நம் நாட்டில் உள்ள மிக முக்கியமான பிரச்சினைகளில் பெண் சிசுக்கொலையும் ஒன்று. விஞ்ஞானம் வளர்ந்த இந்த நவீன யுகத்திலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. படித்த குடும்பங்களில் கூட ஆண் குழந்தை என்றால் சந்தோஷப் படுவதும், பெண் குழந்தை என்றால் கவலைப்பட்டு, வெறுப்பதும் சர்வ சாதாரணமாகி விட்டது. அது மட்டுமல்லாமல் அந்த குழந்தையை பெறுவதை தாய் தான் நிர்ணயிப்பது போல எண்ணி அவளைக் கொடுமைப் படுத்துவதும்.. ஏன் கொலை கூட செய்வதும் நடக்கிறது. இதன் உண்மை நிலை பற்றி அறியாமல் நம்மவர்கள் செய்யும் அட்டகாசம் இருக்கிறதே சொல்லி மாளாது. நம்மில் இது பற்றி தெரிந்தவர்கள் நிறைய பேர் இருந்தாலும், தெரியாதவர்கள் சிலராவது இருப்பார்கள். அவர்களுக்கு இது உதவியாக இருக்கும். எந்த ஒரு விஷயத்திற்கும் பலதரப்பட்ட, எதிர்மறையான கருத்துக்கள், மூட நம்பிக்கைகள் இருப்பது இயல்பு. இந்த விஞ்ஞான உலகத்தில் எதையும் ராய்ந்து, உண்மை நிலை என்ன கண்டுபிடிப்பது என்பது சுலபமாகி விட்டது. எனவே விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப் பட்ட கருத்துக்களை ஏற்றுக்கொள்வது தான் ஏற்புடையதாக இருக்கும். சரி.. ! இனி நம் விஷயத்திற்கு வருவோம். கருவில் ஆண், பெண் பாலினம் எப்படி நிர்ணயிக்கப் படுகிறது..? அதைப் பற்றி கொஞ்சம் தெளிவாக காண்போம்.
குழந்தை பிறப்பை பொறுத்தவரை பாலினத்தில் மொத்தம் இரண்டே வாய்ப்புகளே. ஒன்று ஆண், மற்றது பெண் (அலி என்பது மிகவும் அரிதாக, மரபணுக்களுக்குள் நடக்கும் விபரீத மாற்றத்தினால் ஏற்படுவது. எனவே அதை நாம் விட்டு விடுவோம்). பெரும்பாலானாவர்கள் எண்ணுவது போல் ஆண், பெண் பாலினம் நிர்ணயிக்கப் படுவது விந்தணுக்களின் எண்ணிக்கையினால் அல்ல. ஒரு சொட்டு விந்தில் பல மில்லியன் கணக்கான விந்தணுக்கள் இருந்தாலும் அதில் ஒன்றே ஒன்று தான் கரு முட்டையை துளைத்து உள்ளே சென்று கருவை உண்டாக்குகிறது. விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகமிருக்குமானால் விரைவில் கரு உண்டாக அதிக வாய்ப்பிருக்கிறதே தவிர, வேறு எதற்கும் சம்பந்தமில்லை.
உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினத்திற்கும் (தாவரத்தையும் சேர்த்து) அதன் தனித்தன்மையை (originality) உணர்த்த மரபணுவில் ஒரு விஷயம் உண்டு. அதற்கு குரோமோசோம் (Chromosome) என்று ங்கிலத்தில் சொல்வார்கள். ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒரு குறிப்பிட்ட இரட்டைப்படை எண்ணில் மட்டுமே குரோமோசோமின் எண்ணிக்கை இருக்கும். அந்த உயிரின் ஆண்பாலும், பெண்பாலும் தன்னில் பாதியாக குரோமோசோமை தந்து தன் இன உயிரியை உருவாக்குகின்றன. உதாரணத்திற்கு பாலுட்டிகளில் மனிதன்-46 குரோமோசோம்கள், தாவரத்தில் அவரைச்செடி-16. இதில் மனிதன் தன் இன உயிரியான இன்னொரு குழந்தையை உருவாக்க ஆணிலிருந்து 23 குரோமோசோம்களும், பெண்ணிலிருந்து 23 குரோமோசோம்களும் சேர்ந்து மனித உயிராக வருகிறது. 46 குரோமோசோம் என்றால் அது மனித உயிரினமாக இருக்குமே தவிர வேறு எதற்கும் வாய்ப்பில்லை.
அடுத்து இதில் ஆண், பெண் பால் எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? பிறக்கப் போவது ஆணா, பெண்ணா என்பது ஆணிடமிருந்து தான் தீர்மானிக்கப் படுகிறது என்பது எவ்வளவு ஆச்சரியமான உண்மை..! எப்படியென்றால் மனிதனிடம் (பாலுட்டிகளிடம்) ஆணிடத்தில் எப்போதும் XY என்ற குரோமோசோம்கள் தான் இருக்கும். அதே போல் பெண்ணிடம் எப்போதும் XX என்ற குரோமோசோம்கள் தான் இருக்கும். அதாவது,
ஆண் - XY
பெண்- XX
கலவியின் அடுத்து நடக்கும் கரு உருவாக்கத்தில் ஆணிடம் உள்ள Y குரோமோசோம் பெண்ணிடம் உள்ள X குரோமோசோமுடன் (கவனிக்கவும்: பெண்ணிடமிருந்து X குரோமோசோம்கள் மட்டும் இருப்பதால் X மட்டும் தான் வரும்) சேர்ந்தால் (XY) அது ஆண் குழந்தை. அல்லது ஆணிடம் உள்ள X குரோமோசோம் பெண்ணிடம் உள்ள X குரோமோசோமுடன் சேர்ந்தால் அது பெண் குழந்தை.
பெண் (XX)-ல் X----------------
ஆண் (XY)-ல் Y----------------- ===> X+Y= XY (ஆண் குழந்தை)
ஆண் (XY)-ல் X-----------------
பெண் (XX)-ல் X---------------- ===> X+X= XX (பெண் குழந்தை)
இந்த வாய்ப்பாடு எல்லா மாமியார்களுக்கும் தெரிந்தால் பெண் குழந்தைகளைப் பெற்றதற்காக தன் மருமகள்களைக் கொடுமைப் படுத்த மாட்டார்கள். காரணம் எந்தக் குழந்தை பெறுவது என்பது அந்த மாமியார் பெற்ற தன் சீமந்த புத்திரன் கையில் தான் உள்ளது..! இதுவும் ஒரு வகையில் ஆண்டவனின் சித்து விளையாட்டுத்தான்..!!!
2 கருத்துகள்:
உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை இட்டால் மகிழ்வேன்..!!
மிக்க நன்றி
கருத்துரையிடுக