நேரம்:

விழிப்புணர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விழிப்புணர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 21 டிசம்பர், 2015

செய்வீர்களா..?! செய்வீர்களா..?!


ஒவ்வொரு தனி மனிதனும் சேர்ந்தது தான் ஒட்டு மொத்த சமுதாயம் என்பதால் அந்த தனி மனிதனின் ஒழுக்கமே நல்லதொரு சமுதாயத்திற்கான முன்னேற்றமாக இருக்கிறது. இந்திய அரசியலில், அரசு நிர்வாகங்களில் இலஞ்சம் ஊழல்களை அதிகாரிகள், அரசியல்வாதிகள் செய்தாலும் அதை செய்ய வைப்பதில் முக்கிய பங்கு ஒவ்வொரு இந்தியனுக்கும் உண்டு. தன் சுயநலத்திற்காக ஒவ்வொருத்தரும் செய்யப்போக, இன்று ஒட்டு மொத்த சமுதாயமே இலஞ்சம் ஊழல்களால் நாளுக்கு நாள் சீழ் பிடித்து அழிந்து வருகிறது. 

அதில் மிகவும் கேவலமானது என்னவென்றால் நம் தேசத்தின் இறையாண்மையை, முன்னேற்றத்தை, பெருமையை அழிப்பது போல் பிச்சை காசிற்காக தங்கள் ஓட்டை விற்பது. காசை கொடுத்து ஓட்டை பெற்ற அரசியல் கயவர்கள் பிறகு வரி மூலம் பல மடங்கு மக்களை சுரண்டுவதை அறிந்தும் சுரணையற்றவர்களாகவே இருந்து வருகிறோம்.

”அரசன் எவ்வழி, மக்கள் அவ்வழி” என்பதற்கேற்ப இந்த விஷயத்தில் தமிழகம் இன்றும் என்றும் முன்னணியில் தான் இருந்து வருகிறது. இதில் மக்கள் என்பதை குடிமக்களாக எண்ணாமல் ஆட்சியில் இருக்கும் அரசியல் கட்சியினர், அரசு அதிகாரிகளை எண்ணிக்கொள்ளவும். சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள பேரிடருக்காக ஏற்படுத்தப்பட்ட நிவாரண முகாம்களில் கடலூரில் மட்டும் சாப்பாட்டுக்காக 40 கோடி ரூபாய்கள் செலவிடப்பட்டிருப்பதாக கடலூர் மாவட்ட கலெக்டர் அறிவித்திருப்பதை கண்டு அதிர்ந்து போய் விட்டேன்.

தன்னுடைய இருப்பிடம், வாழ்க்கையை தொலைந்து இயலாமையில் மக்கள் தவிக்கும் இந்நிலையில் கூட ”எரியிற வீட்டில் பிடுங்குறது வரை இலாபம்” என்ற ரீதியில் அதிகாரத்தில் இருக்கும் நம் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் கொள்ளை அடிப்பதை என்னவென்று சொல்வது..!!

வெள்ளப் பேரிடரை பொறுத்தவரை சென்னையும், கடலூரும் அரசால் கண்டு கொள்ளப்படாமல் இருந்தது தான் உண்மை என்று அனைவருக்கும் தெரியும். ”கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்” என்பது போல் வெள்ள நிவாரணப்பணிகளில் இஸ்லாமிய அமைப்புகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தங்கள் பெரும் உழைப்பையும், பொருட்செலவையும் செய்த பிறகு நல்ல பெயர் அவற்றுக்கு போகிறதே என்று கடைசியில் தான் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் களத்திற்கே வந்தனர். 

வந்தவர்கள் பேருக்கு நிவாரணம் கொடுத்தனர். குறிப்பாக, கடலூர் மாவட்டம் வெள்ளச்சேதத்தை பொறுத்த வரை ஒரு சவலைப்பிள்ளையாக அரசால் கை விடப்பட்ட நிலை தான். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நிவாரண முகாம்களில் மக்களுக்கு சாப்பாடு இட்ட செலவு மட்டும் 40 கோடியாம்.!!

கடலூரின் மொத்த மக்கள் தொகையையும் கணக்கிலெடுத்து அவர்கள் அனைவருக்கும் சாப்பாடு கொடுத்திருந்தால் கூட கலெக்டர் கொடுக்கும் கணக்கிற்கு பொருந்தவில்லை. செய்யாத செலவிற்கு நம்ப முடியாத கணக்கு கொடுப்பது என்பது இந்த அரசிற்கு கை வந்த கலை என்றாலும், அதற்கு ஒரு சூழ்நிலையை கூட பார்க்கும் மனமில்லையா..? அத்தனை கொடூரமான குணம் கொண்டவர்களா ஆட்சியாளர்களும், அதிகாரிகளும்.?! 

இவர்கள் 40 கோடி ரூபாய் சாப்பாட்டிற்கு மட்டுமே செலவு செய்திருந்தால் தன்னலமற்று இறங்கி சேவை செய்த இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அங்கு செய்ததெல்லாம் என்ன?

தமிழகத்தில் அரசியல், ஆட்சி என்ற பெயரில் பெரும் அயோக்கியத்தனங்கள் தான் காலம் காலமாக நடந்து வருகிறது. அது குறிப்பாக இந்த வெள்ளப்பேரிடருக்கு பின் தெள்ளத்தெளிவாக அனைவருக்கும் தெரிந்து விட்டது. இதை மேலும் இப்படியே விடுவது நமக்கு நாமே குழி தோண்டிக் கொள்வது போலாகி விடும்.

எனவே, இப்படிப்பட்ட அயோக்கியதனங்களுக்கு பின்னிருக்கும் அரசியல்வாதிகள், அதிகாரிகளை வரப்போகும் சட்ட மன்ற தேர்தலில் தூக்கியெறிந்து, இனி அவர்கள் அரசியலுக்கும், அதிகாரத்திற்கும் வர முடியாத நிலையை ஏற்படுத்த வேண்டும். அதுவே இப்படிப்பட்டவர்களுக்கு நாம் கொடுக்கும் சரியான தண்டனை..! செய்வீர்களா..?! செய்வீர்களா..?!

சனி, 27 செப்டம்பர், 2014

சென்று வா ஜெயா... சென்று வா...!!

18 ஆண்டு கால சரித்திரத்தின் இறுதிப்பக்கங்கள் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 27 செப்டம்பர் 2014 ஜெயலலிதா மற்றும் தமிழகத்தின் தலையெழுத்தி திருத்தி எழுதப்பட உள்ளது. 

பத்தி பத்தியாக எழுதப்பட வேண்டிய இந்த சரித்திரம், என்ன காரணத்தாலோ, ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. இன்றைய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டிய இந்த வரலாறு, பக்கம் பக்கமாக ஊடகங்கள் எழுத வேண்டும்.  ஆனால், கனத்த மவுனம் காக்கின்றன.



தலைமுறைகளைக் கடந்து நடக்கும் இவ்வழக்கின் விபரங்கள், இன்றைய இளைய தலைமுறையினர் பலருக்கு தெரிந்திருக்காது.  அது இணையம் இல்லாத காலம்.  அதனால் அது குறித்த பல பதிவுகள் இல்லை.

ஜெயலலிதாவைப் போல ஒரு மோசமான ஆட்சியாளர் / அரசியல்வாதியை பார்க்கவே முடியாது.  கிட்டத்தட்ட ஹிட்லர் ஆட்சி போலத்தான் தொண்ணூறுகளின் தொடக்கத்தில் நடத்தி வந்தார்.  

ராஜீவ் கொலைக்குப் பிறகு, தேர்தல் ஒரு மாத காலம் தள்ளி வைக்கப்பட்ட பிறகு, நடந்த தமிழக தேர்தலில், திமுக மீது ஏற்பட்ட கோபத்தின் காரணமாகவும், ராஜீவ் மரணத்தின் காரணமாக ஏற்பட்ட அனுதாப அலையின் காரணமாகவும், மிருக பலத்தோடு ஆட்சியைப் பிடித்தார் ஜெயலலிதா.   ஜெயலலிதா எப்படிப்பட்ட ஆணவம் மிகுந்தவர் என்பதை அப்போது தமிழ்நாடு கண்டது.  ஒரு ஆண்டு முடிவதற்குள்ளாகவே, ராஜீவ் அனுதாப அலையால் அதிமுக வெல்லவில்லை....  சொந்த பலத்தில்தான் வெற்றி பெற்றது என்று அறிவித்தார்.   தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் நடந்த கொள்ளைகளுக்கு காரணம் நரசிம்மராவ்தான்.  கைதானவர்கள் எல்லோரும் தெலுங்கு பேசுகிறார்கள், ஆகையால் அனைவரும் ஆந்திராவிலிருந்து வந்தவர்கள் என்று சட்டப்பேரவையிலேயே அறிவித்தார்.

அதன் பிறகு, நாள்தோறும் சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றம், உள்ளிருப்பு போராட்டம், கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் என்று பல்வேறு ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டார் ஜெயலலிதா.

மற்றொரு புறம், ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இருந்த மதுசூதனன், எஸ்.டிசோமசுந்தரம் ஆகியோர், ஜெயலலிதாவின் மனம் குளிர அத்தனை அடாவடிகளிலும் ஈடுபட்டனர்.  

ஜெயலலிதா ஆட்சியின் தொடக்கமே, ஜெயலலிதா ஆட்சியை விமர்சித்த தராசு இதழின் இரண்டு ஊழியர்களின் படுகொலையில்தான். காவேரி பிரச்சினை காரணமாக, காங்கிரஸ் அரசு கர்நாடக அரசுக்கு ஆதரவாக இருந்தது என்பதால், அதன் அமைச்சர் ப.சிதம்பரத்தின் வாகனத்தை அதிமுகவின் 400 ரவுடிகள் தாக்கினர்.  அண்ணா பல்கலைக்கழகத்தில் மண்டல் பரிந்துரை குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துவேன் என்று அறிவித்தார் அதன் துணை வேந்தர் முனைவர் அனந்தகிருஷ்ணன்.  இரண்டு நாட்களில் மர்ம நபர்கள், அவர் வீட்டுக்குள் நுழைந்து அவரை தாக்க முனைந்தனர்.  அனந்த கிருஷ்ணன், வீட்டினுள் இருந்த அறைக்குள் புகுந்து தாளிட்டுக் கொண்டதால் தப்பித்தார்.  சமூக நீதி காத்த வீராங்கனையின் உத்தரவுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றினாராம்.  அதற்குத்தான் இந்த தாக்குதல்.

உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி 50 சதவிகித இட ஒதுக்கீட்டை மட்டுமே பின்பற்ற வேண்டும், மாறாக தமிழக அரசு 69 சதவிகித இட ஒதுக்கீட்டை பின்பற்றுகிறது என்று வழக்கு தொடுத்தார் வழக்கறிஞர் கே.எஸ்.விஜயன்.   இதையடுத்து, இவர் மீது நடந்த கொடூர தாக்குதலில், விஜயனுக்கு, கை மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, மூன்று மாதங்கள் படுக்கையில் இருந்தார்.   இதே போலத்தான் மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரத்தின் மீதும் கொடூரத் தாக்குதல் நடைபெற்றது. 

தொண்ணூறுகளில் வழக்கறிஞர் விஜயன்.

இது போன்ற தாக்குதல் வழக்குகள் அனைத்திலும், போலி குற்றவாளிகளை ஆஜர் படுத்தி, வழக்கின் விசாரணையை திசை திருப்புவதில், காவல்துறை மிக மிக முனைப்பாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

திருத்துரைப்பூண்டி இந்தியக் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ பழனிச்சாமி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுவதாக புகார் கூறினார். மறு நாள், அவர் வீட்டிலேயே, மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையினர், கள்ளச்சாராயத்தை தேடி சோதனை நடத்தினர்.   

சட்டப்பேரவையில், அப்போதைய பாமக எம்எல்ஏ பண்ருட்டி ராமச்சந்திரன், ஆளுனர் உரைக்கு எதிராக எழுந்து, பேச முயன்றபோது, அப்போது சுயேட்சை எம்எல்ஏவாக இருந்த தாமரைக்கனியால் தாக்கப்பட்டார்.  

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஏ.ஆர்.லட்சுமணன், நிலக்கரி இறக்குமதி ஊழல் வழக்கை விசாரித்துக் கொண்டிருந்தார்.  இந்த வழக்கு ஜெயலலிதாவுக்கு எதிராக செல்லும் என்பதை உணர்ந்த ஜெயலலிதா, காவல்துறையை வைத்து, ஏ.ஆர்.லட்சுமணனின் மருமகன் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்தார். 

ஜெயலலிதாதான் இப்படி அராஜகவாதியாக நடந்து கொள்கிறார் என்றால், ஒட்டு மொத்த நிர்வாகமும் அவருக்கு துணை போனது.  காவல்துறை அதிகாரிகள், அம்மா கட்டி விட்டு வரச் சொன்னால் வெட்டி விட்டு வந்தார்கள்.

அரசியல் எதிரிகள், அப்போது இருந்த ஆள்தூக்கி தடா சட்டத்தின் கீழ் சகட்டு மேனிக்கு கைது செய்யப்பட்டார்கள்.   ஏராளமான திமுகவினர்   விடுதலைப் புலிகளோடு தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில், தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.    

வாக்காளர் அடையாள அட்டை கட்டாயம் என்று அறிவித்த தேர்தல் ஆணையர் டி.என்.சேஷனை ஏற்போர்ட்டில் இருந்து வெளியே வராமல் நான்கு மணி நேர வன்முறை.  சென்னை வந்து, தாஜ் ஹோட்டலில் தங்கியிருந்த சேஷனின் மீது மீண்டும் தாக்குதல்    என்று அநியாயங்களும், அக்கிரமங்களும், ஜெயலலிதா அரசின் அன்றாட வழக்கமாக இருந்தன. 

இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல நடந்த சம்பவம்தான் ஐஏஎஸ் அதிகாரி சந்திரலோகா மீதான ஆசிட் வீச்சு.

சதர்ன் பெட்ரோ கெமிக்கல் இன்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன் - ஸ்பிக் என்ற நிறுவனத்தின் 26 சதவிகித பங்குகள், தமிழக அரசு நிறுவனமான, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் வசம் இருந்தது (டிட்கோ). ஸ்பிக் நிறுவனத்தின் நிறுவனர்களான, ஏ.சி முத்தையா செட்டியார் மற்றும் எம்.ஏ.சிதம்பரம் செட்டியார் ஆகியோர், அரசு வசம் இருந்த பங்குகளை வாங்க வேண்டும் என்று கடும் முயற்சிகள் எடுத்தனர். 

அரசும் பங்குகளை விற்பதென்று முடிவெடுத்தது. ஆனால், என்ன விலைக்கு விற்பனை செய்வத என்பதில் கடும் சிக்கல் நீடித்தது.  டிட்கோ நிறுவனத்தின் தலைவராக சந்திரலேகா ஐஏஎஸ் இருந்தார். அப்போது தொழில் துறை செயலராக பி.சி.சிரியாக் இருந்தார்.

விற்பனை நடந்த அன்று சந்தை விலைக்கு விற்றிருந்தால், அரசின் பங்குகளுக்கு 40 கோடி ரூபாய் கிடைத்திருக்கும்.  ஆனால், அந்த பங்குகளை விலை குறைத்து விற்பனை செய்ய வேண்டும் இரண்டு செட்டியார்களும் விரும்பினர்.  செட்டியார்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதை விட, ஜெயலலிதாவுக்கு வேறு என்ன வேலை இருக்க முடியும் ?

24 ஜனவரி 1992 அன்று பங்குகளை செட்டியார்களுக்கு விற்பனை செய்யலாம் என்று முடிவெடுத்த அன்று, ஒரு பங்கின் விலை 80.  அரசு விற்பனை செய்ய ஒப்பந்தம் போட்ட நாள் 23 மார்ச் 1992.  மார்ச் 1992 வாக்கில் 80 ரூபாய்க்கு விற்கப்பட்டுக் கொண்டிருந்த ஒரு ஸ்பிக் பங்கு, ரூபாய் 210 அளவுக்கு உயர்ந்தது. 

டிட்கோ தலைவரான சந்திரலேகா ஐஏஎஸ், 80 ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கிறார்.  ஜெயலலிதா நேரடியாக சந்திரலேகாவை தொலைபேசியில் அழைத்துப் பேசுகிறார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் வளர்ந்து, அது மோசமான உரையாடலாக மாறி, யார் அழகு என்ற ரீதியில் வளர்ந்ததாகவும், உரையாடலின் இறுதியில், முதலமைச்சராவதற்கு, தோற்றம் அடிப்படை என்றால், நானும் முதல்வராகியிருப்பேன் என்று சந்திரலேகா கூறியதாகவும் தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுகின்றன.

இதையடுத்து, இந்த விபரத்தை ஜெயலலிதா அப்போது அமைச்சராக இருந்த மதுசூதனனிடம், சந்திரலேகாவுக்கு தக்க பாடம் புகட்ட சொல்லி, மதுசூதனன், இதை திண்டுக்கல் சீனிவாசனிடம் சொல்லி, சீனிவாசன், இந்த பொறுப்பை தற்போது நத்தம் விஸ்வநாதன் என்று அழைக்கப்படும் விஸ்வநாதனிடம் கூறியதாகவும், நத்தம் விஸ்வநாதன் ஏற்பாடு செய்தபடியே, சுடலை என்கிற சுர்லா சந்திரலேகா மீது ஆசிட் ஊற்றியதாகவும் கூறப்படுகிறது. சிபிஐ விசாரணையில் சுர்லா மதுசூதனனின் பெயரை கூறியதன் அடிப்படையில் மதுசூதனனை கைது கூட செய்தது சிபிஐ இணைப்பு தமிழகத்தில் ஆசிட் கலாச்சாரத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது அந்த சம்பவமே.

சுப்ரமணியன் சுவாமியோடு சந்திரலேகா

சாதாரணமாக நெருப்பு லேசாக நம் மீது பட்டாலே துடி துடித்து விடுகிறோம்.  ஒரு அழகான ஐஏஎஸ் அதிகாரியின் முகத்தில் ஆசிட் வீசினால், அவர் எப்படி வேதனைப் பட்டிருப்பார் என்பதை சற்றே கற்பனை செய்து பாருங்கள்.  

ஜெயலலிதாவை நேரடியாக தொடர்புப் படுத்த, நேரடியா எவ்வித சாட்சிகளும் இல்லையென்றாலும்,  சந்திரலேகா மீது ஆசிட் வீச்சு நடத்த யாருக்கும் காரணங்கள் இருக்க முடியாது.  அந்த வழக்கில் யார் பின்னணியில் இருந்தவர்கள் என்பது இறுதி வரை கண்டுபிடிக்கவே முடியவில்லை.     பண்டிட் சந்திரகாந்த் சொக்கா மோரே, அண்ணா துரை, சுனில் தாமோதர்     பாண்டவ் மற்றும் மஞ்சித் சிங் என்கிற பாலி ஆகியோர் குற்றவாளிகள் என்று பின்னாளில் விசாரணை நடத்திய சிபிஐ கண்டறிந்தது. 

ஆனால், ஜெயலலிதாவின் கீழ் செயல்பட்ட மாநில காவல்துறை, சுடலைமுத்து என்கிற சுர்லாதான் இதில் குற்றவாளி என்று அவனை கைது செய்து 5 ஆண்டுகள் பிணையில்லாமல் சிறையில் இருந்தான். பின்னாளில், சுர்லாவுக்கு இதில் தொடர்பில்லை என்றனர்.  ஆனால், சுர்லாவோ, சிறையை விட்டு வெளியேறி விடக்கூடாது என்பதில் தீர்மானமாக இருந்தான்.  வழக்கில் தொடர்பில்லை என்று சிபிஐ முடிவுக்கு வருவதற்கு முன்னதாகவே, அவன் வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணமூர்த்தியை நீதிமன்றத்துக்குள்ளாகவே தாக்க முயற்சி செய்தான். 

இந்த வழக்கில் இறுதி வரை யார் குற்றவாளி என்பதை கண்டுபிடிக்கவே முடியவில்லை என்பதுதான் வேதனையான உண்மை.  

காங்கிரஸ் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து, எத்தனையோ போராட்டங்களை நடத்தினாலும், தனி நபராக இணைந்து, ஜெயலலிதா கண்ணில் விரலை விட்டு ஆட்டியது யாரென்றால் சுப்ரமணிய சுவாமிதான்.  திமுக பேரணிகள், பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தினாலும், வழக்கு போட்டு, ஜெயலலிதாவை எரிச்சலின் உச்சத்துக்கே அழைத்துச் சென்றது சுப்ரமணிய சுவாமி மட்டுமே. 


30.05.1993 வரை, தமிழகத்தில் ஆளுனராக இருந்தவர், பீஷ்ம நாராயண் சிங். இவரை காங்கிரஸ் அரசாங்கம் நியமித்திருந்தாலும், இவரை வளைப்பது எப்படி என்ற கலையை கற்றிருந்தார் ஜெயலலிதா.   பீஷ்ம நாராயண் சிங்கின் "தேவைகளை" ஜெயலலிதாவின் தளபதிகள், கச்சிதமான நிறைவேற்றி வைத்தனர்.  அப்போது, வால்டர் தேவாரத்திடம் பணியாற்றிக் கொண்டிருந்த லாலி என்ற பெண் காவலர், பீஷ்ம நாராயண் சிங் பாதுகாப்புப் பணியில் நியமிக்கப்பட்டார் என்பது, நீங்கள் புரிந்து கொள்ள ஏதுவாக கொடுக்கப்படும் க்ளு.

