முதன்முதலில் பெற்ற பரிசு நெஞ்சை விட்டு அகலாது என்றாலும், வேறு வகையில் சில பரிசுகள் நம்மை அதிகம் பாதித்திருக்கும். எனக்கே அறியாமல் எனக்குள் ஒளிந்து கிடந்த திறமையை வெளிக்கொணர்ந்து பரிசு பெற வைத்த என் ஆசிரியையின் பெருமையை என்றும் மனதை விட்டகலாத நிகழ்வாக உணர்கிறேன். என் நினைவுகள் 20 வருடங்கள் பின்னோக்கி நகர்கின்றன. அப்பொழுது நான் எட்டாவது படித்துக்கொண்டிருந்தேன். நான் படித்த பள்ளிக்கு ஒரு பெருமை உண்டு. அது முன்னாள் ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமன் படித்த பள்ளி. எங்களுக்கு அப்போது ஜாஸ்மின் என்ற அன்புருவம் வகுப்பு ஆசிரியையாக இருந்தார்கள். கனிவு, கண்டிப்பு இரண்டும் கலந்த அற்புத பெண்மணி அவர்கள். நான் அப்போது அதிகம் பேசாதவன் போல் இருந்தாலும், உள்ளுக்குள் குறும்பு ஒளிவீசிக்கொண்டிருக்கும்.
ஆசிரியர்களை நக்கல் அடிப்பது, அவர்களைப்போலவே நடப்பது, அவர்கள் பேசுவதை மிமிக்ரி செய்வது போன்றவற்றை செய்வேன். நான் நன்கு படிப்பவன் என்பதால் என் குறும்புகளை ஆசிரியர்களும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஆசிரியர்கள் வகுப்புக்கு வரும் வரை மேலே சொன்னவற்றை செய்து மாணவ நண்பர்களை மகிழ்விப்பேன். அவர்களின் பாராட்டு எனக்கு பெரும் ஊக்க மருந்தாக இருந்தது. எனக்கு மிமிக்ரி நன்றாக செய்ய வருகிறது என்று என்னை ஏற்றி விட்டதில் அப்போது ஒலிநாடாவில் தன் மிமிக்ரி நிகழ்ச்சிகளை வெளியிட்டு வந்த மயில்சாமி (இப்போதைய நடிகர்), இலட்சுமணன் (லஷ்மண் ஸ்ருதி இசைக்குழுவின் உரிமையாளர்) இரட்டையரின் ஒலிநாடா ஒன்றை உறவினரிடமிருந்து பெற்று, அதை அப்படியே பேசி பயிற்சி செய்து வந்தேன். நான் பயிற்சி செய்ததை பள்ளி வகுப்பில் பாடமில்லாத நேரங்களில் அவர்களிடம் செய்வேன். அவர்களும் என்னை ஆஹா..ஓஹோ என புகழ்வார்கள்..!
அந்த சூழ்நிலையில் அந்த ஆண்டின் பள்ளியின் இலக்கிய போட்டிகள் தேதி அறிவிக்கப்பட்டது. நான் வழக்கம் போல் பேச்சு, கட்டுரை போட்டிகளுக்கு பெயரை அளித்து விட்டு என் வேலை முடிந்ததாக இருந்து விட்டேன். ஒரு நாள் வகுப்பில் ஜாஸ்மின் அவர்கள் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது நடிப்பு, பலகுரல் போட்டிக்கு பெயர் கொடுக்குமாறு பள்ளியின் பணியாளர் எங்கள் வகுப்பிற்குள் வந்தார். ஜாஸ்மின் அவர்கள் பாடத்தை நிறுத்திவிட்டு "யார் யார் கலந்து கொள்ளப்போகிறீர்கள்..?" என்றார். ஒருவரும் வாயை திறக்காததால் ஆசிரியைக்கு பெரும் ஏமாற்றம். தன் வகுப்பு மாணவர்களில் ஒருவர் கூட இந்த போட்டிகளில் கலந்து கொள்ளும் தகுதியில் இல்லையே என்ற வருத்தமாக இருந்திருக்கலாம். பெரும் ஏமாற்றத்துடன் பெயர் எடுக்க வந்தவரை அனுப்பி விட்டார். என்னைப்பற்றி அவருக்கு அதிகம் அறிந்திருந்தாலும் என் பலகுரல் ஆர்வம் அவர் அறியாதது..!! என்னைப்பார்த்து "நீ பேச்சு, கட்டுரைப்போட்டிக்கு பெயர் கொடுத்துவிட்டாயா..?" என்று சந்தேகத்துடன் கேட்டார்..!! நடிப்பு, பலகுரல் போட்டிக்கான மாணவர்கள் கிடைக்காத மனநிலை அப்படி அவரை கேட்க வைத்தது. நான் எழுந்து "கொடுத்துவிட்டேன் டீச்சர்..!" என்றேன்..!! "இந்த போட்டியில் கலந்து கொள்ள ஒருத்தனுக்கு கூடவா விருப்பம் இல்லை..?" என்றார்கள். அப்போது கடைசி பெஞ்ச் அஞ்சாநெஞ்சன் சிதம்பரம் "பேரு கொடுத்த போதுமா..ஜெயிக்கணும்ல...?!!" என்று சொல்ல மாணவர்கள் கொல்லென்று சிரித்தார்கள்..!!
ஜாஸ்மின் அவர்களுக்கு கடும் கோபம்..!! "ஒருத்தனுக்கும் போட்டியில் கலந்துக்க துப்பில்ல.. பேச்சுக்கு மட்டும் குறைச்சலில்ல..!" என்று பொரிந்தார்கள். அப்போது "வில்லத்தன" குடியரசன் எழுந்து "டீச்சர்..***** சூப்பரா மிமிக்ரி பண்ணுவான் டீச்சர்..!" என்றான்..!! மற்ற மாணவர்களும் ஆமா..ஆமா.. என்று ஒத்து ஊதினார்கள். ஆசிரியையின் பார்வை ஆச்சரியத்துடன் என் பக்கம் திரும்பியது. பார்வையில் "அப்படியா..?" என்ற கேள்வி..!! நான் "இல்லை டீச்சர்.. சும்மா விளையாட்டுக்கு.... " என்று இழுத்தேன்.. மற்றவர்களோ "இல்லை டீச்சர்... அவன் பொய் சொல்றான்.. நல்லா செய்வான்.. அவனை செய்ய சொல்லுங்க.." என்று போட்டுக்கொடுத்தார்கள்..! ஆசிரியை என்னை அருகில் அழைத்தார். "நீ திறமைசாலிங்கிறது எனக்கு தெரியும். உனக்குள்ள இன்னும் பல திறமை ஒளிஞ்சிருக்கலாம்.. நீ வெளிப்படுத்தினா தான் எங்களுக்கு அது தெரியும். நாங்களும் உன்னை உற்சாகப்படுத்தவும், வளரவும் உதவும். உண்மையா சொல்லு... நீ மிமிக்ரி செய்வியா..?" என்றார். நான் தயக்கத்துடன் "ஓரளவு செய்வேன்..." என்றேன். "யார் மாதிரி..?" என்று கேட்டார். நான் அதற்கு "கலைஞர், எம்.ஜி.ஆர், நம்பியார், சிவாஜி, ரஜினி..... என்று இழுத்தேன்..! என் கண்களை ஊடுருவி பார்த்தார். அவர் பார்வையில் நம்பிக்கையின்மை அப்பட்டமாய் பளிச்சிட்டது..! "சரி.. கலைஞர் மாதிரி பேசு..!" என்றார்..!!
நான் திடீரென்று ஒரு மிமிக்ரி கலைஞனின் மனநிலைக்கு மாறி கலைஞரின் கர, கர குரலை வரவழைத்துக்கொண்டு...
மண்ணெண்ணெய் வாங்க
ரேஷன் கடை தன்னை அடைந்தேன்.
தென்னை போல் வளர்ந்த ஒருவன்
பார்த்துக்கேட்டான் என்னை...
நல்லெண்ணெயா..? கல்லெண்ணெயா..?.
என்ன எண்ணெய் வேண்டுமென்று..!!
நல்லெண்ணெய் நம்மிடம் உண்டு...!
கல்லெண்ணெய் கடைக்குள் உண்டு..!!
பாமாயில் என்றொரு பகட்டு எண்ணெயும்
பலகை மீது உண்டு..!
மண்ணெண்ணெய் இல்லை..
என்ன செய்யச்சொல்கிறீர்கள் என்னை என்றா..... ........
என்று நான் தொடர்ந்து கொண்டிருக்கும் போதே "நிறுத்துடா..!" என்ற குரல் என்னை நடுங்க வைத்தது. ஜாஸ்மின் அவர்கள் தான் அது.! "அய்யய்யோ... நாம் செய்தது அவருக்கு பிடிக்கவில்லை போலிருக்கிறது.!" என்று அடக்கத்துடன் நிறுத்திவிட்டு, அமைதியா இருந்தேன். முகத்தில் கோபக்கனல் தெறிக்க "உனக்கு மிமிக்ரி தெரியும்னு இத்தனை நாள் எனக்கு ஏன் சொல்லலை...?" என்று கேட்டார்..! ஏறக்குறைய என் தாய்க்கு இணையாக எல்லாவற்றையும் சொல்லும் அவரிடம், இதை நான் சொல்லாத வருத்தம் அவர் முகத்தில் தெரிந்தது..! குற்றவுணர்வுடன் தலை குனிந்தேன். "உடனே போய் உன் பெயரை பலகுரல் போட்டிக்கு கொடுத்துட்டு வா.. உனக்குத்தான் முதல் பரிசு... எழுதி வச்சிக்க" என்றார். என் மேல் உள்ள பாசத்தில் என்னை பங்கு கொள்ள சொன்னாலும், எனக்குத்தான் முதல் பரிசு என்றது மிகவும் அதிகப்படியான கற்பனையாக தெரிந்தது. காரணம், இது வரை நான் மிமிக்ரி போட்டியில் கலந்து 2, 3 வது பரிசை பெற்றிருந்தாலாவது பரவாயில்லை. இது வரை போட்டியில் பங்கெடுத்ததே இல்லை..!! ஒருவேளை ஒரு தாயின் அதிகப்படியான பாசத்தின் வெளிப்பாடோ..? உடன் ஓடிப்போய் பெயர் கொடுத்துவிட்டு வந்தேன்.
திட்டமிட்டபடி இலக்கியப்போட்டிகள் நடைபெற்றன. அதன் முடிவுகள் ஆண்டுவிழாவில் அறிவிக்கப்பட்டு பரிசளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது..!!
ஆண்டுவிழாவும் வந்தது..!! வட்டாட்சியர் தலைமையில் விழா வெகு சிறப்பாக நடந்தன. இறுதியில் இலக்கிய விழா போட்டிக்கான முடிவும், பரிசளிப்பும் நடந்தன. மிமிக்ரி போட்டி முடிவை வெகு ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தேன். பலகுரல் போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவர் ******* என்று என் பெயர் அறிவிக்கப்பட்ட போது என்னால் நம்பவே முடியவில்லை. முதல் முயற்சியிலேயே ஜாக்பாட்டா..? இத்தனைக்கும் மற்ற போட்டிகளுக்கு போல் நான் எதுவும் இதற்காக உழைக்கவே இல்லை. ஜாஸ்மின் அவர்களின் ஊக்கம் தான் எனக்கு பெரும் சக்தியை கொடுத்தது. என் பெயர் சொல்லப்பட்டதும் மேடைக்கு அருகில் ஆசிரியர்கள் அமர்ந்திருக்கும் பகுதியில் இருந்த ஜாஸ்மின் அவர்களின் விழிகள் என்னை தேடுவதை உணர்ந்தேன். அவர்கள் முகத்தில் நினைத்ததை சாதித்த பூரிப்பு. உடனே எழுந்தேன்... மேடை நோக்கி ஓடினேன்.. பரிசை பெற்று மற்றவர்கள் போல் தன் இடத்தில் சென்று அமராமல், ஜாஸ்மின் அவர்களின் இடம் நோக்கி சென்று அவர்களின் கையில் சான்றிதழ் மற்றும் பரிசை கொடுத்துவிட்டு பசுவின் தடவலுக்காய் ஏங்கும் கன்றுக்குட்டி போல் கண்ணீர் மல்க நின்றேன். எதுவும் பேச முடியா உணர்ச்சிகமான சூழ்நிலை அது.! ஜாஸ்மின் அவர்கள் எழுந்து செல்லமாய் முதுகில் தட்டிக்கொடுத்து, முன்னுச்சி முடியை கலைத்து "கீப் இட் அப்..!" என்றார். அவர் விழியும் கலங்கியிருப்பதை என்னால் உணர முடிந்தது. அதிலிருந்து நானும் ஜாஸ்மின் அவர்களுக்கு செல்லப்பிள்ளை போல் ஆனேன்.
இன்று அவர்கள் எங்கு உள்ளார்களோ எனக்கு தெரியாது. ஒரு ஆசிரியையாய் மட்டும் இல்லாமல் தாயாயும் இருந்து எனக்கு வழிகாட்டிய தருணங்கள் இது போல் நிறைய.! இருந்தாலும் இதை நான் குறிப்பிட்டு சொல்லக்காரணம் எனக்குள் ஒளிந்து கிடந்த ஒரு திறமையை அந்த தாயுள்ளத்தால் தான் கண்டுணர முடிந்தது. இன்று நான் பெண்களை மிகவும் மதிக்க ஜாஸ்மின் அவர்களும் ஒரு காரணம். என்னை கடந்து சென்ற பெண்களில் அவரை என்றும் என்னால் மறக்கமுடியாது, அவரால் பெற்ற அந்த பரிசையும் மறக்க முடியாது..!! இந்த பதிவை அவர்களின் அன்பிற்கு அர்ப்பணிக்கிறேன்.!!
அன்பெனும் பெருநதி
-
அன்பினால் நெய்யப்பட்ட ஒரு மனித உரு உண்டெனில் அது மாது என நான் அன்புடன்
விளிக்கும் மாதவராஜ் தான் என்று சொல்வேன். 80’களில் தொடங்கிய எங்கள் நட்பும்
தோழமையும...
1 நாள் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக