எனக்கு விலங்கினங்களில் மிகவும் பிடித்த விலங்கு குதிரை. காரணம், அதன் தோற்றம், வேகம், சுறுசுறுப்பு, அழகான பிடரி முடி, அலை அலையாய் பெண்களின் கூந்தலைப் போல் தொங்கும் நீண்ட வால், நீள உடல், அதன் மினுமினுப்பான தோல், கம்பீரமான தோற்றம் என்று குதிரை எவ்வளவு அழகு..!! அடுத்து அதன் வேகம்..! விலங்குகளில் மிக வேகமாக ஓடும் விலங்கு சிறுத்தையானாலும் யாரும் அதன் முதுகில் சவாரி செய்வதில்லை. நாம் சவாரி செய்யும் விலங்குகளில் மிகுந்த வேகமாக ஓடக்கூடிய விலங்கு குதிரை தான். குதிரை ஒரு வீட்டு விலங்கு தான். கொஞ்சம் பழக்கி விட்டோம் என்றால் நாம் சொல்வதையெல்லாம் கேட்கும் (இராம. நாராயணன் படங்களை நீங்கள் பார்த்திருந்தால் உங்களுக்கு புரிந்திருக்கும்..!!).
குதிரை மிகவும் சக்தி வாய்ந்த விலங்கு. குறிப்பாக அதன் சக்தி கால்களில்..! அதனால் தான் ஒரு இயந்திரத்தின் சக்தியை குறிப்பிடுவதற்கு கூட �குதிரை சக்தி (Horse power)� என்ற அலகினை நாம் பயன்படுத்துகிறோம். என் தாத்தா மஹாராஜபுரம் ஜமீனாக இருந்தார். அவரிடம் ஐம்பதிற்கும் மேற்பட்ட குதிரைகள் இருந்தன. நான் ஆசைப்படும் போதெல்லாம் என் தாத்தா என்னை அவருடைய குதிரையில் வைத்து கொண்டு போவார் என்று சொன்னால் நீங்கள் நம்பவா போகிறீர்கள்..?! அதனால் �ரீல்� சுற்றுவதை நிறுத்தி விடுகிறேன்.
எனக்கு குதிரை சவாரி செய்வது என்றால் கொள்ளை ஆசை. திரைப்படங்களில் கதாநாயகன் குதிரையில் பறந்து வரும் போது (இப்போது தான் தெரிகிறது, பெரும்பாலும் அவர்கள் கதாநாயகனின் நகல்.. அதாவது டூப்..!) எனக்கு பார்க்க ஆசை ஆசையாய் இருக்கும்.
ஒரு தகவலை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். இஸ்லாமியரில் குறிப்பிட்ட சிலரை இராவுத்தர் என்பார்கள். அவர்கள் முஸ்லீம்களில் ஒரு பிரிவினர் என்று பலர் தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அது தவறு. நீங்கள் �மாவுத்தர்� என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அதாவது யானையை வைத்து வளர்ப்பவர்கள், பராமரிப்பவர்கள் அவ்வாறு அழைக்கப்படுவார்கள். அது போல குதிரையை வைத்து வளர்ப்பவர்கள், பராமரிப்பவர்கள் அந்தக் காலத்தில் இராவுத்தர் என்று அழைக்கப்பட்டார்கள் (மரக்கலத்தை வைத்து வியாபாரம் செய்தவர்கள் (மரக்கலம்+ஆயர்) மரைக்காயர் எனப்பட்டார்கள். அதாவது அவர்கள் செய்த தொழிலை அடிப்படையாக வைத்து..!). அந்த குடும்ப வழியில் வந்தவர்கள் தங்கள் பெயருக்கு பின்னால் இன்றும் இராவுத்தர் என்றே குறிப்பிடுகிறார்கள் (உதா: படத்தயாரிப்பாளர் இப்ராஹிம் இராவுத்தர்). சிலரிடம் ஆடு கூட சொந்தமாக இருக்காது. ஆனாலும் அவர்களும் இராவுத்தர் என்று சொல்லிக் கொள்கிறார்கள். எப்படி என்று அவர்கள் தான் விளக்க வேண்டும்..!!
ஒரு சில சந்தர்ப்பங்களில் என் குதிரை சவாரி ஆசை நிறைவேறியது. நான் பதினைந்து வருடங்களுக்கு முன்பு சென்னை மெரீனா கடற்கரைக்கு என் மாமாவுடன் சென்றிருந்த போது குதிரை சவாரி செய்ய ஆசைப்பட்டேன். மாமாவும் என் ஆசையை நிறைவேற்றினார். ஆனால் அந்தக் குதிரைக்காரனோ குதிரையை என்னிடம் கொடுக்காமல் அதன் கடிவாளத்தை பிடித்துக் கொண்டு கூடவே ஓடி வந்தான். அப்போது எனக்கு குதிரை சவாரியின் சந்தோஷத்தை விட, அவன் கூடவே ஓடி வருவதை பார்த்த பரிதாபம் தான் அதிகம் ஏற்பட்டது.
அதே போல் ஒரு முறை ஊட்டியில் போட் க்ளப் ரோட்டில் நண்பர்களுடன் குதிரை சவாரி செய்ய ஆசைப்பட்டேன். அந்தக் குதிரைகள் மிகப் பெரிதாக இருந்தன. நாமாகவே சவாரி செய்யலாம் என்று குதிரைக்காரன் எங்களிடம் கொடுத்து விட்டான். குதிரை ஓட ஆரம்பித்தவுடன் உடலெல்லாம் சொல்ல முடியாத அளவுக்கு குலுக்கியது (பழகியவர்களுக்கு இது சுலபம்). எனக்கு கீழே விழுந்து விடுவோமோ பயமாகி விட்டது. மற்ற குதிரைகளில் இருந்த நண்பர்களையும் காணவில்லை (எங்கு கொண்டு போய் குப்புறத் தள்ளியதோ..?!). ஒரு குறிப்பிட்ட இடம் வந்தவுடன் குதிரை திடீரென்று நின்று விட்டது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. குதிரைக்காரன் இருக்கும் இடத்திற்கு செல்ல இன்னும் நிறைய தூரம் இருந்தது. குதிரையை விட்டு விட்டு இறங்கிப் போகலாம் என்றால், �குதிரை எங்கே..?� என்று குதிரைக்காரன் கேட்பானே..?!
சரி குதிரையை நடக்கவாவது செய்யலாம் என்று நான் காலால் குதிரையின் வயிற்றில் உதைக்கிறேன், கடிவாளத்தை சுண்டுகிறேன், ம்ஹ�ம்..! நகர்வேனா என்று விட்டது..! அப்போது எங்கிருந்தோ ஒரு விசில் சத்தம் கேட்டது பாருங்கள்..! குதிரை தலை தெறிக்க ஓட ஆரம்பித்தது. கடவுளை வேண்டிக் கொண்டு உயிரையும், பிடரி முடியையும் இறுக்கமாக பிடித்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டேன். கண்களை விழித்துப் பார்த்த போது குதிரைக்காரன் அருகில் நின்றிருந்தது. பிறகு தான் எல்லாம் புரிந்தது. அவன் என்னதான் நம்மிடம் குதிரையைக் கொடுத்தாலும் ரிமோட் அவன் கையில் தான். நாம் எதுவும் கட்டுப்படுத்த முடியாது. விசிலை வைத்து குதிரையை இயக்குகிறான் என்று புரிந்தது. அத்தோடு என் குதிரை சவாரி ஆசை சவாரி குதிரையைப் போல் ஓடியே போனது.!!
அன்பெனும் பெருநதி
-
அன்பினால் நெய்யப்பட்ட ஒரு மனித உரு உண்டெனில் அது மாது என நான் அன்புடன்
விளிக்கும் மாதவராஜ் தான் என்று சொல்வேன். 80’களில் தொடங்கிய எங்கள் நட்பும்
தோழமையும...
1 நாள் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக