நேரம்:

செவ்வாய், 6 அக்டோபர், 2009

நாடோடிகள் - விமர்சனம்

நாடோடிகள் - விமர்சனம்

வெட்டுக்குத்து, குத்துப்பாட்டு, பஞ்ச் டயலாக்குமாக படங்கள் வந்து கலங்கடித்து தமிழ் சினிமாவின் மேல் இருக்கும் நம்பிக்கையை அழிக்கும் நேரத்தில் அத்திப்பூத்தார்போல் சில படங்கள் வந்து அந்த நம்பிக்கையை பொத்திப் பாதுகாக்கும். அப்படி அரிதாக வந்து மனதை வருடும் படம் தான் நாடோடிகள்..! பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் படம் எடுத்து, அது ஓடாமல் கார்ப்பரேட் கம்பெனிகளே கையில் திருவோட்டை ஏந்தும் நிலைக்கு வரும் நிலையில் கம்பெனி என்ற சொந்த நிறுவனத்தை தொடங்கி, சிக்கனமாய் சுப்ரமணியபுரம் என்ற அழகான படம் எடுத்து, அத்தனை மனங்களையும் கொள்ளையடித்தவர் சசிக்குமார். அந்த படம் தந்த மகத்தான வெற்றிக்கு பிறகு சிறுவர்களை மையமாக வைத்து ”பசங்க” என்ற வெற்றிப்படத்தை பாண்டிராஜ் இயக்கத்தில் தயாரித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதன் வெற்றி ஆராவாரம் அடங்குவதற்குள் அவரே நடித்து, அவர் நண்பர் சமுத்திரக்கனியின் இயக்கத்தில், மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் வந்திருக்கும் படம் தான் நாடோடிகள். இந்த படம் பற்றி பேசுவதற்கு முன் படத்தின் கதையை பார்த்துவிடுவோம்.

கருணாகரன் (சசிக்குமார்) பி.ஏ ஹிஸ்டரி படித்து, வேலை தேடும் பட்டதாரி. அவனுக்கு இரண்டு உயிர் நண்பர்கள். அதில் ஒருவன் சந்திரன் (விஜய்) டிகிரி முடித்துவிட்டு சொந்தமாக கம்ப்யூட்டர் செண்டர் வைத்து செட்டிலாக கனவு காண்பவன். இன்னொருவன் பாண்டி (பரணி) வெளிநாட்டு வேலைக்காக முயற்சி செய்பவன். சசிக்குமாரின் தங்கை அபிநயா. அவளை சசிக்குமாரின் பட்டதாரி நண்பன் காதலிக்கிறான். கருணாகரனும் அவரின் தாய் மாமன் பெண் நல்லம்மாள் (அனன்யா)-ம் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலிக்கிறார்கள். ஆனால் கவர்மெண்ட் வேலை கிடைத்தால் மட்டுமே அவருக்கு பெண் கொடுப்பதாக தாய் மாமன் சொல்லிவிட்டதால் மிக தீவிரமாக கவர்மெண்ட் வேலைக்காக முயற்சி செய்கிறான்.

இந்த மூன்று நண்பர்களும் சேர்ந்து விட்டால் அந்த இடமே அதகளம் தான். ஒரே கூத்து, ஆட்டம், பாட்டம், குடி என்று ஜாலி பண்ணுவார்கள். அவர்கள் சந்தோஷத்தில் ஒரு லாரி மண்ணை அள்ளிப்போடவென்றே கருணாகரனின் நெருங்கிய நண்பன் (எக்ஸ் எம்பியின் மகன்) ஒருவன் அவன் வீடு தேடி வருகிறான். ஒரு முறை அவன் கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயல்கிறான். கருணாகரன் அவனிடம் தற்கொலை முயற்சிக்கான காரணத்தை கேட்கும் பொழுது நாமக்கல்லில் ஒரு பெரும் தொழிலதிபரின் பெண்ணும், அவனும் ஒருவரையொருவர் மனதார காதலிப்பதாகவும், அதற்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு என்பதால் தற்கொலைக்கு முயன்றதாக சொல்கிறான். அவனை காதலியுடன் சேர்த்து வைக்க கருணாகரன் க்ரூப் முடிவு செய்கிறது. அதற்கான திட்டத்தையும் தயாரிக்கிறார்கள். நண்பனின் காதலி ஊரில் பரோட்டா கடையில் வேலை பார்க்கும் கஞ்சா கருப்புவையும் இத்திட்டத்தில் சேர்த்துக்கொண்டு நண்பனின் காதலியை கடத்தி நண்பனுக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிடுகிறார்கள்.

அவளின் வீட்டை நோட்டமிடுகிறார்கள். ஒரு முறை அவள் தன் குடும்பத்தினருடன் கோயிலுக்கு வந்திருக்கும் நேரத்தில் அவளை கடத்திச்செல்ல முடிவு செய்கிறார்கள். அதற்கு முன் அவளிடம் விஷயத்தை சொல்லி சம்மதம் வாங்குகிறார்கள். இவர்களின் காதலால் எதிரும் புதிருமாக இருக்கும் இரு குடும்பங்களும் கோவிலில் இருக்கும் நேரத்தில் இவர்களின் கடத்தல் நாடகம் அரங்கேற்றப்படுகிறது. நண்பர்கள் திட்டமிட்டு இரு குடும்பங்களுக்குள்ளும் குழப்பத்தை ஏற்படுத்தி, அந்த சந்தடிசாக்கில் நண்பனின் காதலியை கடத்துகிறான் கருணாகரன். இந்த கடத்தலின் மூன்று நண்பர்களுக்கும் வெவ்வேறு வகையான ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படுகிறது. சந்திரன் ஒரு காலை இழக்கிறான். பாண்டி காது கேட்கும் சக்தியை இழக்கிறான். கருணாகரன் தன் உயிர்க்காதலையே இழக்கிறான். அவர்கள் காதலை சேர்த்து வைத்ததோடு இடைவேளை விடுகிறார்கள். படம் ஏறக்குறைய கதை முடிந்த நிலையில் ”இனி என்ன இருக்கிறது?” என்று நினைக்கும் நிலையில் இடைவேளைக்கு பிறகு வருகிறது ட்விஸ்ட்.

இந்த காதல் சேர்த்து வைக்கும் வைபவத்தால் பல கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள் அருமை நண்பர்கள். கருணாகரனின் பாட்டி உயிர் போகிறது. அவன் மேல் போலீஸ் கேஸ் ஆனதால் அரசாங்க வேலை கிடைக்கும் வாய்ப்பு போகிறது. அதனால் மாமன் மகளை கல்யாணம் செய்ய முடியாமல் போகிறது. சந்திரன் கால் ஊனமானதால் கம்ப்யூட்டர் செண்டர் வைக்க அப்ளை செய்த லோன் கிடைக்காமல் போகிறது. காது கேட்கும் சக்தியை இழந்ததால் பாண்டியின் வெளிநாட்டு ஆசை மண்ணாய் போகிறது. எல்லாம் போயும் அவர்கள் மூவருக்கும் ஒரே ஆறுதல் அவர்கள் சேர்த்து வைத்த காதல். ஆனால், அந்த காதல் தோற்றுப்போனால் அதை வாழ வைக்க நடந்த முயற்சியில் வாழ்க்கையை இழந்தவர்கள் என்ன செய்வார்கள்.? அதைத்தான் மீதிப்படத்தில் சொல்லி இருக்கிறார்கள். கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த காதல் தம்பதிகள் சுயநலத்தால் திருமண வாழ்வில் சலிப்புற்று அவரவர் வீட்டுக்கு திரும்பி பிரிகிறார்கள். சேர்த்து வைத்தவர்கள் வீறு கொண்டு எழுகிறார்கள். என்ன செய்யப்போகிறார்கள் என்று நிமிர வைக்கிறது பிறகு வரும் காட்சிகள். வித்தியாசமான கதை, வித்தியாசமான களம். மிரட்டியிருக்கிறார்கள் நாடோடிகள்.!!

சுப்ரமணியபுரத்தில் நடிப்பு, இயக்கம், பசங்க-ல் தயாரிப்பு, நாடோடிகளில் நடிப்பு என்று சசிக்குமார் ஹாட்ரிக் அடித்திருக்கிறார். மனிதருக்கு நடிப்பு அசத்தலாய் வருகிறது. நடிப்பு மட்டுமல்ல.. காமெடி வருகிறது. ஆக்ரோஷம் வருகிறது. சோகம் வருகிறது. ஆனால், அவர் ஆடும் போது தான் கொஞ்சம் என்னவோ போல் இருக்கிறது. ஆனாலும் படத்தின் மற்ற ப்ளஸ் அதையெல்லாம் மறைக்கிறது. தாய் மாமனிடம் எப்பொழுதும் “ஆனா உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்று சொல்லி சிரிப்பூட்டுபவர், அதே டயலாக்கை தன் மாமன் பெண்ணை கல்யாணம் செய்ய முடியாமல் போகும் சூழ்நிலையில் சொல்லும் பொழுது நம்மால் சிரிக்க முடியாமல் மனம் கனத்துப்போகிறது. அதே போல் இரண்டாம் பாதியில் ஒரு வண்டியில் உட்கார்ந்திருக்கும் போது அவ்வழியே திருமணம் செய்த தன் மாமன் மகள் கடந்து போகும் போது உருக்கமாக கண்ணீர் விட்டு பார்ப்பவர்களை கலங்கடிக்கிறார். க்ளைமாக்ஸில் காதலை மறந்து பிரிந்தவர்களுக்கு அட்வைஸ் பண்ணுகையில் ஆக்ரோஷ நடிப்பில் மிளிர்கிறார். காதல் என்பது கல்யாணம் பண்ணிய பிறகும் அதே காதலோடு கடைசி வரை வாழ்ந்து காட்டுவதில் தான் இருக்கு என்று சொல்லும் போது உயர்ந்து நிற்கிறார்.

கல்லூரியில் அறிமுகமாகிய பரணி இந்த படத்தில் பின்னி பெடலெடுத்து இருக்கிறார். முதல் பாதி முழுதும் சிரிக்க வைத்தவர் இரண்டாம் பாதியில் கலங்க வைக்கிறார். காது இரண்டும் செவிடான பிறகு அவர் கொடுக்கும் எக்ஸ்பிரஷன்கள் ஏ-ஒன் ரகம். ”டேய்..கருணா.. அவங்களை போட்டுருவம்டா..” என்று கடைசிக்காட்சியில் உறுமும் போது முகத்தில் வெறி அனல் அடிக்கிறது. ”நீ எதையும் பார்த்தாலும் பார்க்காதவன் மாதிரி தானடா இருப்பே”என்று சொல்லி வயிறு குலுங்க சிரிக்க வைப்பவர், ”நீ என்ன அடி வாங்கினாலும் வலிக்கலேன்னு தானடா சொல்வே” என்று சொல்லி மனசை கனக்க வைக்கிறார். சித்திக்காக தன்னை திட்டும் தந்தையிடம் பேசும் காட்சிகள் உருக்கத்தை ஏற்படுத்துகிறது.

அட்டக்கருப்பில் வந்து அழகாய் காதல் பண்ணுகிறார் விஜய். அவரின் தந்தையாக வருபவர் இப்படி ஒரு தந்தை நமக்கு இல்லையே என்று ஏங்க வைக்கிறார். அப்பா, மகன் உறவை காண்பிக்க வைத்திருக்கும் காட்சிகள் மனதை தொடுகின்றன. சசிக்குமாரின் மாமன் மகளாக வரும் அனன்யா குள்ளமாக இருந்தாலும் அழகாக இருக்கிறார். எக்ஸ்பிரஷன், குறும்பு நடிப்பில் இன்னொரு ஜோதிகா தெரிகிறார். எப்போதும் தின்று கொண்டே இருக்கும் அவரை பார்த்தால் சிரிப்பு வருவது இயக்குநரின் கதாபாத்திர படைப்பிற்கு கிடைத்த வெற்றி. சசிக்குமாரின் தங்கையாக வரும் அபிநயா பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார். சசிக்குமாரின் முத்தம் வாங்க அனன்யாவும், சசிக்குமாரும் கொடுக்கும் எக்ஸ்ப்ரஷன்ஸ் ”அட.!” போட வைக்கிறது. நண்பனாக வரும் ”கஞ்சா” கருப்பு சசிக்குமார் குரூப்பிடம் மாட்டிக்கொண்டு முழிப்பதும், எதிரணியினரிடம் அடி வாங்குவதும் சிரிப்பூட்டுகிறது.

இந்த படத்தின் இயக்குநர் சமுத்திரக்கனி ஏற்கனவே உன்னை சரணடைந்தேன், நெறஞ்ச மனசு என்ற இரண்டு படங்களை இயக்கியவர். அந்த இரண்டு படங்களும் சரியாக ஓடாததால் தமிழ் சினிமாவால் ஓரங்கட்டப்பட்டு டிவி சீரியல் இயக்க போய் விட்டார். அதன் பின் சசிக்குமாரின் நட்பால் சுப்ரமணியபுரத்தில் நடித்து பிரபலமாகி, இப்போது அவரையே வைத்து நாடோடிகள் இயக்கி பெரிய அளவில் பேசப்பட்டிருக்கிறார். சுப்ரமணியபுரத்தில் சமுத்திரக்கனியை நடிக்க வைத்து சசிக்குமார் இயக்கினார். பதிலுக்கு இந்த படத்தில் சசிக்குமாரை நடிக்க வைத்து சமுத்திரக்கனி இயக்கி தன் நன்றியை தீர்த்திருக்கிறார். உண்மையில் நல்ல படத்தை தந்ததற்காக நன்றிக்கடன் பட்டவர்கள் தமிழ் சினிமா இரசிகர்கள் தான். இயக்குநர் பாத்திரத்தை செதுக்கியதிலும், காட்சிகளை வடிவமைத்ததிலும் திறமையாக சிந்தித்திருக்கிறார்.

நட்புக்காக எதையும் செய்யும் சசிக்குமார், அவர் சொல்லுவதையெல்லாம் கேட்கும் வெள்ளந்தியான நண்பன் பரணி, படித்த களையோடு, டக் இன் பண்ணின பேண்ட் ஷர்ட்டோடு எப்போதும் டிப்டாப்பாக தெரியும் விஜய், மாமன் மேல் உயிரையே வைத்திருக்கும் தீனிப்பண்டார மாமன் மகள் அனன்யா, ஊமை போல் இருந்து காதலில் கலவரம் செய்யும் அபிநயா, பரோட்டா கடையில் வேலை பார்த்தபடி எல்லோருக்கும் பயந்து சாகும் கஞ்சா கருப்பு, நேரம் கிடைக்கும் போதெல்லாம் இரண்டாவது மனைவிக்காக தன் மகனை திட்டித்தீர்த்து விட்டு ”டேய்..பாண்டி” என்று உருக்கமாக கூப்பிடும் பாண்டியின் அப்பா பெரியவர், தன் மகனுக்கு காதலிக்க டிப்ஸ் கொடுக்கும் விஜயின் மிலிட்டரி அப்பா, தன் பையன் எது செஞ்சாலும் அதில் ஒரு நியாயம் இருக்குமென்று நம்பும் சசிக்குமாரின் அப்பா, உதவி வேண்டி வந்து நட்புக்கு துரோகம் செய்யும் நண்பன், அவரின் காதலியாக நடித்த பவித்ரா, ஒரு பக்கம் மகன் பாசத்தையும் இன்னொரு பக்கம் வில்லித்தனத்தையும் காட்டும் எக்ஸ் எம்பியாக வரும் பெண், ஒரு வசனம் கூட இல்லாமல் காதலில் உதவி செய்ய வந்து போகும் பைக் நண்பன், திண்ணையில் உட்கார்ந்த படி பேரன் சசிக்குமாரை கொஞ்சும் பாட்டி, பணக்கார வில்லன், அவரின் வீட்டோடு இருக்கும் மருமகன், உதவி செய்து விட்டு அடுத்த நிமிடம் அதை ஃபோட்டோ எடுத்து ஃப்ளக்ஸ் பேனரில் போட்டு விளம்பரம் தேடிக்கொள்ளும் ”மைனர்” சின்ன மணி (இவர் இப்படத்தின் நிர்வாக தொடர்பாளர் நமோ நாராயணா) இப்படி ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் வெகு இயல்பாக செதுக்கி காட்சிகளில் ஓட விட்டிருக்கிறார். அதே போல் ஒவ்வொருவரும் தன் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் சசிக்குமார், விஜய், பரணி, கஞ்சா கருப்பு தவிர மற்ற நடிகர், நடிகையர் அனைவரும் புதுமுகங்கள். வசனங்கள் எல்லை தாண்டாமல் வெகு யதார்த்தமாய் இருக்கிறது. உதா: 'டேய் நீ அப்பா மாதிரி.... தான்.! ஆனா.. என் பொண்ணுக்கு கஷ்டம்னு வந்தா உங்கிட்டயா வந்தா..? அப்பானு எங்கிட்டதானடா வந்தா..! என்னடா ஃப்ரண்ட்..! பெத்து வளத்த பொண்ணுக்கு என்ன வேணும்னு பெத்து வளத்தவன விட உங்களுக்கு என்னடா தெரியும்..? '' என்று பெண்ணின் அப்பா சசிக்குமாரிடம் சீறும் காட்சி..!

இப்படத்திற்கு இசை சுந்தர்.சி.பாபு. நண்பனின் காதலியை கடத்தும் இடத்தில் சம்போ சிவ...சம்போ பாடல் காட்சிகளில் அனலடிக்க வைக்கிறது. ”கில்லி” படத்தின் துரத்தல் காட்சியில் வரும் ”அர்ஜுனரு வில்லு” பாட்டெல்லாம் இதனிடம் பிச்சை எடுக்க வேண்டும். வியாபார நோக்கத்திற்காக கதைக்கு தேவையில்லாமல் வைத்த ”யக்கா..யக்கா..” குத்துப்பாடல் படத்தின் தரத்தை குறைக்கிறது. ”ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா” திருவிழாப்பாடலும், சில காட்சிகளும் சுப்ரமணியபுரத்தை ஞாபகப்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை. கதிரின் கேமரா பல இடங்களில் புகுந்து விளையாடி இருக்கிறது. குறிப்பாக கோயிலில் இருந்து தொடங்கும் கடத்தலில் இருந்து, காதல் ஜோடிகளை பஸ்ஸில் ஏற்றி அனுப்பி வைப்பது வரை காட்சிகளில் தீப்பொறி பறக்கிறது. அந்த காட்சிகளில் சசிக்குமாரின் நடிப்பு வெகு அற்புதம். படம் முழுவதும் காட்சிகளிலோ, நடிகர்களின் நடிப்பிலோ ஓவர் ஆக்டிங் எதுவுமில்லாமல் இயல்பாய் இருக்கிறது. பெரும்பாலான காட்சிகள் குறிப்பாக காதல் காட்சிகளில் எதார்த்தமாக இருப்பதால் வெகுவாய் இரசிக்க முடிகிறது. இப்படத்தில் சசிக்குமாரின் தங்கையாக நடித்திருக்கும் அபிநயா பற்றி ஒரு அதிர்ச்சியான செய்தி..! அவர் தன் பெயருக்கு ஏற்றார் போல் அபிநயிக்க மட்டும் தான் முடியும். அவர் வாய் பேச முடியாதவர், காது கேளாதவர்.!! ஆனால் அந்த குறையே தெரியாமல் நடிக்க வைத்த சமுத்திரக்கனியை எத்தனை பாராட்டினாலும் தகும்.

இந்த படத்தை தயாரித்த மைக்கேல் ராயப்பன். விஜய்காந்த் கட்சியான தேமுதிக-வின் நெல்லை தொகுதி மக்களவை வேட்பாளராக போட்டியிட்டு தோற்றவர். அவர் தேர்தலில் இழந்த பணத்தை விட பல மடங்கு கூடுதலாகவே இந்த படம் அவருக்கு நிச்சயம் மீட்டுக்கொடுக்கும். திட்டமிட்ட திரைக்கதை, இயல்பான நடிப்பு, உறுத்தாத வசனம், கண்ணைக்கவரும் காட்சியமைப்பு ஆகியவற்றால் நாடோடிகள் நம்மை நகரவிடாமல் கட்டிப்போடுகிறார்கள். ஒரு நல்ல படம் எப்படி இருக்க வேண்டும் என்பதை இனியாவது இளைய ”தலைவலி”, புரட்சி மற்றும் புண்ணாக்கு நாயகர்கள் இந்த படத்தை பார்த்து புரிந்து கொள்ள வேண்டும்.!!


மொத்தத்தில் இந்த நாடோடிகள் நம்மை கவர்கிறார்கள்.!!



மதிப்பெண்: 72/100

கருத்துகள் இல்லை:

Related Posts with Thumbnails