skip to main |
skip to sidebar
போலி ஆன்மீகம் என்பது இன்றைய தினத்தில் மிகவும் இலாபகரமான, முதல் போட தேவையில்லாத தொழில். மக்களின் துன்பங்கள், பேராசை, மூடநம்பிக்கையை மையமாக வைத்து ஏமாற்று பேர்வழிகள் உலகெங்கும் கோடிகளை குவிக்கிறார்கள், ராஜ வாழ்க்கை வாழ்கிறார்கள். சராசரி மனிதனுக்கே உரிய எல்லா வகையான பலவீனங்களை கொண்ட குள்ளநரிகள் ”சாமியார்” என்ற பெயரில் செய்யும் தில்லுமுல்லுகள் இந்தியாவில் கொஞ்ச நஞ்சமல்ல. அதுவும் தமிழகத்தில் மாதம் ஒரு போலிச்சாமியார் கையும் களவுமாக மாட்டிக்கொண்டு தான் இருக்கிறார்கள். அதற்கு சமீபத்திய உதாரணம் பரமஹம்ச நித்தியானந்த சாமிகள் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி வந்த நித்தியானந்தா..!! இவர் ஒரு பிரபல தமிழ் நடிகையுடனான ஆபாச வீடியோவை சன் தொலைக்காட்சி வெளியிட்டு இவரின் போலி ஆன்மீக முகத்திரையை கிழித்திருக்கிறது. இது அவரை நம்பிய பல்லாயிரம் மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இன்பங்களை தவிர்த்து துறவற நிலையில் இருக்க வேண்டிய ஒரு துறவி திரைப்பட நடிகையுடன் கொண்ட தொடர்பும், அது தொடர்பான வீடியோவும் ஆன்மீகத்தை கொண்டு மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை உலகுக்கு உணர்த்தும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.! இந்த குள்ளநரியின் உண்மையான பெயர் இராஜசேகரன். 32 வயதாகும் இவர் திருவண்ணாமலையை சேர்ந்தவர். சாமியார்களுக்கே உரிய சித்து வேலைகளை சிறு வயது முதலே கற்று, அதை மக்கள் முன் காட்டி தான் ஒரு சக்தி வாய்ந்த சாமியார் என்று நம்ப வைத்தார். தியான பீடம் என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் தியானத்தில் மக்களை ஈடுபட வைத்து அவர்களின் நோய்கள், பிரச்சினைகளை தீர்க்கிறார் என்று பரபரப்பாக பேசப்பட்டார். இந்த அமைப்பு பெங்களூருவை தலைமையகமாக கொண்டு பல கிளைகளுடன் தன் வியாபாரத்தை ஜெகஜ்ஜோதியாக நடத்தி வந்தது. இதையெல்லாம் தாண்டி பெரும் நகைச்சுவையாக 2007-ம் வருடம் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் இருக்கும் அமெரிக்க இந்து பல்கலைக்கழகத்தின் (Hindu University of America) சேர்மனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். Life Bliss Foundation என்ற பெயரில் 2003-ம் ஆண்டு இவர் தொடங்கி நடத்தி வந்த தியான அமைப்பு 33 நாடுகளில் 1000 மையங்களை கொண்டது என்று சொன்னால் நம்புவீர்களா..? ஆனால் அத்தனையும் உண்மை..!! யார் கண் பட்டதோ.. சன் டிவியின் மூலம் சாமியாரின் கெட்ட நேரம் தொடங்கி விட்டது..!!
பசுத்தோல் போர்த்திய இந்த போலி ஆன்மீகப்புலி சில ஆண்டுகளுக்கு முன் பிரபல தமிழ் வார இதழான குமுதத்தில் “கதவைத்திற..காற்று வரட்டும்..!!” என்ற தலைப்பில் ஆன்மீக கட்டுரைகளை எழுதி மக்களை ஏமாற்றி வந்தது. அந்த தொடர் மூலம் தான் சாமானிய மக்களிடையே மிகவும் பிரபலமானார். இன்றைய காலகட்டத்தில் பெரும் தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள், இலக்கியவாதிகள் உள்ளிட்ட எல்லா தரப்பிலும் பெரும் எண்ணிக்கையில் பக்தர்களை பெற்றிருக்கிறார். பதிவுலகில் பரபரப்புக்கு பெயர் போன எழுத்தாளர் சாரு நிவேதிதா இவரின் தீவிர பக்தர்..! ”இவர் தொட்டால் எல்லா நோயும் குணமாகிறது” என்று சொல்லிக்கொண்டிருந்தார். இனி என்ன சொல்வாரென தெரியவில்லை..!! அதென்னவோ தெரியவில்லை, இவர் தூக்கி புகழும் அத்தனை பேரும் சில நாட்களிலே தூற்றும் படியான நிலையை அடைகிறார்கள் அல்லது சாருவாலேயே தூற்றப்படுகிறார்கள்.!!!
இவருடன் ஆபாச வீடியோவில் இருந்த அந்த பிரபல தமிழ் நடிகையின் பெயரை சன் தொலைக்காட்சி வெளியிடாமல் “ஆர்” எழுத்தில் தொடங்கும் நடிகை என சஸ்பென்ஸ் வைத்தார்கள்.. ஆர்வ மிகுந்தவர்கள் பேப்பர், பேனாவுடன் உட்கார்ந்து “ஆர்” எழுத்தில் தொடங்கும் நடிகைகள் யார் என்று பட்டியலிட தொடங்கியிருந்தார்கள். ஆனால் நக்கீரன் பத்திரிக்கை அந்த நடிகை ”நாடோடி தென்றல்” படத்தில் பாரதிராஜா அறிமுகம் செய்த ரஞ்சிதா தான் என்று பட்டவர்த்தனமாக வெளியிட்டு, பெரும் சஸ்பென்ஸை உடைத்து அவர்களின் புண்ணியத்தை தேடிக்கொண்டு விட்டது. நடிகைகளுக்கு இது போன்ற செய்திகளில் தொடர்பு இருப்பதாக செய்து வெளிவருவது ஒன்றும் புதிதல்ல. அது மட்டுமல்லாமல் பிரேமானந்தாவில் தொடங்கி இன்றைய நித்தியானந்தா வரை பெண்கள் விஷயத்தில் மாட்டிக்கொள்வது கூட புதிதில்லை தான். ஆனால் என்ன தான் சன் போன்ற தொலைக்காட்சி ஊடகங்கள் உண்மையை உலகத்துக்கு கொண்டு வந்தாலும் ஆன்மீகம் என்ற பெயரில் ஏமாறும் ஏமாளிகள் இருக்கும் வரை நித்தியானந்தா போன்று இன்னுமொரு வித்யானந்தா போன்ற ஏமாற்று பேர்வழிகள் தோன்றிக்கொண்டு தான் இருப்பார்கள். அது ஒரு தொடர் கதை..!!
”கதவைத்திற... காற்று வரட்டும்..!” என்று ஊருக்கு உபதேசம் செய்து புத்தகம் எழுதிய நித்தியானந்தரிடம் ”கதவைத்திற.. காவல்துறை வரட்டும்..!” என்று தான் எனக்கு இப்போது சொல்ல தோன்றுகிறது..!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக