ஒரு மனிதன் ஆதியில் கருவாகி, உருவாகி, இறுதியில் எருவாகும் வரை உள்ள எல்லாவற்றிலும் தவிர்க்கமுடியாத அங்கமாகி விட்ட பெண்ணைப் பற்றி, பெண்ணிணத்தைப் பற்றி, பெண்மையைப் பற்றி எழுத எத்தனித்திருக்கிறேன். பெருமைக்குரிய பெண்மையின் பெருமைகளை நான் எடுத்துக் கூறுவதென்பது சமுத்திரத்தை சல்லடையால் அள்ளிக் குறைக்கும் முயற்சி என்றாலும், ஏதோ என்னால் இயன்றவரை இயம்பியிருக்கிறேன். முதலில் பெண்களின் தன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.
பெண்களை தமிழர்கள் ஏழு பருவங்களில் பிரித்தறிந்திருக்கிறார்கள். அவை, மங்கை, மடந்தை, பேதை, பெதும்பை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் ஆகியன. சரி..! பெண் என்பவள் ஆணோடு எந்த வகையில் வேறுபடுகிறாள் என்பதை பார்ப்போம். புறத்தோற்றம் என்று பார்த்தால் பொதுவாக உடல் உறுப்புகள் மட்டுமல்லாது உடல் எடை, வலிமை, செயல்படும் வேகம் ஆகியவற்றில் ஆணை விட பெண் குறைந்து வேறுபடுகிறாள். விஞ்ஞான ரீதியாக மனித மூளையின் மேற்படலம் (Cerebral Cortex - மூளைப் புறவணி) இரு அரைக்கோளங்களாய் வலது, இடது என அமைந்து இருக்கிறது. அதில் இடது தர்க்கம், கணிதம், சிந்தனை செய்ய, மற்ற நபர்களை ஆராய உதவும். அதே போல் வலது பகுதி இலக்கியம், இசை, கலை சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் தன்னைத் தானே எடைபோடவும் உதவும். இந்த இரண்டையும் இணைக்கும் நரம்புக்கற்றை ஒன்று உண்டு. இந்த பாலத்தின் லத்தீன் பெயர் கார்பஸ் கலோசம் (Corpus Collosum). இதன் மூலம் தான்இரண்டு பக்க மூளைகளிடையே தகவல் பரிமாறப்படுகிறது. இந்த கார்பஸ் கலோசம் எனும் நரம்புக் கற்றை ஆண்களைவிட பெண்களுக்கு கால் பங்கு அதிக தடிமனாக இருக்கும்..! இதனால் இருபக்க தகவல் பரிமாற்றம் அதி வேகத்தில் பரிமாறப்படுகிறது. ஆகவே, உள்ளுணர்வு என்பது பெண்களுக்கு அதிகம்.
ஒரு ஆளைப் பார்த்ததும் நல்லவனா, நேர்மையானவனா, திறமையானவனா, ஜொள்ளுப் பேர்வழியா, பொறுக்கியா என்று எடை போடும் திறமை கூடுதலாக இருக்கும் (ஆனால், காதலிக்கும் போது அந்த எச்சரிக்கை உணர்வை அணைத்து விட்டு, உணர்ச்சிகளை எரிய விட்டு விடுவதால் எளிதில் ஏமாந்து விடுகிறார்கள்..!). எண்ணும் எழுத்தும் சரிவிகிதக் கலப்பில் பரிமாறிக் கொள்ளும் பெண்ணின் மூளை அதிக திறம் காட்டும் (அதனால் தான் படிப்பில் ஆண்களை விட பெண்களே அதிகம் தேர்ச்சி பெருகிறார்கள்). அதை இது போல நல்ல வழியில் பயன்படுத்தாத சராசரிப் பெண்கள் சிறந்த வாயாடிகள் ஆகிறார்கள் (விசுவின் அரட்டை அரங்கம் பார்த்தவர்களுக்கு தெரியும்..!).
