நேரம்:

திங்கள், 5 அக்டோபர், 2009

உன்னைப்போல் ஒருவன் - விமர்சனம்

தீவிரவாதத்தால் பாதிக்கப்படுபவர்கள் தீவிரவாதிகளோ அல்லது அந்த தீவிரவாதத்திற்கு காரணமானவர்களோ அல்ல. இவை எதிலும் சம்பந்தமில்லாத அப்பாவி பொதுமக்கள் தான். அப்படிப்பட்ட பொதுமக்களுக்கு தீங்கு விளைப்பவர்களை அவசியம் தண்டிக்க வேண்டும். இது தான் உனக்குள் ஒருவன் படத்தின் கரு. “எ வெட்னஸ் டே” என்ற இந்திப்படத்தை தழுவி எடுக்கப்பட்ட உனக்குள் ஒருவன் கதைக்கரு தேசபக்தியின் அடிப்படையில் வரவேற்கப்படவேண்டியது தான் என்றாலும் அதை கொ(எ)டுத்த வகையில் சம்பந்தப்பட்டவர்கள் தோல்வி அடைந்திருப்பதாகத்தான் தோன்றுகிறது. இப்படத்தின் அடிப்படை நோக்கமான தீவிரவாத எதிர்ப்பு என்ற நிலையை கடந்து ஒரு சமூகத்தின் மீதான வெறுப்பை தான் இப்படம் ஏற்படுத்துகிறது. இப்படி ஒரு படைப்பு மனிதத்தை மிகவும் நேசிக்கும் கமல் என்ற அற்புதமான படைப்பாளியிடமிருந்து வந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

படத்தின் விரிவான கதை என்ன என்பதை ஏற்கனவே வலைப்பதிவில் பதிவர்கள் அலசி, துவைத்து காயப்போட்டுவிட்டார்கள் என்பதால் என் விமர்சனத்திற்கு போகிறேன்.

இந்த படத்தின் மூலமான எ வெட்னஸ் டே-யில் கமல் நடித்த பாத்திரத்தில் நஸ்ருத்தீன் ஷாவும், மோகன் லால் நடித்த பாத்திரத்தில் அனுபம் கெர்-ம் நடித்திருக்கிறார்கள். நஸ்ருத்தீன் ஷாவின் நடிப்பு பற்றி அவரை அறிந்தவர்களுக்கு நன்றாக தெரியும். ஒரு பேட்டியில் கூட நஸ்ருத்தீன் ஷா செய்ததில் சிறு பங்கை கூட என்னால் செய்ய முடியாது என்று கமல் சொன்னதாக ஞாபகம். அந்த வகையில் கதையை தாண்டி, அந்த அருமையான கலைஞர்களால் எ வெட்னஸ் டே படம் வைரமாக மிளிர்ந்தது என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் அதன் தழுவலான உனக்குள் ஒருவன் படத்தின் பாத்திரப்படைப்புகள் மற்றும் படம் வெளிப்படுத்தும் தனிப்பட்ட சமூகத்தின் மேலான வெறுப்பு ஆகியவற்றால் படமே அரைவேக்காடாக ஆனதாக தான் உணர்கிறேன். அது மட்டுமல்லாமல் மததுவேஷம் தாண்டி இப்படத்தில் நிறைய குறைகளை என்னால் சுட்டிக்காட்ட முடியும். என்னதான் ஆழ்ந்து சிந்தித்து, சமூக நலனில் அக்கறை கொண்டு படம் எடுத்தாலும் தமிழ் சினிமாவின் இலக்கணங்களாக சில விஷயங்கள் இருந்து அந்த படத்தின் தரத்தை தாழ்த்தும். பொதுவாக கமல் படங்களில் அவர் நடிகராக மட்டும் இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி பல துறைகளிலும் அவரின் குறுக்கீடு இருக்கும் என்பதை பலர் அறிவார்கள். அந்த வகையில் இந்த படத்தில் அவரின் குறுக்கீடுகள் இல்லாதது போன்ற ஒரு தோற்றம் இருந்தாலும் கமல் என்ற நடிகனின் ஆளுமை, லாஜிக் மீறல்கள் படத்தின் பல இடங்களில் அப்பட்டமாக தெரிந்து படத்தின் இயல்பை கெடுக்கிறது. உதாரணத்திற்கு சில...

1. கதைப்படி கமல் ஒரு காமன் மேன். அதாவது சராசரியான, நடுத்தர குடும்பத்து மனிதர். ஆனால் அவரின் படித்த, பணக்கார தோற்றம் நிச்சயம் ஒரு நடுத்தர வர்க்க மனிதனை நினைவு படுத்தவில்லை. அதுவும் அவர் பேசும் அமெரிக்க ஆங்கிலமும், நவீன தொழில்நுட்ப சாதனங்களை கொண்டு அவர் பிறருடன் செய்யும் தகவல் தொடர்பும் அவரை ஒரு கம்ப்யூட்டர் துறை வல்லுநராகத்தான் காட்டுகிறது. அதுமட்டுமில்லாமல் அவர் பயன்படுத்தும் உயர்வகை தகவல் தொடர்பு சாதனங்களும், அதை கடைசி காட்சியில் கொஞ்சம் கூட யோசிக்காமல் சட்டென தீவைத்து விட்டு செல்வதும் அவரின் காமன் மேன் என்ற பாத்திரப்படைப்பை முழுமையாக சிதைக்கிறது. இதைத்தான் கமலின் ஆளுமை என்றேன்.

2. பாத்திரப்படைப்பில் தவறு என்றில்லாமல் காட்சிகளிலும் லாஜிக் மீறல்கள் உண்டு. உதாரணத்திற்கு படத்தின் ஆரம்பத்தில் ரயில், பஸ், ஷாப்பிங் மால், கமிஷனர் ஆஃபீஸ் ஆகிய இடங்களில் குண்டு வைப்பார். அதாவது ஒரு பேக்கை வைத்துவிட்டு வருவார். கடைசியில் கமிஷனர் ஆஃபிஸில் வைத்தது மட்டுமே வெடிகுண்டு என்பார். பிறகு எதற்காக மற்ற இடங்களில் குண்டு வைப்பதை போல் பையை வைத்துவிட்டு வருகிறார்? வெறுமனே அந்த இடங்களில் குண்டு வைத்திருப்பதாக அவர் பொய் சொன்னால் போதுமே..! இது படம் பார்க்கும் இரசிகனை அவர் உண்மையில் குண்டு வைப்பதாக நம்பவைக்க செய்யப்பட்ட யுக்தியாக இருந்தாலும் கதையோட்டத்தில் அந்த காட்சி தேவையில்லை என்பதால் லாஜிக் இடிக்கிறது.

3. மிகப்பெரிய பணக்காரர்களுக்கு, செல்வாக்கு நிறைந்தவர்களுக்கு கூட கிடைக்காத ஆர்டிஎக்ஸ், ஒரு காமன் மேனுக்கு 6 கிலோ எளிதாக கிடைக்கிறது. எப்படி என்று தெரியவில்லை. அவர் மொட்டைமாடியில் இருந்தபடி கமிஷனரிடம் பேசுவதும், டிவி சேனலுக்கு பேசுவதும் சரி தான். ஆனால், தீவிரவாதிகளை ஏற்றிச்செல்லுவதற்காக என்று வெடிகுண்டு வைத்த ஜீப் அங்கே எப்படி வருகிறது..? தனி மனிதனாக மொட்டைமாடியில் இருந்தபடி கமலால் எப்படி செய்ய முடியும்.? இதையெல்லாம் பார்த்தால் தீவிரவாதிகளை விட பெரிய நெட்வொர்க் கமலுடையது போல் தோன்றுகிறது.!!

4. கமல் மொத்தம் வாங்கியது 6 கிலோ ஆர்டிஎக்ஸ். அதில் ஒரு இடத்தில் அதாவது கமிஷனர் ஆஃபிஸில் வைக்க பயன்படுத்தியது 3 மூன்று கிலோ. மற்ற இடங்களில் வெடிகுண்டு வைக்கவில்லை என்கிறார். அப்படி என்றால் மீதி 3 கிலோ என்னவாயிற்று.? ஒரு வேளை நல்ல விலைக்கு யாரிடமாவது விற்றுவிட்டாரா அல்லது மீண்டும் ஒரு இடத்தில் வைப்பதற்காக ஸ்டாக் வைத்துவிட்டாரா..?

5.பொதுவாகவே மன விரக்தியில் உயிரை வெறுத்து செயல்படுபவர்கள் தான் தீவிரவாதிகள். அவர்கள் உயிர் பயம் என்பது இருக்கவே இருக்காது. அதனால் தான் தீவிரவாதிகளில் அதிகம் தற்கொலைப்படை தாக்குதல் இருக்கும். அதே போல் அவர்களின் நோக்கம் ஒன்று என்பதால் அவர்களுக்குள் புரிதல், ஒற்றுமை அதிகம் இருக்கும். ஆனால் தீவிரவாதிகளை கோழை போலவும், துரோகிகள் போலவும் காட்டுகிறார்கள். தீவிரவாதியின் கண்களில் மரண பயம் தெரிவதாக போலீஸ் அதிகாரி ஆரிஃப் சொல்வார். அதே போல் ஒருவனை பிடித்து வைத்துக்கொண்டவுடன் மற்றவர்கள் தப்பித்தால் போதும் என்று ஓடுவதாக காட்டப்படுகிறது.

கமல் ஒரு அருமையான கலைஞன் என்பதில் யாதொரு சந்தேகமில்லை. கதையே இல்லாமல் அவர் எடுத்த தசாவதாரம் கடுமையாக விமர்சிக்கப்பட்டபோது கூட அவரின் நடிப்பின் மீதான அர்ப்பணிப்பிற்காகவே அவரை புகழ்ந்தவன் நான் (அதை என் வலைப்பதிவிலேயே நீங்கள் படிக்கலாம்). அப்படிப்பட்ட ஒரு சிறந்த கலைஞன் மதநல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் இந்த படத்தை எடுத்தது துரதிருஷ்டமே.! இந்த படத்தில் கமல் சொல்லி இருக்கும் ஒன் லைன் மெஸேஜ் தீவிரவாதத்திற்கு தீவிரவாதம் தான் பதிலாக இருக்க வேண்டும் என்பது தான். சமூகம் என்ற எல்லைக்கோட்டுக்குள் அதை மதித்து வாழும் ஒரு மனிதம் நிறைந்த மனிதன் இந்த கருத்துக்குள் நிச்சயம் உடன்படமாட்டான். காரணம், கமல் என்ன கருத்தை இந்த படத்தில் சொல்ல முயன்றாரோ அதை செயலாக்க முயற்சித்ததால் தான் அவர்கள் தீவிரவாதிகளாக மாறிவிடுகிறார்கள். தீவிரவாதிகள் யாரும் திருடி, கொள்ளையடித்து, கொலை செய்து தீவிரவாதிகளாக ஆவதில்லை. அவர்கள் மீது அரசு, குறிப்பிட்ட சமூகம் ஏவும் வன்முறையால் பாதிக்கப்பட்டு அதை எதிர்க்க முடியாத இயலாமையின் காரணத்தால் விரக்தியில் தள்ளப்பட்டு தீவிரவாத செயல்களில் ஈடுபடுகிறார்கள். தீவிரவாதம் என்பது எந்த உருவத்தில் இருந்தாலும், யாரால் செய்யப்பட்டாலும் தடுக்கப்பட வேண்டியது. ஆனால், அதை ஒரு குறிப்பிட்ட சமூகம் மட்டும் செய்வதாக சேற்றை வாரியடிப்பதும், அந்த தீவிரவாதத்திற்கான அடிப்படை காரணத்தை அறியாமல் இருப்பதும் கமலின் நடுநிலைத்தன்மையின் மேல் அவநம்பிக்கை ஏற்படுத்துகிறது. கமலின் பெயரில் இருக்கும் ஹாசன் என்ற இஸ்லாமிய பெயர் அவரின் குடும்ப நண்பரான ஒரு இஸ்லாமியருக்கு உரியது. அவருக்கு நன்றி செலுத்தும் வகையில் அவர் குடும்பமே (கமல்ஹாசன், சாருஹாசன், சந்திரஹாசன், அனுஹாசன், ஸ்ருதி ஹாசன்) ஹாசனை பெயரோடு வைத்துள்ளது. அந்த அளவுக்கு இஸ்லாமிய சமூகத்தை புரிந்தவருக்கு இடையில் என்ன நேர்ந்தது..?

இப்படத்தின் மூலமான இந்தியில் தீவிரவாதிகள் 4 பேரும் முஸ்லீம்களாக காட்டி இருப்பார்கள். ஆனால் இதில் 3-க்கு 1 என்ற விகிதத்தில் ஒரு ஹிந்துவை தீவிரவாதியாக்கி சிறுபான்மை நலன் பேணியிருக்கிறார் கமல். இதில் பெரிய காமெடி என்னவென்றால் மற்றவர்களால் பாதிக்கப்பட்டு தீவிரவாதிகளாக மாறிய முஸ்லீம்கள் மேல் வெறுப்பை உமிழ்ந்திருக்கும் கமல், யாராலும் பாதிக்கப்படாமல் தன் சுயநலத்திற்காக ஆயுதம் விற்கும் ஹிந்து தீவிரவாதியின் மேல் பரிதாபத்தையும் ஏற்படுத்தும் வகையில் பாத்திரத்தை படைத்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் படம் நெடுக இஸ்லாமிய சமூகத்தின் மேல் கறை ஏற்படுத்த பல காட்சிகளில் முயன்றிருக்கிறார்கள். இந்த படத்தின் கதையோட்டத்திற்கு நகைச்சுவை அவசியமில்லாதது. ஆனாலும் தேவையில்லாமல் எம்.எஸ்.பாஸ்கரை வைத்து ஒரு காட்சியில் கிச்சுகிச்சு மூட்ட முயன்றிருக்கிறார்கள். ஆரம்பத்தின் கதையின் சரியான வடிவம் புரியாத நேரத்தில் இந்த காட்சி வருவதால் கொஞ்சம் சிரிப்பு வருகிறது. ஆனால் கதையின் போக்கு புரிந்து பார்வையாளன் இறுக்கமாக இருக்கும் நிலையில் நகைச்சுவை என்ற பெயரில் இஸ்லாமிய சமூகத்தை கொச்சைப்படுத்தும் மலிவான வேலையில் இறங்கியிருக்கிறார்கள்.

உதாரணத்திற்கு, ஒரு காட்சியில் கமல் சொன்ன இடத்தில் தீவிரவாதிகளை ஒப்படைக்க போலீஸ் அவர்களை அழைத்து செல்வார்கள். அப்போது நடக்கும் காட்சி மற்றும் வசனம் கீழே..

1. ”எனக்கு 3 மனைவிகள்” என்ற வசனத்தின் மூலம் முஸ்லீம்கள் என்றாலே ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருப்பார்கள் என்ற தோற்றத்தை உண்டாக்க முயல்கிறார்களே அது ஏன்..?. இந்தியாவிலுள்ள மதங்களின் சதவீதத்தில் பலதார திருமணம் செய்த இஸ்லாமியர்களின் சதவீதம் அதிகமென்று யாராலும் நிரூபிக்க முடியுமா..?)

2. ”3-வது மனைவிக்கு 18 வயசு. ரொம்ப அழகானவ. அவளை எனக்கு ரொம்ப பிடிக்கும்” இந்த வசனத்தின் மூலம் 40 வயதுக்கு மேல் உள்ள தீவிரவாதி 18 வயது பெண்ணை திருமணம் செய்திருக்கிறான் என்பதன் மூலம் அவர்கள் திருமணத்திற்கு வயது பொருத்தம் பார்ப்பது கிடையாது என்றும், மனைவியாக இருந்தாலும் கூட அவர்களின் அன்பு அழகை அடிப்படையாக வைத்து தான் இருக்கும் தோற்றம் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

3. ஒரு முஸ்லீம் தீவிரவாதி பெஸ்ட் பேக்கரியில் தன் 3-வது மனைவிக்கு நடந்த கொடுமையை சொல்லி, அவளை கொலை செய்து விட்டார்கள் என்று புலம்புவான். அப்போது ஹிந்து தீவிரவாதியான சந்தானபாரதி “ஒண்ணு போனா என்ன.? பாக்கி ரெண்டு இருக்குல்ல..அதை வச்சி அட்ஜஸ்ட் பண்ணிக்க..!” என்று சொல்வார். இதை கேட்டு நகைச்சுவை என்று சிரிப்பவர்கள் நிச்சயம் மனிதாபிமானம் உள்ளவர்களாக இருக்க முடியாது.

4. ஆரீஃப் என்ற முஸ்லீம் போலீஸ் அதிகாரி தன் கடமையில் தவறாமல் இருந்தாலும் கூட உயர் அதிகாரி மோகன் லால் ஆரீஃபை பற்றி அவரின் சக அதிகாரியிடம் “அவன் மேல் ஒரு கண்ணு வச்சிக்க” என்று சொல்வது அரசு அதிகாரிகளுக்கு இருக்கும் முஸ்லீம்களின் மீதான ஒட்டுமொத்த அவநம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

5. தீவிரவாதிகளை கமலிடம் ஒப்படைக்க அனுப்பிய பிறகு, கமல் கமிஷனர் மோகன்லாலிடம் பேசும் போது யாரை கூட தீவிரவாதிகளை அனுப்பினீங்க..? என்று கேட்பார். அதற்கு மோகன்லால் ஆரீஃப் என்ற பெயரை சொன்னதும் பெரும் யோசனையில் விழுந்து விட்டு, பிறகு பெருமூச்சுடன் அந்த யோசனையில் இருந்து வெளியே வருவார். இந்த காட்சியின் உள்ளிருக்கும் அர்த்தத்தை விபரமானவர்கள் அறிவார்கள்.

6. தீவிரவாதிகள் பேசும் தமிழ் வழக்கு தமிழ்நாட்டைச்சேர்ந்தவன் போல் இல்லை. பெரும்பாலான படங்களில் முஸ்லீம்கள் என்றாலே தமிழ் அரைகுறையாகவும், உருதுவை கலந்து பேசுபவர்களாகவும் காட்டுகிறார்கள். ஏன் தமிழ்நாட்டில் இருக்கும் முஸ்லீம்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா..? அவர்களெல்லாம் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்களா..?

இந்த படத்தின் டைரக்டர் சக்ரி டோலட்டி . இவர் கமலின் நெருங்கிய நண்பர். தசாவதாரம் படத்தில் விஞ்ஞானி கமல் கோவிந்தின் நண்பராக கண்ணாடியுடன் நடித்தவர். இப்படத்தில் மததுவேஷ காட்சிகள், கருத்துக்கள், லாஜிக் இடறல்கள் தாண்டி பாராட்டத்தக்க விஷயங்கள் இப்படத்தில் இல்லாமல் இல்லை. ஓரிரு நாட்களில் நடக்கும் கதையை விறுவிறுப்பாக கொடுத்ததற்கும், தமிழ் சினிமா இலக்கணங்களான குத்துப்பாட்டு, பஞ்ச் வசனம், பறக்கும் சண்டைகள், வெளிநாட்டு லொக்கேஷனில் பாட்டு என்று எதையும் வைக்காமல் எடுத்ததற்காக இப்பட இயக்குநரை பாராட்டியே ஆக வேண்டும். நடிப்பில் கமலை பாராட்டுவதென்பது அவசியமற்றது என்றாலும் ஒரே கதைக்களத்தில் இருந்தபடி அவர் பேசும் வசனங்களின் ஏற்ற இறக்கம், உடல் மொழி அசர வைக்கிறது. யாரோ ஒரு சகோதரி மீதான வன்முறையை சொல்லி கலங்கும் போது நம்மையும் சேர்த்து கலங்க வைக்கிறார்.

மலையாளி போலீஸ் கமிஷனராக நடித்துள்ள மோகன்லால் இயல்பாக நடித்து பாத்திரத்திற்கு வலு சேர்க்கிறார். சில இடங்களில் நடிப்பில் கமலை மிஞ்சுகிறார். கமிஷனருக்கும், உள்துறை செயலாளர் லட்சுமிக்கும் இடையே நடக்கும் பனிப்போர் மற்றும் உரையாடல்கள் சுவராஸிய இரகம். மோகன்லால் கீழே பணிபுரியும் போலீஸ் அதிகாரிகளாக வரும் பரத் ரெட்டி, கணேஷ் இருவரும் நல்ல தேர்வு. இந்த படம் மூலம் கமலின் புத்திரி ஸ்ருதி ஹாசன் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி உள்ளார். பெரிதாக சொல்ல முடியாது என்றாலும் ஒரு அறிமுக இசையமைப்பாளர் மீதான எதிர்பார்ப்பை ஈடுகட்டியுள்ளார். ஸ்ருதிக்கு தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் உண்டு என்று நம்பலாம். அதே போல் திரைப்படத்தின் நீளமும் குறைவு என்பது இதன் இன்னொரு சிறப்பம்சம். இப்படத்தின் கதைக்களமும் 4, 5 இடங்களுக்குள்ளேயே நடந்தாலும் நமக்கு அலுப்பூட்டவில்லை. கதையை காட்சிகள் மூலம் வடிவமைத்ததில் தவறுகள் உண்டு என்று சொன்னாலும் அதன் உள்நோக்கமான தேசபக்திக்காக இயக்குநர் மற்றும் கமல் ஆகிய இருவருக்கும் ராயல் சல்யூட். இது தேசத்தின் மேல் அக்கறை கொண்ட ஒவ்வொரு இந்தியனின் கடமை.

மொத்தத்தில் உன்னைப்போல் ஒருவன் உண்மையை உணராதவன்.!!


மதிப்பெண்: 41/100

கருத்துகள் இல்லை:

Related Posts with Thumbnails