நேரம்:

ஞாயிறு, 20 ஏப்ரல், 2008

அசரடிக்குது அயிரமீன் குழம்பு..!

மீன் குழம்புகளில் அயிரை மீன் குழம்புக்கு ஒரு தனி சிறப்பு உண்டு என்பதை நான் படித்து, கேட்டும் இருக்கிறேன். சினிமாக்கள் கூட அதன் சிறப்பை காட்டியிருக்கின்றன. அத்தனை சிறப்புக்குரிய அயிரை மீன் குழம்பு எப்படி வைப்பது என்பதை இங்கு காண்போம்.

பாத்துப்பார்த்து உசுரோடவாங்கணும் அயிரைமீன. ரொம்பப் பொடுசாவும் இருக்கப்படாது; ரொம்பப் பெருசாவும் இருக்கப்படாது.

பாத்திரத்துல போட்டு அதுகமேல பால ஊத்தணும். பாலு ஒவ்வாது அயிரமீனுகளுக்கு, சாராயம் குடிச்ச ஆளு உண்மையக் கக்குவான் பாருங்க.... அப்படி வாய்க்குள்ள இருக்கிற கசடு, மண்ணுகளையெல்லாம் கக்கிப்புடும் கக்கி.

பால நல்லா இறுத்திட்டு உப்பு அள்ளி எறியணும் மீனுக மேல. செத்தவடத்துல எல்லாம் செத்துப்போகும்.

மண்வாசனை போக, தேங்காய்ப்பால ஊத்தி ஊறவிடணும்.

அப்புறம் மண்சட்டியில போட்டு ஒரசணும். மூணுதடவை ஒரசினாத்தான் வழவழப்புப் போகும்; பவளம் பாசி மாதிரி ஆயிரும்.

இப்ப மஞ்சட்டியில நல்லெண்ணெயை ஊத்திச் சோம்பு போட்டுச் சுடவைக்கணும். சோம்பு கல்யாணப் பொண்ணு மாதிரி லேசா வெக்கப்பட்டுச் சிவக்குதுன்னு தெரிஞ்சு வெந்தயம் போடணும். எண்ணெயைக் காயவிட்டு, சின்னவெங்காயம், மூக்கக்கிள்ளுன பச்ச மொளகா, தக்காளி, கருவேப்பில சேத்து வதக்கி வச்சுக்கிறணும்.

அரைச்சு ஊத்துற மொளகா மஞ்சள்ல இருக்கு அயிர மீன் குழம்பு சூத்திரம்.

சீரகம், சோம்பு, பச்சமொளகா, மல்லிப்பொடி, மஞ்சப்பொடி, பொன்முறுவலா வறுத்த வெந்தயம், வெங்காயம், வெள்ளப்பூண்டு உப்பு வச்சு அம்மியில அரைக்கணும். சும்மா வழுவழுன்னு வழிச்சு எடுக்கணும். அதுல அரைச்ச தேங்கா சேத்து வதக்கணும். வதக்க வதக்க அதையே அள்ளித்திங்கலாமான்னு ஆசைவரும். இப்ப நல்லெண்ணெயில் போடணும் அரைச்சு வைச்ச அய்ட்டத்த. அது சிவீர்ன்னு செவக்கற வரைக்கும் காய்ச்சணும், புளி கரைச்சு ஊத்திக் கொதிக்க வைக்கணும்.

தண்ணியக் குழம்பா வத்தவிட்டு, கெட்டிப்பதம் வந்ததும் அயிரமீனுகள அள்ளி உள்ள போடணும். பத்துநிமிசம் கொதிக்கவிட்டு வெந்தயத்தூள வெதச்சு எறக்கிவச்சா சும்மா மூக்குல நொழஞ்சு மூளையில மூல முடுக்கெல்லாம் ஓடிப்போய் உக்காரும் குழம்புவாசன.

ஆனா ஒண்ணு. சரக்குல மட்டுமா இருக்கு சமையல் ருசி?

ஆத்தா,அய்த்த, மதினி, மச்சினி, கைப்பக்குவத்துல இருக்கு, கருவாடு மீனாகிறதும் மீனு தேனாகிறதும்.

செய்முறை அளித்தவர்: கவிப்பேரரசு வைரமுத்து
நன்றி: குமுதம்

பின் குறிப்பு: இது போல் செய்து பார்த்து உங்களுக்கு அயிரை மீன் குழம்பு ருசிக்கிறதோ இல்லையோ, அழகு தமிழ் நடையில் கவியரசு வைரமுத்து கொடுத்துள்ள செய்முறை நிச்சயம் உங்களை மயக்கும்.!! (செய்து பார்த்து சுவைத்து விட்டு அதைப்பற்றி இங்கு இடுங்களேன்.!!)

நன்றி: வைரமுத்து

கருத்துகள் இல்லை:

Related Posts with Thumbnails