skip to main |
skip to sidebar
மனிதனைப் பொறுத்தவரை, அடுத்தவர்களை பாதிக்காத எந்த ஒரு விஷயத்தையும் செய்ய அவனுக்கு உரிமை உண்டு. உணவிலும் அப்படியே..! அவனுக்கு சைவம் பிடித்தால் சைவ உணவு உண்ணட்டும், அசைவ உணவு பிடித்தால் அசைவ உணவு உண்ணட்டுமே..! அதை வேண்டாம் என்று சொல்ல நாம் யார்..? (இந்த நேரத்தில் சைவ உணவை மட்டும் உண்ணும் கணவன், தன் மனைவி அசைவம் விரும்பி உண்டால் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்கிறார்கள். அந்த கணவன்மார்களுக்கு என் ஹேட்ஸ் ஆஃப்..!) அதனால் நமக்கு என்ன நஷ்டம்..? நாம் மாடு, யானை, குதிரை போன்ற விலங்குகளை வேலைகளுக்கு பயன்படுத்துகிறோம். கோழி, ஆடு போன்றவற்றால் உணவை தவிர, மனிதனுக்கு வேறு பயன் என்ன..? அதைக் கூட வேண்டாம் என்று சொன்னால் என்ன சொல்வது..? கடவுளால் அவை படைக்கப்பட்டதன் நோக்கம் மனிதனுக்கு உணவாகத்தான்.
தனக்கு அசைவம் பிடிக்காது என்பதற்காக ஊரில் உள்ள முனியாண்டி விலாஸ்களையும், செட்டி நாடு ஹோட்டல்களையும், டெல்லி தர்பார்களையும் (பட்டியல் நீண்டு கொண்டே போகும், இத்தோடு நிறுத்தி விடுகிறேன்) மூடி விட வேண்டும் என்று ஒருவன் நினைப்பது எவ்வளவு முட்டாள்தனமோ, அது போல் தான் அசைவம் சாப்பிடக்கூடாது என்று அடுத்தவர்களை கட்டாயப்படுத்துவதும். இவ்வளவு அசைவத்திற்கு ஆரத்தி எடுத்து பேசும் நான் ஒரு சைவப் பிரியன் என்பது உங்களுக்கு தெரியுமா..? எனக்கு மிகவும் பிடித்த உணவு வற்றல் குழம்பும், கத்திரிக்காய் பச்சடியும்..! ஆனால், நான் யாரையும் அசைவம் சாப்பிடக்கூடாது என்று வற்புறுத்தியது கிடையாது..! வற்புறுத்தவும் கூடாது. என் உடன்பிறந்த சகோதரன் பறப்பதில் விமானத்தையும், கடலில் மிதப்பதில் கப்பலையும் தவிர வேறு எல்லாவற்றையும் வெளுத்துக் கட்டுவான் (அவன் சாப்பிடும் போது எதற்கும் நான் கொஞ்சம் எட்டியே நிற்பேன்..!!! விட்டால் என்னையும் விழுந்து, கடித்து தின்று விடுவானோ என்று பயமாக இருக்கும்..!!). ஊரில் இருக்கும் போது நான் வெளியூர் போனால் மதிய நேரம் என்னை கற்பகம் ரெஸ்ட்டாரண்டிலோ, லஷ்மி நாராயணபவனிலோ காணலாம். காரணம், எங்கள் வீட்டில் பெரும்பாலும் அசைவ உணவே சமைக்கப்படும் என்பதால், எனக்கு பிடித்த சைவ உணவை ஹோட்டலில் “வெட்டி” விட்டுத் தான் வீட்டுக்கே போவேன்..!! (ஊரில் நிறைய சைவ ஹோட்டல்களை வாழ வைத்த பெருமை எனக்குண்டு..!).
அரசின் உத்தரவால் விலங்குகள் பலி கொடுக்கப்படுவது நின்று விடும் என்றா நினைக்கிறீர்கள்..? நிச்சயம் நடக்காது..!! அதே போல் நாட்டில் விலங்கு, பறவைகளை பலி கொடுத்து நடத்தப்படும் இறைச்சிக் கடைகளை தடை செய்ய தைரியம் உண்டா இந்த அரசுக்கு..! (அப்படி செய்தால் கசாப்பு கடைக்காரர்களின் கத்திக்கு புது வேலை வரும்..!!). நம் மாநிலத்தில் பலி கொடுக்கப்படாவிட்டால், அவை வேறு இடத்தில் பலி கொடுக்கப்பட்டு, நாம் உண்ணாத அவற்றை வெளிமாநிலக்காரனோ அல்லது வெளிநாட்டுக்காரனோ உண்பான். இதனால் உள்நாட்டில் இறைச்சியின் விலை அநியாயத்திற்கு அதிகரிக்கும். காய்கறிகள் உண்பவர்கள் அதிகமாவதால் அதை ஈடு செய்யும் அளவுக்கு உற்பத்தி குறைவு என்பதால் காய்கறி விலையும் எகிறும். இறைச்சியை விற்பனை செய்து பிழைக்கும் பல குடும்பங்கள் நலிவடையும் (அவர்களும் தீட்டிய கத்தியை தூர வீசாமல் இன்னும் நன்றாக கூர் தீட்டிக் கொண்டு சாலைகளில் நடமாட ஆரம்பித்தால், நமக்கெல்லாம் சனி உச்சம் தான்..!). இவை தான் இந்த சட்டத்தினால் ஏற்படப் போகும் பலன்கள்..! ஜனநாயக நாட்டில் இது போன்ற அடாவடித்தனமான அதிகார துஷ்பிரயோக சட்டங்கள் அநாவசியமானவை. அப்பாவி மக்கள் நாட்டில் பாலாறும், தேனாறும் ஓடவேண்டும் என்று ஆசைப்படவில்லை. அவர்களின் ஒரே கனவு வறுமையற்ற, நிம்மதியான வாழ்க்கை. அதை ஆட்சியாளர்கள் அளிப்பது என்பது அத்தனை கஷ்டமான விஷயமும் இல்லை. அவர்களின் ஏக்கத்தை நிறைவேற்ற அவர்களின் எண்ணங்களை நன்கு அறிந்த, வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்கள் தெரிந்த, முக்கியமாக சமூகத்தின் மேல் அன்பு கொண்ட இதயம் வேண்டும்.
இப்போதெல்லாம் ஆட்சியாளர்கள் பதவியை சுயலாபத்திற்கும், ஆடம்பர வாழ்க்கைக்கும், அரசியல் எதிரிகளை பழி தீர்க்கவும் பயன்படுத்துகிறார்கள். அதற்காக அவர்கள் கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது தான் வலிக்கிறது. அரசியலுக்கு வந்து வாய்ப்பு கேட்கும் ஒவ்வொருவரையும் “இவராவது வந்து நமக்கு நல்லது செய்யமாட்டாரா..?” என்ற என்ற நம்பிக்கையில் தான் தேர்ந்தெடுத்து, ஆட்சிப் பொறுப்பை கையில் கொடுக்கிறார்கள். ஆனால், அவர்களும் “பழைய குருடி, கதவை திறடி” கதையாக மற்றவர்கள் செய்ததையே தொடர, மக்கள் நம்பிக்கையை இழந்து வருகிறார்கள். அந்த நம்பிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதால் பதவிக்கு எந்த வகையிலும் பொருத்தமில்லாத, தகுதியில்லாதவரைக் கூட தேர்ந்தெடுக்க மக்கள் தயாராகி விடுகிறார்கள். இந்த போக்கு நாட்டிற்கு தீமையையே விளைவிக்கும் என்பதில் எந்த வித சந்தேகமுமில்லை. ஒரு நாடு சிறக்க வேண்டுமென்றால் அந்நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் தனி மனித ஒழுக்கம் சரியான முறையில் பேணப்பட வேண்டும். அதனால் உங்களை சுத்தப்படுத்துங்கள் வீடு சுத்தமாகும், உங்கள் வீட்டை சுத்தப்படுத்துங்கள் தெரு சுத்தமாகும், உங்கள் தெருவை சுத்தப்படுத்துங்கள் நாடே சுத்தப்படும்..! நம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படவேண்டும், தவறை தட்டிக் கேட்கும் மனப்பான்மை வளர வேண்டும், திறமைக்கு, தகுதிக்கு மதிப்பு கொடுக்கும் குணம் வரவேண்டும்..! நம் தாய் திருநாடு ஒரு நாள் உலக அரங்கில் முதலிடம் வகிக்கும் என்ற நம்பிக்கையை உள்ளடக்கிய கனவோடு, அந்த நல்ல நாளுக்காய் ஏக்கத்துடன் காத்திருக்கிறேன் ஒரு உண்மையான இந்தியக் குடிமகனாய்..!! மெய்ப்படுமா என் கனவு..???
முற்றும்..!
1 கருத்து:
பொருளாதார முறைகளில் .....
நீங்கள் சொல்வதை ஏற்று கொள்ளலாம்
கருத்துரையிடுக