நேரம்:

ஞாயிறு, 27 ஏப்ரல், 2008

அறை எண் 305_ல் கடவுள்- விமர்சனம்

இந்த படத்தை இ. அ. 23-ம் புலிகேசியை பார்க்க போகும் மனநிலைக்கு என்னை தயார் படுத்திக்கொண்டு தான் பார்க்க தொடங்கினேன். ஆனால், படத்தின் ஆரம்பத்திலேயே மேன்ஷன் வாழ்க்கையை அப்பட்டமாக காட்டுவதிலிருந்தே இது யதார்த்தத்தை சொல்லும் படம் என புரியத்தொடங்கியது. இன்றைய எதார்த்த உலகில் பெரும் கஷ்டத்தில் இருக்கும் இரு இளைஞர்களுக்கு உதவ காக்கும் கடவுள் விண்ணுலகத்திலிருந்து மண்ணுலகம் வந்தால் என்ன நடக்கும் என்று கற்பனையில் படத்தை உருவாக்கியிருக்கிறார். மக்களை சிரிக்க வைக்கும் படம் என்று போனால் நம்மை சிந்திக்கச்சொல்லி பாடமே நடத்தியிருக்கிறார் சிம்பு தேவன். ஆனால், யாருக்கு தான் பாடம் பிடிக்கிறது..? அதனால் இந்த படம் வரவேற்பை பெறாமல் போக வழக்கம் போல் நிறைய வாய்ப்பு இருக்கிறது.

ஆனால், படத்தில் வரும் காட்சிகள், வசனங்கள் வற்புறுத்தும் கருத்துக்களில் பெரும்பாலும் நாம் பின்பற்ற அவசியமானவை. உழைப்பின்றி சோம்பி திரிவது, இந்த போட்டி உலகில் கொஞ்சமும் எடுபடாத தன் கல்வி தகுதியை பெருமை பேசி திரிவது. 5 பைசாவுக்கு வக்கில்லாவிட்டாலும் காதல் என்கிற பெயரில் கண்ட பெண்கள் பின்னால் அலைவது, கடவுளின் பெயரால் களவாணித்தனம் செய்வது, பொய் சொல்வதையே பிழைப்பாக கொண்டிருப்பது, வெட்டி பந்தா செய்வது, கெட்ட சகவாசங்களில் ஈடுபடுவது போன்ற இவையெல்லாம் சரி என்று சொல்பவர்களை தவிர மற்றவர்களுக்கு இந்த படம் பிடிக்கும்.

கண்ணால் தெரியாத கடவுளின் பெயரால் நாம் நடத்தும் கேலிக்கூத்துக்களை இந்த படத்தில் வெகு அழகாக படம் பிடித்துக்காட்டியிருக்கிறார் இயக்குநர். கடவுள் பக்தி என்பது வெறும் வியாபாரமாக்கப்பட்டதை பல இடங்களில் பெரும் கோபத்துடன் குத்திக்காட்டி உணர்த்துகிறார். அதற்கு கடவுள் நம்பிக்கை அற்ற பிரகாஷ்ராஜ் வெகு அழகாக பொருந்துகிறார். கடவுளை கூட தன் சுயநலத்துக்காக தவறாக பயன்படுத்த, ஏமாற்ற தயங்கமாட்டார்கள் என்று காட்டியிருப்பது வாழ்வியல் எதார்த்தம். கடவுள் என்றால் யார் என்று ராஜேஷிடம் கடவுள் பிரகாஷ்ராஜ் கொடுக்கும் விளக்கம் வெகு அற்புதம். படத்தின் நாயகன் என்று சந்தானம் சொல்லப்பட்டாலும் உண்மையில் கடவுளாக வரும் பிரகாஷ்ராஜ் தான் கதையின் நாயகன். கடவுளாக பூமியில் அவதரித்த பிறகு சந்தானத்தையும், கஞ்சா கருப்பையும் தன் நடிப்பினால் தூக்கி தூர வீசி விடுகிறார். மொக்கை ஜோக்குகள், இரட்டை அர்த்த வசனங்கள் சொல்லாத சந்தானத்தை நம்மால் நம்ப முடியாமல் அவர் தான் சந்தானமா என்று எண்ண வைத்திருக்கிறார். நடிப்பு நன்றாக வருகிறது. முயற்சித்தால் தமிழக முதலமைச்சர் நாற்காலியை குறிவைக்கும் தகுதியை அடையலாம்..!

கஞ்சா கருப்பு என்னண்ணே இப்புடி சொல்லிப்புட்டிய..? என்ற தன் பாணி நடிப்பில் சிரிக்க வைத்திருக்கிறார். இரண்டாம் கதாநாயகனாக வளர்ந்திருக்கும் க.கருப்புவின் இந்த அவதாரம் அவரின் வெள்ளந்தி தனமான நடிப்புக்கு கிடைத்த வெற்றி என்றே சொல்லலாம். ஊரிலிருந்து வந்த சொந்தக்காரனிடம் புருடா விடுவது, காவல் நிலையத்தில் பெண் காவல் அதிகாரியையே கமெண்ட் அடித்து தர்ம அடி வாங்கும் இடங்களில் சிரிப்பு பீறிடுகிறது. நிறைய இடங்களில் நடிப்பில் சந்தானத்தை பின்னுக்கு தள்ளி விடுகிறார். ஒரு நகைச்சுவைப்படத்தில் பெரும் நகைச்சுவை பஞ்சம் ஏனென்று தெரியவில்லை. ஒருவேளை நிறைய நகைச்சுவை இருந்தால் கருத்தையும் நகைச்சுவையாக எடுத்துக்கொண்டு விடுவார்களோ என்ற பயமாக இருக்கலாம்.

ஆக மொத்தத்தில் பார்த்து சிரிக்கவும், சிந்திக்கவும் ஏற்ற படம். சிரிப்பதற்கு பதிலாக சிந்திக்க தூண்டியதற்காக சிம்பு தேவனுக்கு ஷொட்டு..! ஆனால், சிரிக்க நினைத்த நேரத்தில் சிந்திக்க சொன்னதால் அவருக்கு குட்டு..!!

கருத்துகள் இல்லை:

Related Posts with Thumbnails