skip to main |
skip to sidebar
கடந்த 11-ந்தேதி வெள்ளிக்கிழமை காலை ஜப்பானில் 8.9 ரிக்டர் அளவில் மிகவும் மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் அந்நாட்டில் பெரும் சீரழிவு ஏற்பட்டிருக்கிறது. அதைத்தொடர்ந்து ஜப்பானைப்பற்றி வரும் செய்திகள் மனதுக்கு மிகவும் வேதனை தருகின்றன. இது வரை பலியானவர்கள் எண்ணிக்கை 17,000-ஐ தாண்டியுள்ளதாகவும், இந்த எண்ணிக்கை இன்னும் கூடலாம் என்றும் செய்திகளில் சொல்லப்படுகிறது. இலட்சக்கணக்கானவர்கள் வீடிழந்திருக்கிறார்கள். மின்சாரம், குடிதண்ணீர் இல்லாமல் மக்கள் பெரும் துயரத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். அங்கிருந்த அணு உலைகள் குளிரூட்டப்படுவது நின்று போனதால் வெப்பம் அதிகரித்து வெடித்து விட்டிருக்கிறது. இதனால் அணு உலை கதிர் வீச்சு அபாயமும் உண்டாகியிருக்கிறது. பொதுவாகவே இது போன்ற இயற்கை சீற்றங்களால் உயிர்கள் பலியாவது இப்பொழுதெல்லாம் சகஜமாகிப்போனது. ஆனால், நான் குறிப்பாக ஜப்பானைக் குறித்து வேதனைப்பட இது ஒரு பேரழிவு என்ற ஒரு காரணம் மட்டுமில்லாமல் இன்னொரு காரணமும் இருக்கின்றது. பொதுவாக ஜப்பான் என்றால் வல்லரசு நாடுகளில் ஒன்று, வறுமை இல்லாத தேசம், தொழில்நுட்பத்தில் உயர்ந்த நாடு என்று உங்களைப்போல் தான் நானும் தெரிந்து வைத்திருந்தேன். அதை விட அதிகமாக ஜப்பானை, ஜப்பானியர்களை பற்றி நான் தெரிந்து கொள்ள எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. அதைப்பற்றிய மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்ளத்தான் இந்த பதிவு.
ஜித்தாவிலிருந்து 170 கிமீ தூரத்தில் மதினா செல்லும் வழியில் இருக்கிறது ராபிக் என்ற சிறிய நகரம். ஒரு நேரத்தில் அதிக வசதிகள் இல்லாத பெரிய கிராமம் போல் இருந்த ராபிக்கில் இன்று பெரும் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. காரணம், சவுதியின் அசுர வளர்ச்சிக்கு காரணமாக விளங்கும் அராம்கோ என்ற எண்ணெய் நிறுவனம். அது ராபிக்கில் ஒரு மிகப்பெரும் எண்ணெய், எரிவாயு ஆலையை கட்ட முடிவு செய்தது. அதன் தொடர்ச்சியாக அராம்கோ நிறுவனம் ஜப்பானின் புகழ்பெற்ற சுமிட்டோமோ (sumitomo) என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஏற்படுத்தி, இருவரும் சேர்ந்து அந்த ஆலையை கட்டுவது என முடிவு செய்யப்பட்டது. அதில் வரும் வருமானத்தை இரு நிறுவனங்களும் சரி சமமாக பங்கிட்டு கொள்ள வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து, புது நிறுவனத்திற்கு பெட்ரோராபிக் எனப்பெயரிட்டு ஆலை கட்டும் வேலையை தொடங்கினார்கள். அதன் கட்டுமானத்தின் தலைமை நிர்வாகக் குழுவில்(Project Management Team) நானும் ஒருவனாக 4 வருடங்களுக்கு முன் வேலைக்கு சேர்ந்தேன். அதில் பெரும்பாலோனோர் ஜப்பானியர்கள். மீதி இந்தியர் மற்றும் சவுதியை சேர்ந்தவர்கள். இது தவிர கட்டுமான பகுதியில் வேலை பார்க்கும் எஞ்சினியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களில் கணிசமான ஜப்பானியர்கள் இருந்தனர். எங்களின் புராஜெக்ட் மேனேஜர் தக்கெஹிக்கோ கவாசே (Takehiko Kawase) என்ற ஜப்பானியர் தான். சவுதி வந்த பின் ஜப்பானியர்கள் பலரை நான் பார்த்திருந்தாலும் அவர்களுடன் சேர்ந்து வேலை செய்ய கிடைத்த முதல் வாய்ப்பு அது. மற்ற எந்த நாட்டவரையும் விட ஜப்பானியர்கள் என்னை பல வகைகளில் கவர்ந்தனர். வேலைக்கு சேர்ந்த சில நாட்களில் அவர்களிடம் பார்த்த பல விஷயங்கள் என்னை வியப்பில் ஆழ்த்தியது, கற்றுக்கொள்ள உதவியது.
ஜப்பானியர்களுக்கு தாய் மொழிப்பற்று ரொம்ப அதிகம். அவர்களின் படிப்பு முதல், பார்க்கும் வேலை, பயன்படுத்தும் கம்ப்யூட்டர் என்று எல்லாவற்றிலும் ஜப்பானிய மொழி தான். ஆங்கிலம் என்றாலே அவர்களுக்கு கசப்பு தான். சவுதியில் நாங்கள் வேலை தொடர்பான மின்னஞ்சல், டாக்குமெண்டேஷன் போன்ற எல்லாவற்றிலும் ஆங்கிலத்தை பயன்படுத்தினோம். ஆனால் அவர்களுக்குள் மின்னஞ்சல் அனுப்பும் போது ஜப்பானிய மொழியில் தான் அனுப்பி கொள்வார்கள். ஆங்கிலம் புரியாமல் பல ஜப்பானியர்கள் கையோடு ஜப்பான் - ஆங்கில அகராதி சாதனத்தை எப்பொழுதும் கையில் வைத்திருப்பார்கள். ஆரம்பத்தில் அவர்களின் உடைந்த ஆங்கிலம் எனக்கு புரியவில்லை. T உச்சரிப்பு சுட்டுப்போட்டாலும் அவர்களுக்கு வராது. தேங்க்ஸ் என்பதை சேங்க்ஸ் என்று தான் சொல்வார்கள். அவர்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் அவர்கள் மற்றவர்களை மதிக்கும் பண்பு. வயது வித்தியாசம் பார்க்க மாட்டார்கள். பதவியில் உயர்ந்தவர், குறைந்தவர் பார்க்கமாட்டார்கள். எல்லோரிடமும் ஒரே மாதிரியாக மிகுந்த மரியாதையுடன் பழகுவார்கள், பேசுவார்கள்.
நாம் மரியாதைக்கு ”சார்” என்று சொல்வது போல் அவர்கள் ”சான்” என்பார்கள். நானும் சான் போட்டு தான் எல்லோரையும் கூப்பிடுவேன். இப்படியே பழக்கமாகி அதன் பிறகு சவுதிகளையும் நான் சான் போட்டு கூப்பிட ஆரம்பித்தது பெரிய காமெடி. அவர்கள் முறையில் வணக்கம் சொல்ல உடம்பை கொஞ்சம் முன்பக்கம் வளைத்து செய்வது பார்க்க சுவராஸியமாக இருக்கும். அவர்களிடம் நான் கற்றுக்கொள்ள பல நல்ல விஷயங்கள் இருந்தன. அவர்கள் கடும் உழைப்பாளிகள். வேலை என்று இறங்கி விட்டால் ஊண், உறக்கம் பார்க்க மாட்டார்கள். அதே போல் நேரத்தை பேணுவதில் மிகவும் சிறந்தவர்கள். அலுவலகம் ஏழு மணிக்கு என்றால் அனைவரும் ஆறே முக்காலுக்கே வந்து விடுவார்கள். எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் கோபமே வராது. மிகவும் பொறுமைசாலிகள். மற்றவர்களை ஊக்கப்படுத்தி வேலை வாங்குவதில் மன்னர்கள். நாங்களெல்லாம் கலர் கலரா உடையுடன் வேலைக்கு போவோம். ஆனால் ஜப்பானியர்களில் புராஜெக்ட் மேனேஜரிலிருந்து கடை நிலை பணியாளர் வரை யூனிஃபார்மில் தான் வருவார்கள். அவர்களின் சாப்பாடை பார்த்தால் ஆச்சரியம் வரும். நம்மை விட மிகவும் குறைவாக சாப்பிடுவார்கள். நம்மை போல் அரிசி சாதம் தான் அவர்களும் சாப்பிடுவார்கள் என்றாலும் அது எவ்வளவு, எப்படி சாப்பிடுகிறார்கள் என்பதில் தான் சுவராஸியம் அடங்கி இருக்கிறது. நம்மை போல் அவர்கள் அரிசியை அடுப்பில் வேக வைத்து வடித்து சாப்பிடுவதில்லை. ப்ளாஸ்டிக் பேப்பர்களுக்குள் உருண்டையாக சுற்றிய அரிசியை வைத்திருக்கிறார்கள். சாப்பிடுவதற்கு முன் கொதிக்கும் நீரில் அந்த அரிசி உருண்டைகளை போடுகிறார்கள். 