ஆளுனர் பீஷ்ம நாராயண் சிங்

காங்கிரஸ் கட்சிக்கும், அதிமுகவுக்கும் மோதல் முற்றுகிறது. ஜெயலலிதா காங்கிரஸ் கட்சியை வாய்க்கு வந்தபடி பேசுகிறார்.  ஒரு கட்டத்தில், சட்டப்பேரவையிலேயே, தமிழகத்தில் நடக்கும் நெடுஞ்சாலை கொள்ளைகளுக்குக் காரணம், மத்திய அரசுதான்.   தமிழக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே, நரசிம்மராவ் இப்படி கொள்ளையர்களை அனுப்புகிறார்.  இதற்கு காரணம், பிடிபட்ட கொள்ளையர்கள் அனைவரும் தெலுங்கு பேசுகின்றனர் என்றார். 
இந்த விவகாரங்களையெல்லாம் அறிந்த நரசிம்மராவ், இனி பீஷ்ம நாராயண் சிங்கை தமிழகத்தில் வைத்திருந்தால், சுத்தப்படாது என்று முடிவு செய்து, பழுத்த அரசியல்வாதியான சென்னா ரெட்டியை மாநில ஆளுனராக 31 மே 1993ல் நியமிக்கிறார்.    பீஷ்ம நாராயண் சிங் இருந்தபோது, ஜெயலலிதா மீது ஊழல் வழக்கு தொடுக்க அனுமதி கேட்டு திமுக அளித்த விண்ணப்பத்தை நிராகரித்திருந்தார் பீஷ்ம நாராயண் சிங்.  
ஜெயலலிதாவுக்கு, சென்னா ரெட்டி எதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என்பது நன்றாகவே தெரிந்திருந்தது.   சென்னா ரெட்டி வந்த நாள் முதலாகவே, தினந்தோறும் மோதல்தான். அரசு அலுவலகங்களில் அரசு ஊழியர்களுக்காக அரசு அலுவலகத்தில் டைரி அச்சிடப்பட்டு வழங்கப்படும்.   அந்த டைரியின் முதல் பக்கத்தில் மாநில ஆளுனரின் படமும், இரண்டாவது பக்கத்தில், மாநில முதல்வரின் படமும் வைக்கப்படும்.  1994ம் ஆண்டு டைரியில் சென்னா ரெட்டியின் படத்தைப் பார்த்ததும் கோபப்பட்டு டைரியை விசிறியடித்தார் ஜெயலலிதா.   

அப்போதும் இருந்த ஜெயலலிதாவின் அடிமைகள், உடனடியாக அம்மாவின் மனம் கோபித்துக் கொண்டதே என்பதை உணர்ந்து உடனடியாக அத்தனை டைரிகளையும் அழித்தனர்.  ஜனவரி, மாதம் வழங்கப்பட்டிருக்க வேண்டிய டைரிகள், மே மாதம் வழங்கப்பட்டது வரலாறு. 

ஆளுனர் சென்னா ரெட்டி
அதன் பிறகு, சென்னா ரெட்டியை சந்தித்து, ஜெயலலிதா மீது வழக்கு தொடுக்க சுப்ரமணிய சுவாமி மனு அளித்தார். அந்த மனு மீது  ஆளுனர் சென்னா ரெட்டி, முட்டாள்கள் தினமான 1995ம் ஆண்டு ஏப்ரல் 1 அன்று, அனுமதி அளித்தார்.   அந்த அனுமதியை எதிர்த்து, 6 ஏப்ரல் 1995 அன்று, ஜெயலலிதா, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார். அவ்வழக்கு நீதிபதி சிவராஜ் பாட்டீல் முன்பு விசாரணைக்கு வருகிறது.. ஜெயலலிதாவுக்காக மூத்த வழக்கறிஞர் பராசரன் ஆஜரானார்.  சுப்ரமணிய சுவாமி தனக்காக தானே வாதாடுகிறார்.  வழக்கை விசாரித்த சிவராஜ் பாட்டீல், அரசியல் அமைப்புச் சட்ட விவாதங்கள் இதில் அடங்கியிருப்பதால், இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றி உத்தரவிடுகிறார். 

20 ஏப்ரல் 1995 அன்று இந்த வழக்கு நீதிபதி எம்.சீனிவாசன் மற்றும் எஸ்.எஸ்.சுப்ரமணியம் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக விசாரணைக்கு வருகிறது.   ஜெயலலிதா சார்பில் மூத்த வழக்கறிஞர் பராசரன் வாதிடுகிறார்.  சுப்ரமணிய சுவாமி, அவரே வாதிடுகிறார்.  தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிடுகிறார். வழக்கின் விசாரணை காலை 10.30 முதல் மாலை 4.30 வரை தொடர்ந்து நடைபெறுகிறது.  வழக்கு விசாரணை முடிந்ததும் தீர்ப்பை ஒத்தி வைக்கிறார் நீதிபதி.   மாலை 4.30 மணிக்கு, அப்போதைய சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் முத்துக்கிருஷ்ணன், சுப்ரமணியன் சுவாமியின் காதில் ஏதோ சொல்லுகிறார்.  உடனே எழுந்த சுவாமி, தன் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திருப்பதாகவும், போலீசார், வாயிலில் காத்திருப்பதாகவும், தனக்கு முன்ஜாமீன் வழங்கும்படியும் கேட்கிறார். நீதிபதி சீனிவாசன் அரசு வழக்கறிஞரைப் பார்த்து விபரத்தை கேட்டதும், அவர் தனக்கு இது குறித்து எதுவுமே தெரியாது என்கிறார். நீதிபதி, நாளை காலை 10.30 மணி வரை உங்களை கைது செய்ய தடை விதிக்கிறேன் என்கிறார்.

மதுரையில் நடந்த ஒரு கூட்டத்தில், சுப்ரமணிய சுவாமி, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், ஒரு Political Pariah என்று பேசியால், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் மதுரை காவல்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. இதையடுத்தே சுவாமியை கைது செய்ய, காவல்துறை நீதிமன்றம் வந்திருந்தது. 



Pariah என்ற ஆங்கிலச் சொல், தமிழில் உள்ள பறையர் என்ற சாதிப்பெயரில் இருந்தே தோன்றியது.  ஒதுக்கப்பட்டவர் என்ற பொருளில் இந்த சொல், ஆங்கில மொழியில் பதினெட்டாம் நூற்றாண்டு முதல் வழக்கத்தில் இருந்து வருகிறது.  தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிராக எத்தனையோ வன்கொடுமைகளை இழைக்கப்பட்டபோது வேடிக்கை பார்த்த ஜெயலலிதா, கொடியங்குளத்தில் தலித்துகளின் வீடுகளை காவல்துறையை விட்டு சூறையாடுவதை வேடிக்கை பார்த்த ஜெயலலிதா, சுப்ரமணியன் சுவாமி Political Pariah என்று சொன்னதற்காக, வழக்கு தொடுத்தார்.  அப்படியே சுப்ரமணியன் சுவாமி சாதி ரீதியாக அந்த வார்த்தையை பேசியிருந்தாலும் கூட, அதில் புகார் கொடுக்க வேண்டியது வேலுப்பிள்ளை பிரபாகரன்தானே தவிர, காவல்துறை அல்ல.  

நீதிமன்றத்தின் வெளியே சுவாமி வந்தபோது, அப்போது, மாநில சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்த வால்டர் தேவாரம் மற்றும், மதுரை ஆணையர் ஆர்.என்.சவானி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட கமாண்டோக்கள் சுவாமியை கைது செய்ய காத்திருந்தனர்.  சுவாமியோடு வந்த 30 கமாண்டோக்களும் இருந்தனர்.  ஒரு மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது.

வால்டர் தேவாரம்

சுவாமி வந்ததும், தேவாரம் உங்களை கைது செய்கிறேன் என்றார். சுவாமி, எனக்கு உயர்நீதிமன்ற டிவிஷன் பென்ச், நாளை காலை 10.30 மணி வரை கைது செய்ய தடை விதித்திருக்கிறது என்றார்.  தேவாரம் உத்தரவின் நகலைக் கொடுங்கள் என்றார்.  சுவாமி இது வாய்மொழி உத்தரவு என்றார். நான் நம்ப மாட்டேன் உங்களை கைது செய்கிறேன் என்றார் தேவாரம்.   உடனே சுவாமி, நான் உயர்நீதிமன்றம் உத்தரவு போட்டிருக்கிறது என்று சொல்கிறேன். நீங்கள் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் கைது செய்வேன் என்கிறீர்கள்.   நெருப்போடு விளையாடுகிறீர்கள்.    இதற்கான விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டும் என்கிறார்.

கொஞ்சம் தயங்கிய தேவாரம் மைக் மூலமாக, உயர்நீதிமன்றத்தினுள் இருந்த காவலரை அழைத்து, அரசு குற்றவியல் வழக்கறிஞரிடம் விபரம் கேட்டு சொல்லும்படி உத்தரவிட்டார்.  15 நிமிடங்கள் கழித்து, மைக்கில் அந்த காவலர், அரசு குற்றவியல் தலைமை வழக்கறிஞர் பி.ஸ்ரீராமுலு, நீதிபதிகளின் தீர்ப்பை உறுதி செய்ததும், சுவாமியை செல்ல அனுமதித்தார். 

அங்கிருந்து நேராக தன் வீட்டுக்கு சென்ற சுவாமி, ஆளுனரை சந்திக்கப் போவதாக தெரிவித்தார்.  பத்திரிக்கையாளர்களும், அவர் பின்னாலேயே சென்றனர்.  ஆளுனர் மாளிகைக்கு சென்று, சென்னா ரெட்டியை சந்தித்த சுவாமி, மீண்டும் திரும்பி தன் வீட்டுக்கு வந்தார். சிறிது நேரம் கழித்து, முக்கிய டெவலப்மென்டுகள் இருப்பதாகவும், மீண்டும் ஆளுனரை சந்திக்கப் போவதாக அறிவித்து விட்டு கிளம்பினார். பத்திரிக்கையாளர்களும், அவர் பின்னாலேயே சென்றனர். ஹால்டா சந்திப்பு வந்ததும், சுவாமியின் கார், நிற்காமல் நேராக சென்றது. என்ன நடக்கிறது என்பதை உணரும் முன், சுவாமி, நேராக விமான நிலையம் சென்று, வாசலில் தயாராக போர்டிங் பாஸ் வைத்திருந்தவரிடம் அதை பெற்றுக் கொண்டு, எந்த லக்கேஜும் இல்லாமல், விமான நிலையத்தினுள் நுழைந்து, மும்பை செல்லும் விமான நிலையத்தில் ஏறினார்.

விமானம் கிளம்ப இன்னும் 30 நிமிடங்கள் இருந்தன.  செய்தியறிந்த ஜெயலலிதா ருத்ர தாண்டவம் ஆடினார். என்ன ஆனாலும் சரி. சுவாமியை விமானத்துக்குள் ஏறி கைது செய்யுங்கள் என்றார்.  அப்போது சென்னை மாநகர ஆணையர் ராஜகோபாலன்.  டிஜிபியாக ஸ்ரீபால் இருந்தார். இருவரும், விமான நிலைய வாயில் வரைதான் தமிழக காவல்துறையின் கட்டுப்பாடு.  விமான நிலையத்தின் உள்ளே மத்திய அரசின் கட்டுப்பாடு. விமான நிலையத்தில் ஏறுவதில்லை என்று முடிவெடுத்தனர். 

மறுநாள் காலை, புதிய டிஜிபி மற்றும் புதிய ஆணையர்.   ஆளுனரைப் பார்க்க சென்ற சுவாமி, ஆளுனர் மாளிகையில் இருந்து மத்திய உள்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.சவாணை தொடர்பு கொண்டு, விபரத்தை சொல்லுகிறார்.   சவாண், உடனடியாக டெல்லி வருமாறும், டெல்லி விமானம் உடனடியாக இல்லாத காரணத்தால், மும்பை சென்று, அங்கிருந்து டெல்லி வருமாறும் கூறுகிறார்.   அதன்படி, மும்பை சென்ற சுவாமி, தமிழக காவல்துறையிடமிருந்து தப்பிக்க, நேராக பால் தாக்கரே இல்லத்தில் சென்று, தங்கி விட்டு, அங்கிருந்து டெல்லி சென்றார்.



டெல்லியில் 10.30 மணி முடிந்ததும் சுவாமியை கைது செய்யலாம் என்று தமிழக காவல்துறை காந்திருந்தது.  9 மணிக்கே உச்சநீதிமன்றத்தினுள் சென்ற சுவாமி தலைமை நீதிபதி அகமாதியை அவர் அறையில் சந்தித்து விபரங்களை தெரிவிக்கிறார்.   அகமாதி 10.30 மணிக்கு நீதிமன்றத்தினுள் வந்து கூறுமாறு கூறியதன் அடிப்படையில் அவ்வாறே செய்கிறார் சுவாமி. வழக்கின் விபரங்களை கேட்ட அகமாதி சிரித்து விட்டு, இந்தியாவில் எந்த மூலையில் அவர் கைது செய்யப்பட்டாலும், 100 ரூபாய்க்கான சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு, உத்தரவின் நகலையும் உடனே வழங்க உத்தரவிடுகிறார்.  வெற்றிக் களிப்போடு வெளியேறினார் சுவாமி.

இந்த வழக்கின் தீர்ப்பு 27 ஏப்ரல் அன்று வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் கசிந்தன.  சென்னா ரெட்டி வழக்கு தொடுக்க கொடுக்க இருந்த அனுமதி சரி என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என்று அறிந்ததும் 26 அன்று சட்டசபையில் ஒரு அடிமையை விட்டு கேள்வி கேட்க வைத்தார் ஜெயலலிதா. அவரும் அப்படியே கேட்டார். உடனே ஜெயலலிதா, நான் ஆளுனரை சந்திப்பதை ஏன் தவிர்க்கிறேன் என்றால், கடந்த முறை ஆளுனரை சந்தித்தபோது, என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் என்று கூசாமல் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.  இதுதான் ஜெயலலிதா.


தனக்கு எதிராக தீர்ப்பு வர இருக்கிறது என்று தெரிந்ததும் அதற்கு காரணமான சென்னா ரெட்டியை அவமானப்படுத்துகிறாராம்.   இந்த சம்பவத்தையும், தற்போது சொத்துக் குவிப்பு வழக்கின் புகார்தாரரான சுப்ரமணியன் சுவாமியின் மீது ஜெயலலிதா தொடர்ந்துள்ள 5 அவதூறு வழக்குகளையும் ஒப்பிட்டுக் கொள்ளுங்கள்.  தெளிவு பிறக்கும். 

நீதிபதி எம்.ஸ்ரீனிவாசன்
அதன் பின் நீதிபதி என்.சீனிவாசன் ஆளுனர் அளித்த அனுமதி செல்லும் என்று தீர்ப்பளித்ததும், உச்சநீதிமன்றம் சென்று தடை பெற்றார் ஜெயலலிதா.   அந்த வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டு, இன்னும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது என்பது ஒரு சோகமான வரலாறு.

பதவியில் இருக்கும் ஒரு முதலமைச்சருக்கு எதிராக ஆளுனர் ஊழல் வழக்கு தொடுக்க அனுமதி கொடுத்த முதல் நபர் ஜெயலலிதா என்று வரலாற்றின் கருப்புப் பக்கங்களில் இடம் பிடித்தார் ஜெயலலிதா. இதற்கு முன், இதே போல மகாராஷ்டிர மாநிலத்தின் முதல்வர் ஏ.ஆர்.அந்துலேவுக்கு எதிராக அம்மாநில ஆளுனர் அனுமதி அளிக்க இருந்தார்.  ஆனால் அனுமதி அளிப்பதற்கு முன்னதாகவே, பதவியை ராஜினாமா செய்தார் அந்துலே. ஊழல் பேர்வழியாக இருந்தாலும், அந்துலே பொதுமக்கள் கருத்துக்கு மரியாதை கொடுத்தார்.   

ஆனால் ஜெயலலிதா ? 

இரண்டு தொகுதிகளுக்கு மேல் வேட்பு மனு தாக்கல் செய்யக் கூடாது என்பது தெரிந்தும், நான்கு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்து, அதற்காக ஒரு புதிய வழக்கை வாங்கிய அறிவாளிதான் ஜெயலலிதா.

இந்த வழக்கு குறித்து பேசிய ஒரு மூத்த பத்திரிக்கையாளர் கூறுகையில் "18 ஆண்டுகளாக இந்திய நீதித்துறையை ஜெயலலிதா கற்பழித்துள்ளார். இது போல ஒரு வழக்கை இந்தியாவில் எந்த அரசியல்வாதியும் இழுத்தடித்தது கிடையாது. வழக்கறிஞரின் மாமனாருக்கு உடல் நிலை சரியில்லை என்பதையெல்லாம் காரணம் காட்டி வாய்தா கேட்டனர். நீண்ட தாமதத்துக்குப் பிறகு, இவ்வழக்கின் நீதிபதியாக நியமிக்கப்பட்ட பச்சாபுராவை கதற வைத்தனர்.  மனம் நொந்த அவர், கடந்த ஆறு மாதங்களாக இவ்வழக்கில் ஒரு முன்னேற்றமும் இல்லை. நான் இந்த நீதிமன்றத்தில் தனியாக எந்த வேலையும் இல்லாமல் அமர்ந்திருக்கிறேன். ஏறக்குறைய தனிமைச் சிறையில் இருப்பது போல உணர்கிறேன் என்று அவர் மனம் நொந்து புலம்பினார்.

அடுத்ததாக இவ்வழக்கில் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா மீது கர்நாடக லோக் ஆயுக்தாவில் பொய்யான ஒரு வழக்கை தாக்கல் செய்து, அவரை மனம் நோகச் செய்து, ராஜினாமா செய்ய வைத்தனர்.  60 ரூபாய் ஊதியம் பெற்ற ஒருவருக்கு 66 கோடி ரூபாய் எப்படி வந்தது என்ற மிக மிக எளிமையான வழக்கு இது. ஆனால், 18 வருடங்களாக இந்த வழக்கை இழுத்தடிக்க ஒரு அரசியல்வாதியால் முடிகிறது என்பது, இந்தியாவின் மிகப்பெரிய சாபக்கேடு." என்ற அவர் மேலும், "தனது நண்பர்கள் ஒவ்வொருவராக எதிரியாக்கியதன் மூலம், ஜெயலலிதா தன்னுடைய மரண வேட்கையை வெளிப்படுத்துகிறார்.  90 வயதிலும் கருணாநிதிக்கு இன்னும் மூன்று முறை முதல்வராக வேண்டும், கட்சியையும் தமிழகத்தையும் ஆள வேண்டும் என்ற வேட்கை உள்ளது.  ஆனால், ஒவ்வொரு முறையும் ஜெயலலிதா தன்னுடைய மரண வேட்கையைத்தான் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்" என்றார்.

அவர் கூறியது உண்மை என்று உணர்த்தும் வண்ணமே ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. ஜெயலலிதாவோடு, ஒட்டி உறவாட விரும்பும் பல்வேறு பார்ப்பனீய சக்திகள் பிஜேபி முழுக்க நிறைந்துள்ளன. ஆனால், எந்த விதமான அரசியல் மாற்றத்தையும் ஏற்படுத்த இயலாத ஒரு மிக மிக சாதாரணமான உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் ஒரே கட்சியான பிஜேபியின் வேட்பாளர்களை கடத்துவது, கட்சி மாறச் செய்வது, வேட்பு மனுக்களை வாபஸ் பெறச் செய்வது என்ற தனது நடவடிக்கைகளின் மூலம், ஜெயலலிதா தனது மரண வேட்கையையே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

எப்படியாவது ஜெயலலிதாவுக்கு உதவலாம் என்று நினைப்பவர்களைக் கூட, வம்பாக சண்டை இழுத்து எதிரியாக்குகிறார்.    

நாளை சிறை என்ற அச்சுறுத்தல் இருக்கையில் உலகில் எந்த அரசியல்வாதியாவது,  மின் கட்டணத்தை 20 சதவிகிதம் உயர்த்துவானா ? இது ஜெயலலிதாவின் மன நிலையையும், சாடிசத் தன்மையையுமே உணர்த்துகிறது.  இப்படிப்பட்ட ஒரு மன நிலை உடையவர் தொடர்ந்து தமிழகத்தை ஆட்சி செய்தால், அதனால், தமிழக மக்கள் அடைய உள்ள துன்பங்கள் ஒன்றிரண்டு அல்ல.

