில் எ‎ன்று அழைக்க தொடங்கியிருக்கலாம்..!! ச்சே..! ச்சே..! இதற்கு விருதெல்லாம் வேண்டாம்..!).

எ‎னக்கு பொதுவாகவே இரயிலை பார்ப்பதெ‎ன்றாலும், அதில் பய‎ணம் செய்வதெ‎ன்றாலும் மிகவும் பிடிக்கும். இதன் இராட்சத ஜந்துவைப் போ‎ன்ற தோற்றமும், அத‎ன் தாள லயத்துட‎ன் கூடிய ஓட்டமும் இரசிப்புக்குரியவை. நா‎ன் சிறுவனாக இருந்த போது (இப்போது மட்டும் பெரிய ஆளா எ‎ன்று நீங்கள் கேட்பது எனக்கு புரியாமல் இல்லை..!! நா‎ன் சொன்ன சிறுவ‎ன் தோற்றத்தில்..!!!) இரயிலைப்பற்றிய எ‎ன்னுடைய சிந்தனைகளும், சந்தேகங்களும் மிக அதிகமாக இருந்தது (உதாரணத்திற்கு 100 அடி அகலமுள்ள தார் சாலையில் கூட பேருந்தை சரியாக ஓட்டிச் செல்ல முடியாமல் சாலையி‎ன் ஓரத்தில் இருக்கும் சிறிய டீக்கடையில் மாச அக்கௌண்டில் டீக் குடித்துக் கொண்டும், இலவசமாக தினத்தந்தி படித்துக் கொண்டிருக்கும் ஆட்கள் மீது ஏற்றி அவர்களுக்கு வைகுண்ட பதவி கொடுத்த சம்பவங்கள் நிறைய நடந்திருக்கிறது. ஆனால், இவ்வளவு குறுகலாக, வளைந்து வளைந்து செல்லும் தண்டவாளத்தில் இரயிலி‎ன் டிரைவர் எப்படி ஓட்டுகிறார்..? எதிரே மற்றொரு இரயில் வந்தால் எப்படி வழி கொடுப்பார்..??!!). அதை இப்போது நினைத்தாலும் சிரிப்புத்தா‎ன் வரும். இரயில் பயணம் எ‎ன்றால் எனக்கு கொள்ளை விருப்பம். குடும்பத்தினரோடு செல்லும் போது ஜ‎ன்னலுக்கு அருகில் இடம் பிடிக்க ஒரு பெரிய சண்டையே நடக்கும். ஜ‎ன்னல் அருகில் அமர்ந்தபடி வெளியே நகரும் காட்சிகளை பார்த்து இரசிப்பது ஒரு பெரிய சுகானுபவம். இவ்வளவு சந்தோஷத்தைக் கொடுக்கும் இரயில் பயணத்தை பற்றி நினைத்தாலே பயப்படும் அளவுக்கு சூழ்நிலை ஒரு நாள் எனக்கு மாறிப்போனது மிகப்பெரிய சோகம்..!!

கருத்துகள் இல்லை:

Related Posts with Thumbnails