நேரம்:

திங்கள், 21 டிசம்பர், 2015

செய்வீர்களா..?! செய்வீர்களா..?!


ஒவ்வொரு தனி மனிதனும் சேர்ந்தது தான் ஒட்டு மொத்த சமுதாயம் என்பதால் அந்த தனி மனிதனின் ஒழுக்கமே நல்லதொரு சமுதாயத்திற்கான முன்னேற்றமாக இருக்கிறது. இந்திய அரசியலில், அரசு நிர்வாகங்களில் இலஞ்சம் ஊழல்களை அதிகாரிகள், அரசியல்வாதிகள் செய்தாலும் அதை செய்ய வைப்பதில் முக்கிய பங்கு ஒவ்வொரு இந்தியனுக்கும் உண்டு. தன் சுயநலத்திற்காக ஒவ்வொருத்தரும் செய்யப்போக, இன்று ஒட்டு மொத்த சமுதாயமே இலஞ்சம் ஊழல்களால் நாளுக்கு நாள் சீழ் பிடித்து அழிந்து வருகிறது. 

அதில் மிகவும் கேவலமானது என்னவென்றால் நம் தேசத்தின் இறையாண்மையை, முன்னேற்றத்தை, பெருமையை அழிப்பது போல் பிச்சை காசிற்காக தங்கள் ஓட்டை விற்பது. காசை கொடுத்து ஓட்டை பெற்ற அரசியல் கயவர்கள் பிறகு வரி மூலம் பல மடங்கு மக்களை சுரண்டுவதை அறிந்தும் சுரணையற்றவர்களாகவே இருந்து வருகிறோம்.

”அரசன் எவ்வழி, மக்கள் அவ்வழி” என்பதற்கேற்ப இந்த விஷயத்தில் தமிழகம் இன்றும் என்றும் முன்னணியில் தான் இருந்து வருகிறது. இதில் மக்கள் என்பதை குடிமக்களாக எண்ணாமல் ஆட்சியில் இருக்கும் அரசியல் கட்சியினர், அரசு அதிகாரிகளை எண்ணிக்கொள்ளவும். சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள பேரிடருக்காக ஏற்படுத்தப்பட்ட நிவாரண முகாம்களில் கடலூரில் மட்டும் சாப்பாட்டுக்காக 40 கோடி ரூபாய்கள் செலவிடப்பட்டிருப்பதாக கடலூர் மாவட்ட கலெக்டர் அறிவித்திருப்பதை கண்டு அதிர்ந்து போய் விட்டேன்.

தன்னுடைய இருப்பிடம், வாழ்க்கையை தொலைந்து இயலாமையில் மக்கள் தவிக்கும் இந்நிலையில் கூட ”எரியிற வீட்டில் பிடுங்குறது வரை இலாபம்” என்ற ரீதியில் அதிகாரத்தில் இருக்கும் நம் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் கொள்ளை அடிப்பதை என்னவென்று சொல்வது..!!

வெள்ளப் பேரிடரை பொறுத்தவரை சென்னையும், கடலூரும் அரசால் கண்டு கொள்ளப்படாமல் இருந்தது தான் உண்மை என்று அனைவருக்கும் தெரியும். ”கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்” என்பது போல் வெள்ள நிவாரணப்பணிகளில் இஸ்லாமிய அமைப்புகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தங்கள் பெரும் உழைப்பையும், பொருட்செலவையும் செய்த பிறகு நல்ல பெயர் அவற்றுக்கு போகிறதே என்று கடைசியில் தான் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் களத்திற்கே வந்தனர். 

வந்தவர்கள் பேருக்கு நிவாரணம் கொடுத்தனர். குறிப்பாக, கடலூர் மாவட்டம் வெள்ளச்சேதத்தை பொறுத்த வரை ஒரு சவலைப்பிள்ளையாக அரசால் கை விடப்பட்ட நிலை தான். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நிவாரண முகாம்களில் மக்களுக்கு சாப்பாடு இட்ட செலவு மட்டும் 40 கோடியாம்.!!

கடலூரின் மொத்த மக்கள் தொகையையும் கணக்கிலெடுத்து அவர்கள் அனைவருக்கும் சாப்பாடு கொடுத்திருந்தால் கூட கலெக்டர் கொடுக்கும் கணக்கிற்கு பொருந்தவில்லை. செய்யாத செலவிற்கு நம்ப முடியாத கணக்கு கொடுப்பது என்பது இந்த அரசிற்கு கை வந்த கலை என்றாலும், அதற்கு ஒரு சூழ்நிலையை கூட பார்க்கும் மனமில்லையா..? அத்தனை கொடூரமான குணம் கொண்டவர்களா ஆட்சியாளர்களும், அதிகாரிகளும்.?! 

இவர்கள் 40 கோடி ரூபாய் சாப்பாட்டிற்கு மட்டுமே செலவு செய்திருந்தால் தன்னலமற்று இறங்கி சேவை செய்த இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அங்கு செய்ததெல்லாம் என்ன?

தமிழகத்தில் அரசியல், ஆட்சி என்ற பெயரில் பெரும் அயோக்கியத்தனங்கள் தான் காலம் காலமாக நடந்து வருகிறது. அது குறிப்பாக இந்த வெள்ளப்பேரிடருக்கு பின் தெள்ளத்தெளிவாக அனைவருக்கும் தெரிந்து விட்டது. இதை மேலும் இப்படியே விடுவது நமக்கு நாமே குழி தோண்டிக் கொள்வது போலாகி விடும்.

எனவே, இப்படிப்பட்ட அயோக்கியதனங்களுக்கு பின்னிருக்கும் அரசியல்வாதிகள், அதிகாரிகளை வரப்போகும் சட்ட மன்ற தேர்தலில் தூக்கியெறிந்து, இனி அவர்கள் அரசியலுக்கும், அதிகாரத்திற்கும் வர முடியாத நிலையை ஏற்படுத்த வேண்டும். அதுவே இப்படிப்பட்டவர்களுக்கு நாம் கொடுக்கும் சரியான தண்டனை..! செய்வீர்களா..?! செய்வீர்களா..?!
Related Posts with Thumbnails