நேரம்:

வியாழன், 25 மார்ச், 2010

பெரியார்தாசன் இறைநேசன் ஆன கதை..!! (01)


அங்கே நாத்திகம் தொடர்பான பிரமாண்ட கடவுள் மறுப்பு பொதுக்கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. அதில் தந்தை பெரியார் கலந்து கொண்டு பேசுகிறார் என்பதால் பெரும் கூட்டம் திரண்டிருக்கிறது. எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்திருந்த பெரியாரின் சிறப்புரை முடிந்து வேறொருவர் நன்றியுரை நிகழ்த்த வேண்டும். நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் அதற்கான ஆளை தேடிக்கொண்டிருக்கிறார்கள். பெரியாரின் பேச்சை கேட்ட மக்கள் கிடைத்த மகிழ்ச்சியில் அடுத்து வரப்போகும் நன்றியுரையை கேட்க பொறுமை இல்லாமல் கலைகிறார்கள். அந்த நேரத்தில் இவற்றை எல்லாம் மேடையின் ஓரமாக நின்று கவனித்துக்கொண்டிருந்த அந்த இளைஞன் திடீரென்று மேடையின் மேல் ஏறி மைக்கை கைப்பற்றுகிறான். ”கடவுள் இல்லை.. கடவுள் இல்லவே இல்லை” என்று இத்தனை நேரமும் திராவிட தோழர்கள் முழங்கிய அதே மேடையில் அந்த இளைஞன் முழங்கியது என்ன தெரியுமா..? “சாமியேஏஏஏஏய்.... சரணம் ஐயப்பா..!!! சபரி மலை சாஸ்தாவே.. சரணம் ஐயப்பா..!!” என்பது தான்..!! 

“பகுத்தறிவு பகலவன்” என்று புகழப்படும் பெரியாரின் மேடையில் இப்படி ஒரு நாத்திக முழக்கத்தை கேட்டதும் கலைந்து கொண்டிருந்த அதிர்ச்சியில் கல் சிலை போல் அப்படி நிற்கிறார்கள். குரல் வந்த மேடையின் திசை நோக்கி அதிர்ச்சியும், ஆர்வமுமாய் திரும்பி பார்க்கிறார்கள். இப்பொழுது மைக்கை கையில் பிடித்திருந்த இளைஞன் தன் பேச்சை “.....என்றெல்லாம் முழங்கி கொண்டிருப்பவர்களுக்கு எதிராய் நாத்திக கொள்கையை நிலை நாட்ட வந்திருக்கும் திராவிடர் கழக சிங்கங்களே..!!!” என்று முடிக்கிறான். கூட்டம் இளைஞனின் புத்திசாலித்தனத்தில் புல்லரித்துப்போய் அப்படியே அமர்ந்து அவன் பேச்சை கேட்க தயாராகிறார்கள். அதன் பிறகு அந்த இளைஞன் 45 நிமிடங்கள் அதே மேடையில் பேசுகிறான். நன்றியுரையை அவன் 45 நிமிடங்கள் நிகழ்த்தியதும், அதனை அத்தனை ஆர்வமுடன் குழுமியிருந்த மக்கள் கேட்டு ரசித்ததும் தமிழக பொதுக்கூட்ட வரலாற்றில் அது தான் முதல் முறையாக இருக்க வேண்டும்.!! 


அந்த இளைஞன் சாஸ்திர சம்பிரதாயங்கள் மிகுந்த ஒரு குலத்தில் பிறந்தவன். ஆனால் அவன் சிந்தனைகளோ அவன் குலத்திற்கு எதிரான நாத்திகத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. ஒரு நாள் அவனிருக்கும் ஊருக்கு அருகில் இருக்கும் ஊருக்கு பெரியாரின் பிரமாண்ட கடவுள் மறுப்பு தொடர்பான  பொதுக்கூட்டம் சில நாட்களில் நடக்கவிருக்கிறது. இவனின் நாத்திக சிந்தனைகளை அறிந்த திராவிடர் கழக தோழர் ஒருவர் பெரியாரின் வருகை குறித்து அவனிடம் சொல்லி, அதில் பேசுகிறாயா என்று கேட்கிறார். ஏற்கனவே பெரியாரின் கருத்துக்களில் அளவற்ற பற்று கொண்டிருந்த அவனும் அதை பெரும் பேறாக நினைத்து ஆவலுடன் அதற்கு சம்மதிக்கிறான். அடுத்து வந்த இரவுகளில் எல்லாம் தூங்காமல் அந்த  மேடையில் பேசுவதற்கு உரை தயாரிக்கிறான். பொதுக்கூட்ட நாளன்று மேடையில் பேசப்போவதை தன் தந்தையிடம் தெரிவிக்கிறான்.  நாத்திக மேடையில் பேசப்போகும் அந்த இளைஞனுக்கு அவன் தந்தை சொன்னது என்ன தெரியுமா..? “நல்லா சாமியை கும்பிட்டு விட்டு போய் மேடையில் ஏறி பேசு..!!” 

ஆனால் பாவம்.. அத்தனை கஷ்டப்பட்டு உரை தயார் செய்து கொண்டு போன அவனுக்கு பேச வாய்ப்பு அளிக்காமல் ஒவ்வொருவரும் பேசிக்கொண்டே போனார்கள். கடைசியாக நிகழ்ச்சியின் சிறப்பு பேச்சாளர் பெரியாரும் பேசி முடித்து விட்டார். அவனுக்கு தெரிந்து விட்டது, சிறப்பு பேச்சாளர் பேசி முடித்து விட்டார் என்றால் நன்றியுரையோடு பொதுக்கூட்டமே முடிந்து போகும் என்று..! ஆனால் அவன் நினைத்தது ஒன்று.. கடவுள் நினைத்தது ஒன்று..!! அப்படியென்றால் அன்று என்ன தான் நடந்தது..? அன்று நடந்ததை தான் முதல் பாராவில் படித்தீர்கள்..!!


இரசனைக்குரிய மேற்கண்ட நிகழ்ச்சியில் வரும் அந்த இளைஞன் வேறு யாருமல்ல, சமீபத்தில் இஸ்லாத்தை தழுவி தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பெரியார்தாசன் என்கிற அப்துல்லா தான்.!! ஒரு சிறு திருப்பம் நம்மில் பலரின் வாழ்க்கையை புரட்டிப்போட்டு விடும். அப்படி தான் கல்லில் கடவுளை கண்டு, அதை கண்ணெதிரே வைத்து வைத்து வழிபடும் குலத்தில் பிறந்த இவர், அந்த கல்லால் ஆன சிலைகளை உடைக்கும் கழக கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு பெரியார்தாசன் ஆனார். அதே பெரியார்தாசன் என்கிற நாத்திகவாதி கண்ணுக்கு தெரியாத நிலையிலும் கடவுளை வணங்கும் இஸ்லாம் மார்க்கத்திற்கு வந்திருக்கிறார். யார் இந்த பெரியார்தாசன்..? கருத்தம்மா திரைப்படம் வரும் வரை இந்த பெரியார்தாசன் யாரென்று எனக்கு மட்டுமல்ல, நம்மில் பலருக்கும் தெரியாது. அந்த திரைப்படத்தில் இவர் பெண் குழந்தையை கள்ளிப்பால் கொடுத்து கொல்லும் கொலைகார தந்தையின் வேடத்தில் நடித்திருந்தார். இவரின் பாமர தோற்றம், எளிய பேச்சு பெரும் ஆர்வத்தை அவர் மேல் எனக்கு ஏற்படுத்தவில்லை என்றாலும், அவர் பெயரின் முன் ஒட்டியிருந்த பேராசிரியர் பட்டமும், பெரியார்தாசன் என்ற அடை மொழியும் அவரை பற்றி அறியும் ஆர்வத்தை எனக்குள் விதைத்தது. 

பிறகு தெரிந்தது...அந்த பாமர தோற்றத்திற்குள் ஒரு பழுத்த பகுத்தறிவாளர் நிறைந்திருந்தார். சிறந்த சிந்தனாவாதி ஒளிந்திருந்தார். மனோவியலை கரைத்துக்குடித்த மனோதத்துவ நிபுணர் மறைந்திருந்தார். பட்டங்கள் பல பெற்ற படிப்பாளி மறைந்திருந்தார். பெரியாருடனான நேரடி தொடர்பு வைத்திருந்தவர் போன்ற அவரைப்பற்றிய தகவல்கள் எனக்கு பெரும் ஆச்சரியத்தை விதைத்தாலும், இத்தனை பெருமைகளுக்கு பிறகும் தளும்பா நிறை குடமாக அவர் காட்சியளித்தது அவரை என் மனதில் பெரிதும் உயர்த்தி கொண்டு சென்று வைத்தது. இந்துவாக பிறந்த இந்த சேஷாசலம், பிறகு நாத்திக கொள்கையில் ஈடுபட்டு பெரியார்தாசன் என்ற அவதாரம் எடுத்தார். பின் ”அன்பே கடவுள்” என உபதேசிக்கும் புத்தமதக்கொள்கைகளால் கவரப்பட்டு அதில் இணைந்து சித்தார்த்தன் ஆனார். பிறகு ஓரிறைக் கொள்கையை கொண்ட இஸ்லாமிய கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அப்துல்லாவாக ஆகியிருக்கிறார். அப்படி என்றால்... அடுத்து...?????????


(தொடரும்...!!)

கருத்துகள் இல்லை:

Related Posts with Thumbnails