நேரம்:

ஞாயிறு, 29 ஜூன், 2008

தசாவதாரம் - அலசல்

காலத்திற்கேற்போல் மாறி வரும் மக்களின் இரசனையை கணித்து, அதற்கு தகுந்தாற் போல் படைப்புக்களை தருவது யாராலும் முடியாது. அது தெரிந்திருந்தால் எல்லோரும் திரைப்பட தொழிலுக்கு வந்து விடுவார்கள். அது மட்டுமல்லாமல் ஒரு படைப்பாளியால் சரியாக கணிக்கத்தெரிந்தால் சில நேரங்களில் தன் நிலை இறங்கி மலிவான படைப்பையும் அவன் தரவேண்டிய கட்டாயம் ஏற்படலாம். நல்ல, திறமையான படைப்பாளிகள் அந்த அளவிற்கு இறங்குவதில்லை.

ஒரு நடிகராக அதிகம் அறியப்பட்ட கமலின் நடிப்பை சிலாகிக்கும் போது கமலிடம் நடிப்பில் இருக்கும் குறைகளற்ற தன்மை உறுதியாகிறது. பிறகு ஏன் கமல் மேல் ஏன் இத்தனை அஸ்திர தாக்குதல்கள்.? காரணம், கமல் என்ற கலைஞனின் மீதான இரசிகர்களின் அதிகப்படியான எதிர்பார்ப்பு தான். படத்தில் ஒளிப்பதிவு சரியில்லை என்றாலும் கூட "கமல் படத்தில் பெயருக்கு தான் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள்.. மற்றபடி அவர் தான் எல்லாவற்றையும் செய்வார்" என்ற நினைப்பு நம்மிடம் இருக்கிறது. அவர் மீதான அந்த அதிகப்படியான எதிர்பார்ப்பே படத்தில் இருக்கும் குறைகள் ஒவ்வொன்றையும் கமலுடன் இணைத்து பேச வைக்கிறது. தசாவதாரம் படத்தில் குறைகளாக சொல்லப்படும் பல விஷயங்கள் இயக்குநர், மற்றும் தொழில்நுட்ப கலைஞர் சம்பந்தப்பட்டவை. மேக்கப் சரியில்லை என்றால் அது மேக்கப் கலைஞர் மற்றும் அதனை சிறப்பாக அமைவதை உறுதி செய்ய வேண்டிய இயக்குநரின் கடமை. இந்த படத்தில் கே.எஸ்.இரவிக்குமார் பிறகு என்ன தான் செய்தார்..? அவரைப்பற்றி ஏன் குறைகள் சொல்வதில்லை.? குறைகள் மட்டுமல்ல.. பாராட்டுக்களும் அவருக்கு இல்லவே இல்லை. இந்த படத்தை இயக்கியதன் மூலம் கே.எஸ்.இரவிக்குமார் தனக்கான தனித்தன்மையை இழந்ததாக நான் நினைக்கிறேன்.

ஆக, ஒரு நல்ல கலைஞன் தன் மேல் அதிக எதிர்பார்ப்பை கொண்டிருக்கும் இரசிகனை திருப்தி படுத்துவது கடமை என்று ஒரு புறம் இருந்தாலும், அந்த முயற்சியில் அவன் சிறிதளவு வெற்றி பெற்றாலும் பாராட்டவும் தயங்க கூடாது. ஏனென்றால் அதிக அளவு எதிர்பார்ப்பு என்கிற போதே அதில் வெற்றியடையும் வாய்ப்பும் குறைவாக இருப்பதை நாம் புரிய வேண்டும்.

கமல் எதையும் தெளிவாக யோசித்து தான் செய்கிறார். ஆனால், அவர் யோசிப்பதை, செய்வதை புரிந்து கொள்ளும் உயர்ந்த இரசனை நம்மிடம் இல்லை என்பது தான் உண்மை. குழந்தையின் புத்திசாலித்தன கேள்விக்கு பதிலளிக்கா முடியா இயலாமை தந்தையின் நிலையில் தான் அவரை குறை சொல்லும் இரசிகர்கள் இருக்கிறார்கள். கமலின் நடிப்பில் வெளிப்படுத்தும் சின்ன, சின்ன விஷயங்களை அறிந்து கொள்ளக்கூட பலரால் முடியவில்லை. அதை அறிந்தவர்கள் கமலின் நடிப்பை குறை சொல்ல நிச்சயம் தயங்குவார்கள்.

திரைப்படம் என்ற பொழுதுபோக்கு ஊடகத்தில் கதை என்பது இருந்து தான் ஆக வேண்டுமா..? திரைப்படத்தினுள் நம்மை இழுத்துச்செல்ல கதை தான் அவசியம். ஆனால், அந்த இழுக்கும் செயலை நடிப்பு, பிரமாண்டம் போன்ற இன்ன பிற விஷயங்கள் செய்தால் கதை பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்..? ஆதவன் ஹேராம் படத்தை பற்றி சொல்லி, அருமையான படம் என்று அவரே ஒத்துக்கொண்டுள்ளார். ஆனால், ஹேராம் படத்தின் தோல்வி ஒட்டுமொத்த தமிழ் சினிமா இரசிகர்களின் தரமற்ற இரசனையை காட்டியது என்ற உண்மையை ஒப்புக்கொள்வீர்களா..?. படத்தை பாராட்டிய சிலர் கூட கமல் 3 மொழிகளை வைத்து படத்தில் வைத்து சொல்லி குழப்பி விட்டதாக சொல்கிறார்கள். மூன்று மொழிகள் தொடர்புடைய கதைக்களத்தில் தமிழை மட்டும் காட்டினால் அதன் நிஜத்தன்மை பாதிக்கப்படாதா..? இதே சிலர் தான் தசாவதாரம் பற்றிய விமர்சனத்தில் பஞ்சாபி சிங் கமல் தமிழில் பாட்டு பாடுவது பற்றி கிண்டல் அடித்திருந்தார்கள். எதை செய்தாலும் குற்றம் சொல்வது அதை செய்வது மிகவும் சுலபம் என்பதாலா..?

நிச்சயம் கமலின் அற்புத நடிப்புக்கு தீனி போடும் களம் இந்திய சினிமா அல்ல..!! நிர்வாண மக்களின் ஊரில் கோவணம் கட்டிய கமலை குறை சொல்லும் சூழல் அவருக்கு பொருத்தமானதல்ல. அவரின் ஹேராம் தோல்வி அடைந்த போது அதற்கு சொல்லப்பட்ட பல காரணங்களில் அவர் ராணி முகர்ஜியோடு நடித்த நெருக்க்க்க்க்க்க்கமான காட்சிகளை சொன்னார்கள். நானும் உடன் படுகிறேன். ஆனால், அதே காலகட்டத்தில் வந்த ஆபாச குப்பையான "துள்ளுவதோ இளமை" எப்படி ஓடியது..? குறை சொல்வது எளிது..! நிறை அளிப்பது மிக, மிக கடினம்..!!

கருத்துகள் இல்லை:

Related Posts with Thumbnails