#tnfisherman தொடர்பான ட்விட்டர்கள் மற்றும் பதிவர்களின் சந்திப்பு நேற்று (30/01/2010) மாலை சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெற்றது. அதில் ஆலோசிக்கப்பட்ட விஷயங்களும், அதனை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்வதில் அனைவரின் பங்கும் எப்படி இருக்கலாம் என்பதை இங்கு குறிப்பிடுகின்றோம்.
1. முழுமையான தகவல்கள் தொகுப்பு.
இதுவரை இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்ட 539 மீனவர்கள் பற்றிய முழுமையான தகவல்களைத் திரட்ட வேண்டும். அவர்களது பெயர், ஊர், சம்பவம் நடைபெற்ற நாள், இடம் உள்ளிட்டவற்றோடு பத்திரிகைச் செய்திகள், பேட்டிகள் உள்ளிட்ட தரவுகளை முழுமையாக சேகரிக்க வேண்டும். நடைபெறும் பிரச்சனையை பேசுவதற்கு அடிப்படையான தகவல்கள் இவை.
பங்களிப்பு: நேற்று வந்திருந்த நண்பர்களில் சிலர் ஒரு சில பகுதிகளுக்கு நேரில் சென்று தகவல்களைத் திரட்ட பொறுப்பெடுத்துக் கொண்டனர். மேலும் சிலர், 539 மீனவர்களின் பெயர்கள் கொண்ட பட்டியல் இருப்பதாகவும், அதனை அளிப்பதாகவும் ஒத்துக்கொண்டனர். பொறுப்பேற்றுக் கொண்ட நண்பர்கள் தவிர மற்றவர்கள் இது சம்பந்தமான தகவல்கள் உங்களிடம் இருந்தாலோ, அல்லது திரட்டித் தர முடிந்தாலோ பதிவின் கடைசியில் இருக்கும் மின்னஞ்சல் முகவரிக்கு அவற்றை அனுப்பி வையுங்கள்.
2. பொதுநல வழக்கு (Public Interest Litigation)
மீனவர் பாதுகாப்பு குறித்து பொது நல வழக்கு ஒன்றும் தாக்கல் செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்றைய சந்திப்புக்கு சில வழக்கறிஞர்களும் வந்திருந்தனர். இது சம்பந்தமாக நிலுவையில் இருக்கும் ரிட் மனுக்கள் பற்றியும், சட்ட விபரங்களும் அலசப்பட்டன.
பங்களிப்பு: வந்திருந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களில் ஒருவர், தான் இப்பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். வரும் சனி அல்லது ஞாயிறு வழக்குத் தொடர்பான கூட்டம் ஒன்று நடைபெறும். மேலும் சில வழக்கறிஞர்களும் அக்கூட்டத்திற்கு வருவார்கள். சட்ட நுணுக்கங்கள் தெரிந்த மற்ற ஆர்வலர்களும் அதில் கலந்துகொள்ளலாம்.
3. ஊடகங்களோடு தொடர்பு
நமது தொடர்ந்த கவன ஈர்ப்பின் மூலம் சில ஊடகங்கள் மீனவர்களைப் பற்றி கட்டுரைகள் வெளியிட்டு வருகின்றன. ஆனால், வட இந்திய ஊடகங்கள் இன்னும் பாரா முகமாகவே இருக்கின்றன. தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களின் எடிட்டர்களை சந்தித்து இந்நிலையை விளக்கிச் சொல்லி, மீனவர் பாதுகாப்பு தொடர்பான செய்திகளை வெளியிடச் செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களை நாம் சந்தித்து ஒத்துக்கொள்ள வைப்பதற்கு #tnfisherman தொடர்ந்து ட்ரெண்டில் இருக்கவேண்டியது அவசியம்.
பங்களிப்பு: தமிழ் ஊடகங்களை தொடர்பு கொள்வதற்கென ஒரு குழுவினரும், ஆங்கில ஊடகங்களை தொடர்பு கொள்வதற்கு சிலரும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். கடந்த 5 நாட்களாக ட்ரெண்டில் இருந்து வந்த #tnfisherman இன்று காலையில் சில நிமிடங்கள் ட்ரெண்டில் இல்லாமல் போனது. அப்படி நேராமல், குறைந்த பட்சம் இந்த வாரம் முழுவதும் ட்ரெண்டில் நிலைத்து நிற்பதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் அவசியமாகின்றது. உங்களுக்கு 5 நிமிடம் ஓய்வு கிடைத்தாலும் 10 ட்வீட்டுகளாவது அனுப்பி இதனை தொடருங்கள். இது மிக மிக முக்கியமான விஷயம். நாம் சென்று எடிட்டர்களோடு பேசும்போது நான்கு நாட்கள் இருந்துவிட்டு இப்பொழுது இல்லாத ஒன்றைப் பற்றி பேச வேண்டாம் என்று ஒதுக்க முடியாத அளவிற்கு நம்முடைய தொடர் போராட்டம் இருக்கவேண்டும்.
4. ஆன்லைன் பெட்டிஷன்.
பிரதமருக்கு அனுப்புவதற்கென நாம் உருவாக்கியுள்ள ஆன்லைன் பெட்டிஷனில் இன்னும் பல்லாயிரக்கணக்கான கையொப்பங்கள் தேவைப்படுகின்றன. இதனை இன்னும் முன்னெடுக்க வேண்டியது அவசியம்.
பங்களிப்பு: நீங்கள் கையொப்பம் இடுவது மட்டுமின்றி உங்கள் நண்பர்கள், உடன் பணிபுரிவோர், உறவினர்கள் ஆகியோரிடமும் இதனைப் பற்றி எடுத்துரைத்து கையொப்பம் இடச்செய்யுங்கள். இப்பிரச்சனை உங்கள் சுற்று வட்டாரத்தில் விளக்கிச் சொல்லி இன்னும் பல கையொப்பங்கள் பெற்றுக் கொடுங்கள்.
5. அரசியல் கட்சியினரை சந்தித்து அவர்களை குரல் கொடுக்கச் செய்வது.
இதுவரை இப்பிரச்சனையில் கவனம் செலுத்தாத அரசியல் கட்சிகளின் தலைமையை அணுகி, இப்பிரச்சனை குறித்து அவர்களின் நிலைப்படை அறிவது, மற்றும் அவர்களையும் குரல் கொடுக்கச் செய்வது.
பங்களிப்பு: சில நண்பர்கள் தங்களது தொடர்புகள் மூலம் சில அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்க முயல்கின்றனர். உங்களுக்கு அது போன்ற தொடர்புகள் இருந்தால் தெரியப்படுத்தி சந்திப்புகளுக்கு வகை செய்யுங்கள்.
6. சுஷ்மா ஸ்வராஜ் - நேரில் சந்திப்பது.
வரும் 4 ம் தேதி அன்று பாரதீய ஜனதாவின் சுஷ்மா ஸ்வராஜ் நாகப்பட்டிணம் வருகின்றார். அப்பொழுது வட இந்திய ஊடகங்களும் அவரது பயணத்தைப் பற்றி செய்தி வெளியிடுவார்கள். இந்தத் தருணத்தில் அவரை நேரில் சந்தித்து, முழுமையான தகவல்கள் அடங்கிய விளக்கங்களை நாம் நேரில் அளித்தால், மீனவர் பிரச்சனையை பற்றி விரிவான விவாதத்திற்கு வழி ஏற்படக்கூடும்.
பங்களிப்பு: அவரது சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய ஒரு நண்பர் முன்வந்துள்ளார். உங்களுக்கு தொடர்புகள் இருந்து அவரை சந்திக்க ஏற்பாடு செய்ய முடிந்தால் தகவல் தெரிவித்து ஏற்பாடுகள் செய்யுங்கள்.
==================================================================================
#tnfisherman போராட்டமானது அனைவரின் பங்களிப்போடும் நடைபெறுவது. தொடர்ந்து இதனை முன்னெடுத்துச் செல்வதே, ஒரு தீர்வு கிடைக்க வழி செய்யும். இங்கு நாம் குறிப்பிட்டுள்ள பங்களிப்புகளில் உங்களுக்கு எப்படியெல்லாம் முடியுமோ, அப்படியெல்லாம் பங்களித்து வாருங்கள். நம் சகோதரர்களைக் காக்க ஒன்றிணைந்துள்ள நாம் வெற்றி காண்பது அனைவரின் பங்களிப்பிலுமே உள்ளது. தொடர்ந்து ட்விட்டரிலும், மற்ற வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்குங்கள்.
நீங்கள் தகவல்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரிகள் :
savetnfisherman@gmail.com
tnfishermancampaign@gmail.com
http://www.petitiononline.com/TNfisher/petition.html
நன்றி: http://allinall2010.blogspot.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக