நேரம்:

வியாழன், 21 ஜனவரி, 2010

நிலவிலிருந்தும் தெரியும் நீ..ள..சுவர்..! (பகுதி - 02)




இன்றைய உலக வர்த்தக மய  சூழ்நிலையில் 'வேறுவழியில்லை' எனப் புரிந்துகொண்ட சீனா தங்களது கம்யூனிசக் கட்டுப்பாட்டுகளில் பல மாற்றங்களைச் செய்துகொண்டு பொருளாதாரக் கொள்கை வட்டங்களை உடைத்துக் கொண்டு வெளியே வர முயன்றதும், உலக நாடுகள், உலகச் செல்வம் என எல்லாம் அங்கே பாய்வது போலத்தான் அந்நாளிலும் ஒரு பாய்ச்சல் சீனாவை நோக்கி..!ஆனால், அன்று பாய்ந்தது சீனாவின் எதிரிகள். சீனாவில் இருந்த செல்வச் செழிப்பைக் கொள்ளையடிக்க, இவர்கள் வரிசையாக அடுத்தடுத்து பாய்ந்தார்கள். ஓய்வின்றி எந்நாளும் இவர்களுடன் போரிட்டு எல்லைகளைக் காத்துக் கொள்ளவே பெரும்பாலான நேரத்தைச் செலவிட வேண்டியுள்ளது என எண்ணிய அந்நாளை சீன மன்னர்கள் எதிரிகளுக்கு 'செக்' வைக்க எண்ணி எழுப்பியதுதான் இந்தச் சுவர்
.
ஆனால் இன்றைக்கு உலக அதிசயமாகத் திகழும் இந்தச் சுவரோ சுற்றுலா விரும்பிகளைக் கவரும் அளவு சுவாரஸ்யமான தகவல்களை உள்ளடக்கியதாகத் திகழ்வதுடன், உலக நாடுகள் பலவற்றிலிருந்து இந்நாட்டுக்குத் தேவையான அந்நியச் செலாவணியையும் ஈட்டித் தரும் கற்பக விருட்சமாகவும் விளங்குவது கவனிக்கத்தக்கது. அடுத்து இச்சுவற்றின் சரித்திரம் பற்றி பார்ப்போம்.

சீனப் பெருஞ்சுவர் சரித்திரம்

கிழக்கில் கொரியா நாட்டு மலைப் பகுதிகளில் பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்கும் இந்தச் சுவர் மேற்கு திசை நோக்கி ஓடி 'அப்பாடா' என ஆடி அமர்வது கோபி பாலைவனப் பகுதிகளுக்கு முன்பு. கி.மு. 221-ல் சீனாவின் பகுதிகளை ஆண்ட...'க்வின்' பேரரசை உருவாக்கிய 'க்வின் ஷி ஹாங்' என்ற அரசன்தான் இந்த சுவர் எழுப்ப அட்சரம் போட்டாராம். இவரது பேரரசு 3000 மைல் நீளத்துக்கு வால் போல நீண்டிருந்தால் மனிதனால் எப்படி எல்லாப்பகுதிகளையும் கட்டுப்படுத்த முடியும் பாவம்..! இதற்கும் இந்த ஆள் ஒன்றும் அத்தனை 'லேசுப்பட்டவன் அல்ல' என்கிறது சீனக் குறிப்புகள். சீன அறிஞரான 'கன்·பூஷியஸ்' எழுதிவிட்டுப் போயிருந்த அரசியல் பாடங்கள் மக்களை திசைதிருப்பி தடம் மாற்றி விடுகின்றன என்று சொல்லி அவற்றை எல்லாம் தேடிப்பிடித்து தீ வைத்து எரித்த கொடுங்கோல் ம‎ன்னன் இவர். பேரரசை விரிவாக்குகிறேன் பேர்வழி என போரிட்டு, அதில் போர்க் கைதிகளாகச் சிக்கியவர்களையும், உள்நாட்டில் குற்றம் சுமத்தப்பட்ட சிறைக் கைதிகளையும் அடிமைகளாக நடத்தி அவர்களின் வியர்வையில்தான் இந்த சுவர் எழும்பத் தொடங்கியிருக்கிறது. ஆரம்பத்தில் நாளொன்றுக்கு 4 அங்குல உயரமும், 1 மைல் நீளமும் என சுவர் வளர்ச்சி காணத் தொடங்கியது எனத் தெரிகிறது. ஆனால் அவர் இறந்தவுட‎ன் 'இதற்காகத்தான் காத்திருந்தேன்' என்பது போல அந்நாட்டு எதிரி 'ஷியாங் நூ' என்பவன் சீனா மீது படையெடுத்து கொள்ளையடித்துள்ளான். அவனைப் போன்ற பலரிடமிருந்தும் நாட்டையும், அதன் செல்வத்தையும் காக்க கிட்டத்தட்ட அடுத்த 70 வருஷங்கள் வரை போராட்டம் நடந்துள்ளது. அதன்பின் இதில் வெற்றிகண்ட 'ஹீன்' பேரரச ராஜாக்கள் மீண்டும் சுவர் கட்டுமானத்தில் கவனம் செலுத்தியுள்ளனர். இப்பேரரசின் சிறந்த அரசர் என கூறப்படும் 'ஹீன்--டி' மட்டும் 300 மைல் நீளத்திற்கு இந்த சுவரை நீட்டியிருக்கிறார். 

ஆனாலும் கூட இந்த அதிசயத்தின் குறிப்பிடத்தக்க வளர்ச்சி, முன்னேற்றம் என குறிக்கப்பட்டுள்ளது இறுதியாக வந்த 'மிங்' பேரரசு காலத்தில் உருவான சுவற்றைத்தான். கி.பி. 1360-களின் பிற்பகுதியில் உருவான இந்த பேரரசு காலத்தில் தொழில்நுட்பம் கணிசமான முன்னேற்றம் கண்டிருந்தது. மற்ற இரு பேரரசு காலத்தில் உருவான மொத்த நீளத்தை விடவும் அதிக நீளத்திற்கு இந்த அதிசயத்தை வளர்த்து விட்டவர்கள் இவர்கள்தான். முந்தைய காலத்தில் ஆங்காங்கே மலை, காடு பகுதிகளில் விடப்பட்ட இடைவெளிகளை எல்லாம் நிரப்பும் நோக்கில் இந்த சுவரை இட்டு நிரப்பி இணைப்பு கொடுத்தது இவர்களது காலத்தில்தான். மலைப் பிரதேசங்கள் சிலவற்றில் 70 டிகிரி கோணத்தில் இந்த சுவரை மலையேறி உச்சி நோக்க வைத்ததும் இவர்களே. இதற்காகும் ஏராளமான செலவுக்காக சீனாவின் பாரம்பரிய பட்டு, வாசனைப்பொருட்கள், டீ உள்ளிட இன்ன பிற பொருட்களை வெளிநாடுகளுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து பொருள் ஈட்டி வந்திருக்கிறார்கள், 'மிங்' பேரரசுகாலத்தில். கூடவே கட்டி முடித்த சுவர் பகுதிகளில் பாதுகாப்புக்காக ஆங்காங்கே பீரங்கிகளையும் வாங்கி வந்து நிறுவி நாட்டை வலுப்படுத்தியிருக்கிறார்கள்..!



தொடரும்.........



2 கருத்துகள்:

தம்பி.... சொன்னது…

அதெல்லாம் பீலான்னு விஞ்ஞானிகள் Already நிருபிட்சிட்டாங்க, பூமிலேர்ந்து 3 லட்சம் கிலோ மீட்டர் தூரம் உள்ள நிலவுல 5 கிலோ மீட்டர் உயரத்திற்கு மலைகள் இருக்காம், பூமிலேர்ந்து பார்க்கும் போது அது தெரியுதான்னு ஹாய் மதன் 4 பாகத்துல சொல்லிருக்காரு பாஸ்...

sathishsangkavi.blogspot.com சொன்னது…

நல்ல பதிவு... புதிய செய்தி..

Related Posts with Thumbnails