நேரம்:

புதன், 16 ஏப்ரல், 2008

அனிமேஷன் அற்புதம் Beovulf-திரை விமர்சனம்.!

பியோவுல்ஃப் (Beovulf) - திரை விமர்சனம்.

சமீபத்தில் பியோவுல்ஃப் (Beovulf) என்ற படத்தின் போஸ்டர் பார்த்து அதை பார்க்க ஆவல் கொண்டேன். அதை இணையத்திலிருந்து டிவிடியாக தட்டி நேற்றிரவு பார்த்தேன். திரைப்படத்தை பார்க்க தொடங்கிய எனக்கு பெரும் இன்ப அதிர்ச்சி என்னவென்றால் அது ஒரு அனிமேஷன் படம். அதன் பின், படம் தொடங்கியதிலிருந்து, முடியும் வரை நான் பெற்றது அடுத்தடுத்த இன்ப அதிர்ச்சிகள். பொதுவாக அனிமேஷன் படங்கள் என்பவை கற்பனை கதாநாயகர்களையோ, பிரபமான பெயர்களுடைய மிருகங்களை கதாபாத்திரங்களாக கொண்ட படங்களாக தான் இருக்கும். ஆனால் இது முற்றிலும் வேறுபட்டது. திரைநாயகர்களை வைத்து படம் எடுப்பது போல், அவர்களையே அச்சு அசலாக அனிமேஷனில் கொண்டு வந்து அசத்தியிருக்கிறார்கள் (ரஜினியை வைத்து அப்படி ஒரு படம் தயாரிப்பில் இருக்கிறது. அதன் ட்ரைலர் பார்த்த வகையில் தொழில்நுட்பத்தில் அந்த படம் இதனிடம் பிச்சை வாங்க வேண்டும்). இப்படி ஒரு புதுமையான முயற்சி உலக திரைப்பட உலகில் பெரும் புரட்சியை, மாற்றத்தை எதிர்காலத்தில் உண்டு பண்ணப்போவது சர்வ நிச்சயம்..!! ஒரு படம் ஒழுங்காக ஓடிவிட்டாலே உச்சிக்கு ஓடிப்போய் அமர்ந்து கொள்ளும் நம் கதாநாயர்களின் பல்லை பிடுங்கும் வேலையை இந்த புதுமை செய்யும். இனி ரஜினி படத்தில் நடிக்க ரஜினி தேவை இல்லை. அவரில்லாமல் ரஜினி படம் வெளியாகும். அவர் இல்லாவிட்டாலும் அவர் பெயரை, உருவத்தை பயன்படுத்தியதற்கு காப்பிரைட் போன்ற தொகை தரவேண்டுமே என்று நீங்கள் கேட்கலாம். இனி ரஜினி உருவம் கூட தேவையில்லை. எந்த நடிகருக்கும் பொருந்தாத புது நாயகனை உருவாக்கி திரையில் பிரபலப்படுத்தினால் அவன் தான் ஹீரோ, அதாவது மாய கதாநாயகன் (ஆனால், கதாநாயக மோகம் மக்களிடம் குறையுமா என்பது கேள்விக்குறி தான்..!!)

எனக்கு வரைவதில் விருப்பம் உள்ளவன் என்பதால் நான் பொதுவாக அனிமேஷன் படங்களை விரும்பி பார்ப்பேன். இந்த படத்தின் பெயர் என்னை கவராததால் இதை பார்க்க தவற விட்டிருக்கிறேன். இதை பார்த்த பிறகு இத்தனை நாள் பார்க்காததற்காக என்னை நான் நொந்து கொண்டேன். ஹாலிவுட் படங்களில் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மூலம் செய்யப்படும் ஒரு சில காட்சிகளை மட்டும் பார்த்துவிட்டு அவர்களின் திறமையை நினைத்து வியப்பேன். ஆனால், இந்த படத்தில் மொத்த படத்தையும் ஒரு அனிமேஷன் போல் இல்லாமல் நிஜ திரைப்படத்தை போல் எடுத்திருப்பதால் அவர்களுக்கு இனி எதுவும் சாத்தியமே என்று நிச்சயமாகிறது. அனிமேஷன் படங்களில் பொதுவாக இருக்கும் குறை கேரக்டர்களின் நடை, உடை, பாவனைகள், முக உணர்ச்சிகள் சரியாக அமையாது. அதுவும் மனிதர்களை கொண்டு செய்யப்படும் படங்களில் அது பெரும் குறையாக இருந்து விடும். ஆனால் இந்த படத்தில் கொஞ்சம் கூட அந்த வித்தியாசங்கள் எதுவும்இல்லாமல் அனிமேஷனில் கன கச்சிதமாக கலக்கியிருக்கிறார்கள். படத்தில் வரும் காட்சிகளும் கண்களுக்கு குளிர்ச்சியாகவும் இருக்கிறது.



சரி.. கதை என்ன..? அனிமேஷன் படங்களில் என்ன பெரிய கதை இருந்து விடப்போகிறது.?!! வழக்கம் போல அம்புலிமாமா கதை தான்.! ஆனால், அனிமேஷனில் தரத்தை உயர்த்தி எல்லோரையும் விழி விரித்து வியப்புடன் பார்க்க வைத்து விட்டார்கள். கதைப்படி மன்னன் ஹ்ரோத்கர் ஆளும் ஒரு நாட்டில், மிக கோர உருவமுள்ள க்ரண்டல் என்ற இராட்சத மனிதன் இருக்கின்றான். அவன் அவ்வப்போது நாட்டுக்குள் வந்து மக்களை கொல்கிறான். இதனால் மன்னருக்கு பெரும் கவலை ஏற்படுகிறது. அப்போது தான் நம் கதாநாயகன் பியோவுல்ஃபின் பிரவேசம் (அவர் நடந்த நிகழ்வாக சொல்லி காட்டும் காட்சியில் அவர் கடலில் இராட்சத ஜந்துக்களை கொல்லும் காட்சிகள் வெகு அமர்க்களம்!). அதை தன் வீர, தீர பராக்கிரமத்தை பயன்படுத்தி பயன்படுத்தி நாயகன் வெற்றி கொள்கிறான். இதனால் கோபம் கொள்ளும் அவனின் அம்மா பதிலுக்கு ஊரில் புகுந்து மக்களை கொண்டு பழி வாங்குகிறாள்..! (அம்மா வில்லி யார் தெரியுமா..நம்ப மாட்டீர்கள்.. நம்ம ஏஞ்சலினா ஜூலி தான்...! கடல் கன்னி போல் வருகிறார்..!!). அம்மா வில்லியை நாயகன் கொல்லப்போய், அதை செய்யாமல் அவள் மீது மையல் கொள்கிறார்.! பிறகு அதை கொன்றதாய் வந்து சொல்லிக்கொள்கிறார். இதன் மூலம் அரசன் தன் ஆட்சியை நாயகனிடம் கொடுத்துவிட்டு தன்னை மாய்த்துக்கொள்கிறார்.

காலம் ஓடுகிறது..!! நாயகனால் வில்லிக்குஉருவான இராட்சத ட்ராகனால் மீண்டும் நாட்டில் தொல்லை.! இது நாயகனுக்கு பெரும் கவலையை கொடுக்கிறது. அதை கொல்ல முடிவெடுத்து போகிறார். அதை கொன்றாரா, வென்றாரா என்பது தான் மீதி கதை..!!



அம்மா வில்லியாக ஏஞ்சலீனா ஜூலியை அமைக்க எப்படி மனம் வந்தது இயக்குனருக்கு என்று தெரியவில்லை. படத்தில் அவர் நடிக்காமல் நடித்திருக்கிறார், அதுவும் உடை எதுவும் இல்லாத கடல்கன்னியாக..! (படத்தில் சில இடங்களில் நிர்வாண காட்சிகள் இருந்தும் கொஞ்சம் கூட ஆபாச உணர்வு வரவில்லை. அதனால் படத்துக்கும் P13 என்று தரவுப்படுத்தி இருக்கிறார்கள்). காட்சிகளை கலை நயத்துடன், கொஞ்சம் கூட பிசகாமல் செதுக்கி இருக்கிறார்கள். கதாபாத்திரங்களுக்கு வயதானதை வெகு அற்புதமாக கற்பனையில் வடித்து, அதை தோற்றத்தில், செயல்களில் காட்டியிருக்கிறார்கள்..!!

கதாநாயகனாக ரே வின்ஸ்டன், கதாநாயகியாக ராபின் ரைட் பென், மன்னனாக அந்தோணி ஹாப்கின்ஸ், தளபதியாக ப்ரெண்டன் க்ளீசன், வில்லன் கிரண்டலாக க்ரிஸ்பின் க்ளோவர் ஆகியோர் கதாபாத்திரங்களாக உலவியிருக்கும் இப்படத்தில் தங்களின் கதாபாத்திரத்திற்கு அவரவர்களே குரல் கொடுத்திருக்கிறார்கள் (பேசி விட்டு நடித்ததற்கும் சேர்த்து இரட்டை சம்பளம் வாங்கியிருப்பார்களோ.!!). இப்படத்தை ராபர்ட் சிமெகிஸ் இயக்கி அற்புதமாய் இயக்கி இருக்கிறார். படத்தின் இசை விறுவிறுப்பிற்கு பெரும் பலம்..!!

வில்லனின் தோற்றம் மிக கொடூரமும், அருவெருப்பும் நிறைந்திருக்கும்படி வடிவமைத்திருக்கிறார்கள். இந்த படத்தை பார்க்கும் பொழுது ஒரு அனிமேஷன் படத்தை பார்க்கும் உணர்வேயில்லாமல் நிஜ நடிகர்கள், காட்சிகளை காணுவது போல் தோன்றி பிரமிப்பு ஏற்படுகிறது. இது போன்ற படங்கள் இனி அதிகமானால் கதாநாயக மோகம் ஒழிந்து நிஜ கதாநாயர்களான இயக்குநர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு பெயர் கிடைக்கும்.

இந்த படத்தின் பெருமை நான் சொல்வதை விட நீங்களே பார்த்து உணர்வது தான் பொருத்தமாக இருக்கும். இதை தியேட்டரில் பார்க்க வேண்டும், அப்படி முடியாத போது குறைந்த பட்சம் டிவிடி தரத்தில் பார்த்தால் தான் இரசிக்க ஏதுவாக இருக்கும். இந்த படத்தை பார்த்தது ஒரு இனிமையான அனுபவமென்றால் அது மிகையல்ல..!!

கருத்துகள் இல்லை:

Related Posts with Thumbnails