நேரம்:

செவ்வாய், 29 ஏப்ரல், 2008

தசாவதாரம் பட ஒலிநாடா வெளியீட்டு விழா..!

நான் ஒரு ஜாக்கிசான் ரசிகன். அவருடைய ஏறக்குறைய எல்லா படங்களையும் பார்த்துவிட்டவன். என்னை பொருத்தவரை ஏற்கனவே பார்த்துவிட்ட ஒரு படத்தை மீண்டும் பார்க்கும் ஆவல் இருந்தால் அது பெரும்பாலும் ஜாக்கிசான் படமாகத்தான் இருக்கும். பொதுவாக நடிகர்கள் திரைப்படங்களில் தங்கள் அதிகபட்ச உழைப்பை கொடுக்க நினைப்பார்கள், ஆனால் இவர் கொடுக்க நினைப்பது உயிரையும் கூட..! பல விபத்துக்களில் இருந்து இவர் உயிர் தப்பியிருக்கிறார். சரி.. அதற்கும் இந்த விழாவுக்கும் என்ன சம்பந்தம்..? இருக்கிறது..!!

ஜாக்கிசானின் பெரும்பாலான படங்களை இந்தியாவில் ரிலீஸ் செய்தவர் ஆஸ்கார் ரவிச்சந்திரன். அதற்காகவே ஆஸ்கார் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி அவரின் படங்களின் இந்திய உரிமை பெற்று வெளியிட்டு வந்தார். ஆரம்ப காலகட்டங்களில் நம் ரசிகர்களிடம் ஜாக்கிசான் படங்களுக்கு இருக்கும் பெரும் வரவேற்பை, தியேட்டர்களில் நடக்கும் ஆரவாரங்களை படம் பிடித்து சென்று ஜாக்கியிடம் காட்டினார். அதை பார்த்தவருக்கு இந்திய இரசிகர்களின் மேல் பெரும் அன்பும், மதிப்பும் ஏற்பட்டுவிட்டது. அந்த இந்திய அன்பு நம் தேச நடிகையான மல்லிகா ஷெராவத்தை மித் (Myth) என்ற படத்தில் நடிக்க வைத்தது. அவரின் படங்களை வெளியிட்டு பணம் சம்பாதித்து இன்று தமிழ் திரையுலகில் பெரிய தயாரிப்பாளர்களில் ரவிச்சந்திரனும் ஒருவராக வளர்ந்திருக்கிறார். இன்று பெரும் பட்ஜெட் படத்தை கமலை வைத்து தயாரிக்கும் அளவுக்கு அபரிதமான வளர்ச்சி இது. ஜாக்கிக்கும், அவர் இரசிகர்களுக்கும் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறார் ரவி என்று தான் சொல்ல வேண்டும்..!

தசாவதாரம் ஒலிநாடா வெளியீட்டு விழாவில் ஹைலைட் ஜாக்கி தான். அவரின் குழந்தை தனம், எளிமை இந்த விழாவில் முழுமையாக வெளிப்பட்டது. அவர் பெயர் உச்சரிக்கப்படும் போதெல்லாம் எழுந்த கரவொலிக்கு எழுந்து அவர்களின் கலாச்சாரப்படி குனிந்து நிமிர்ந்து நன்றி தெரிவித்தார். சின்ன குழந்தை போல் அடிக்கடி இரசிகர்களுடன் சேர்ந்து கை தட்டி குதூகலித்தார். ஒலிநாடா வெளியிட்ட போது பிரித்து கீழே போட்ட காகித குப்பையை எடுத்து சென்று மேடை ஓரத்தில் இருந்தவர்களிடம் கொடுத்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. நம் மக்களும் அதற்கு கரவொலியால் தங்கள் பாராட்டை தெரிவித்தார்கள். விஜய்க்கும், கே.எஸ் ரவிக்குமாருக்கும் மேடை பேச்சு வரவில்லை. மம்முட்டி, அமிதாப், கலைஞர், கமல் வழக்கம் போல் நன்றாக பேசினார்கள். சோனி ஆடியோ நிறுவனத்திற்காக பேசியவர் தன் ஆங்கிலத்தில் அருவியாய், அழகாய் கொட்டி மகிழ்வித்தார். மல்லிகா ஷெராவத்தின் பேச்சு, நடவடிக்கைகள் அநாகரீகமாக தெரிந்தது. நம் கலாச்சாரத்துடன் ஒன்றாத பெண் அவர்.

ஜாக்கியின் பேச்சு பெரும் ஹைலைட். அவரால் நம்மவர்களின் பெயரை உச்சரிப்பது மிகவும் கடினமாக இருந்தது. கமலுடன் சேர்ந்து நடிக்கவும், இந்திய திரைப்படங்களில் நடிக்கவும் விரும்புவதாக அவர் தெரிவித்தது இந்தியர்களுக்கு பெருமை. கமல் தன் பேச்சில் ஜாக்கியையும் சேர்த்து தனக்கு 3 சகோதரர்கள் என்று சொன்னதை அவர் மிகவும் இரசித்தார். இந்நிகழ்ச்சி மூலம் தசாவதாரம் படத்திற்கு நல்ல விளம்பரம் கிடைத்திருக்கிறது. அப்படத்தின் எதிர்பார்ப்பு இன்னும் கூடியிருக்கிறது. சிவாஜி படத்தின் அதிக பட்ச எதிர்ப்பார்ப்பே அந்த படம் சரியாக ஓடாததற்கு அல்லது படம் சரியில்லை என்ற கருத்து நிலவ காரணமாக அமைந்தது. அதனால் இந்த படம் வெறும் எதிர்ப்பார்ப்பை கூட்டுவது மட்டுமல்லாமல் அதை பூர்த்தி செய்யும் விதத்தில் அமைந்தால் தான் விளைவு நன்றாக இருக்கும். இல்லையென்றால் இந்த படத்தின் சம்பந்தப்பட்ட அனைவரும் விரும்பத்தகாத எதிர்மறை விளைவுகளை பெறுவார்கள்..!! தசாவதாரம் இன்னொரு ஆளவந்தானாகும்..!!! கவனம் கமல்..!!!

கருத்துகள் இல்லை:

Related Posts with Thumbnails