நேரம்:

ஞாயிறு, 6 ஜூலை, 2008

தமிழர்களின் மொழிப்பற்றும், புரிதலும்..!

இரு தமிழக தமிலர்கள்(!) சந்தித்துக்கொள்ளும் பொழுது டமிங்கிலத்தில் பேசிக்கொள்வதை பல முறை கண்டிருக்கிறேன். ஆனால், இரு ஈழத்தமிழர்கள் சந்தித்துக்கொள்ளும் பொழுது இந்த அவலம் பெரும்பாலும் நிகழ்வதில்லை. இன்றைய காலகட்டம் வரை தமிழை இணையத்தில் வளர்த்ததில் ஈழத்தமிழர்களுக்கு பெரும் பங்கு உண்டு. என்னுடைய தமிழார்வம் அதிகரித்ததற்கு இலங்கைத்தமிழர்களும் ஒரு காரணம் என்று சொல்வேன். அந்த அளவுக்கு அவர்கள் மொழிக்கு அத்தனை முக்கியத்துவம் தருகிறார்கள். ஆனால், தமிழகத்தில் தமிழ் என்பது அரசியலுக்கு மட்டுமே பயன்படுகிறது.

அடுத்து, தமிழ் மொழி பயன்பாடு என்பதில் நாட்டுக்கு நாடு, மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபடுகிறது. நம் பிள்ளை என்பதால் நம் பிள்ளையின் தவறுகளை ஒத்துக்கொள்வதில் நாம் ஆர்வம் காட்டுவதில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை நம் மொழியில் உள்ள குறைபாடுகளும், அதன் திருத்துவதில் அல்லது கடைப்பிடிப்பதில் ஆர்வம் காட்டாத தமிழர்களும். அந்த வகையில் தமிழை சரியாக பேசுவதில், மொழி வளர்ச்சியை ஊக்குவிப்பதில் எப்பொழுதும் ஈழத்தமிழர்கள் முன்னால் நிற்கிறார்கள். ஆனால், இங்கே வந்திருக்கும் உச்சரிப்பு பிரச்சினை வேறு விதமானது. தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள் பிற மொழியை குறிப்பாக ஆங்கில மொழியை எந்த வகையினர் சரியாக பேசுகிறார்கள் என்பது. பொதுவாக மிகச்சரியாக பேசுதல் என்பது பெரும்பாலும் அந்நிய மொழிக்கு பொருந்துவதில்லை.

ஒரு மொழியை அம்மொழியை தாய் மொழியாக கொண்டவனைக்காட்டிலும் மற்ற மொழிக்காரன் அத்தனை சரியாக பேசுவது எளிதான காரியமல்ல. அதனால் இங்கே இந்த வாக்குவாதம் அவசியமில்லை என்றே தோன்றுகிறது. காரணம், ஆழ்ந்து பார்த்தால் தமிழக, இலங்கை உள்ளிட்ட அனைத்து தமிழர்களிடமும் ஆங்கிலத்தை பிரயோகிப்பதில் பலவிதமான முரண்பாடுகள் இருக்கிறது. இது தமிழர்களுக்கு மட்டுமல்ல, ஆங்கிலத்தை உபயோகிக்கும் மற்ற மொழிக்காரர்களுக்கும் பொருந்தும். எனக்கு தெரிந்து அரேபியர்களுக்கு P உச்சரிப்பு ஆங்கிலத்தில் வருவதில்லை (B மட்டும் தான் உச்சரிப்பார்கள்). துருக்கியர்களுக்கு th(த்) என்பதை ஸ் என்று உச்சரிப்பார்கள். இப்படி நிறைய சொல்லலாம். Bottle என்ற வார்த்தையை அந்த மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள் உச்சரிப்பதை சரியாக தமிழில் கொண்டு வந்து எழுதி விடமுடியும் என்றோ, அதை படித்து சரியான உச்சரிப்பை கொண்டு வந்துவிட முடியும் என்றோ நான் நம்பவில்லை.