இந்த கட்டுரையும், இது போல பல்வேறு விபரங்களும், தமிழகத்தில் உள்ள அனைத்து பத்திரிக்கைகளிலும், தீர்ப்பு நாள் அறிவிக்கப்பட்டது முதல், வெளி வந்திருக்க வேண்டும்.  இன்றைய தலைமுறைக்கு இந்த விபரங்கள் சுத்தமாக தெரியாது.  ஆனால், ஜுனியர் விகடனைத் தவிர்த்து ஒரு ஊடகம் கூட இது குறித்து எழுதாமல் கள்ள மவுனம் சாதிக்கின்றன.  
அந்த பத்திரிக்கையாளர் இது குறித்து கூறுகையில், "இந்த வழக்கில் ஜெயலலிதா விடுதலையானால் கூட என்னால் சகித்துக் கொள்ள முடியும்.  அப்படி விடுதலை ஆனால் மைக்கேல் குன்ஹாவைக் கூட மன்னிப்பேன்.   ஆனால், இந்த சோரம் போன ஊடகங்களை ஒரு போதும் மன்னிக்க மாட்டேன். பக்கம் பக்கமாக எழுதப்பட வேண்டிய ஒரு விஷயத்தை இந்த ஊடகங்கள் திட்டமிட்டு மூடி மறைக்கின்றன.   

ஜெயலலிதாவின் வழக்கு குறித்து எழுதாவிட்டால் ஜெயலலிதா காப்பாற்றப்படுவார் என்பது போன்ற பொய்யான நம்பிக்கையின் அடிப்படையில் இந்த ஊடகங்கள் மவுனம் காக்கின்றன.  ஜெயலலிதாவின் 91 ஆட்சியிலும், 2001 ஆட்சியிலும், பல்வேறு ஊழல்கள் வெளி வந்ததற்கான ஒரே காரணம் ஊடகங்களின் அற்புதமான பணிதான்.   ஆனால், 2011 ஆட்சியில் ஊடகங்கள் மிக மிக மோசமான துரோகத்தை தமிழகத்துக்கு செய்து கொண்டிருக்கின்றன.  ஊடகங்களின் மவுனம், இந்த ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து"  என்றார்.

அரசியல்வாதிகளின் ஊழல்களை கூட மன்னித்து விடலாம். ஆனால் ஐஏஎஸ் அதிகாரியின் முகத்தில் ஆசிட்டை ஊற்றுவதும், மகாமகக் குளத்தில் தோழியோடு குளிப்பதற்காக, நெரிசலில் 50க்கும் மேற்பட்டடவர்களை நெரிசலில் சாக வைப்பதும் ஏற்றுக் கொள்ள முடியுமா ?  அந்த மகாமகக் குளத்தில் உங்கள் பெற்றோரும், என் பெற்றோரும் இறந்திருக்கக் கூடும்தானே..... ?   இதற்கெல்லாம் தண்டனை வேண்டாமா.... ?  அதுதான் சொத்துக் குவிப்பு வழக்கு.  

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்.
வேதனை விளைவிக்கும் தீய செயல்கள் தன்னைத் தாக்கலாகாது என எண்ணுகிறவன் அவனும் அத்தீங்குகளைப் பிறருக்குச் செய்யாமல் இருக்க வேண்டும்.

புதன், 15 மே, 2013

நடப்பதெல்லாம் அவலம்..!!



இன்றைய காலத்தில் தொலைக்காட்சிகள் தொல்லைக்காட்சிகளாக மாறிவிட்ட நிலையில் அதில் வன்முறை, முறையற்ற பாலுறவு, கலாச்சார சீர்கேடுகள் இல்லாத நிகழ்ச்சிகளை, தொடர்களை திரைப்படங்களை பார்ப்பது என்பது அரிதாகி விட்டது. குறிப்பாக குழந்தைகள், இளம் வயதினர் இருக்கும் குடும்பங்களில் தொலைக்காட்சியை மிகவும் கவனத்துடன் பயன்படுத்துவது என்பது இன்றைய காலத்தின் கட்டாயம்.

ரியாலிட்டி ஷோ மற்றும் டாக் ஷோ என்ற பெயரில் தொலைக்காட்சியின் மூலம் வெளிப்படும் உண்மைகள் நம் சமூகம் எத்தனை சிதைந்தும், சீர்குலைந்தும் போய் இருக்கிறது என்பதை காட்டுகிறது. விஜய் டிவியின் நீயா நானா மற்றும் ஜி தமிழ் தொலைக்காட்சியின் சொல்வதெல்லாம் உண்மை போன்ற நிகழ்ச்சிகளை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம். அதுவும் குறிப்பாக சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி ஏற்படுத்தும் அதிர்வுகள், வெளிப்படுத்தும் அவலங்கள் காண்பவர்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. குடும்ப உறவுகளுக்குள் எத்தனை கோபம், குரோதம், வன்முறை, துரோகங்கள் இருக்கின்றன என்பதை உணரும் போது குடும்ப உறவுகள் பாதுகாப்பானவை, பிரச்சினைகள் அற்றவை என்ற எண்ணமே பலவீனப்படுகிற உணர்வே ஏற்படுகிறது.

சமீபத்தில் ஒளிபரப்பப்பட்ட சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியில் வெளிப்பட்ட உண்மைகளை அறிந்தால் நீங்கள் அதிர்ந்தே போவீர்கள். ராஜி என்ற 35 வயதுக்கு மேலான ஒரு பெண். அவளின் கணவன் ஒரு குடிகாரன் மற்றும் சந்தேகப் புத்திக்காரன். வேலைக்கு போவதில் இஷ்டமில்லாதவன், அப்படியே போனாலும் சம்பாத்தியத்தை மனைவிக்கு தராதவன். அவர்களுக்கு 4 குழந்தைகள். அதில் 2 வயதுக்கு வந்த மகள்கள் மற்றும் 2 மகன்கள். இதில் ஒரு மகன் ஏதோ காரணத்தால் இறந்து விட்டான். அடுத்த மகன் ஒரு கொலையில் சம்பந்தம் என்று குற்றம் சாட்டப்பட்டு ஜெயிலில் இருக்கிறான். அவனுக்கு ஒரு நண்பன். ஆண் பிள்ளை துணை இல்லாத வீட்டில் உதவிகள் செய்ய வருகிறான் புஷ்பராஜ் என்கிற 20 வயதிற்குட்பட்ட நண்பன். கணவனால் பல வகைகளில் கஷ்டப்பட்ட, ஏமாற்றம் அடைந்த ராஜிக்கு புஷ்பராஜ் உறவு ஆறுதலாக அமைகிறது. நண்பனின் தாய் என்பதால் அவளை அம்மா என்றே அழைக்கிறான்.

ஒரு கட்டத்தில் இருவரின் நெருக்கம் கூடி போய் அவர்களுக்குள் தவறான உறவு உண்டாகிறது. கணவன், தாய், புஷ்பராஜின் பெற்றோர், உறவுகள் என்று பலரும் கண்டித்தும் இருவரும் உறைவை முறித்துக்கொள்ள தயாரில்லை. இந்த சூழ்நிலையில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் வந்து கலந்து கொண்டார்கள் இருவரும். தாயை போன்ற நண்பனின் தாயோடு கள்ள உறவு என்ற அதிர்ச்சியில் நாம் உறைந்து இருக்கும் பொழுது அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக வருகிறது மேலும் சில அசிங்கமான உண்மைகள்.

ராஜியோடு நெருங்கி பழகியதால் அவர்கள் குடும்பத்தில் ஒன்றிய புஷ்பராஜ் அடுத்து செய்த காரியம் ராஜியின் மூத்த மகளான கல்கியை காதலிப்பதாக கூறி ஏமாற்றியிருக்கிறான். அந்த அப்பாவி பெண்ணும் நம்பி மோசம் போய் இருக்கிறாள். ஒரே நேரத்தில் அந்த அயோக்கியன் தாய், மகளை ஏமாற்றி இருக்கிறான் என்பதறிந்து அனைவருக்கும் பேரதிர்ச்சி. இந்நிலையில் நிகழ்ச்சியில் ராஜி, அவளின் கள்ளக்காதலன் புஷ்பராஜ், அவளின் இரு மகள்கள், ராஜியின் கணவன், புஷ்பராஜின் பெற்றோர் கலந்து கொண்டனர். நடந்த விஷயங்கள் அனைத்தும் வெளிச்சத்துக்கு வந்தது, புஷ்பராஜ் ராஜியின் மகளை காதலிப்பதாக ஏமாற்றியதை தவிர. அதுவும் இறுதியில் அனைவருக்கும் தெரிந்து போனது.

ராஜியின் கணவன் அவள் திருந்தி வந்தாள் ஏற்றுக்கொள்ள தயார் என்று கூறினான். ஆனால் ராஜிக்கு அவனோடு வாழ்வதில் இஷ்டமில்லை. புஷ்பராஜின் பெற்றோரோ தங்கள் பிள்ளை தனக்கு வேண்டும் என்று கண்ணீர் விட்டனர். ஆனால் புஷ்பராஜ்க்கு ராஜி இல்லாமல் வாழ முடியாது என்று (கள்ளக்)காதல் வசனம் பேசினான். நிகழ்ச்சியின் போது புஷ்பராஜ் ராஜியின் மகளை ஏமாற்றிய விஷயம் வெளிவந்த போது ராஜிக்கு பெரும் அதிர்ச்சி. தன்னிடம் நடித்து துரோகம்(!) செய்த "அவன் இனி எனக்கு வேண்டாம்" என்று சொன்னாள். இதனால் பெரும் வேதனையான புஷ்பராஜ் தன்னை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் படி கண்ணீருடன் அவள் காலில் விழுந்து மன்றாடினான்.

இந்த நிகழ்ச்சியை நடத்தும் லட்சுமி ராமகிருஷ்ணன் இந்நிகழ்ச்சியில் செய்ய முயற்சி செய்த முடிவுகள்:

1. ராஜியின் மகள் காதலில் ஏமாற்றிய புஷ்பராஜின் பக்கமே இனி போகக்கூடாது. இடையில் நிறுத்திய பள்ளிப்படிப்பை தொடர வேண்டும்.

2. புஷ்பராஜ் ராஜியை மறந்து பெற்றோருடன் வாழ வேண்டும்.

3. ராஜி நடந்ததை மறந்து கணவனுடன் சேர்ந்து வாழ வேண்டும்.

இறுதியில் புஷ்பராஜ் பெற்றோருடன் சேர்ந்து வாழ ஒத்துக்கொண்டு அவர்களுடன் கிளம்பி சென்றான். ஆனால், ராஜி இறுதி வரை கணவனுடன் வாழ மறுத்துவிட்டாள்.

இத்தனை அசிங்கங்கள் அரங்கேறிய அந்த நிகழ்ச்சியில் ஆறுதலான விஷயம் என்றால் புஷ்பராஜ்க்கு விழுந்த அடிகள் மற்றும் கிடைத்த அவமானம் தான்.

இது போன்ற நிகழ்ச்சிகள் சம்பந்தவர்களை திருத்திவிடும் என்றோ, பெரும் சமூக மாற்றத்தை ஏற்படுத்தி விடுமென்றோ எனக்கு தோன்றவில்லை. ஆனால், நாம் அறியாத, நம் எண்ணங்கள் மற்றும் கற்பனையையும் தாண்டிய கேவலமான விஷயங்கள் சமூகத்தில் இன்றும் நடந்து கொண்டிருக்கிறது என்பதை உணரவும், சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி இது போன்ற கலாசார அதிர்ச்சி தரும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி தன் டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்திக்கொள்ளவும் மட்டுமே பயன்படும் என்பது தான் உண்மை. 


கணவன் மனைவி இருவருக்கிடையே இருக்க வேண்டிய காதல், அன்பு, பாசம், புரிதல், விட்டுக்கொடுத்தல், அர்ப்பணிப்பு, சம உரிமை, அதே போல் குழந்தைகள் மேல் பெற்றோர் காட்ட வேண்டிய பாசம், அக்கறை, கண்டிப்பு ஆகியவை இல்லாத பட்சத்தில் எந்த குடும்பத்திலும் இது போன்ற அவலங்கள் ஏற்பட வாய்ப்புண்டு என்பது தான் இந்நிகழ்ச்சிகள் மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.!!!

ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

மருத்துவத்துறையில் கொள்ளைக்கும்பல்.!



ஒரு விவசாயி வயலில் வேலை செய்யாமல் ஜீவிக்க முடியாது. ஒரு பாட்டாளி உழைக்காமல் உயிர் வாழ முடியாது. கட்டடப் பொறியாளர் கூட, கட்டடம் பக்கமே வராமல் சம்பாதிக்க முடியாது.

ஆனால், ஒரு டாக்டர் நோயாளியைக் குணப்படுத்தாமலேயே லட்சம் லட்சமாய் குவிக்க முடியும்.

மருத்துவ உலகில் வளர்ந்துவரும் ஆய்வக நோயறியும் முறையினால் (லேபரட்டரி டயக்னோசிஸ்) ஏற்பட்டிருக்கும் நூதன மாற்றம் இது. ஒரு நல்ல டாக்டருக்கான முன் நிபந்தனையாக அவர் எந்த அளவுக்கு நோயாளியைக் குணப்படுத்துவார் என்பது இருந்தது. அவரை ஊரில் "கைராசி" டாக்டர் என்பார்கள்.

ஒரு டாக்டர் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டுமெனில், நோயாளிக்குச் சிறந்த சிகிச்சையளித்து குணப்படுத்தியாக வேண்டும். இதெல்லாம் அந்தக் காலம்!

இன்றைக்கு நோயாளிகளைக் குணப்படுத்த வேண்டிய அவசியம் டாக்டர்களுக்கு இல்லை. சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் ஆகியவற்றுக்குப் பரிந்துரை செய்தாலே போதும், அதிலிருந்து வருகிற கமிஷன், சிகிச்சை பெற வருவோர் தரும் ஃபீûஸக் காட்டிலும் பலப்பல மடங்கு அதிகம். சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மூலம் டாக்டர்களுக்குக் கிடைக்கிற கமிஷன் விகிதத்தைக் கேட்டால் நமக்குத் தலை சுற்றும்; பி.பி. எகிறும்.
 மதுரை போன்ற நகரத்தில், மூளைக்கான சிடி ஸ்கேனுக்கு ரூ. 2,500 வசூலிக்கப்படுகிறது; இதில் டாக்டருக்கான கமிஷன் ரூ. 1,500. சிடி ஸ்கேன் நடத்தும் நிறுவனத்துக்கு கிடைப்பது ரூ. 1,000 மட்டுமே.

அதேபோல், மூளைக்கான எம்.ஆர்.ஐ. ஸ்கேனுக்கு வசூலிக்கப்படுவது ரூ. 6,000. இதில் டாக்டருக்கு கமிஷன் ரூ. 4,000. மீதி ரூ. 2,000 மட்டுமே ஸ்கேன் நடத்தும் நிறுவனங்களுக்கு. இது தவிர டாக்டரிடமிருந்து வரும் ஒவ்வொரு 6-வது பரிந்துரை மூலமாகக் கிடைக்கும் முழுத் தொகையும் கமிஷனாக டாக்டருக்கே தரப்படுகிறது.

டாக்டருக்குத் தந்தது போக மீதியுள்ள தொகையில் ஸ்கேன் நடத்தும் நிறுவனங்களுக்கு நிச்சயம் ஒரு லாபம் இருக்கும். அது இல்லாமல் நிறுவனத்தை நடத்த இயலாது. அப்படியெனில், ஒரு ஸ்கேனுக்கான அசலான மதிப்புதான் என்ன? கமிஷனையும் லாபத்தையும் நீக்கிவிட்டுப் பார்த்தால், ஒரு ஸ்கேன் ரூ. 500-க்கும் ஒரு எம்.ஆர்.ஐ. ரூ. 1,000-க்கும் மக்களுக்குக் கிடைக்க வேண்டும்.

ஆனால், ரூ. 500 மதிப்புள்ள சி.டி. ஸ்கேனை ரூ. 2,500-க்கும்; ரூ. 1,000 மதிப்புள்ள எம்.ஆர்.ஐ. ஸ்கேனை ரூ. 6,000-க்கும் பெற்று வருகிறோம். கிட்டத்தட்ட 5 அல்லது 6 மடங்கு லாபம் இந்தத் துறையில் புகுந்து விளையாடுகிறது. இதில் பெரும்பகுதி டாக்டர்களுக்குக் கொடுப்பதற்காக நோயாளிகளிடமிருந்து பறிக்கப்படுவதாகும்.

எந்தத் துறையிலும் கமிஷன் பெறுவது என்பது லஞ்சத்துக்குச் சமமானதாகக் கருதப்படுகிறது. ஆனால், மருத்துவத் துறையில் இது அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகவே நடந்து வருகிறது.

இதுதான் இப்படியெனில், மருந்துப்பொருள்கள் விற்பனையிலும் மருத்துவ அறிவியல் உபகரணங்கள் விற்பனையிலும் (சயன்டிஃபிக் எக்யுப்மென்ட்ஸ் சேல்ஸ்) அடிக்கப்படும் கொள்ளை அளவு கடந்தது.

 உதாரணமாக, லேடக்ஸ் கையுறைகள் 100 கொண்ட டப்பாவின் சந்தை விலை (எம்ஆர்பி விலை) ரூ. 600. இதனை மருந்துக் கடைகளில் வாங்காமல் மொத்த விற்பனையாளரிடம் வாங்கினால், ரூ. 200-லிருந்து ரூ. 250-க்குள் கிடைக்கும்.
இதில், மொத்த விற்பனையாளருக்கு ஒரு லாபம் இருக்கத்தான் செய்யும். கையுறைகளை அவருக்கு விநியோகித்தவர் இன்னும் குறைவான விலைக்குத்தான் விநியோகித்திருப்பார்.

குறைவான விலைக்கு விநியோகித்தவரும் ஒரு லாபத்துடன்தான் சரக்கைத் தள்ளிவிட்டிருப்பார். கையுறைகளை உற்பத்தி செய்யும் நிறுவனம் அந்த விநியோகஸ்தருக்கு இன்னும் குறைவான விலையில்தான் சப்ளை செய்திருக்கும். அதில், உற்பத்தி செய்யும் கம்பெனிக்கும் ஒரு லாபம் இருக்கும். இப்படியே கழித்துக்கொண்டு போனால், அந்தக் கையுறைகளின் அசல் மதிப்பு ரூ. 50 தேறினால் அதிசயம்! ஆனால், அது சந்தை விலையில் ரூ. 600-க்கு விற்கப்படுகிறது.

அதாவது பொதுமக்களை வந்து சேர்கிபோது, சராசரியாக 1,000 சதவிகித லாபத்தில் விற்கப்படுகிறது.
மக்களின் உயிர்காக்கும் இந்தத் துறையில் இத்தனை திருவிளையாடல்கள் இருப்பது, இந்தியா மாதிரியான கோடானுகோடி "தரித்திர நாராயணர்'களைக் கொண்ட தேசத்துக்கு அடுக்குமா?

இதற்குக் காரணம் என்ன?
அரசின் அபத்தமான கொள்கை. அல்லது கொள்கையே இல்லாமல் இருப்பது. மக்களின் உயிர்காக்கும் மருத்துவத் துறையை தனியாருக்கு தாரைவார்த்து விட்டதும்; தன் வசம் இருக்கும் மருத்துவத் துறையை நம்பகத்தன்மை இல்லாமல் ஆக்கியதும் அரசு செய்த மாபெரும் தவறு.
தனியாருக்குப் போட்டியாக பல்வேறு ஸ்கேன் மையங்களை அரசே தனது முதலீட்டில் ஏன் தொடங்கக் கூடாது? அப்படிச் செய்தால், அசல் விலையில் மக்கள் பயன் பெறுவார்களே!

மேலும், அரசின் போட்டி காரணமாக தனியார் நிறுவனங்களும் தங்கள் கட்டணத்தைக் குறைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் அல்லவா!

மருத்துவத் துறையில் மக்களை மையமாகக் கொண்ட கொள்கையை அரசு உருவாக்காத வரை, இந்த அவலம் தொடர்கதையாகத்தான் இருக்கும். அதுவரை, குணமாக்குவதே டாக்டரின் கடமை என்கிற நிலை மாறி, பணமாக்குவதே அவர்கள் பணி என்ற நிலை தொடரத்தான் செய்யும்.

நன்றி: இணையம்

திங்கள், 31 ஜனவரி, 2011

மீளுமா மீனவர்கள் உயிர்..?!!



#tnfisherman தொடர்பான ட்விட்டர்கள் மற்றும் பதிவர்களின் சந்திப்பு நேற்று (30/01/2010) மாலை சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெற்றது. அதில் ஆலோசிக்கப்பட்ட விஷயங்களும், அதனை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்வதில் அனைவரின் பங்கும் எப்படி இருக்கலாம் என்பதை இங்கு குறிப்பிடுகின்றோம்.

1. முழுமையான தகவல்கள் தொகுப்பு.
இதுவரை இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்ட 539 மீனவர்கள் பற்றிய முழுமையான தகவல்களைத் திரட்ட வேண்டும். அவர்களது பெயர், ஊர், சம்பவம் நடைபெற்ற நாள், இடம் உள்ளிட்டவற்றோடு பத்திரிகைச் செய்திகள், பேட்டிகள் உள்ளிட்ட தரவுகளை முழுமையாக சேகரிக்க வேண்டும். நடைபெறும் பிரச்சனையை பேசுவதற்கு அடிப்படையான தகவல்கள் இவை.

பங்களிப்பு: நேற்று வந்திருந்த நண்பர்களில் சிலர் ஒரு சில பகுதிகளுக்கு நேரில் சென்று தகவல்களைத் திரட்ட பொறுப்பெடுத்துக் கொண்டனர். மேலும் சிலர், 539 மீனவர்களின் பெயர்கள் கொண்ட பட்டியல் இருப்பதாகவும், அதனை அளிப்பதாகவும் ஒத்துக்கொண்டனர். பொறுப்பேற்றுக் கொண்ட நண்பர்கள் தவிர மற்றவர்கள் இது சம்பந்தமான தகவல்கள் உங்களிடம் இருந்தாலோ, அல்லது திரட்டித் தர முடிந்தாலோ பதிவின் கடைசியில் இருக்கும் மின்னஞ்சல் முகவரிக்கு அவற்றை அனுப்பி வையுங்கள்.

2. பொதுநல வழக்கு (Public Interest Litigation)
மீனவர் பாதுகாப்பு குறித்து பொது நல வழக்கு ஒன்றும் தாக்கல் செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்றைய சந்திப்புக்கு சில வழக்கறிஞர்களும் வந்திருந்தனர். இது சம்பந்தமாக நிலுவையில் இருக்கும் ரிட் மனுக்கள் பற்றியும், சட்ட விபரங்களும் அலசப்பட்டன.

பங்களிப்பு: வந்திருந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களில் ஒருவர், தான் இப்பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். வரும் சனி அல்லது ஞாயிறு வழக்குத் தொடர்பான கூட்டம் ஒன்று நடைபெறும். மேலும் சில வழக்கறிஞர்களும் அக்கூட்டத்திற்கு வருவார்கள். சட்ட நுணுக்கங்கள் தெரிந்த மற்ற ஆர்வலர்களும் அதில் கலந்துகொள்ளலாம்.

3. ஊடகங்களோடு தொடர்பு
நமது தொடர்ந்த கவன ஈர்ப்பின் மூலம் சில ஊடகங்கள் மீனவர்களைப் பற்றி கட்டுரைகள் வெளியிட்டு வருகின்றன. ஆனால், வட இந்திய ஊடகங்கள் இன்னும் பாரா முகமாகவே இருக்கின்றன. தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களின் எடிட்டர்களை சந்தித்து இந்நிலையை விளக்கிச் சொல்லி, மீனவர் பாதுகாப்பு தொடர்பான செய்திகளை வெளியிடச் செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை நாம் சந்தித்து ஒத்துக்கொள்ள வைப்பதற்கு #tnfisherman தொடர்ந்து ட்ரெண்டில் இருக்கவேண்டியது அவசியம்.

பங்களிப்பு: தமிழ் ஊடகங்களை தொடர்பு கொள்வதற்கென ஒரு குழுவினரும், ஆங்கில ஊடகங்களை தொடர்பு கொள்வதற்கு சிலரும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். கடந்த 5 நாட்களாக ட்ரெண்டில் இருந்து வந்த #tnfisherman இன்று காலையில் சில நிமிடங்கள் ட்ரெண்டில் இல்லாமல் போனது. அப்படி நேராமல், குறைந்த பட்சம் இந்த வாரம் முழுவதும் ட்ரெண்டில் நிலைத்து நிற்பதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் அவசியமாகின்றது. உங்களுக்கு 5 நிமிடம் ஓய்வு கிடைத்தாலும் 10 ட்வீட்டுகளாவது அனுப்பி இதனை தொடருங்கள். இது மிக மிக முக்கியமான விஷயம். நாம் சென்று எடிட்டர்களோடு பேசும்போது நான்கு நாட்கள் இருந்துவிட்டு இப்பொழுது இல்லாத ஒன்றைப் பற்றி பேச வேண்டாம் என்று ஒதுக்க முடியாத அளவிற்கு நம்முடைய தொடர் போராட்டம் இருக்கவேண்டும்.

4. ஆன்லைன் பெட்டிஷன்.
பிரதமருக்கு அனுப்புவதற்கென நாம் உருவாக்கியுள்ள ஆன்லைன் பெட்டிஷனில் இன்னும் பல்லாயிரக்கணக்கான கையொப்பங்கள் தேவைப்படுகின்றன. இதனை இன்னும் முன்னெடுக்க வேண்டியது அவசியம்.

பங்களிப்பு: நீங்கள் கையொப்பம் இடுவது மட்டுமின்றி உங்கள் நண்பர்கள், உடன் பணிபுரிவோர், உறவினர்கள் ஆகியோரிடமும் இதனைப் பற்றி எடுத்துரைத்து கையொப்பம் இடச்செய்யுங்கள். இப்பிரச்சனை உங்கள் சுற்று வட்டாரத்தில் விளக்கிச் சொல்லி இன்னும் பல கையொப்பங்கள் பெற்றுக் கொடுங்கள்.

5. அரசியல் கட்சியினரை சந்தித்து அவர்களை குரல் கொடுக்கச் செய்வது.
இதுவரை இப்பிரச்சனையில் கவனம் செலுத்தாத அரசியல் கட்சிகளின் தலைமையை அணுகி, இப்பிரச்சனை குறித்து அவர்களின் நிலைப்படை அறிவது, மற்றும் அவர்களையும் குரல் கொடுக்கச் செய்வது.

பங்களிப்பு: சில நண்பர்கள் தங்களது தொடர்புகள் மூலம் சில அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்க முயல்கின்றனர். உங்களுக்கு அது போன்ற தொடர்புகள் இருந்தால் தெரியப்படுத்தி சந்திப்புகளுக்கு வகை செய்யுங்கள்.

6. சுஷ்மா ஸ்வராஜ் - நேரில் சந்திப்பது.
வரும் 4 ம் தேதி அன்று பாரதீய ஜனதாவின் சுஷ்மா ஸ்வராஜ் நாகப்பட்டிணம் வருகின்றார். அப்பொழுது வட இந்திய ஊடகங்களும் அவரது பயணத்தைப் பற்றி செய்தி வெளியிடுவார்கள். இந்தத் தருணத்தில் அவரை நேரில் சந்தித்து, முழுமையான தகவல்கள் அடங்கிய விளக்கங்களை நாம் நேரில் அளித்தால், மீனவர் பிரச்சனையை பற்றி விரிவான விவாதத்திற்கு வழி ஏற்படக்கூடும்.

பங்களிப்பு: அவரது சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய ஒரு நண்பர் முன்வந்துள்ளார். உங்களுக்கு தொடர்புகள் இருந்து அவரை சந்திக்க ஏற்பாடு செய்ய முடிந்தால் தகவல் தெரிவித்து ஏற்பாடுகள் செய்யுங்கள்.

==================================================================================
#tnfisherman போராட்டமானது அனைவரின் பங்களிப்போடும் நடைபெறுவது. தொடர்ந்து இதனை முன்னெடுத்துச் செல்வதே, ஒரு தீர்வு கிடைக்க வழி செய்யும். இங்கு நாம் குறிப்பிட்டுள்ள பங்களிப்புகளில் உங்களுக்கு எப்படியெல்லாம் முடியுமோ, அப்படியெல்லாம் பங்களித்து வாருங்கள். நம் சகோதரர்களைக் காக்க ஒன்றிணைந்துள்ள நாம் வெற்றி காண்பது அனைவரின் பங்களிப்பிலுமே உள்ளது. தொடர்ந்து ட்விட்டரிலும், மற்ற வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்குங்கள்.


நீங்கள் தகவல்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரிகள் :
savetnfisherman@gmail.com
tnfishermancampaign@gmail.com

http://www.petitiononline.com/TNfisher/petition.html
நன்றி: http://allinall2010.blogspot.com/

வெள்ளி, 12 மார்ச், 2010

நித்யானந்தா லேட்டஸ்ட் வீடியோ - மசாஜ் ஸ்பெஷல்

நித்தி பையன் ரொம்பத்தான் வாழ்க்கையை அனுபவிச்சிருக்கான்..!! பாருங்க வீடியோவை..!!


நித்யானந்தா லேட்டஸ்ட் வீடியோ - மசாஜ் ஸ்பெஷல்

வியாழன், 11 மார்ச், 2010

நித்யானந்தா ஹரித்துவாரில் கைது..! பரபரப்பு காட்சிகள்..!!




ஹரித்துவாருக்கு ஓடி, ஒளிந்து இருந்து கொண்டிருந்த நித்யானந்தாவை நம் தமிழ் நாடு போலீஸ் அங்கு போய் கோழியை அமுக்குவது போல் “லபக்”கென்று பிடித்து கொண்டு வந்து விடுகிறது. அடுத்த நாள் அவர் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்படுகிறார். மனதில் வலிமை, எண்ணத்தில் நேர்மை(!), பேச்சில் திறமை (!), காசில் கடுமை என்று கனகச்சிதமாக இருந்த நித்யானந்தா, பெண் விஷயத்தில் இருந்த பலவீனத்தால் மாட்டிக்கொண்டதில் விழி பிதுங்கி குற்றவாளிக்கூண்டில் நிற்கிறார். அவரின் லீலையை ரிலீஸ் செய்த சன் டிவியே அவரின் நீதி மன்ற காட்சிகளையும் நேரலையில் ஒளிபரப்புகிறது. என்ன தான் பயம் இருந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் தன் தரப்பு நியாயத்தை தைரியமாக கூறி அவர் வாதாடும் பரபரப்பு காட்சிகள் இனி உங்கள் விழிகளுக்காக..!!

இதோ காட்சி..!

நீதிமன்றத்தின் குற்றவாளிக்கூண்டில் நின்று கொண்டிருக்கிறார் நித்யானந்தா. நீதிபதி அவரை பார்த்து “நீங்கள் ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா..?”. அவரின் சம்மதத்தை கூட எதிர்பார்க்காமல் நித்யானந்தா தன் பேச்சை தொடங்குகிறார். பேசித்தானே அவர் இலட்சக்கணக்கான மக்களை கவர்ந்து காவி உடைக்குள் திணித்தார்..!! நித்யானந்தா தன் தரப்பு வாதத்தை தொடங்குகிறார்..!!!

இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருக்கிறது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது. ஆகவே இவ்வழக்கு விசித்திரமல்ல, வழக்காடும் நான் புதுமையான மனிதனுமல்ல.  வாழ்க்கைப் பாதையிலே சர்வ சாதாரணமாக ஊரை ஏய்த்துப் பிழைக்கும் ஒண்ணாம் நம்பர் கேடி சாமியார்களில் நானும் ஒருவன்.

பரமஹம்ச நித்யானந்தா சுவாமிகள் என்று கூறி ஊரை ஏமாற்றினேன். தியானம் என்கிற பேரில் தில்லுமுல்லுகள் செய்தேன். கண்ட நடிகைகளுடன் கதவை திறந்து வைத்து “கசமுசா” பண்ணினேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம்.!! நீங்கள் எதிர்பார்ப்பீர்கள் இதை எல்லாம் நான் மறுக்கப்போகிறேன் என்று..!! இல்லை..நிச்சயமாக இல்லை..!!

பரமஹம்ச நித்யானந்தா சுவாமிகள் என்று கதை அளந்தேன்.  ஏன்.. மக்களை ஏமாற்றவேண்டும் என்பதற்காகவா..? மனதெல்லாம் கஷ்டங்களுடன் வருபவர்களிடம் காசை வாங்கி கொண்டு ஆறுதல் தரவேண்டும் என்பதற்காக..!!

கண்ட நடிகைகளுடன் கதவை திறந்து வைத்து “கசமுசா” பண்ணினேன். ஏன் அவர்களிடம் சல்லாபித்து இன்ப லோகததை காணவா..? இல்லை..மக்கள் நடிகைகள் என்ற மலையாள மாமிகளின் மாயையிலிருந்து வெளி வரவேண்டும் என்பதற்காக..!

தியானம் என்கிற பேரில் தில்லுமுல்லுகள் செய்தேன். மக்களை மயக்கி கன்னக்கோல் வைக்கவா..?  இல்லை... திருட்டுத்தனம் செய்து மாட்டிக்கொண்டாலும் அது தியானத்தின் ஒரு பகுதி என்று சொல்லி தப்பித்து விடவேண்டும் என்பதற்காக..!!

உனக்கேன் இவ்வளவு அக்கறை.. உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை என்று நீங்கள் கேட்பீர்கள்..

நானே பாதிக்கப்பட்டேன்...நேரடியாக பாதிக்கப்பட்டேன். சுய நலம் என்பீர்கள். எனது இந்த சுயநலத்திலே பொது நலமும் கலந்திருக்கிறது. நடிகைகளுடன் சல்லாபித்தாலும் நாளொரு பேட்டாவும், பொழுதொரு சன்மானமுமாக அள்ளிக்கொடுத்தேனே.. அதைப்போல..!!  என்னை குற்றவாளி, அயோக்கியன் என்கிறார்களே, இந்தக் குற்றவாளியின் வாழ்க்கைப் பாதையை சற்றே திரும்பி பார்த்தால் நான் செய்த திருட்டுத்தனங்கள், அதற்காக வாங்கிய அடிகள், அதனால் கிடைத்த அவமானங்கள் விளங்கும்..!! மனதை வருடும் மந்திரங்கள் இல்லை என் பாதையில், மனசை கெடுக்கும் தந்திரங்கள் நிறைந்திருக்கின்றன. கடவுளை தீண்டியதில்லை நான். ஆனால் காமத்தின் எல்லையை தாண்டி இருக்கிறேன். கேளுங்கள் என் ”தில்லுதுர” கதையை நீதிபதி அவர்களே..! என்னை ஜெயிலுக்குள் விட்டு டவுசரை கழட்டுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்..!!

போலி ஆன்மீகம் பொங்கி வழியும் இந்தியாவில், கண்டவர்களை எல்லாம் கடவுளர்களாக நினைக்கும் தங்க தமிழ்நாட்டிலே பிறந்தவன் நான்..! பிறக்க ஒரு ஊர்.. பிழைக்க ஒரு ஊர்..! ஆன்மீகம் என்ற பெயரில் ஊரை அடித்து உலையில் போடும் சாமியார்களை நம்பி ஏமாறும் தமிழர்களின் தலையெழுத்துக்கு நானென்ன விதிவிலக்கா..? திருவண்ணாமலையில் பிறந்து, காவிரிக்கரையில் அமர்ந்து வாயில் வந்ததை எல்லாம் ஜோஸியம் என்று வாந்தி எடுத்துக்கொண்டிருந்தேன். ஆரம்ப வியாபாரமே வெகு சிறப்பாக தான் நடந்தது.

என்னை கண்டவர்கள் கடவுள் அவதரித்து விட்டார் என்றனர். தொட்டால் துலங்குகிறது என்றார்கள். பார்வை பட்டால் பலன் கிடைக்கிறது என்றார்கள். ஆனால் கடைசியில் நடந்ததை நினைத்தாலோ கண்ணைக்கட்டுகிறது..!! வீடியோ மோசடி வழக்கிலே ஈடுபட்டு இதோ குற்றவாளிக் கூண்டிலே உங்கள் முன் நிற்கிறாளே இந்த ரஞ்சிதா, இவள் வலையில் விழுந்தவர்களில் நானும் ஒருவன். மனதை பறிகொடுத்தேன். பின் பணப் பெட்டியைப் பறிகொடுத்தேன். வீடியோவில் படமாக்கப்பட்டேன். அதனால் அடிபட்டேன்.. ஆத்திரப்பட்டேன்... ஆவேசப்பட்டேன்.. ஒன்றும் வேலைக்காகாததால் மாட்டிக்கொண்டேன்.

அவள் பெயரோ ரஞ்சிதா..! கேட்டாலே கிறக்கம் கொடுக்கும் பெயர்..!! ஆனால் பேச்சில் உண்மை இல்லை.! செயலில் நன்மை இல்லை..!! ஆதரவாய் கட்டிக்கொண்ட ஆர்மிக்காரனுக்கும் அல்வா கொடுத்து விட்டாள். அவளுக்கு கண்ணி வீசினர் பலர். அவர்களிலே காளையர் சிலர் கண்டதையும் கேட்டனர். வீடியோ எடுப்பதில் ஈடுபட்டு உங்கள் முன் நிற்கிறானே இக்கொடியவன் லெனின் என்கிற பிரேமானந்தா, இவன் பண ஆசையில் என் அறைக்குள் பல முறை கேமரா வைக்க முயன்றான். இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்திருந்தால் ”கதவை மூடு.. கேமரா தொலையட்டும்..!!” என்று அப்போதே அவனுக்கு ஆப்பு வைத்திருப்பேன்..!!

நான் ஏமாற்றாத நாளில்லை..!! ஏமாறாத பரமஹம்ச பக்தனும் இல்லை..!! நான் மட்டும் நினைத்திருந்தால் சாமியாராகாமல் அரசியலில் புகுந்து அனைவரையும் ஏமாற்றியிருக்கலாம். பெண்ணாசை வந்தால் கள்ளக்காதல் செய்து காலத்தை ஓட்டி இருக்கலாம். மட்டமான மசாலா படங்களில் நடித்து மக்களின் மனதை கெடுத்திருக்கலாம். இதைத்தானா இந்த நீதிமன்றம் விரும்புகிறது?

சன் டிவியில் என் படத்தை சகட்டு மேனிக்கு போட்டு சந்தி சிரிக்க வைத்தார்கள்..... ஓடினேன்..! என் மடங்களில் புகுந்து அதன் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தார்கள்... ஓடினேன்...!! என் பேனர்களை எரித்து என்னை கொலை வெறியோடு தேடினார்கள்.. யூட்யுப்-ல் என் வீடியோவுக்கு மட்டும் ஏகப்பட்ட ஹிட்டுகளை கொடுத்தார்கள்..ஓடினேன்..!! கள்ளச்சாமியாரை கைது செய்ய வேண்டும் என்று கலகம் செய்தார்கள் ஓடினேன்..!!

ஓடினேன்... ஓடினேன்... ஹரித்துவாரின் கடைசி எல்லை வரைக்கும் ஓடினேன்.. ஆனால் எத்தனை ஓடியும் இந்த எடுபட்ட தமிழ் நாட்டு போலீஸ் என்னை எப்படியோ அமுக்கி பிடித்து விட்டது..!! புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்து விட்டேன்..!!

சரியான அரசு சன் டிவியின் வீடியோ ஓட்டத்தை நிறுத்தியிருக்க வேண்டும். என் வாட்டத்தை போக்கியிருக்க வேண்டும்..இன்று சட்டத்தை நீட்டுவோர். செய்தார்களா? வாழவிட்டார்களா இந்த நித்யானந்தாவை..?!!

துறவியாக இருந்து கொண்டு ஆடை களைந்து அழகியுடன் சல்லாபித்தது ஒரு குற்றம். ஆசிரம் அமைப்பதற்காக அடுத்தவன் நிலத்தை அபகரித்தது ஒரு குற்றம். ஆன்மீகம் என்ற பெயரில் அத்தனை மக்களின் நம்பிக்கையை நாசமாக்கியது ஒரு குற்றம். காணிக்கை என்ற பெயரில் கணக்கிடலங்கா கருப்பு பணம் சேர்த்தது ஒரு குற்றம்..!!

இத்தனை குற்றங்களுக்கும் யார் காரணம்..?

பாலாஜி சக்திவேல் பட ஹீரோ போல் இருந்த என்னை துறவியென நம்பியது யார் குற்றம்.? சாமியார் வேஷம் போட்டு காசு பார்க்க நினைத்த என் குற்றமா..? இல்லை..எத்தனை டுபாக்கூர் சாமியார்கள் மாட்டினாலும்,  மறு நிமிடமே மறந்து விட்டு மீண்டும் மீண்டும் நம்பும் முட்டாள் மக்களின் குற்றமா..?

நடிகையுடன் சல்லாபித்தது யார் குற்றம்..? ஜாலியாக இருந்து இவ்வுலகிலேயே சொர்க்கலோகத்தை சுகிக்க நினைத்த என் குற்றமா.? இல்லை..பணத்துக்காக என்னிடம் பல்லைக்காட்டி படுக்கையில் விழுந்த நடிகையின் குற்றமா.?

பல கோடி ரூபாய் பணம் சேர்த்தது யார் குற்றம்..? நான் உண்டு என் லீலைகள் உண்டு என்று இருந்த என் குற்றமா..? இல்லை..சாமியார் என்றாலே சாக்கு பையில் பணத்தை கொண்டு வந்து கொட்டும் ஏமாளிகள் குற்றமா.?

இக்குற்றங்கள் களையப்படும் வரை நித்யானந்தாக்களும், ரஞ்சிதாக்களும் குறையப்போவதில்லை. இதுதான் எங்கள் வாழ்க்கை ஏட்டில் எந்தப் பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம், பகுத்தறிவு, பயனுள்ள அரசியல் தத்துவம்..!!! நன்றி... வணக்கம்..!! 


சுபம்..!! (நித்தி மாட்டினா சுபம் தானே..!! ஆமான்னு சொல்றவங்க ஓட்டு போட மறக்கவேண்டாம்..!!) 





Related Posts with Thumbnails