நேரம்:

திங்கள், 7 ஜூலை, 2008

இதயமென்பது இயந்திரமா? அன்பில்லமா..?

நம்பிக்கையும், பகுத்தறிவும் சரிவரக் கலந்தது தான் உலக வாழ்க்கை. "இவர் தான் தன் தந்தையா..?" என்று யாரும் நிரூபணம் செய்ய விரும்புவதில்லை. நாம் அறிந்ததை நம்பிவிடுகிறோம். "இது என்ன நோய்..?" என்று அறியாது அதற்கான மருந்தை நாம் உட்கொள்வதில்லை. அதனை அறிந்த பிறகு தான் அதை தீர்க்கும் நடவடிக்கையில் இறங்குகிறோம். ஆக, நம்பிக்கை, பகுத்தறிவு ஆகிய இரண்டும் நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாமல் பின்னிப்பிணைந்து கிடக்கிறது. ஆனால், விசித்திரம் என்னவென்றால் இந்த இரண்டும் இருவேறு துருவங்கள்.! நம்பிக்கை இருக்கும் இடத்தில் பகுத்தறிவு தோற்கும், பகுத்தறிவு இருக்கும் இடத்தில் நம்பிக்கை தோற்கும். அதே போல் தான் இதயமும்.!! விஞ்ஞானம் என்ற பகுத்தறிவு கொண்டு பார்த்தால் இதயம் என்பது இரத்தத்தை சுத்திகரிக்கும் ஓர் இயந்திரம். நம் நம்பிக்கைகளின் அடிப்படையில் பார்த்தால் அன்பை இறைக்கும் கடவுளின் உறைவிடம். ஆனால், ஆழ்ந்து சிந்தித்தால் இரண்டுமே உண்மை தான். காரணம் நான் ஏற்கனவே சொன்னது போல் நம்பிக்கை, பகுத்தறிவு இரண்டும் கலந்தது தானே வாழ்க்கை..?

இதயம் ஒரு விசித்திர உறுப்பு.! சிந்தனை, செயல் உள்ளிட்ட அனைத்திற்கும் முழு முதற்பொறுப்பான மூளைக்கு கிடைக்க வேண்டிய பெயரை அதற்கு சம்பந்தமேயில்லாமல் இதயம் பெற்றிருக்கிறது. இது எப்படி ஏற்பட்டிருக்கும் என நான் சிந்தித்த வேளையில் எனக்கு கிடைத்த சில பதில்கள். மனிதர்களின் மேன்மையான குணம் அன்பு செலுத்துதல். அதை செய்வதில் தொடர்புடைய உறுப்பு மூளை. அந்த மூளை இருப்பதோ உச்சியில். எல்லாவற்றுக்கும் "நான் தான் காரணம் என்பதால் தான் நான் அனைத்தையும் விட உயரமான இடத்தில் இருக்கிறேன்" என்ற கர்வம் மூளைக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்ற கவலையால் மனித சமூகம் அன்பின் அடையாளமாய் மூளையை சொல்லாமல் புறக்கணித்திருக்கலாம். காரணம், அன்பிருக்கும் இடத்தில் கர்வத்திற்கு வேலையில்லை..!!

சரி.. அப்படியென்றால்.. அன்பை சொல்ல இதயத்தை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்..? உடம்பில் வேறு பல உறுப்புக்கள் இருக்கின்றனவே..? அதற்கும் காரணம் இருக்கிறது. இதயம் இருக்கும் இடம் உடம்பின் மையப்பகுதி. அன்பைக்கொண்டு நடுநிலையுடன் நடந்து கொள்ளவேண்டும் என்பதை குறிப்பிடுகிறது. அது மட்டுமல்லாமல், அன்பு எத்தனை பெரிய தீயவனையும் நல்லவனாய் மாற்றும் சக்தியுடையது. அதே போல் தான் இதயமும் கெட்ட இரத்தத்தை சுத்திகரித்து, நல்ல இரத்தமாக மாற்றுகிறது.!! அதுவும் சரி தான்..அப்படியென்றால் இதயம் உடம்பின் மையத்தில் இல்லாமல் ஏன் இடது புறம் இருக்கிறது.? பொதுவாகவே நம் உடலில் வலது பக்க உறுப்புக்களுக்கு பெரும் முக்கியத்துவம் இருக்கிறது. கை குலுக்குவது, சாப்பிடுவது தொடங்கி காலை எடுத்து வைத்து உள் நுழைவது வரை வலது பக்க உறுப்புகளுக்கு பெரும் முக்கியத்துவம். ஆனால், அன்பிற்கு முன்னால் எதுவும் முக்கியமல்ல.. அதனால் தான் யாரும் சீந்த நினைக்காத இடது புறத்தில் அன்பை உற்பத்தி செய்யும் இதயம் அமைந்துள்ளது.!!

பொதுவாக உண்மையை சொல்ல வைக்க தலையில் கை வைத்து சொன்னால் அது சத்தியம். ஆனால், இதயத்தின் மேல் கை வைத்து சொன்னால் அது மனசாட்சி..! சத்தியத்தை நிறைய மீறுகிறார்கள். ஆனால், மனசாட்சியை மீற நிறைய பேருக்கு துணிவிருக்காது. அப்படி மீறுபவர்கள் குற்றவுணர்ச்சியால் பெரும் சித்ரவதைக்குள்ளாவர்கள். மனசாட்சிக்கு பயந்து திருந்துபவர்கள் மகான் ஆகும் வாய்ப்பு கூட உண்டு. இன்றைய காலகட்டத்தில் உலக வாழ்க்கையில் நிறைந்து கிடக்கும் ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகளை களைந்து உலகத்தை அமைதிப்பூங்காவாக்கும் அருமருந்து அன்பு மட்டும் தான்.!

கடவுள் அன்பின் வடிவம் என்பார்கள். அந்த அன்பை உற்பத்தி செய்யுமிடம் இதயம். ஆக, என்னை பொருத்தவரை இதயம் ஒரு கோவில்..!!

கருத்துகள் இல்லை:

Related Posts with Thumbnails