ஒரு மொழியை சரியாக கற்க அந்த மொழியை தாய்மொழியாக கொண்டவர்களை உற்று நோக்க வேண்டும். பாட்டில், போத்தல் என்பது தமிழில் அவரவர் பகுதி உச்சரிப்பிற்கேற்ப நாமாக உண்டாக்கியவையே தவிர அதற்கான ஒழுங்கான உச்சரிப்பை அந்த மொழியில், அவர்கள் உச்சரிப்பில் சொல்லும் போது மட்டுமே சரி..!! நாம் பாட்டில் அல்லது போத்தல் என்பதற்கு பதிலாக நம் மொழியில் குப்பி அல்லது குடுவை என்று சொல்வது சிறப்பு. சரி.. இப்படி எல்லாவற்றையும் நாம் பேசலாமா..? முடியாது... காரணம் நிறைய பொருட்களுக்கு, செயல்களுக்கு இன்று வரை சரியான தமிழ்ப்பதம் இல்லை. அல்லது அப்படி தமிழ்ப்பதம் இருந்து சொன்னால் புரிவதில் குழப்பம் தான் பெரும்பாலும் ஏற்படும். மொழியை வளர்க்கிறேன் என்ற பெயரில் சிலர் தமிழில் மட்டுமே பேச வேண்டும் என்று சொல்கிறார்கள். மொழியை வளர்ப்பதை விட அந்த மொழியால் நமக்குள் புரிவதில் குழப்பம் ஏற்படக்கூடாது அவசியம் என நான் நினைக்கின்றேன்.

இன்று வரை வழக்கில் மிதிவண்டி, பேருந்து என சொல்வதில்லை. சைக்கிள், பஸ் தான். ஆங்கிலம் அளவுக்கு தமிழ் அத்தனை மொழி வளம் இல்லாததும், கற்க சிரமமானதும், அதிக எண்ணிக்கையிலான எழுத்துக்களை கொண்டுள்ளதும் தமிழின் பெரும் பலவீனம். இந்த பலவீனம் எதுவும் இல்லாதது ஆங்கிலத்தின் பெரும் பலம். விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியினால் கிடைப்பவற்றிற்கான புதுப்புது பதங்களை உடனுக்குடன் ஆங்கிலத்தில் உண்டாக்கி அகராதியில் சேர்க்கிறார்கள். ஆனால், அதை நாம் பெரும்பாலும் செய்வதில்லை. தமிழை மட்டும் பேசி ஒரு முழுமையான புரிதலையுடைய சமுதாயத்தை நாம் காண முடியாது என்பதை உறுதி செய்ய இரு வேறு தமிழர்கள் ஒரே பொருளின் பெயரை இரு வகையில் உச்சரித்து இருவரும் "தான்" சொல்வது தான் சரி என்பதை கொண்டு புரிந்து கொள்ளலாம்..!! ஆனால், உண்மை இருவர் சொல்வதும் தவறு என்பது என் கருத்து.

இது போன்ற குழப்பத்தை மொழி தீர்க்க முடியாது. ஒருத்தொருக்கொருத்தர் இடையேயான புரிதலும், அறிதலும் மட்டுமே தீர்க்கும்..!!

2 கருத்துகள்:

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

இரு தமிழக தமிலர்கள்(!) சந்தித்துக்கொள்ளும் பொழுது டமிங்கிலத்தில் பேசிக்கொள்வதை பல முறை கண்டிருக்கிறேன். ஆனால், இரு ஈழத்தமிழர்கள் சந்தித்துக்கொள்ளும் பொழுது இந்த அவலம் பெரும்பாலும் நிகழ்வதில்லை. இன்றைய காலகட்டம் வரை தமிழை இணையத்தில் வளர்த்ததில் ஈழத்தமிழர்களுக்கு பெரும் பங்கு உண்டு. என்னுடைய தமிழார்வம் அதிகரித்ததற்கு இலங்கைத்தமிழர்களும் ஒரு காரணம் என்று சொல்வேன். அந்த அளவுக்கு அவர்கள் மொழிக்கு அத்தனை முக்கியத்துவம் தருகிறார்கள். ஆனால், தமிழகத்தில் தமிழ் என்பது அரசியலுக்கு மட்டுமே பயன்படுகிறது.//

உண்மைதான் நண்பரே..
பாவம் தமிழர்கள் தம் வயிறை ஆங்கிலத்திடம் விற்றுவிட்டார்கள்..

Jaafar சொன்னது…

வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரே..!!

Related Posts with Thumbnails