நேரம்:

வியாழன், 19 பிப்ரவரி, 2009

நீதித்துறை Vs காவல்துறை (கலவரக்களம் உயர்நீதி மன்றம்)

என்ன நடக்கிறது தமிழ் நாட்டில்..? நீதியை அளிக்கப்போகிறவர்கள் நடத்திய வன்முறை வெறியாட்டத்தையும், மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல் துறை அந்த வன்முறையை கைகட்டி வேடிக்கை பார்த்த அவலத்தையும் ஏற்கனவே சட்டக்கல்லூரி விவகாரத்தில் அனைவரும் அறிந்து தமிழகமே அவமானத்தில் தலைகுனிந்தது. அதன் இரணம் ஆறுவதற்குள் சென்னை உயர்நீதி மன்ற வளாகத்தில் காவல்துறையும், நீதித்துறையும் நாலாந்தர ரவுடிகளைப்போல் அடித்துக்கொண்டதை கண்டு மக்கள் இரத்தக்கண்ணீர் வடிக்கின்றனர். அடிப்படையில் எங்கு தவறு..? தனி மனித ஒழுக்கத்திலா..? கற்பித்த கல்வித்துறையிலா..? அனுபவங்களை ஏற்படுத்திய சமூக அமைப்பிலா..? அரசின் சட்டதிட்டங்களிலா..? இல்லையென்றால் இவை எல்லாவற்றிலுமா..? எது எப்படியோ, ஆக மொத்தத்தில் மக்களுக்கு நீதித்துறையின் மேலும், காவல்துறையின் மேலும் இருக்கும் கொஞ்ச நஞ்ச நம்பிக்கை கரைந்து கொண்டிருக்கிறது. இந்த நம்பிக்கையின்மை மக்களை பயங்கரவாதம், தீவிரவாதம் பக்கம் கொண்டு சென்றுவிடும் பெரும் அபாயம் இருக்கிறது.

நீதியும், காவலும் கை கோர்த்து ஆட்சி புரிந்தால் தான் நிம்மதி நிலைநாட்டப்படும் என்ற நிலையில் இவை இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரெதிர் திசையில் நின்று மல்லுக்கு நின்ற காட்சி கண்டு ஒரு மனிதனாய், தமிழனாய், இந்தியனாய் வெட்கித்தலை குனிகின்றேன். பாமர மக்கள் பண, பதவி அதிகார வர்க்கங்களால் சூழ்ச்சிக்கிரையாக்கப்படும் பொழுது முன்னின்று தடுக்க வேண்டிய நீதியாளர்களான வழக்கறிஞர்கள் ஒரு பொறுப்பற்ற, அறிவற்ற குடிமகனைப்போல் கல்வீச்சில், தாக்குதல்களில் ஈடுபட்டதும், யார் மேலோ உள்ள கோபத்தில் மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் அமைப்பையும், அதன் சொத்துக்களையும் சூறையாடியது கேவலத்திலும் கேவலம். அவர்கள் உண்மையிலேயே நீதியின் மேல் சிறிதளவேணும் நம்பிக்கை கொண்டவர்கள் என்றால் கருப்புடையை அணிவதற்கு முன் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

நீதியின் இலட்சணம் இவ்வளவு என்றால் காவல் துறையோ காவாலிகளையும் மிஞ்சிவிட்டது. சமூகத்தில் கலவரம், வன்முறை ஏற்பட்டால் அதை தடுத்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய காவல் துறை வன்முறையை முன்னின்று நடத்தியது சமூக அரங்கில் தமிழகத்திற்கு ஏற்பட்ட பெரும் அவமானம். வன்முறைக்கு வன்முறை தான் தீர்வென்றால் பிறகு சட்டம் எதற்கு..? காவல் துறை, நீதித்துறை எதற்கு..? ஒவ்வொருவருக்குள்ளும் உறங்கி கொண்டிருக்கும் மிருகத்தை வேட்டையாட அனுப்ப மக்களின் வரிப்பணத்தின் சொத்துக்கள் தான் இலக்காக வேண்டுமா..? வன்முறை எதற்கும் தீர்வாக முடியாது. இன்னும் சொல்லப்போனால் வன்முறை தான் எல்லா கலவரங்களுக்கும், அழிவிற்கும் அடிப்படையாய் அமைகிறது.

பத்திரிக்கை சுதந்திரத்திற்கும் இந்த கலவரத்தில் பெரும் அடி விழுந்திருக்கிறது. இவன் தான் குற்றவாளி என்று சொல்ல முடியாத அளவுக்கு சீருடை அணிந்த காவலர்கள்(?!!) தங்கள் பணியை செவ்வனே செய்திருக்கிறார்கள். மக்களுக்காக தன் இன்னுயிரை நீத்த பெருமை மிக்க அதிகாரிகளும் இருந்த, இருக்கும் காவல் துறையில் இது போன்றவர்களால் அந்த துறையின் மதிப்பே அழிகிறது. போகிற போக்கில் எதிர்ப்படுபவர்களையும், வாகனங்களையும் மிருகத்தனமாய் சேதப்படுத்தும் காவலர்கள் அவர்களால் சேதப்பட்டது மனிதர்களோ, வாகனங்களோ இல்லை, தமிழகத்தின் மானம் தான் என்பதை அறிவார்களா..? இவர்களால் ஏற்பட்ட தலைகுனிவை காவல் துறை என்ன செய்து நிமிர்த்த போகிறது..??

சரி, இந்த கலவரம் அடிப்படையில் எதற்காக என்று அறிந்தோமானால் அதை விட கேவலம் வேறு ஏதுமில்லை. தமிழகத்தில் குழப்பம் ஏற்படுத்தி அதன் மூலம் குளிர் காய்வதை மட்டுமே காலங்காலமாய் செய்து வரும் சுப்பிரமணிய சாமி என்ற உப்புமா அரசியல்வா(வியா)தியால் தான் இத்தனை கலவரம், அவமானம், நாசம் எல்லாம். மக்கள் நலனில் கிஞ்சித்தும் அக்கறை இல்லாத இந்த அரைவேக்காட்டை கண்டித்து வழக்கறிஞர்கள் அழுகிய முட்டையால் தாக்கப்போக (அன்று முட்டைகள் வீணாய் போனது என்பது என் கருத்து) அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய காவல் துறையினர் வந்ததால் ஏற்பட்ட பிரச்சினை தான் இதற்கு ஆணிவேர். ஜனநாயகத்தில் எதிர்ப்பு, போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்றவை புதிதல்ல. ஆனால் அவற்றுக்கு பெருமைப்படும் வகையிலான காரணம் ஒன்றேனும் அதற்கு அடிப்படையாக இருக்க வேண்டும். ஆனால் இந்த கலவரத்திற்கு அடிப்படையாக வெறும் இனவாத, மதவாத அரசியல் செய்து பிழைத்து வரும் அற்ப சு.சாமிக்காக என்பது பெருத்த அவமானம். இந்தியாவின் தெளிவு, நேர்மையற்ற அரசியலமைப்புச்சட்டம், சுயநல அரசியல் வாதிகள், அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்கள், ஜாதி, மதம், இன வேற்றுமைகளால் சிதறிக்கிடக்கும் குடிமக்கள் உள்ளிட்ட அனைவருமே நடந்த இந்த கரும்புள்ளிக்கு காரணங்கள்..!!!!

கருத்துகள் இல்லை:

Related Posts with Thumbnails