நேரம்:

செவ்வாய், 8 டிசம்பர், 2009

Orphan - திரைவிமர்சனம்

நேற்றிரவு Orphan என்ற ஆங்கில த்ரில்லர் படம் பார்த்தேன். தரமான திரைக்கதை, வித்தியாசமான கதை, அழகான மற்றும் அதிர வைக்கும் காட்சிகள் என்று நம்மை ஆங்கிலப்படங்கல் மிக எளிதாக கட்டிப்போட்டு விடுகின்றன. வர வர பெரும்பாலான தமிழ் திரைப்படங்கள் எனக்கு பிடிக்காமல் போனதற்கு இது போன்ற எதுவும் படத்தில் இல்லாமல் போவது தான். அதை விட்டு விட்டு தமிழில் ஒரே படத்தில் காதல், சண்டை, சோகம், பாடல், காமெடி, ஹீரோயிஸம் என்று எல்லாம் கலந்து கொடுக்கும் மசாலா படம் பார்த்தால் எனக்கு வாந்தி தான் வருகிறது.

மிகக்குறைந்த கதாப்பாத்திரங்கள், விறுவிறுப்பான திரைக்கதை, அதிர வைக்கும் இறுதி முடிச்சு என்று இந்த படம் பார்ப்பவரை நிச்சயம் இந்த படம் அதிர வைத்துவிடும். இதன் கதை என்னவென்று பார்ப்போமா..? ஒரு அழகான குடும்பத்தில் ஜான் (Peter Starsaard ) என்ற தந்தை, கேட் (Vera Farmiga ) என்ற தாய், டேனியல் (Jimmy Bennett ) என்ற மகன், மேக்ஸ் (Aryana Engineer) என்ற காது கேளா, வாய் பேசா முடியா மகள் ஆகியோர் ரம்மியமான பனிப்பிரதேச வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள். கேட்டுக்கு 3-வது குழந்தை உருவாகி, அது குறைமாதத்தில் வயிற்றிலேயே இறந்து விடுகிறது. இதனால் பெரும் வேதனைக்குள்ளாகும் கேட் அந்த குழந்தையின் நினைவாக அதை தன் வீட்டிற்கு அருகிலேயே புதைத்து அந்த இடத்தில் ஒரு ரோஜா செடியை வளர்த்து அதில் பூக்கும் ரோஜாக்களை தன் குழந்தையை போல் பார்த்து வருகிறாள். அவளின் இறந்த குழந்தை பற்றிய மனக்கவலையை மறக்க குடி பழக்கம் தொற்றிக்கொள்ள டாக்டர் கவுன்சிலிங் செய்யும் நிலை வரை போகிறது. இந்த பிரச்சினைக்கெல்லாம் முடிவு காண அநாதை இல்லத்திலிருந்து ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பது என்று என்று தம்பதிகளுக்குள் முடிவாகிறது

அதன்படி அங்கிருக்கும் ஒரு அநாதை இல்லத்தில் எஸ்தர் (Isabelle Fuhrman) என்ற 12 வயது குட்டிப்பெண்ணை தத்தெடுத்து கூட்டி வருகிறார்கள். சொந்த செலவில் சூனியம் வைக்கும் கதையை நீங்கள் கேள்வி பட்டதுண்டா..! அந்த குழந்தையை கூட்டி வந்த அந்த குடும்பத்துக்கு அது நடக்கவில்லை, அதை விட விபரீதமாக நடக்கிறது. தத்தெடுத்த பெண்ணின் மேல் ஜான், கேட் இருவரும் அன்பை பொழிகிறார்கள். சிறிய பெண் மேக்ஸ் எஸ்தருடன் அன்பாய் ஒன்றி விடுகிறாள். கை, வாய் சைகை மூலம் சொல்வதை புரிந்து கொள்ளும் குழந்தை என்பதால் எஸ்தரும் சைகை பேச்சை கற்கிறாள். இதையெல்லாம் கவனிக்கும் பையன் டேனியலுக்கு ஏனோ ஆரம்பம் முதலே எஸ்தரை பிடிக்கவே இல்லை. தன் வெறுப்பை பல வழிகளில் வெளிக்காட்டுகிறான். எஸ்தரின் தோற்றம் 12 வயது பெண் குழந்தையாக இருந்தாலும் அவளின் மெச்சூரிட்டியும், திறமையும் மிகவும் அதிகமாக தெரிகிறது தம்பதிகளுக்கு. அவளுக்கு மிக அழகாக பெயிண்டிங் செய்ய வருகிறது, பியானோ வாசிக்க தெரிகிறது. பேச்சில் ஜெனரல் நாலெட்ஜ் பொங்கி வழிகிறது. உடையில் மற்ற குழந்தைகள் போல் இல்லாமல் மிகவும் வித்தியாசமாக உடை அணிகிறாள். எப்பொழுதும் கழுத்தில், கையில் பட்டை அணிகிறாள். இதை நினைத்து பெற்றோர்களுக்கு பெருமையாக இருக்கிறது.


