நேரம்:

புதன், 25 பிப்ரவரி, 2009

நான் கடவுள் - திரை விமர்சனம்

2, 3 வருட தாமதம், அடுத்தடுத்து படத்தின் கதாநாயக, நாயகிகளின் மாற்றம் என்ற செய்திகள் ஆகியவை ஏகத்துக்கு நான் கடவுள் படம் தொடர்பான எதிர்பார்ப்பை எகிற விட்டிருக்க, சேது, நந்தா, பிதா மகன் போன்ற சராசரி தமிழ் சினிம இலக்கணங்களிலிருந்து முற்றிலும் விலகிய வகையில் திரைப்படங்களை உருவாக்கி அளிக்கும் இயக்குநர் பாலாவின் படம் என்பதால் நீண்ட தவத்திற்கு பிறகு வந்த நான் கடவுளை பார்க்க எனக்கு மிகவும் ஆவல் ஏற்பட்டதால் பார்த்தேன்.

தமிழக மட்டுமல்ல, இந்திய சினிமாவுக்கே முற்றிலும் அறிமுகமில்லாத கதைக்களனை உள்ளடக்கியது நான் கடவுள் திரைப்படம். அது பிச்சை எடுப்பவர்களின் அந்தரங்க உலகம். அந்த உலகம் தான் அதிர்ச்சி, அருவெருப்பு, ஆச்சரியம், அன்பு, அதிகாரம், ஆணவம் போன்ற எத்தனை வகையான உணர்ச்சிகளை உள்ளடக்கி இருக்கிறது.!! இப்படத்தின் கதையை வலையுலகில் பலரும் பிரித்து மேய்ந்து விட்டதால் மீண்டும் தட்டச்ச அலுப்புப்பட்டு கதையை எனக்கு மிகவும் பிடித்த ஒரு பதிவிலிருந்து வெட்டி ஒட்டுகிறேன். அடுத்து படம் தொடர்பான என் விமர்சனத்தை தருகிறேன்.

ஒரே ஒரு ஊர்ல ஓரே ஒரு அப்பாவாம். அவருக்கு ஒரே ஒரு பையனாம். அவன் உங்களுடன் இருந்தால் தோஷம் என்று நான்கு ஜோதிடர்கள் ஒரே மாதிரி சொல்கிறார்களாம். அப்பா தன் மகனை கங்கைக் கரையில் மந்திரம் படிக்க விட்டு விடுகிறாராம். பதினைந்து வருடங்கள் கழித்து மகனைப் பார்க்க, ம்களோடு காசிக்கு வருகிறாராம். அங்கு பிணங்களை எரிக்கிற, தியானம் செய்கிற, மந்திரம் சொல்கிற, சுயம்புநிலைப் பித்தனாய் மகனைப் பார்க்கிறாராம். அவனை வளர்த்த குருவின் சொல் கேட்டு, உறவுகளை முழுமையாய் அறுத்தெறியும் பொருட்டு, தேடி வந்த உறவுகளோடு ஊருக்கு மகன் புறப்படுகிறானாம்.

கருப்புப் போர்வை மாதிரியான உடையில், கபாலமணி மாலையணிந்து, கஞ்சா அடித்துக் கொண்டு, தாடி முடியோடு வெறித்த பார்வையோடும் அல்லது மூடிய கண்களோடும் இருக்கிற மகனைப் பார்த்து அம்மா அதிர்ந்து போகிறார். நள்ளிரவில் உடுக்கை அடித்துக் கொண்டு புகை நடுவே காட்சியளிக்கும் அவனைப் பார்த்து அண்டை வீட்டார் மிரண்டு நிற்கிறார்கள். இந்த இடத்தில் நிற்க.

உடல் வளர்ச்சி குன்றிப்போயிருக்கிற, உறுப்புகள் சிதைந்திருக்கிற, கைவிடப்பட்ட, வயதான, ஆண் பெண் பாலற்ற, இயல்பான தோற்றமற்ற என பல ரூபங்களில் அசாதாரண மனிதர்கள் வருகிறார்கள். அவர்களை கூட்டம் கூட்டமாய் சேகரித்து, அவர்களை பிச்சையெடுத்துப் பிழைக்க வைக்கிற கருப்பு மொட்டைத் தலையன் ஒருவன் இருக்கிறான. பிச்சையெடுக்க வைக்க அவன் கையாளும் கொடூரத்தனங்கள் காண்பிக்கப்படுகின்றன.