அதே போல் காட்சிகளை மனதிற்குள் பதியவைக்கும் திறமையிலும் அவர்கள் முன்னால் நிற்கிறார்கள். ஒரு அறைக்குள் ஒரு நிமிட நேரம் சென்று திரும்பியதும் அங்கு பார்த்த பொருட்களை சொல்லச் சொல்லுங்கள். அறைக்குள் என்னென்ன இருந்தது என்று மிகச் சரியாக ஒப்பிப்பார்கள் (சேலையின் பார்டரின் கீழ் என்ன நிறத்தில் பூப் போட்டிருந்தது என்பது முதற்கொண்டு..! சன் டி.வியில் நிர்மலா பெரியசாமி (வ..ண..க்..க்..க்..க்..க்..க..ம்...!) சொல்லும் செய்தியில் கணவன் இலயித்திருக்க, அருகில் அமர்ந்திருக்கும் மனைவியோ நிர்மலாவின் செய்தியோடு, அவர் உத்தியிருக்கும் பட்டுப்புடவையின் பார்டர், கம்மல் டிசைன், கழுத்து நகை என்று சகலத்தையும் கிரகித்து, சரியான நேரத்தில் கணவன் காதில் ஓதுவது கை வந்த கலை பெண்களுக்கு (�அந்த மயில் கழுத்துக் கலர் பட்டுப்புடவை வாங்கிக் கொடுக்காமல் என்கிட்ட பேசாதீங்க..!� போன்ற மிரட்டல் வர இது தான் காரணம். உங்கள் வீட்டில் நடந்தது எனக்கு எப்படி தெரியும் என்று திகைக்காதீர்கள். எல்லாருடைய வீட்டு சன் டிவியிலும் �நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது சன் டி.வியின் தமிழ் மாலை..!� என்று தான் வரும்..!!!! சில நேரங்களில் அந்த அ(வி)ல்லிகள் போடும் நிபந்தனைகள் வீரப்பனுடையதை விட விபரீதமாகவும் இருப்பதுண்டு..!). அறிவு, சிந்தனை ஆகியவை எப்போதும் சீராக இருப்பது பெண்களின் பலம்.
வசந்த காலம், பகல் நேரம் அதிகமாகவும், மற்ற காலம், மாலை நேரம் ஆகியவற்றில் அறிவு மங்கி செயல்படுவது ஆண்களின் பலவீனம் (அதனால் தான் பகலில் சுயமாகவும், மாலை மற்றும் இரவுகளில் பெண் சொல்வதற்கெல்லாம் தலையாட்டுவதும் நடக்கிறது..!!!). கடலின் ஆழத்தை கண்டு பிடித்து விடலாம், ஆனால், பெண்ணின் மன ஆழத்தை கண்டு பிடிக்கமுடியாது என்று ஒரு பழமொழி உண்டு. என்னைப் பொறுத்தவரை அது உடான்ஸ்..! பெண் என்று சொல்லிக் கொண்ட பிராணியிடம் ஏமாந்த எவனோ ஒரு சோணகிரி சொல்லிப் போன விஷயமிது. பெண்களைப் பொறுத்தவரை அவர்கள் வள்ளல்கள். நீங்கள் என்ன கொடுக்கிறீர்களோ, அதை விட பலமடங்கு வஞ்சகமில்லாமல் வாரி வழங்குபவர்கள். அது பாசம், நேசம், அன்பு, ஆதரவு, இன்பம் என்று எதுவாக இருந்தாலும் சரி..! அதே போல் மனோரீதியாகவும் ஆணிடமிருந்து வேறுபடுகிறாள். ஆழ்ந்த அன்பு, அரவணைப்பு, பொறுமை, நேர்மை, வாய்மை, மனத் தூய்மை, மென்மை, கொள்கையில் உறுதி, கற்பு நெறி என்று எல்லாவற்றிலும் அவளே உயர்ந்து நிற்கிறாள்.
பெண்ணாகப் பிறந்தாள் என்ற ஒரே காரணத்திற்காக இந்த உலகம் அவளுக்கு கொடுக்கும் இழிவுகளும், தொல்லைகளும், வேதனைகளும் கணக்கிடலங்காதவை. பிறந்தது முதல் ஒவ்வொரு நாளைக் கழிப்பதும் ஒரு சத்திய சோதனையாகி, அவை ஒவ்வொன்றையும் சராமாரியாக வென்று சாதனை படைக்கிறாள். கருவில் உருவாகும் போதே அவளுக்கு சோதனைகள் சொந்தமாகிவிடுகிறது. ஸ்கேன் என்ற நவீன எட்டப்பனால் பெண்ணென்று காட்டிக் கொடுக்கப்பட்ட மறு கணமே அவள் உயிருக்கு உலை வைக்கப்பட்டு, அதன் உத்தரவாதம் உருக்குலைக்கப்படுகிறது.
மாத்திரை, மருந்துகளால் மாயமாக்கும் மாசு கொண்ட மருத்துவர்கள், கருப்பையிலிருந்து வெளி வந்து, தன்னை உருவாக்கியர்களை கண்டு உள்ளம் உவந்து போகும் வேளையில் �கள்ளிப்பால்� என்ற பேய்ப்பால் ஊட்டப்பட்டு பேச்சு மூச்சற்று போக வைக்கும் போக்கத்தவர்கள், துளிராய் வளர்ந்து, தளிர் நடை போடும் வேளையிலேயே, அந்த பச்சை மண்ணை பாலியல் கொடுமைக்குள்ளாக்கும் பாதகர்கள், பருவமடைந்த வயதில் பட்டாம்பூச்சியாய் பறந்து, சிறகடிக்க விடாமல் சிறகொடித்து சில்லரை பார்க்க சீரழிப்பவர்கள், கடமை என்ற பெயரில் கண்டவனை கட்டிக் வைத்து, காலம் முழுதும் கலங்க வைக்க ஆவலுடன் அலையும் பெற்றோர்கள், வீட்டு வேலைக்காரியாய், உடல் சுகம் கொடுக்கும் உயிரினமாய், பொருள் உண்டாக்கும் புதிய உத்தியாய், குழந்தை பெற்றுக் கொடுக்கும் இயந்திரமாய், வயிற்றுக்கு வடித்துக் கொட்டும் சமையல்காரியாய் எண்ணும் எகத்தாள கணவன்மார்கள், சுமந்து பெற்ற போது பட்ட வேதனை போதாதென்று, வாழும் காலம் வரை வேதனைப்படுத்துவதையே வேலையாகக் கொண்டிருக்கும் வேட்டிக் கட்டிய வேசியாக மகன் என்று பெண் வாழ்க்கையில் சந்திக்கும் போராட்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
போற்றுதலுக்குரிய பெண்கள் தாயாய், தாரமாய், மகளாய், சகோதரியாய் இன்னும் பலப்பல உறவுகளின் மூலம் காட்டும் பரிமாணங்கள் அற்புதம். ஆணின் முதுகெலும்பில் இருந்து பெண் படைக்கப்பட்டதாய் சொல்லப்படுகிறது. அதனால் தானோ என்னவோ, ஒவ்வொரு ஆணின் வாழ்க்கையிலும், வளர்ச்சியிலும், வெற்றியிலும் முதுகெலும்பாய் இருந்து, அவள் தான் முன்னுரை எழுதுகிறாள். உலகில் எவ்வளவோ உறவு முறைகள் இருக்கின்றன. ஆனால் தாய், மனைவி, மகள், சகோதரி ஆகிய உறவின் மூலம் காணும் பெண்ணை ஒவ்வொரு மனிதனும் உள்ளத்தில் வைத்து போற்றுகிறான். போற்ற வேண்டும்.
நான் மேலே எழுதியுள்ள பெண் உறவுகளில் ஏதாவது ஒன்றில் ஆண் பாதிக்கப்பட்டு மனதில் வைத்து நேசிக்க மறுக்கலாம். ஆனால், ஒட்டுமொத்தமாக அனைத்தையும் அவனால் புறந்தள்ள முடியாது. அப்படி தள்ளினான் என்றால் அவன் மனிதப் பிறவியாக இருக்க முடியாது என்பது என் கருத்து. ஆண் தன் வாழ்க்கையில் தவிர்க்கமுடியாத அங்கமாகும் தாய், தாரம் (காதலி இதற்குள் அடக்கம்) என்ற இரும் பெரும் உயர்ந்த உறவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மனம் கொள்ளா மகிழ்ச்சி எனக்கு..!
அன்பெனும் பெருநதி
-
அன்பினால் நெய்யப்பட்ட ஒரு மனித உரு உண்டெனில் அது மாது என நான் அன்புடன்
விளிக்கும் மாதவராஜ் தான் என்று சொல்வேன். 80’களில் தொடங்கிய எங்கள் நட்பும்
தோழமையும...
1 நாள் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக