நேரம்:

புதன், 25 பிப்ரவரி, 2009

ஆஸ்கார் நாயகன் அல்லாஹ் ரக்கா (ஏ.ஆர்.) ரஹ்மான்..!

இந்திய திரையுலகின் கனவான ஆஸ்கார் விருது நனவாகியிருக்கிறது. ஸ்லம்டாக் மில்லியனர் என்ற இந்தியப்படத்திற்கு 8 ஆஸ்கார் விருதுகள் கிடைத்துள்ளன. இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 2 விருதுகளை தட்டிச்சென்றுள்ளார். ஏ. ஆர். ரஹ்மானுக்கும், விருது வென்ற மற்ற கலைஞர்களுக்கும் என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்..!

ரஹ்மானின் சாதனையை புகழும் வகையில் அவருடைய சுருக்கமான சுய சரிதம் தமிழில் கீழே:

கேரளத்தில் மெல்லிசைக்குழுகக்ளுக்கு 'கானமேளா' குழுக்கள் என்று பெயர். மலையாள மெல்லிசைக்குழுக்களுக்குப் பொதுவான தனிச்சிறப்பு உண்டு. அவர்கள் பாடுவதில் கணிசமான பாடல்கள் இந்தி, தமிழ் பாடல்களாகவும் பழைய மலையாள பாடல்களாகவும் இருக்கும். மலையாளத்தின் அழியாப்புகழ் கொண்ட சில பழைய பாடல்கள் காலம் காலமாக, ஏறத்தாழ எல்லா மேடைகளிலும் தொடர்ந்து பாடப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்று 'பழசி ராஜா' என்ற படத்தில் யேசுதாஸ் பாடிய 'சொட்ட முதல் சுடல வரெ' என்ற பாடல். கடந்த நாற்பதுவருடங்களாக பாடப்படும் இப்பாடல், ஏசுதாஸின் பெரும் புகழ்பெற்ற தொடக்ககால பாடல்களில் ஒன்று. ஆழ்ந்த சோகம் கொண்ட மெல்லிசை மெட்டும் நுட்பமான வயலின் இசைக்கோலங்களும் கொண்ட ஒரூ அரிய படைப்பு இது.

"அடுத்து வருவது, மறைந்த திரு. ஆர்.கெ.சேகர் இசையமைத்த 'சொட்ட முதல் சுடல வரெ' என்ற அர்புதமான தேசபக்திப்பாடல்" என்ற முன்னுரையுடன் தான் இப்பாடல் மேடைகளில் ஒலிக்கும். இது திரு. சேகர் இசையமைத்த முதல் திரைப்படப்பாடல் ஆகும். 1964ல் தான் இது வெளிவந்தது. அது ஏ.ஆர்.ரஹ்மான் பிறப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு!

கிறிஸ்துமஸ் காலங்களில் தேவாலயக்குழுக்கள் கேரளத்தில் பக்திப்பாடல்களைப் பாடியபடி வீடு வீடாகச் செல்லும் வழக்கம் உண்டு. இப்பாடல்களுக்கு கிறித்தவ கோரல் சங்கீத மரபுடன் எந்த தொடர்பும் இல்லை. அக்காலகட்டத்து திரைப்படமெட்டுக்களின் இசையில் அமைக்கப்பட்ட பக்திப்பாடல்களாக அவை இருக்கும். எழுபதுகளின் தொடக்கத்தில் ஃபாதர் ஊநுகல்லில் என்ற கத்தோலிக்கப் பாதிரியார் இப்படிப்பட்ட பாடல்களுக்கு வரிகளை எழுதுவதில் புகழ்பெற்றிருந்தார். அவர் இத்தகைய தனது சில பாடல்களுக்கு புதிய மெட்டுக்களைப் போட்டு ஒரு இசைத்தட்டை வெளியிட்டார்.

அப்போது பிரபலமாக இருந்த 'வைக்கத்து அஷ்டமி நாளில்' என்ற திபைப்பாடலின் மெட்டில் அவர் எழுதிய பாடல் 'பேத்லகேமில் ராவில்'. தட்சிணாமூர்த்தி இசையமைத்த கர்நாடக சங்கீத மெட்டில் அமைந்த அப்பாடல், அந்த இசைத்தட்டில் மேலையிசைப்பாணியிலான கிறித்தவ இசைமெட்டாக மறு ஆக்கம் செய்திருந்தார்கள். வாணி ஜெயராமின் குரலில் வெளிவந்த அந்த பாடல் கேரள கிறித்தவர்கள் மத்தியில் பெரும் புகழ் பெற்றது. இன்றும் அது மலையாள கிறிஸ்துமஸ் பாடல்களில் ஒரு கிளாசிக். அந்த இசைத்தட்டின் தொடக்க உரையில் அவ்விசையை அமைத்த ஆர்.கெ.சேகரை பாதிரியார் எடுத்துச்சொல்லி புகழ்ந்திருந்தார்.

சமீபத்தில் நான் புகழ்பெற்ற மலையாள இயக்குநர் ஒருவருடன் காரில் சென்று கொண்டிருந்தேன். அவர் பழைய மலையாளப் பாடல்களில் ஒரு நிபுணர் என்று தன்னைக் கருதிக் கொள்பவர். மலையாளப் பாடல்களின் ஆத்மாவை உணர்ந்து இசையமைக்க மலையாளியால் மட்டுமே முடியும் என்ற கோட்பாடு உடையவர். அவரது ஆதர்ச இசையமைப்பாளார் தேவராஜன் மாஸ்டர். காரின் ஒலிக்கருவியில் சுசீலாவின் குரலில் ஒலித்த 'பல்லவி மாத்ரம் பறஞ்ஞு தந்நு' [படம்: பட்டாபிஷேகம்-1974] என்ற பாடலை அவர் ரசித்து, கூடவே பாடியபடி வந்தார். பாடல் முடிந்ததும் உணர்ச்சிகரமாக, 'மாஸ்டரைப்போல மலையாளத்தின் ஆழமறிந்து இசையமைக்க யார் இருக்கிறார்கள்?' என்றார். உரிய மரியாதையுடன் நான் சொன்னேன், அது தமிழரான ஆர்.கெ.சேகர் இசை அமைத்த பாடல் என்று!

மலையாள திரை இசையில் எக்காலத்திலும் வாழும் ஆர்.கெ.சேகர் அங்கு 22 படங்களுக்கு மட்டும் தான் இசையமைத்திருக்கிறார். ஆனால் இசைகோர்ப்பாளராகவும் இசை நிகழ்த்துனராகவும் நூறுக்கும் மேற்பட்ட படங்களுக்காக பணியாற்றியிருக்கிறார். அவர் பல வெற்றிப்பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் என்பதுடன் பல புகழ்பெற்ற இசையமைப்பாளர்களின் வெற்றிப் பாடல்களுக்குப் பின்னால் இருந்த திறமை உண்மையில் அவருடையதுதான் என்றும் சொல்லப்படுகிறது. மேலையிசையிலும் இந்திய இசைமரபிலும் ஆழ்ந்த ஞானம் கொண்டிருந்த ஆர்.கெ.சேகர் தேவராஜன், தட்சிணாமூர்த்தி, ஏ.டி.உம்மர், எம்.கெ.அர்ஜுனன் போன்றவர்களின் இசைத்தொகுப்பாளாராக பணியாற்றினார். சலில் சௌதுரி செம்மீன் போன்ற படங்களுக்கு இசையமைத்தபோது ஆர்.கெ.சேகர் அவரது இசைநடத்துநராக பணியாற்றினார். ஆரம்பநாட்களில் சலில் சௌதுரி, தேவராஜன் ஆகியோரின் பாடல்களுக்கு இளையராஜா காம்போ ஆர்கனும் கித்தாரும் வாசித்தபோது, ஆர்.கெ.சேகர்தான் அவருக்கு இசைநடத்துநராக இருந்தார்.

சென்னைக்கு அருகே கிழான்னூர் என்ற ஊரில் புகழ்பெற்ற ஹரிகதைக் கலைஞராக விளங்கிய ராஜகோபால பாகவதருக்கு மகனாகப்பிறந்த ஆர்.கெ சேகரின் முழுப்பெயர் ராஜகோபால குலசேகர். அவர் தமிழக அரசில் ஒரு மின்சாரவேலைக்காரராக தன் வாழ்க்கையைத் தொடங்கினார். ஆனால் விரைவிலேயே மலையாளத் திரையிசையில் உதவியாளராக நுழைந்தார். பெரும்பாலும் இசைமரபுகளை சுயமாகவே கற்றுத்தேர்ந்த ஆர்.கெ.சேகர் கர்நாடக இசையின் நுட்பங்களை தட்சிணாமூர்த்தியிடமிருந்து அறிந்துகொண்டார். அவருக்கு ஹார்மோனியத்தில் அபூர்வமான தேர்ச்சி இருந்தது. அவரது இசைக்கோர்ப்புத்திறனை உணர்ந்த எஸ்.டி.பர்மன் போன்றவர்கள் இந்திப்படங்களில் பணியாற்ற அவரை அழைத்தார்.

தேவராஜன், தட்சிணாமூர்த்தி ஆகியோரிடம் பல வருடங்கள் பணியாற்றியபின் 'பழசிராஜா'வில் பத்து பாடல்களுக்கு இசையமைத்தபடி
சேகர் இசையமைப்பாளராக மலையாளத்தில் நுழைந்தார். 'சொட்டமுதல்' பாடலைத்தவிர ஏ.எம்.ராஜாவும் எஸ்.ஜானகியும் பாடிய சோகமெட்டான 'சிறகற்று வீணொரு கொச்சு தும்பி', சுசீலா பாடிய புகழ்பெற்ற தாலாட்டான 'முத்தே வாவாவோ' ஆகிய பாடல்கள் அதில் புகழ்பெற்றன. 'சாயிப்பே சாயிப்பே அஸலாமு அலைக்கும்' என்ற பாடல் ஆர்.கெ.சேகர் பிற்காலத்தில் அமைத்த ஏராளமான மாப்பிளைப்பாட்டுகளுக்கு முன்னோடியாக அமைந்தது. அதேவருடம் 'அயிஷா' என்ற படத்துக்கு இசையமைத்தார் ஆர்.கெ.சேகர். அதில் உள்ள 'முத்தாணே என்றே முத்தாணே' என்ற பாடல் இன்றும் புகழ்பெற்றது. 'அயிஷா'வில் ஆர்.கெ.சேகர்ரின் பிரபலமான பல மாப்பிளைப்பாட்டுகள் இருந்தன. அதில் பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடிய 'யாத்ரக்காரா போவுக போவுக!' என்ற பாடல் ஸ்ரீனிவாஸின் மிகச்சிறந்த பாடல்களின் ஒன்று.

ஆனால் சேகர் தன் அடுத்த படத்துக்காக ஏழுவருடம் காத்திருக்க வேண்டியிருந்தது. இக்காலகட்டத்தில் அவர் மிகவும் விரும்பப்பட்ட இசை நடத்துநராகவும் இசைக்கோர்ப்பாளராகவும் இருந்தார். செம்மீனுக்குப் பின்னர் அவருக்கு நேரமே இருக்கவில்லை, அவரும் வேலைவெறியராக இருந்தார். தனக்கு நேரமில்லாமல் போனதனால் ஆர்.கெ.சேகர், பிற்காலத்தில் புகழ்பெற்ற இசையமைபபளாரான ஷ்யாம் ஐ சலில் சௌதுரிக்கு நடத்துநராக அறிமுகம் செய்துவைத்தார். அதைத் தொடர்ந்து சலில்தாவின் ஏறத்தாழ எல்லாப்படங்களுக்கும் இசை நடத்துநராக மாறிய ஷ்யாமும் ஒரு தமிழர். மலையாளத்தில் தேவராஜனுக்குப் பின்னர் அதிகமான படங்களுக்கு இசையமைத்தவர் அவரே. முந்நூறுக்கு மேல் படங்கள்! ஆர்.கெ.சேகர் தான் ஷ்யாமுக்கு திரை இசைத்துறையில் உதவிகள் செய்து வழிகாட்டியவர்.

தன் 31 வயதில் பதினேழுவயதான கஸ்தூரியை ஆர்.கெ.சேகர் மணம்புரிந்துகொண்டார். திருப்பதியில் அவர்களின் திருமணம் நடந்தது, சென்னையில் வாழ்ந்தனர். முதல் குழந்தை காஞ்சனா. அதன் பின் அவரது ஒரே மகன் திலீப். பாலா, ரேகா ஆகியோர் மற்ற இரு குழந்தைகள்.

1971ல் வந்த இரு மலையாளப்படங்கள் சேகரை இசையமைப்பாளராக மீண்டும் நிலைநாட்டின. பாடலாசிரியரும் திரைப்பட எழுத்தாளருமான ஸ்ரீகுமாரன் தம்பியுடன் இணைந்தது அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து பன்னிரண்டு படங்களில் அவர்கள் இணைந்து பாடல்களை உருவாக்கினர். "சேகர் மீண்டும் இசையமைப்பதற்கு தேவையான தன்னம்பிக்கையை அளிப்பதில் எனக்கு ஒரு சிறு பங்கு இருந்திருக்கலாம்" என்றார் பின்னர் ஸ்ரீகுமாரன் தம்பி. 1971ல் வந்த அவர்களின் முதல் படம் சுமங்கலி 'உஷஸோ சந்த்யயோ' 'புளக முந்திரி' 'மான் மிழிகளிடஞ்ஞு' போன்ற முக்கியமான பாடல்களைக் கொண்டிருந்தன. 'யோகமுள்ளவள்' படத்தில் ஆர்.கெ.சேகர் பாலமுரளிகிருஷ்ணாவையும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தையும் மலையாள திரையுலகுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.1972ல் வந்த 'மிஸ் மேரி' என்ற படத்தில்தான் இன்றும் கிறித்தவ மாதா பக்திப்பாடல்களில் முக்கியமானதாக கருதப்படும் 'நீயென்றே வெளிச்சம்' என்றபாடலை பி.சுசீலா படியிருந்தார்.

இசைக்கருவிகளின் புதிய ஒலிகளை அடையாளம் காணும் தனித்துவம் மிக்க கவனம் ஆர்.கெ.சேகருக்கு இருந்தது. இசைக்கருவிகளின் புதிய போக்குகளை அறிய அடிக்கடி சிங்கப்பூர் செல்வது அவரது வழக்கம். தென்னிந்திய இசையுலகுக்கு ஆரம்பகால சிந்தஸைஸர்களான யூனி வோக்ஸ், க்ளாவியோலின் முதலியவற்றை முதன் முதலாக அறிமுகம் செய்தார். அவை அப்போது சர்வதேச இசைக்குழுக்களிடம் மட்டுமே இருந்தன. அதேபோல ஆர்.கெ.சேகர் மலையாளத்தில் ஏராளமான பாடகர்களை அறிமுகம்செய்திருக்கிறார். மலையாளப்பாடகர்களில் மிகுந்த தனித்தன்மையுள்ள குரலும் உணர்ச்சிகரமான பாடுமுறையும் உடையவரான பிரம்மானந்தன் அதிக வாய்ப்புகள் கிடைக்காமல் போன ஒருவர். ஆர்.கெ.சேகர் பிரம்மானந்தனுக்கு அவரது இசைவாழ்க்கையிலேயே முக்கியமான 'தாமரப்பூ நாணிச்சு' என்ற பாடலை அளித்தார் [படம்: டாக்ஸி கார்]. புதிய குரல்களை அறிமுகம்செய்ய தயக்கம் நிலவிய அக்காலகட்டத்தில் மிக அதிகமான புதிய பாடகர்களை அறிமுகம்செய்தவர் அவர். சதானந்தன், சுதா வர்மா, கோபாலகிருஷ்ணன், சோமன், பொன்குந்நம் ரவி, ஜயலட்சுமி, கஸ்தூரி சங்கர், மனோகரன், அம்பிளி, ஜெயஸ்ரீ என பலரை சொல்லலாம். இவர்களில் பெரும்பாலானவர்களால் பிற்பாடு புகழ்பெற முடியவில்லை என்றாலும், புதிய பாடகர்களையும் இசைக்கலைஞர்கலையும் அறிமுகம் செய்யவும் அவருக்கு உதவவும் முயன்றவர் ஆர்.கெ.சேகர்.

ஆர்.கெ.சேகர் மலையாளத்தில் ஏறத்தாழ 110 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். அவற்றில் பல பாடல்கள் மலையாளத்தின் அழியாப்புகழுள்ள மெல்லிசை மெட்டுகளாக உள்ளன. 'ஆஷாட மாசம்' [வாணிஜெயராம்], 'பாதிராப்பூவொந்நு கண் துறக்கான்' [கமுகற புருஷோத்தமன் / பிசுசீலா], 'இப்போழோ சுகம் அப்போழோ' [யேசுதாஸ்], 'மணிவர்ணன் இல்லாத்த விருந்தாவனம்' [ ஜெயச்சந்திரன் / பி.சுசீலா],'ராகங்ஙள் ஃபாவங்ஙள்' [யேசுதாஸ் / பி சுசீலா], 'சுமங்கலாதிர ராத்ரி' [யேசுதாஸ்], 'வெள்ளித்தேன் கிண்ணம்' [ஜெயச்சந்திரன்], 'ஜென்மபந்தங்ஙள்' [யேசுதாஸ்] போன்றவை நினைவில் உடனடியாக வரும் பாடல்கள்.1976ல் வந்த 'சோட்டானிக்கர அம்மா' அவரது கடைசிப்படம்.

இசைவெறிகொண்ட, வேலைப்பித்தனாகிய சேகர் இரவுபகலாக பாடல்பயிற்சி, இசைக்கோர்ப்பு, பாடல் பதிவு என உணவும் உறக்கமும் இல்லாமல் பணியாற்றினார். பலநாட்கள் வெறும் டீயும் உலர்ந்த ரொட்டியும் மட்டுமே உணவாகக் கொண்டு ஒலிப்பதிவுக்கூடங்களிலேயே அவ்வப்போது கண்ணயர்ந்து வேலைசெய்தார். விளைவாக அவருக்கு கடுமையான வயிற்று நோய் ஒன்று வந்தது. ஒலிப்பதிவுக்கூடங்களிலேயே வாழ்ந்த ஆர்.கெ.சேகர் நோய் முற்றி பல்வேறு மருத்துவமனைகளில் படுத்த படுக்கையாக சிகிழ்ச்சை பெற்றார். ஏதுவும் பயனளிக்கவில்லை. அவரது உதவியாளர்கள் மருத்துவமனைகளில் சென்று நின்று அவரிடம் இசைக்குறிப்புகளை எழுதி வாங்கினர். 1977ல் தன் நாற்பத்திரண்டாம் வயதில் ஆர்.கெ.சேகர் மறைந்தார். 'சோட்டானிக்கர அம்மா' படத்தில் அவர் அமைத்த 'மனசு மனசின்றே காதில்' என்ற பாடல் கேரளத்தை இன்றும் மயக்கிக் கொண்டிருப்பது. அந்த படம் வெளியான அதே நாளில் அவர் மறைந்தார். கேரளத் திரையிசையின் புதிய நட்சத்திரமாக உயர்ந்த சேகருக்கு அவரது இசையுலக எதிரிகள் சூனியம் வைத்ததாக பேச்சு எழுந்தது! அவரது மகன் திலீபுக்கு அப்போது பதினொரு வயது.

1966 ஜனவரி ஆறாம் தேதி பிறந்த திலீப் இன்று ஏ.ஆர்.ரஹ்மான் என்ற பேரில் உலகமெங்கும் புகழ்பெற்றிருக்கிறார். தந்தையுடன் பாடல்பதிவுக்கூடங்களுக்குச் சென்றதுதான் ரஹ்மானின் முக்கியமான இளம்பருவ நினைவாக உள்ளது. ''எனக்கு ஊக்கமூட்டும் நினைவாக இருப்பது என் அப்பாவின் நினைவுகள்தான். எங்கள் வீட்டு வராந்தாவில் அன்றைய புகழ்பெற்ற இயக்குநர்கள் வந்து காத்திருப்பதை நான் கண்டிருக்கிறேன். ஒரேசமயம் எட்டு ஒன்பது படங்களுக்கு அவர் வேலைசெய்வார். ஒன்றுக்கு இசையமைப்பார், ஒன்றுக்கு இசை கோர்ப்பு செய்து கொடுப்பார், ஒன்றுக்கு இசை நடத்துவார். மிதமிஞ்சிய உழைப்பால்தான் அவர் உயிர்துறந்தார் என்று நான் நினைக்கிறேன். அவர் உதவிசெய்தவர்கள் பலர் இப்போதும் என்னிடம் சொல்வதுண்டு, அவர் எப்படி அவர்களுக்கு உதவிசெய்தார், எப்படி வாய்ப்புகள் வழங்கினார் என்றெல்லாம். அது என்னை மிகவும் பாதித்தது...''

இன்னொரு தருணத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் சொன்னார் ''என் அம்மா அப்பாவைப்பற்றி நிறையவே சொல்லியிருக்கிறார். அவற்றைக் கேட்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கும். அப்பா இசையில் மிகவும் தேர்ச்சியுள்ளவராக கருதபப்ட்டார். அவரது பழைய பாடல்களை நான் இப்போதும் கேட்கிறேன். அவரது மகத்தான இசைஞானத்தின் ஒரு சிறு பகுதி தான் இறையருளால் எனக்கு வந்திருக்கிறது என்று நான் நினைக்கிறேன்''.

இளம் வயதிலேயே திலீப் இசையின் ஆரம்ப கட்ட பயிற்சியை தந்தையிடமிருந்து கற்றார். வீடெங்கும் இசைக்கருவியாக இருந்த அச்சூழலில் அவரது மேதமை தன் வெளிப்பாடை கண்டடைந்திருக்க வேண்டும். நான்குவயதான திலீப் ஹார்மோனியத்தில் ஒரு பாடலை வாசிக்கக் கேட்ட சுதர்சனம் மாஸ்டர் அதன் கட்டைகளை ஒரு துணியால் ம¨ந்த்தாராம். குழந்தை தன்னம்பிக்கையுடன் அதே மெட்டை மீண்டும் வாசித்துக் காண்பித்ததாம். மகனின் அபூர்வமான திறமையைக் கண்ட சேகர் சொன்னாராம். ''என் வாழ்நாளெல்லாம் நான் இரண்டாமிடத்திலேயே இருந்துவிட்டேன். என் மகன் வழியாக ஒருநாள் நான் வெற்றி பெறுவேன் ''என்று.

முறையாக இசை பயின்றாலும்கூட திலீப் இசைத்துறைக்கு வர விரும்பவில்லை. ஒரு மின்பொறியாளராக வரவேண்டுமென்பதே அவரது விருப்பமாக இருந்தது. ''அப்போது நான் இசைமீது வெறியோடு இருக்கவில்லை. எனக்கு தொழில்நுட்பத்திலேயே ஆர்வமிருந்தது. குழந்தையாக இருந்தபோது எனக்கு சோறுபோடும் தொழிலாக மட்டுமே இசையை நினைத்தேன். அது என் அப்பாவின் அன்றாட வேலை. எனக்கு அதில் தனியான ஆர்வமேதும் இருக்கவில்லை'' அவர் சொன்னார்.

திலீபின் இசையார்வம் அவரது தந்தை வாங்கிவைத்திருந்த யூனி வோக்ஸ், க்ளாவியோலின் போன்ற மின்னணு இசை கருவிகளைச் சார்ந்து வளர்ந்தது. அக்காலங்களில் மின்னணு இசைக்கருவிகள் இந்திய இசையில் மிகமிகக் குறைவு. ''என்னால் அந்த கருவிகளில் இருந்து கண்ணை விலக்க முடிந்ததில்லை. தடைசெய்யபப்ட்ட அபூர்வமான விளையாட்டுப்பொருட்களாக அவை எனக்குத் தோன்றின'' திலீப் தன் நாளின் பெரும்பகுதியை அக்கருவிகளில் விளையாடுவதில் செலவழித்தார், அதுவே அவரது எதிர்காலத்தை வடிவமைத்தது.

இளம்வயதில் நோயுற்ற தந்தையுடன் மருத்துவமனைகள் தோறும் அலைந்தார் திலீப். அவரது அகால மரணம் திலீபின் உள்ளத்தை ஆழமாக பாதித்தது. பன்னிரண்டுவயதிலேயே தன் குடும்பத்தை காப்பாற்றவேண்டிய பொறுப்பு திலீபுக்கு வந்து சேர்ந்தது. சேகர் இறந்தபோது அவரது சொற்ப சம்பாத்தியத்தை மருத்துவமனைகளில் செலவழித்துவிட்டிருந்தமையால் குடும்பம் அவர் வாங்கி வைத்திருந்த மின் இசைக்கருவிகளை வாடகைக்கு விட்டு வாழ நேர்ந்தது. அக்கருவிகளுடன் திலீபும் சென்றார், தேவையானபோது வாசித்தார்.

திலீப் இளவயதில் கடுமையாக உழைத்து கஷ்டப்பட்டிருக்கிறார். பதிமூன்று வயது முதல் பல பயில்முறை மெல்லிசைக்குழுக்களுக்கு அவர் பின்னணி இசைக்கருவியாளராக வேலை செய்தார். இக்காலகட்டம் திலீபுக்கு சிறந்த பயிற்சிக்களமாக அமைந்தது. பின்னர் ரூட்ஸ், மேஜிக், நெமிஸிஸ் அவென்யூ போன்ற சென்னையின் மேல் இசைக்குழுக்களிலும் பங்கு பெற்றுள்ளார். ரஞ்சித் பரோட், சிவமணி ஆகியோருடன் சேர்ந்து நிகழ்ச்சிகளில் வாசித்தார். இளையராஜாவின் மேடை இசைக்குழுவில் அவர் கீபோர்ட் வாசித்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் குழுவிலும் வாசித்திருக்கிறார். சாகீர் ஹுசைன், குன்னக்குடி வைத்தியநாதன் ஆகியோருடன் அவர்களுடைய உலகப்பயணங்களில் பங்கெடுத்தார். அவர் இசையிலேயே மூழ்கி அதையே தன் வாழ்க்கையின் ஒரே இன்பமாகக் கொள்ள ஆரம்பித்தார். விளைவாக அவருக்கு கல்வியை தொடர முடியாமல் போயிற்று. பல பள்ளிகள் மாறியபின் பள்ளி இறுதியிலேயே அவர் படிப்பை விட்டுவிட்டார். அவரது அன்னை அவர் தன் தந்தையின் இசைத்துறையிலேயே செயல்படுவதை ஊக்கப்படுத்தினார். இளையராஜாவின் அன்றைய முன்னணி கீபோர்ட் நிபுணரான விஜய் மானுவேலின் கீழ் பல படங்களில் பணியாற்றிய திலீப் 'புன்னகைமன்னன்' போன்ற படங்களில் இசைக் கோர்ப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். அப்பாடல்களில் கருவியிசையில் ஏ.ஆர்.ரஹ்மானின் தனித்தன்மையை இப்போது நாம் அடையாளம் காண முடியும்.

திலீபுக்கு தனியாகப்பெயர் வாங்கி தந்தது 1987ல் ஆல்வின் டிரெண்டி கைக்கடிகாரங்களுக்காக அவர் விளம்பரப்பாடலை அமைக்க கிடைத்த வாய்ப்புதான். இசைநிகழ்ச்சிகளில் வாசிப்பதை விட்டுவிட்டு முழுநேர விளம்பர இசையமைப்பாளாராக ஆனார். ஐந்து வருடங்களில் முந்நூறு விளம்பரங்களுக்கு இசையை அமைத்திருக்கிறார். அவரது விளம்பர இசைக்கோலங்கள் பிரபலமானவை. பாரீஸ், லியோ காபி, பூஸ்ட், டைடன், பிரீமியர் பிரஷர் குக்கர், எம்.ஆர்.ஃப் டயர்ஸ், தி ஹிண்டு, ஏஷியன் பெயிண்ட்ஸ் ஆகியவற்றுக்கான அவரது மெட்டுகள் இன்றும் நினைக்கப்படுபவை. ஏஷியானெட் தொலைக்காட்சி போன்றவற்றின் தலைப்பு இசையையும் அவரே அமைத்தார். ''விளம்பரப்பாடல்களுக்கு இசையமைப்பது இசையில் கச்சிதத்தன்மையைப்பற்றிய உணர்வை உருவாக்கியது. நமக்கு சில நொடிகளே தரப்படுகின்றன. அதற்குள் நாம் ஒரு மனநிலையை உருவாக்கி ஒரு செய்தியையும் சொல்லியாகவேண்டும். விளம்பர இசையே எனக்கு இசையின் கட்டுப்பாட்டை கற்பித்தது'' பின்னர் அவர் சொன்னார். இக்காலகட்டத்தில் 'தீன் இசை மாலை' என்ற பேரில் அவர் அமைத்த இஸ்லாமிய பக்திப்பாடல் தொகுதியே அவரது முதல் இசைவெளியீடாகும்.

துயரம் மிகுந்த நாட்களில் இஸ்லாமிய இறை நம்பிக்கையில் திலீப் ஆறுதலை கண்டடைந்தார். 1988 ல் அவரது சகோதரி அவர்களின் தந்தைக்கு வந்த அதே நோயில் விழுந்து மரணப்படுக்கையில் இருந்தபோது எல்லா முயற்சிகளும் தோற்ற நிலையில் ஷேக் அப்துல் காதிர் ஜிலானி என்ற ஒரு முஸ்லீம் சூஃபி பீர் அவளைக் காப்பாற்றியதாகச் சொல்லப்படுகிறது. அந்நிகழ்ச்சிக்குப் பின் மொத்தக் குடும்பமே இஸ்லாம் மதத்துக்கு மாறியது. முதலில் அப்துல் ரஹ்மான் என்று பெயர் போடப்பட்ட திலீப் பின்னர் அல்லா ரக்கா ரஹ்மான் என அதை மாற்றிக் கொண்டார். அதன் சுருக்கமே ஏ.ஆர்.ரஹ்மான்.

மதமாற்றம் பற்றி கேட்கப்பட்டபோது ரஹ்மான் சொன்னார், "என் அப்பா நோயில் வதைபடுவதை நான் கண்டேன். ஏழெட்டு மருத்துவமனைகளில் அவர் சிகிழ்ச்சை பெற்றார். வேலூர் சி எம் சி மருத்துவமனையிலும் பின்னர் விஜயா மருத்துவமனையிலும் அவர் கிடந்தார். அவருக்கு தாங்கமுடியாத வலி இருந்தது. மருத்துவ மனையில் அவரது படுக்கையருகே கிறித்தவ பாதிரிகள் அவருக்காக ஜெபிப்பதை நான் கண்டிருக்கிறேன். அவருக்காக வீட்டில் தொடர்ந்து பூஜைகள் செய்யப்பட்டன. ஆனால் அப்பா இறந்தார். அதன் பின் சற்று காலம் கடவுளே இல்லை என்று நான் நினைத்திருந்தேன். ஆனால் எனக்குள் ஓர் அமைதியின்மை இருந்துகொண்டே இருந்தது. நம் வாழ்க்கையை நிர்வகிக்கும் ஒரு அடிப்படை வல்லமை இல்லாமல் வாழ்க்கையே சாத்தியமில்லை என்று பின்னர் உணர்ந்தேன். அந்த உண்மையை இஸ்லாமில் கண்டுகொண்டேன். பீர் சாகிபின் உபதேசத்துக்கு ஏற்ப தர்காக்களுக்கு என் அம்மாவுடன் சென்றுவந்தேன். நாங்கள் இஸ்லாமிய நம்பிக்கைக்கு உறுதியுள்ளவர்கள் ஆனோம்.'' அவரது அன்னை கரீமா பேகம் ஆக மாறினார். ரஹ்மானின் சகோதரிகளும் மதம் மாறி ரைஹானா, தலத், இஸ்ரத் ஆக மாறினார்கள். "இஸ்லாமும் சூஃபி நம்பிக்கையும் எனக்கு அமைதியையும் மன உறுதியையும் அளித்தன. திலீபாக இருந்த எனக்கு பலவிதமான தாழ்வுணர்ச்சிகளும் மனச்சிக்கல்களும் இருந்தன. ஏ.ஆர்.ரஹ்மானாக நான் மீண்டும் பிறந்ததுபோல் உணர்கிறேன்...''.

தன் திரையிசை நுழைவு குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் சொன்னார் ''நான் ஏன் ரோஜா படவாய்ப்பை ஏற்றுக்கொண்டேன் என்று தெரியவில்லை. எனக்கு 25000 ரூபாய் பேசப்பட்டது. அதை நான் மூன்றே நாட்களில் விளம்பரப்பாடல்களில் ஈட்டிவிடுவேன். மணிரத்னத்துடன்
வேலைபார்ப்பது என்னை கவர்ந்திருக்கலாம். தன் படங்களின் இசைக்காக மிக அதிகமாக கவனெமெடுத்து உழைப்பவர் அவர். அவரது காட்சியாக்கம் என்னை பெரிதும் கவர்கிறது. ஒரு சாதாரணமான மெட்டைக்கூட அவர் தன் காட்சிகள் மூலம் நான்குமடங்கு மேம்படுத்தி அதற்கு புதிய தளங்களை அளித்து விடுவார். பிற இசையமைப்பாளரின் சாயல் கொண்ட அனைத்து மெட்டுகளையும் நிராகரித்து என் தனித்தன்மை வெளிப்பட்ட மெட்டுகளை மட்டுமே அவர் தேர்வுசெய்தார்..''

பலரும் நினைப்பதுபோல ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் முதலில் வெளியான படம் ரோஜா அல்ல, மோஹன்லால் நடித்த மலையாளப்படமான 'யோத்தா' தான். 1992 ஆரம்பத்தில் இப்படம் வந்தது. யோத்தா படத்தில் ஒரு சரியான கேரள நாட்டுப்புறப்பாட்டு இருந்தது. 'படகாளி சண்டிச் சங்கிலி' என்ற அந்த வேகமான பாடல் கேரள நாட்டுப்புற பாடலான படையணிப்பாட்டின் பாணியில் அமைந்து பெரும் புகழ்பெற்றது. இனிய மெட்டான 'மாம்பூவே' தான் அதிலுள்ள சிறந்த பாடல் என்பது என் எண்ணம். அது பின்னர் தமிழில் 'பவித்ரா' என்ற படத்தில் 'செவ்வானம்' என்ற பாடலாக வந்தது.

ஆகஸ்ட் 1992ல் ரோஜா வெளிவந்தது. அதன் இசை மிகவும் எதிர்பார்க்கபப்ட்டது. காரணம் இளையராஜாவை பிரிந்து மணிரத்னம் எடுத்த முதல் படம் அது என்பதுதான். பலரும் அந்த இருபத்தைந்து வயது இசையமைப்பாளரின் திறமையைப்பற்றி சந்தேகம் கொண்டிருந்தார்கள். அப்போது தமிழ் இசை என்றாலே இளையராஜாதான் என்று நினைக்கும் ஒரு தலைமுறையே உருவாகிவிட்டிருந்தது. ஆனால் படம் வந்த சில நாட்களிலேயே தமிழ்நாட்டில் வீடெங்கும் பேசப்பட்ட பெயராக ஏ.ஆர்.ரஹ்மான் ஆனார். அப்பாடல்கள் ஒரு புதிய இசையுகத்தின்
தொடக்கமாக அமைந்தன. பெரும் வணிகவெற்றியுடன் அவ்வருடத்தில் ஏறத்தாழ எல்லா முக்கிய விருதுகளையும் அவை பெற்றன. தன் முதல்படத்துக்கே தேசியவிருது பெற்ற முதல் இந்திய இசையமைப்பாளார் ஏ.ஆர்.ரஹ்மான் தான்!

ஏ.ஆர்.ரஹ்மானின் சாதனைகளைப் பற்றி பேச வேண்டியதில்லை. அவை நம் கண்முன்னாலேயே உள்ளன. அவரது இசை மேல் பல குற்றச்சாட்டுகள் உள்ளன. அதிகப்படியான தொழில்நுட்பத்தன்மை, அதிகமான நவீனத்தன்மை, மிகையான மேலைநாட்டுபாதிப்பு, திரும்பதிரும்ப ஒரே மாதிரியான முயற்சிகள், ஆத்மா இல்லாத கருவியிசை, அனைத்துக்கும் மேலாக நகலெடுப்பு....! ஒன்றை நினைவுகூறுங்கள், இவையெல்லாம் புதுவழி வெட்டி முன்னால் சென்ற அனைத்து முன்னோடிகளைப்பற்றியும் சொல்லபப்ட்ட குற்றச்சாட்டுகள்தான். அவர் தன் ஒவ்வொரு பாடலிலும் தனித்தன்மையுள்ள ஒலிநேர்த்தியைக் கொண்டு வந்ததன் மூலம் இந்திய திரையிசையில் ஒரு புரட்சியை நிகழ்த்தியவர் என்பதை எவரும் மறுக்க முடியாது. எளிய இன்னிசைமெட்டுகள் மேல் அவருக்குள்ள தேர்ச்சியும் ஒவ்வொரு பாடகரில் இருந்தும் அவரது மிகச்சிறந்த திறமையை வெளிக்கொணர அவர் எடுத்துக்கொள்ளும் கவனமும் மிக முக்கியமானவை.

ஏ.ஆர்.ரஹ்மானின் மேதமை அவரது மெல்லிசைமெட்டுகள்சார்ந்த கற்பனையிலும் அலாதியான தாள உணர்விலும் மட்டும் இல்லை. அவரது ஒலிப்பொறியியல் தேர்ச்சியையும் எடுத்துச் சொல்லியாகவேண்டும். அவரது பல பாடல்கள் முதலில் கேட்டால் சாதாரணமாகத் தோன்றும். தொடர்ந்து கேட்கக் கேட்க அவை மேலும் மேலும் விரிவடைந்து நுட்பங்களைக் காட்டி வளார்ந்தபடியே செல்லும். இந்த இயல்பு ரஹ்மான் வந்த காலகட்டத்துக்கு உரியதும்கூட. பழைய காலத்தில் அதிகமான இசைப்பதிவுக்கருவிகள் இல்லாத நாளில் மெட்டுகள் கேட்டதுமே கவர்பவையாக இருக்க வேண்டியிருந்தது. எங்கும் குறுவட்டுகளும் குற்றலை வானொலிகளும் மலிந்த இன்று பாடல்களை நாம் மீண்டும் மீண்டும் கேட்கிறோம். நம்மைக் கவர்ந்த பல பாடல்கள் சீக்கிரமே சலித்துப்போய் எரிச்சலூட்ட ஆரம்பித்துவிடுகின்றன. ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் அப்படியல்லாமல் கேட்கும் தோறும் புதிய வடிவம் கொள்பவையாக உள்ளன. புதுமையான கருவியிசை இடையீடுகள், வழக்கத்தை மீறிய இசையொருமைகள், நுட்பமாக மாறுபடும் தாள அமைப்புகள், படைப்பூக்கத்துடன் பதிவு செய்யப்பட்ட குரல்கள் ஆகியவற்றின் மூலம் ஏ.ஆர்.ரஹ்மான் அதை நிகழ்த்துகிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இந்தி திரையிசையை ஒரு அலைபோல தாக்கி மூழ்கடித்தார். இந்திய திரையிசையை உலகமெங்கும் கேட்கவைத்த முதல் இசையமைப்பாளரும் அவரே. பல இந்திய இசை நிபுணர்கள் உலக அளவில் புகழ்பெற்றிருந்தாலும் அவர்களின் அங்கீகாரம் செவ்வியலிசையின் சிறு வட்டத்துக்குள்தான் இருந்தது. இந்தியாவிலிருந்து உலகக் கவனத்தைப் பெற்ற முதல் திரை இசை நட்சத்திரம் ஏ.ஆர்.ரஹ்மான்தான். இன்று அவருக்கு பிரேஸில், ஸ்வீடன், நார்வே, ஆஸ்திரேலியா போன்ற தொலைதூரநாடுகளில்கூட லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவரது சாதனைகள் இனிவரும் இசையமைப்பாளர்களுக்கு பெரும் சவாலாக விளங்குபவை. அறிமுகமான பத்துவருடங்களிலேயே பத்மஸ்ரீ விருது, 14 ஃபிலிம் ஃபெர் விருதுகள் [தமிழுக்கு 9, இந்திக்கு 5], 3 தேசிய விருதுகள், 6 தமிழ்நாடு அரசு விருதுகள் எண்ணற்ற தனியார் விருதுகள்... ரஹ்மான் பெற்ற அங்கீகாரமே வியப்பூட்டுவது, சமீப காலத்தில் எவரும் தொடமுடியாதது.

இன்று ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணியாற்ற விரும்பாத மேதைகள் இல்லை. அவர் பாட்டுக்கு ஆட விரும்பாத நடிகர்களும் இல்லை. நுஸ்ரத் ஃபதே அலி கான், மைக்கேல் ஜாக்ஸன், சர் ஆன்ரூ லாயிட் வெபர், டீப் ஃபாரஸ்ட், ஸகீர் ஹுசைய்ன், டமினிக் மில்லர், டேவிட் பெயர்ன், உஸ்தாத் சுல்தான் கான், பண்டிட் விஸ்வ மோகன் ஃபட் போன்ற பலதரப்பட்ட இசைவல்லுநர்கள் அவருடன் பணியாற்றியிருக்கிறார்கள். 1989ல் ஏ.ஆர்.ரஹ்மான் தொடங்கிய சிறிய இசைப்பதிவகமான 'பஞ்சத்தான் ரெகார்ட் இன்' இப்போது அதி நவீன வசதிகளுடன் இந்தியாவின் முதன்மையான ஒலிப்பதிவகமாக உள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் தொடர்ந்து புதியகுரல்களை அறிமுகம் செய்துகொண்டிருக்கிறார். ''பாடும்போது குரலில் ஏற்படும் பிசிறுகள் கூட இசைக்கு ஒரு இயல்பான அழகை அளிக்கும்' என்றார் ஏ.ஆர்.ரஹ்மான். பாடலுக்கு தேர்ந்த குரல்கள் தேவை என்ற எண்ணத்தை ஏ.ஆர்.ரஹ்மான் உடைத்தார். அவரது குரலும் அத்தகையது. 'ஹம்மா ஹம்மா', 'முஸ்தஃபா முஸ்தஃபா' பாடலில் அவரது குரலில் பயிற்சியில்லாத இளைஞன் பாடும் உற்சாகம் வெளிப்படுகிறது. 'தில் சே ரே', 'வெள்ளைப்பூக்கள்' போன்றவை அவர் குரலில் வந்த உணர்ச்சி மிக்க பாடல்கள். பல கர்நாடக சங்கீத கலைஞர்களை திரையிசைக்குக் கொண்டுவந்தவரும் ஏ.ஆர்.ரஹ்மான் தான் என்பதையும் இங்கே நாம் மறக்க முடியாது.

ஆர்.கெ.சேகர் கேரளத்தின் தனித்துவம் மிக்க இஸ்லாமிய நாட்டுப்பாடலான மாப்பிளப்பாட்டு வகையில் ஏராளமான மறக்கமுடியாத பாடல்களை அமைத்தவர். அவற்றில் இஸ்லாமியப் பண்பாட்டுக்கூறுகள் கச்சிதமாக அமைந்திருக்கும். அவரது மகன் முஸ்லீமாக ஆனதில் ஏதோ ஒரு தொடர்ச்சி இருப்பதாக சிலராவது நம்புகிராற்கள்! ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி பெயர் சைரா பானு. அவருக்கு கதீஜா, ரஹீமா என்று இரு மகள்களும் குவாஜா முகம்மது ரூமி ரஹ்மான் என்ற மகனும் உள்ளனர். அவரது சகோதரிகள் அவ்வப்போது அவருடன் மேடையில் பாடுவதுண்டு. ரைஹானா இசையமைப்பாளரும்கூட. ரைஹானாவின் மகன் ஜி.வி.பிரகாஷ் 'வெயில்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். ஆர்.கெ.சேகரின் இசைப் பாரம்பரியம் தொடர்கிறது.

ஆர்.கெ.சேகருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் இடையேயான ஒப்பீடு வியப்பூட்டுவது. ஒட்டுமொத்தமாகப்பார்க்கையில் ஏ.ஆர்.ரஹ்மான் ஆர்.கெ.சேகரின் நேரடியான நீட்சியே. பல்வேறு இசைப்பாணிகளை படைப்பூக்கத்துடன் கலந்து சோதனை செய்வது, எளிய இனிய மெட்டுகள், கச்சிதமான ஒலிநேர்த்திக்கான தொடர்ந்த தேடல், புதிய இசையொலிகளுக்கான ஆர்வம், புதிய குரல்களை அறிமுகம் செய்தமை... இவை தான் ஆர்.கெ.சேகரின் தனித்தன்மைகள். இவையே ஏ.ஆர்.ரஹ்மானின் இயல்புகளும் கூட. சேகரைப்போலவே ரஹ்மானுக்கும் மின்பொறியியலில் ஓர் அடிப்படை ஆர்வம் இருந்திருக்கிறது. அது மின்னிசைக்கருவிகள் மேல் உள்ள நாட்டமாக மாறியிருக்கிறது. சேகரைப்போலவே ரஹ்மானும் தன் மொழியின், பண்பாட்டின் எல்லைக்குள் நிற்க மறுத்து இசைக்கே உரிய
தனிப்பண்பாட்டு வெளி ஒன்றில் வாழ்பவர். ஆர்.கெ.சேகர் தோல்வியடைந்த இடத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் நம்பமுடியாத மாபெரும் வெற்றிகளை அடைந்தார். வெற்றிக்காக ஆர்.கெ.சேகரின் அகம் கொண்ட தவிப்பே ஏ.ஆர்.ரஹ்மான் ஆக விசுவரூபம் எடுத்ததோ என்று எண்ணத்தோன்றுகிறது.


நன்றி : ஜெயமோகன்


கருத்துகள் இல்லை:

Related Posts with Thumbnails