நள்ளிரவில் துடியாக பித்தன் புறப்படுகிறானாம். மலைக் கோவிலுக்குச் செல்கிறானாம். அங்கு போய் குகை மாதிரியான இடத்தில் உட்கார்ந்து கொள்கிறானாம். இந்த இடத்திலும் நிற்க.

மலைக்கோவில் வாசலில் அவர்கள் பிச்சையெடுக்கிறார்கள். சிவன், பார்வதி, கிருஷ்ணர், அனுமன் என ரூபங்கள் புனைந்து இருக்கிறார்கள்.

ஆடிப்பாடிப் பிழைக்கும் கூட்டம் ஒன்று. அதில் கண்ணற்ற பாடகி ஒருத்தி இருக்கிறாள். போலீஸ் உதவியோடு ஒருவன் அவளை பிச்சையெடுக்க வைக்க தூக்கிச் செல்கிறான். அழுது கலங்கி நிற்கும் அவளுக்கு, வந்து சேர்ந்த இடத்தில் இருக்கும் மற்றவர்கள் அன்போடு உறவாகிறார்கள். அவர்களிடமும் சந்தோஷமும், நையாண்டியும், வாழ்வும் இருக்கிறது.

காவியுடை அணிந்த இதர சாமிகள் எல்லாம் பித்தனது விசித்திர நடவடிக்கை கண்டு கண்களை விரிக்கிறார்கள். விலகி நிற்கிறார்கள். ஒரே இடத்தில் அசையாமல் படுத்து இருக்கிறானாம். அம்மா வந்து வீட்டுக்கு அழைக்கிறார்கள். பெண்ணைப் பற்றிய சித்தர் பாடல் சொல்லி வெறிக்கிறானாம். அம்மா மயங்கிய வெளியில் அழுதுகொண்டே வீட்டுககுப் போய் அவன் ஒரு சுயம்பு என புரிந்து கொள்கிறாளாம். திரும்பவும் நிற்க.

மலையாளத்தில் இருந்து வெத்திலை வாயோடு ஒருவன் கருப்பு மொட்டையை சந்திக்கிறான். தொழில் அபிவிருத்திக்கு திட்டம் சொல்கிறான். இங்கிருப்பவர்களை அங்கும், அங்கிருப்பவர்களை இங்குமாக மாற்றிக் கொள்ள முடிவெடுக்கிறார்கள். மலைக்கோவிலில் பிச்சையெடுப்பவர்களை கதறக் கதற முரட்டுத்தனமான மனிதர்கள் தூக்கிச் செல்கிறார்கள். மீதமிருப்பவர்கள் இரவில் அழுகிறார்கள். அடுத்த நாள் கண்ணற்ற பாட்கியை துக்கிச் செல்ல வருகிறார்கள். அவள் கதறி, திகைத்து ஓடுகிறாள். பித்தன் காலைப் பிடித்துக் கொள்கிறாள்.

பித்தன் அந்த முரட்டு மனிதர்களை தாக்குகிறானாம். வெத்திலை வாயனை துவம்சம் செய்கிறானாம். பிணமாக தோளில் போட்டு அடர்ந்த மரங்களுக்குள் செல்கிறானாம். காவல் நிலையத்தில் அவன் பாட்டுக்கு உட்கார்ந்திருக்கிறானாம். கோர்ட்டில் ஜட்ஜ் முன்பு கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து நான் கடவுள் என்கிறானாம். இந்த இடத்திலும் நிற்க.

கண்ணற்ற பாடகிக்கு ஒரு சிஸ்டர் ஆறுதலையும், கடவுளின் வார்த்தைகளையும் சொல்லி அனுப்புகிறாள். மொட்டைத் தலையன் அவளைப் பிடித்து வந்து சித்திரவதைப் படுத்துகிறான். முகத்தில் கல்லை வைத்து அடிக்கிறான். சுவரில் தேய்க்கிறான்.

போலீஸார் ஐந்து நாட்கள் கூடவே இருந்து அவன் குளிப்பதையும், தலைகீழாக நிற்பதையும், கஞ்சா அடிப்பதையும் பார்க்கிறார்களாம். அவன் மேல் தவறு இல்லை என விடுவிக்கும்படி போலீஸ் சொல்கிறதாம். வெளியே வரும் அவனை கருப்பு மொட்டை பார்க்கிறான். மலைக்கோவில் அருகே பித்தனோடு சண்டைக்குப் போகிறான். பித்தன் அனாயசமாக அவனைத் தூக்கிப் போட்டு மிதிக்கிறனாம். பாறையில் மோதி கருப்பு மொட்டையிலிருந்து ரத்தம் வருகிறது.

குகைக்குள் பித்தன் தலைகீழாக நிற்கிறானாம். கண்ணற்ற அழகி அவன் முன் தரையில் கிடந்து சிதைந்த முகத்தோடு அழுது புரளுகிறாள். தங்களை ஏன் கடவுள் இப்படிப்பட்ட பிறவிகளாய் படைத்தான் என்று புலம்புகிறாள். எந்தக் கடவுளும் தன்னைக் காபாற்ற வரவில்லையே என்று சத்தம் போடுகிறாள். வாழ இயலாதவர்களுக்கு மரணம் ஒரு வரம் என குரு சொன்னது அவன் நினைவுக்கு வருகிறதாம். இப்போதும் நிற்க.

வெளியே நிராதரவான மற்றவர்கள் காத்து நிற்கிறார்கள். உள்ளே கழுத்தறுபட்டு கண்ணற்ற பாடகியின் துடிப்புகள் அடங்குகின்றன. பித்தன் அவன் போக்கில் போய்க் கொண்டு இருக்கிறானாம். இப்போது நீங்களும் தியேட்டரை விட்டுப் போகலாம்.

கதை இத்துடன் முடிந்ததால் இனி என் விமர்சனத்திற்கு வருகிறேன். பொதுவாகவே பாலா தன் படங்களில் விளிம்பு நிலை மனிதர்களை உலவ விடுவதில் வல்லவர். சேதுவில் பைத்தியம், நந்தாவில் அகதி, பிதா மகனில் வெட்டியான் போன்று நான் கடவுளில் பிச்சைக்காரர்கள் என்று தொடர்கிறது. அது போதாதென்று நம்மில் பலருக்கு இது வரை தெரியாதிருந்த அகோரி என்ற நரமாமிசம் தின்னும் ஆன்மீக கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார். மிகவும் நான் பார்க்க துடித்த ஒரு படத்தை இன்னொரு முறை பார்க்க முடியாது என்னும் முடிவுக்கு என்னை வரவழைக்க செய்த படம் இது. அதற்கு அடிப்படை காரணம் எந்த விதமான வெறுப்புணர்வும் நிச்சயம் கிடையாது என்று நான் சொல்லவில்லை என்றால் அது பாலா போன்ற நேர்மையான, திறமையான கலைஞனை அவமானப்படுத்தியது போல் ஆகிவிடும். பிறகென்ன காரணம்..? இந்த படம் எனக்குள் ஏற்படுத்திய விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கை முறை, அதற்குள் பொதிந்து கிடக்கும் உண்மை உணர்த்தும் கசப்புணர்வே காரணம். எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாத மிகவும் குழப்பமான உணர்வு இது.

அகோரி கதாப்பாத்திரம் ஏற்றிருக்கும் ஆர்யாவை இனி சாக்லேட் பேபியாக நினைக்கவே நமக்கு மனம் வராது. அந்த அளவுக்கு அதன் கதாப்பாத்திரத்தோடு ஒன்றி நடித்துள்ளார். இவரின் அறிமுக காட்சி இது வரை எந்த கதாநாயகனும் அறிமுகமாகாத வகையில் பிரம்மிப்புடன் அமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு பேசும் தமிழ் படத்தில் தமிழ் கதாநாயகன் இத்தனை குறைவான வசனங்களை பேசி நடித்திருப்பது இதுவாகத்தான் இருக்கும். அவரின் வசனங்கள் செய்ய வேண்டிய வேலையை நடிப்பும், இசையும் ஈடு செய்து விடுகிறது. இத்தனை பட வாய்ப்புகளை இந்த படத்தினால் இழந்ததை இப்பட பாராட்டுக்கள் போக்கிவிடும் வாய்ப்புகள் ஏராளம். அதே போல் ஒருவொருக்கொருவர் தொட்டுக்கொள்ளாத, காதல் வசனம் பேசாத, டூயட் பாடாத கதாநாயகன், கதாநாயகி உள்ள இந்த படம் தமிழ் சினிமா உலகின் அத்திப்பூ..! பார்வையாளனின் நியாயத்தை ஒட்டி கதாநாயகனின் செயல்பாடுகளை அமைக்கும் பாத்திர வடிவமைப்புக்கிடையில் இந்த படத்தில் ஆர்யாவின் பாத்திர வடிவமைப்பு அந்த அகோரி பாத்திரத்தின் நியாய அடிப்படையில் அமைந்துள்ளது. அதற்கு சிறந்த உதாரணம் இப்படி கதாநாயகன் கொலை செய்வது நியாயமா என்ற சர்ச்சையை ஏற்படுத்தும் பூஜாவின் கொலை..!

படத்தின் ஒரு ஒவ்வொரு கதாபாத்திரம், காட்சியமைப்பு, கதாபாத்திரத்திரத்தின் க்ளோசப் காட்சி, காமிரா நகரும் திசை, கோணம் என்று ஒவ்வொன்றையும் மிகவும் ஆழ்ந்து சிந்தித்து செதுக்கி இருக்கிறார். எதையும் காரணமில்லாமல் பாலா அமைக்கவில்லை. அப்படி யாரேனும் எண்ணினால் அது பார்வையாளனின் புரிதலில் உள்ள குறையாகத்தான் இருக்க முடியும். அது மட்டுமல்லாமல் உண்மையை உள்ளபடி சொல்லும் முயற்சியில் இப்படத்தின் பல காட்சிகள் தணிக்கைக்குள்ளானதில் சிலருக்கு படம் தொடர்பற்று செல்வது போன்ற பிரமையை ஏற்படுத்தவும் கூடும். இப்படத்தில் இரசிகன் உணரும் இரு விருப்பற்ற உணர்வுகள் என்றால் ஒன்று அருவெருப்பு - அது பிச்சைக்காரர்களின் வாழ்க்கையை பிரதிபலித்ததால் ஏற்பட்டது. அடுத்தது வன்முறை - அது பிச்சைக்காரகளின் வாழ்க்கையில் இணைந்து இருக்கும் நிழலுக மனிதர்களின் கொடூர முகம் தரும் உணர்வு. இவை இரண்டுமே தவிர்க்க முடியாதது.

கண்ணைக்கவரும் கவர்ச்சிப்பாவையாய் திரைப்படங்களில் உலா வந்த பூஜாவா இது..? அவரை இனம் காண மிகவும் உன்னிப்பாக கவனிக்க வேண்டியிருக்கிறது. மிகவும் தேர்ந்த நடிப்பு மற்றும் ஒப்பனை. பொதுவாக குருடர்களாக காட்ட பயன்படுத்தப்படும் மேல் நோக்கி செருகியபடி கண்களை வைத்துக்கொள்ளும் உத்தியை புறந்தள்ளி இயல்பான குருடர்களை அச்சு அசலாக காட்டும் விழி லென்ஸ் பயன்படுத்தப்பட்டிருப்பது கதாபாத்திரத்தின் இயல்பை இன்னும் கூட்டுகிறது. காட்சிக்கு காட்சி அவர் மேல் மிகவும் பரிதாபம் ஏற்படுத்தும் வகையில் கதையின் போக்கு சென்று அதன் உச்சமாக ஆர்யாவின் கையால் கொல்லப்படும் காட்சி அமைகிறது.

இப்படத்தில் பிச்சைக்காரர்கள் வேடத்தில் உடல் மற்றும் மன ஊனமுற்ற உண்மையான பிச்சைக்காரர்களையே இயக்குநர் நடிக்க வைத்திருக்கிறார். ஒரு அமெச்சூர் நடிகரை விட இத்தகையவர்களை நடிக்க வைப்பது எத்தனை சிரமமென அதை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே புரியும். கடவுளர்கள் வேடமணிந்த அவலட்சண முகங்கள், தங்களுக்கு ஆபத்து வரும் பொழுது கடவுள் வேடமணிந்தவர்கள் தங்களை காத்துக்கொள்ளவே திக்கற்ற நிற்பது, கொடூர வில்லனை பழுத்த ஆத்திகவாதி போல் திருநீறு அணிந்து காண்பிப்பது, கோவிலில் பாடும் குழாய் ரேடியோவில் ரஹீம் என்ற பெயர் போன்றவற்றின் மூலம் இயக்குநர் பார்வையாளனுக்கு உணர்த்த நினைப்பது ஏராளம், ஏராளம். வடிவேலுவிடம் ஒசாமா பின்லேடனின் முகவரி கேட்டு நகைச்சுவை லூட்டி அடித்த நடிகர் மிகவும் கனமான முருகன் என்ற பாத்திரத்தில் நடித்துள்ளார். இனி இவர் நகைச்சுவையாக நடித்தால் எடுபடுமா என்பது சந்தேகம். அந்த அளவுக்கு நடிப்பில் கனம் அதிகம். அவர் தொழில் நேரத்தில் பூஜாவை கட்டாயமாக கடத்தி போவதும், ஓய்வு நேரத்தில் மது அருந்திய மயக்கத்தில் பிரியாணி கொடுத்து தங்கச்சி என்று கொஞ்சுவதும் இயல்பான நடிப்பு.

அம்மாடி...! எங்கேயிருந்து பிடித்தார்கள் இந்த வில்லனை..? வசனம், உடல் மொழி இரண்டாலும் அசத்தலாக நடித்து நம் வெறுப்பை கொள்ளையடிக்கிறார். சினிமாவுக்கு சற்றும் பொருந்தாத ஆனால், அந்த கதாபாத்திரத்திற்கு மிகப்பொருத்தமான தோற்றம் அவருடையது. தான் வைத்து சம்பாதிக்கும் பிச்சைக்காரர்களை கூட உருப்படி என்று அழைக்கும் பாங்கு இந்த தொழிலுக்குள் இருக்கும் பயங்கர நிழல் உலகத்தை அச்சத்துடன் பார்க்க வைக்கிறது. யாருக்கும் பயப்படாத, தன் தொழில் ஒன்றையே குறியாக கொண்ட மிக கொடூரமான வில்லன் பாத்திரம் அது. இவரின் தோற்றமே கொடூரமாக இருக்கிறதே என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கும் போதே அவர் மேல் மேலும் கொடூரம் சேர்க்கும் வகையில் வரும் அடுத்தடுத்த காட்சிகள் கொடூரத்தின் உச்சம்..!! வில்லனின் இருப்பிடமாக காட்டப்படும் அந்த பாதாள குகை காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு கோயிலாம். நம்புவதற்கு கஷ்டமாக இருக்கிறது.

இந்தப்படத்தில் இசை மிக முக்கிய இடத்தை பிடிக்கிறது. இப்படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா காட்சிகளை தன் பின்னணி இசையால் படம் முழுதும் தூக்கிப்பிடிக்கிறார். காட்சியில் தெரியும் அருவெருப்பு, ஆச்சரியம், அதிர்ச்சியை கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் பின்னணி இசையே தெரிவித்து விடுகிறது. படத்தில் இரண்டு பாடல்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளது. அதில் பிச்சைப்பாத்திரம் என்ற பாடல் மெலடி ரகம். ஆனால் காட்சிகள் அதன் சுகானுபவத்தை அழிக்கும் வல்லமை வாய்ந்தவை..! வசனம் ஜெயமோகன். எல்லா வகைகளிலும் விமர்சனங்களுக்கு பெயர் போனவர் இவர். தீவிர இந்துத்வாவாதியாக சித்தரிக்கப்படும் இவரின் வசனங்களில் கடவுளர்களின் மீதான விமர்சனமும், வெறுப்பும் முற்றிலும் முரண். அப்படிப்பட்ட முரணின் உச்சமாக கடவுளை விலைமகளின் மகனாக குறிப்பிடும் வசனத்தை சொல்லலாம். அகோரி என்ற கதாப்பாத்திரம் மூலம் பாலா சொல்ல வந்த கருத்தில் சற்றே தோல்வி தான் என்றாலும், பிச்சைக்காரர்களின் விளிம்பு நிலை வாழ்க்கையை படம் பிடித்து காட்டியதில் பெரும் வெற்றி பெற்றிருக்கிறார் பாலா..!

மூன்றாந்தர உணர்ச்சிகளின் வடிகாலாக போய்க்கொண்டிருக்கும் தமிழ் சினிமாக்களுக்கு மத்தியில் உண்மையை உள்ளபடி கசப்பினுள் இனிப்பு கூட திணிக்காமல் கொடுக்க துணியும் பாலாவை பாராட்டாமல் இருக்க முடியாது. தமிழ்த்திரையுலகின் சிறந்த படங்கள் என்ற பட்டியலில் இந்த படம் இடம் பெறாமல் போனாலும் சிறந்த இயக்குநர் என்ற பட்டியலில் பாலா நிச்சயம் இடம்பெறுவார், இடம்பெற வேண்டும்..! அது தான் ஒரு உண்மையான கலைஞனுக்கு நாம் செய்யும் பெரும் கௌரவம்..!!!

கருத்துகள் இல்லை:

Related Posts with Thumbnails