நேரம்:

புதன், 16 ஏப்ரல், 2008

அஞ்சாதே - திரைப்பட விமர்சனம்

சமீபத்தில் என்னைக்கவர்ந்த ஒரு சில படங்களில் அஞ்சாதே-யும் ஒன்று..!! குணத்தில் இருவேறுபட்ட துருவங்கள் தங்கள் இலட்சியத்திலும் எதிர் துருவத்தை அடையும் போது நடக்கும் நிகழ்வுகள் வெகு சுவராஸியம். நரேன், அஜ்மலின் நடிப்பு கொஞ்சம் கூட மிகையில்லாத அசத்தல் ரகம். தாங்கள் எண்ணத்தில் கொண்ட இலட்சியம் சூழ்நிலையால் சீரழிக்கப்படும் பொழுது மனிதர்கள் எப்படியெல்லாம் மாறுகிறார்கள் என்பதை வெகு எதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் மிஷ்கின்.

தன்னுடைய முந்தைய படமான சித்திரம் பேசுதடியில் கொடுத்த கமர்ஷியல் ஹிட்டான வாள மீனுக்கும் பாடல் போல், அஞ்சாதே-யிலும் ஒரு ஹிட் கத்தாழ கண்ணால பாடல்..!! பிரசன்னா இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட வேடம் (கதாநாயக ரேஸில் இருக்கும் இவர் எப்படி இதற்கு ஒத்துக்கொண்டாரென்று தெரியவில்லை). நிறைய பேருக்கு அந்த நீள முடி வில்லன் பிரசன்னா என்பதே தெரிந்திருக்காதென்று நினைக்கிறேன். பிரசன்னா இமேஜ் பார்க்காத நல்ல நடிகர் என்பதை நிரூபித்திருக்கிறார். பாண்டியராஜன் வித்தியாச வில்லன் வேடம் ஏற்று நடித்திருக்கிறார். அவரும் நடிப்பில் சோடை போகவில்லை. ஒரு மொட்டைத்தலை துணை நடிகரை முகம் காட்டாமல் நடிக்க வைத்திருக்கிறார்கள், ஏனென்ற காரணம் புரியவில்லை.

படத்தில் மனதை கவர்ந்த பல காட்சிகள் இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்தது கடைசி காட்சி..! தான் எதிரியாக நினைக்கும் நரேனால் சுடப்பட்டு சாகும் தருவாயில் நரேனின் கழுத்தில் தான் அன்பளிப்பாய் கொடுத்த மோதிரத்தை கயிறில் கட்டி கழுத்தில் அணிந்திருப்பதை பார்த்ததும் தன் நண்பனின் உயர்ந்த நட்பை உணர்ந்து நரேனிடம் சாரி சொல்லி அஜ்மல் இறக்கும் காட்சி மிகவும் உருக்கம்.

சினிமாத்தனமில்லாத, அதிக செலவில்லாமல் ஒரு தரமான படத்தை எடுத்திருக்கிறார்கள்..! இது போன்ற படங்களை பார்த்து ஆதரவு தெரிவிக்க வேண்டியது நம்முடைய கடமை..!!

(அதே போல் பிரசன்னா நடித்த கண்ணும், கண்ணும் படமும் வெகு அருமை. தவறாமல் பார்த்து விடுங்கள்..!!)

கருத்துகள் இல்லை:

Related Posts with Thumbnails