இச்சூழ்நிலையில் எஸ்தரின் அளவுக்கு மீறிய அறிவு மற்றும் சந்தேகத்துக்குரிய சில நடவடிக்கைகள் கேட்டை கலங்க வைக்கின்றன. ஒரு முறை தன்னை அவமானப்படுத்திய பள்ளித்தோழியை உயரத்தில் இருந்து தள்ளி விட்டு கொல்ல முயல்கிறாள். அந்த பெண்ணுக்கு கால் முறிந்தாலும் அதிர்ஷ்டவசமாக பெண் பிழைத்துக்கொள்கிறாள். அவளின் கொலை முயற்சிக்கு ஒரே சாட்சி வாய் பேசா அந்த சிறு பெண் தான். ஆனால் தன் அக்காவை காட்டிக்கொடுக்க அந்த குழந்தை விரும்பாததால் அவள் தான் தள்ளிவிட்டாள் என நிரூபணம் ஆகாமல் போகிறது. இவளின் இது போன்ற சந்தேக நடவடிக்கைகள் அதிகமாக அதை பற்றி பேச அவளை http://i205.photobucket.com/albums/bb52/The_Playlist/more/2009/orphan_movie_image.jpgதத்தெடுத்த அநாதை ஆசிரம் காப்பாளரை வரவழைத்து பேசுகிறார்கள் பெற்றோர். அந்த காப்பாளர் அவர்களிடம் பேசிவிட்டு திரும்பி போகும் வழியில் அவரை தந்திரமாக வழி மறித்து கொடூரமாக கொலை செய்கிறாள் எஸ்தர். அதற்கும் சாட்சி அந்த ஊமை பெண் தான். ஆனால் இதை வெளியே சொன்னால் தாய் கேட்டை கொன்று விடுவேன் என்று மிரட்டியதால் குழந்தை அது பற்றி யாருக்கும் தெரிய படுத்தவில்லை. எஸ்தரின் மேல் சந்தேகப்படும் அண்ணன் டேனியலை அவனின் மர வீட்டின் உள்ளே வைத்து எரித்து கொலை செய்ய முயல்கிறாள். அப்போது கேட் அங்கே வந்து விடுவதா அவன் அதிலிருந்து தப்பினாலும், அவனின் உயிர் ஊசலாடும் நிலைக்கு போய் விடுகிறது.

ஏற்கனவே எஸ்தரின் நடவடிக்கைகளில் சந்தேகப்பட்ட கேட் அதன் பிறகு நடக்கும் மோசமான சம்பவங்களை கண்டு இவற்றிற்கும் எஸ்தருக்கும் தொடர்பு இருப்பதை கண்டு பிடிக்கிறாள். ஆனால் அதை தன் கணவன் ஜானிடம் சொன்னால் அவன் அதை நம்ப மறுக்கிறான். எஸ்தரை பிடிக்காததால் இப்படி அபாண்டமாக பழி சுமத்துவதாக சொல்கிறான். தன்னை ஏன் அம்மாவுக்கு பிடிக்கவில்லை என்று நடிக்கும் எஸ்தரிடம் "கேட்"டுக்கு ஏதாவது பரிசு கொடுத்து அவளின் மனசை கவர்வதற்கு முயற்சி செய்" என்று ஜான் ஐடியா கொடுக்க, அதற்கு எஸ்தர் தந்திரமாக கேட் தன் உயிராக வளர்த்த ரோஜா செடியில் இருந்த ரோஜாக்களை எல்லாம் பறித்து பூச்செண்டாக கொடுக்கிறாள். வேண்டுமென்றே தான் எஸ்தர் இப்படி செய்திருக்கிறாள் என்பதை உணர்ந்த கேட் அதிர்ச்சி, கோபம் கொண்டு அவளை அடிக்கும் நிலைக்கு போகும் போது ஜான் வந்து விலக்கி விடுகிறான்.

கேட்டின் மேல் கடும் கோபம் கொள்ளும் எஸ்தர் தன் தாய் கேட் மேல் பழியை போட தன் கை மணிக்கட்டு எலும்பை தானாக உடைத்துக்கொண்டு, தாய் அடித்ததில் தான் உடைந்து விட்டது என்று ஜானை நம்ப வைக்கிறாள். கேட் தான் உடைத்து விட்டதாக நம்பும் ஜான், அவள் மேல் ஆத்திரப்பட்டு அவளை பிரியும் மனநிலைக்கு தள்ளப்படுகிறான். கேட் மன விரக்தியில் திரும்பவும் மது குடிக்க கூட முடிவு செய்து பிறகு மனம் மாறுகிறாள். அதையும் ஜானுக்கு தெரிய வைத்து இருவருக்குள்ளும் பெரும் கலகத்தை ஏற்படுத்துகிறாள். அடுத்த குறியாக எஸ்தரின் அடுத்த குறி அவள் கொலை செய்த உண்மை அறிந்த ஹாஸ்பிடலில் இருக்கும் டேனியலை கொலை செய்வது. பிறகு அவளுக்கு பிடிக்காத தாய் கேட்டை காலி பண்ணுவது...!!! பிறகு வாய் பேசாத, காது கேளாத பிஞ்சு குழந்தையை கொல்வது என்று போகிறது எஸ்தரின் வெறி.!! அவளின் கொலை பட்டியலில் எதிர்பாராத விதமாக தந்தை ஜான் வந்துவிட வேறு வழியில்லாமல் http://i205.photobucket.com/albums/bb52/The_Playlist/more/2009/the-orphan-horror-movie.jpgஅவனையும் குத்திக்கொல்கிறாள்.

இங்கே ஒரு கேள்வி..!! ஒரு அநாதை பெண் குழந்தையின் மேல் இரக்கம், அன்பு கொண்டு அவளை தத்தெடுத்து கொண்டு வந்தவர்கள் கேட்டும், ஜானும். அன்பு மழையை பெய்து அவளுக்கு எந்த குறையும் இல்லாமல் பார்த்துக்கொள்கிறார்கள். ஆனால், எஸ்தர் அவர்கள் வீட்டுக்கு வந்து குடும்ப நிம்மதியை குலைத்ததும், தனக்கு பிடிக்காதவர்களை எல்லாம் ஒவ்வொருவராக தீர்த்துக்கட்டுவதும் ஏன் என்ற கேள்வி எல்லோருடைய மனதிலும் இப்போது நிற்கும். அங்கே தான் இருக்கிறது அதிர வைக்கும் முடிவு முடிச்சு.!! அதை நான் இங்கே சொன்னால் படத்தின் சுவராஸியமே தகர்ந்து போகும். அதனால் சொல்ல மாட்டேன். படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..!!

படத்தில் எஸ்தராக நடித்த Isabella Fuhrman-ன் நடிப்பு அபாரமானது. சாந்த சொரூபியாக எப்பொழுதும் காட்சியளிக்கும் எஸ்தர், கொலை வெறி வரும் போது முகம், செயல் எல்லாம் மாறுவதை மிக அழகாக செய்திருக்கிறாள். அதுவும் கடைசி காட்சி ட்விஸ்டும், அப்போது அவளின் தோற்றமும் நம்மை அதிர வைக்கிறது. வாய் பேச முடியா, காது கேட்காத அந்த குட்டிப்பெண் செம க்யூட். தன் அழகு சிரிப்பால் நெஞ்சை அள்ளுகிறாள். கடைசி காட்சியில் அக்கா எஸ்தர் அவளை கொல்ல அலையும் போது அந்த குட்டி தேவதை அங்குமிங்கும் ஓடி தப்பிப்பது மனசை நம் கனக்க செய்து பரிதாபத்தை அள்ளுகிறாள்.

இது மிக அருமையான படமென்றாலும் 18 வயதுக்குட்பட்டவர்கள் பார்க்க முடியாத படி சில காட்சிகள் உண்டு. ஆங்கில படங்களில் இது சர்வசாதாரணம் என்றாலும், இந்த படத்தில் அவற்றை வியாபார நோக்கத்திற்காக அந்த காட்சிகளை வைக்காமல் கதைக்கு அவசியமானது என்பதால் தான் டைரக்டர் Jaume Collet-Serra வைத்திருக்கிறார் என்பதை நம்மால் படத்தின் கடைசியில் உணர்ந்து கொள்ள முடிகிறது. எஸ்தரின் அளவுக்கு மீறிய அறிவு, திறமை, உடை உடுத்தும் பழக்கம், நடவடிக்கைகளுக்கு என்ன காரணம் என்பதை அறியும் பொழுது நம்மை பேரதிர்ச்சி தாக்குவதை தவிர்க்க முடியாது. இந்த படம் மனித வாழ்க்கையில் பங்கு பெரும் விஞ்ஞானம், உளவியல், குடும்பத்திற்குள் இருக்கும் அந்நியோன்யம் என்று எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்திருக்கிறது. நான் சமீபத்தில் பார்த்த படங்களில் இந்த ஆர்பன் சிறந்த திரில்லர் படம் என்பேன்.!! நீங்களும் பார்த்து விட்டு கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்..!!


மொத்தத்தில் இந்த அநாதை நம்மை அலற வைக்கிறாள்..!! 








பின்குறிப்பு: அதே போல் சமீபத்தில் பார்த்த இதற்கு இணையான சிறந்த தமிழ் த்ரில்லர் படம் ஈரம்..!!





என்றும் அன்புடன்,
ஜாஃபர் (இதயம்)

http://idhayampesukirathu.blogspot.com



கருத்துகள் இல்லை:

Related Posts with Thumbnails