நேரம்:

சனி, 23 ஜனவரி, 2010

நிலவிலிருந்தும் தெரியும் நீ..ள..சுவர்..! (பகுதி - 03)



இந்த சுவர் சில இடங்களில் 7.8 மீட்டர் உயரத்திற்கும், 5.8 மீட்டர் அகலத்திற்கும் கிட்டத்தட்ட இன்றைய நகரங்களின் முக்கிய சாலைகளைப் போன்ற அகலத்துடன் இந்த சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இவ்வளவு உழைப்பு, செல்வம் எல்லாவற்றையும் உறிஞ்சியிருந்ததாலோ என்னவோ, இன்றைக்கும் இந்த சுவர்கள் எளிதில் உடைக்க இயலாதவைகளாக உறுதியுடன் காணப்படுகின்றன. அண்மையில் பவுடோ (Baotou) என்றழைக்கப்படும் நகரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இந்த சுவர் இருப்பதாக எண்ணிய சிலர் ஒரு மேம்பாலம் கட்ட வேண்டி, இந்த சுவருக்கு குண்டு வைத்து உடைத்துள்ளனர். இதில் சுமார் 7900 சதுர அடி பரப்புக்கு சுவர் இடிப்பட்டது என்றாலும் இதற்கு கணிசமான சக்தியைப் பயன்படுத்த வேண்டியிருந்ததாம். ஆனால் இந்த சுவர் இடிப்பு பாரம்பரியப் புகழைக் கெடுத்து விடும் என்பதால் சீனாவின் மைய அரசு முயற்சியில் இப்பகுதி மீண்டும் கட்டப்பட்டு இந்த சுவருக்கு வலுவூட்டியதுடன் ஏற்கெனவே காணாமல் அழிந்து போன பண்டைய அதிசயங்கள் போன்ற நிலையே இதற்கும் உருவாகாமல் தடுக்கப்பட்டுள்ளது.


சீனப் பெருஞ்சுவர் பற்றி இ‎ன்னும் சில சுவாரசியமான தகவல்கள்

தொடர்ந்து போரையும், இதனால் ஏற்பட்ட மனப் போராட்டங்களையும் சந்தித்து வந்ததாலோ என்னவோ தற்காப்பு நடவடிக்கைகள் பலவற்றில் சீனர்கள் அப்போதே ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். பாதுகாப்பு அரணாக எழுந்த சுவரையும் இதற்காக நன்றாகவே இவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள் எனவும் தெரிய வருகிறது. சுவரின் முழு நீளத்திலும் குறிப்பிட்ட சில இடைவெளியில் பாதுகாப்பு கோபுரங்களையும் இவர்கள் எழுப்பியிருந்தனர். இந்த பாதுகாப்புக் கோபுரங்களில் இருந்து மற்ற பகுதிகளுக்கு சமிக்ஞை தரும் ஏற்பாடுகளும் ஏராளமாக இருந்தன எனச் சொல்கின்றன குறிப்புகள். எதிரிகள் யாரும் படையெடுத்து வருவதை ஒரு பகுதியில் இருக்கும் காவலர்கள் அடையாளம் கண்டுவிட்டால், மற்ற பகுதிகளில் இருப்பவர்களுக்கு அதைத் தெரிவிக்க கோபுரத்தில் இருந்து புகை எழுப்புவார்களாம். இந்தப் புகை எழுப்ப காட்டுச் செடிகள், தழை மற்றும் நரிகளின் சாணம் போன்றவை பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை கிளப்பும் வித்தியாசமான புகையை வெளியேற்றவும் 'ஒருவழி', 'இருவழி' என பல புகை வெளியேற்றும் நுட்பங்கள் அந்நாளில் நடைமுறையில் இருந்துள்ளது.


இன்றைய நாகரிகத்தில் காங்கிரீட் கட்டிடங்களில் வலுவூட்ட பயன்படுத்தப்படும் இரும்புக் கம்பிகள் போன்ற தொழில்நுட்பம் அந்நாளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளதும் இந்த சுவர் கட்டுமானத்தில் தெரிகிறது. ஆனால் அப்போது கம்பிகளுக்கு பதிலாக சிவப்பு வில்லோ மரத்தின் நார்கள் இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. இத்துடன் கோபி பாலைவனப் பகுதிகளை ஒட்டிய இடங்களில் சுவர் எழுப்ப கற்கள் கிடைக்காத நிலையிலும் மணற்பாங்கான மண்ணைக் கொண்டே வேறு சில பொருட்களைச் சேர்த்து உறுதியான செங்கற்களைச் செய்யும் அறிவும் சீனர்களுக்கு இருந்திருக்கிறது என்பது சுவர் பற்றிய ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. இப்படி பல வழிகளிலும் பல நூதனத் தகவல்களை அந்நாளைய சீன மக்களின் அறிவியல் அறிவை, முன்னேற்றத்தை விளக்கும் இன்னும் பல விஷயங்களையும் சீனப் பெருஞ்சுவர் என்ற வரலாற்றுச் சின்னம் நமக்கு அடையாளம் காட்டுகிறது.

இப்படி தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் சீனா கலாச்சாரத்திலும், பண்பாட்டிலும் சிறந்து விளங்கும் இந்தியாவுக்கு பெரும் தலைவலியாகிப்போனது காலத்தின் கொடுமையென்று தான் சொல்ல வேண்டும்..!!



முற்றும்.....!






கருத்துகள் இல்லை:

Related Posts with Thumbnails