5 நிமிடம் கழித்து எடுத்து சுற்றி இருக்கும் ப்ளாஸ்டிக் பேப்பரை பிரித்து பார்த்தால் சோற்று உருண்டைகள் நம் ஊரில் கிடைக்கும் லட்டு அளவில்..!! ஒரு ஆள் அதிகபட்சம் 3 அல்லது 4 உருண்டைகள் தான் சாப்பிடுகிறார்கள். நமக்கு அதையெல்லாம் வைத்து பசியடக்க முடியுமா.? கூடவே கொஞ்சம் காய்கறி, பழங்கள் அடங்கிய சாலட் சாப்பிடுகிறார்கள். சில நேரங்களில் எங்கள் அலுவலகத்தில் ஜப்பானிய முறையில் விருந்து கொடுப்பார்கள். அதில் பல உணவுகள் நம் ஊர் மசாலா எதுவும் இல்லாததால் சாப்பிடவே முடியாது.
நிறுவன பயிற்சிக்காக சிலரை தேர்ந்தெடுத்து அவர்களை அராம்கோ நிறுவனம் ஜப்பானின் தலைநகரான டோக்கியோவுக்கு அனுப்பினார்கள். அங்கு போய் வந்த நண்பர்கள் அங்கு கண்டவற்றை அதிசயத்துடன் எங்களிடம் வாய்வலிக்க சொன்னார்கள். அங்குள்ள அதி வேக புல்லட் ட்ரெய்ன், அதிநவீன பாலங்கள், பெரும் அடுக்குமாடி கண்ணாடி கட்டிடங்கள், சுரங்க பாதைகள், பொம்மை போல் இருக்கும் ஜப்பானிய பெண்கள், எங்கும் வரிசை கட்டி நிற்கும் கார்கள், போகுமிடமெல்லாம் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம், அங்கிருக்கும் விண்ணை முட்டும் விலைவாசி என்று அவர்கள் சொன்ன பல விஷயங்கள் மிகவும் சுவராஸியமாக இருந்தன. இன்றைய தேதியிலும் ஜப்பானிய பொருட்கள் தான் தொழில்நுட்பத்திலும், தரத்திலும் சிறந்தவை. அப்படிப்பட்ட பெருமைகள் கொண்ட ஜப்பான் சிதைந்து நொறுங்கி நிற்கிறது. ஜப்பானுக்கு அழிவு ஒன்றும் புதிதல்ல. அடிக்கடி சுனாமி, பூகம்பம் என சந்தித்துக்கொண்டிருப்பவர்கள். அவ்வளவு ஏன், அமெரிக்கா 1945-ம் வருடம், ஆகஸ்ட் மாதம் 6-ந்தேதி ”லிட்டில் பாய்” என்ற அணுகுண்டுகளை வீசி ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி போன்ற பெரு நகரங்களை முழுதும் அழித்த பின்னும் தங்களின் கடுமையான உழைப்பால் முன்னுக்கு வந்தார்கள். அப்படிப்பட்ட கடும் உழைப்பாளிகளை இறைவன் அடிக்கடி இயற்கை சீற்றங்களை கொண்டு சோதித்துக்கொண்டே இருக்கின்றான். வாழ்க்கையை இழந்து நிற்கும் அவர்களுக்கு இப்பொழுது இறைவன் மட்டுமே துணை..!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக