நேரம்:

ஞாயிறு, 17 ஜனவரி, 2010

நிலவிலிருந்தும் தெரியும் நீ..ள..சுவர்..! (பகுதி - 01)





நண்பர்களே..!

நடைமுறை வாழ்க்கையில் சாதாரணமாக நிகழாத விஷயம் நிகழ்ந்தால் அதை நாம் அதிசயம் எ‎ன்கிறோம். அது போல் எல்லோராலும் செய்ய முடியாத ஒரு விஷயத்தை தனி மனிதனோ அல்லது குழுவோ செய்யும் போது அந்த விஷயத்தையும் அதிசயம் என்கிறோம். அது போல் மனிதனால் உருவாக்கப்பட்ட உலக அதிசயங்களைப் பற்றி கொஞ்சம் பேசுவோமா..?

உலக அதிசயங்களைப் பொருத்தவரை இரண்டு விதமாக ‏பிரிக்கலாம். 1. பண்டைய கால அதிசயங்கள் (Ancient Wonders)  2. நவீன கால அதிசயங்கள் (Modern Wonders). அவை எ‎ன்னென்ன....??

I. பண்டைய கால அதிசயங்கள் (Ancient wonders)
    1. எகிப்து பிரமிடுகள் (Egypt Pyramids)
    2. பாபிலோன் தொங்கும் தோட்டம் (Hanging gardens of Babylon)
    3. ஒலிம்பியா ஜீயஸ் சிலை (Statue of Zeus at Olympia)
    4. எபிசஸ் ஆர்டிமிஸ் கோவில் (Temple of Artemis at Ephesus)
    5. ஹாலிகர்னாஸஸ் மசூதி (Mosque at Halicarnassus)
    6. ரோட்ஸ் கொலோஸ்ஸஸ் சிலை (Colossus Statue at Rhodes)
    7. அலெக்ஸாண்ட்ரியா கலங்கரை விளக்கம் (Lighthouse at Alexandria)

இந்த பட்டியல் ஒருவர் தயாரித்தது அல்ல. பல கிரேக்க அறிஞர்கள் பல்வேறு தருணங்களில் தொகுத்து பிறகு ஒரு வழியாக முடிவு செய்யப்பட்ட பட்டியல்.


நவீன அதிசயங்கள் பற்றி சரியான, தெளிவான கருத்து  இல்லை. அவரவர் வசதிக்கும், இரசனைக்கும் ஏற்ப தொகுத்துக்கொண்டிருக்கிறார்கள். அவற்றில் பெரும்பாலானோரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நவீன அதிசயங்களை கீழே கொடுத்திருக்கிறே‎‎‎‎‎‎‎‎ன்.

II. நவீன அதிசயங்கள் (Modern wonders)
    1. இத்தாலியின் பிசா சாய்ந்த கோபுரம் (Pisa’s Tower)
    2. இந்தியாவின் தாஜ் மகால் (India’s Tajmahal)
    2. சீனப்பெருஞ்சுவர் (Great Wall of China)
    4. அமெரிக்காவின் எம்பயர் ஸ்டேட் கட்டிடம் (Empire State Building)
    5. கிரேக்க நாட்டில் உள்ள பார்த்தினான் (Greek’s Parthinan)
    6. ரோம் நகரத்தில் உள்ள கொலோசியம் (Rome’s Colosium)
    7. அமெரிக்காவின் லிபர்டி சிலை (America’s Liberty Statue)

சாரி..! இந்தப் பட்டியலில் 8-வது உலக அதிசயமாக ஐஸ்வர்யா ராய்-ஐ சேர்க்க முடியாது. பிறகு வரலாற்றுக்கு துரோகம் செய்தவ‎ன் ஆகிவிடுவேன்...!!

எல்லா உலக அதிசயங்களைப்பற்றியும் ஒரே நாளில் தெரிந்து கொள்ள நமக்கு நேரம் போதாததால், இன்று சீனப்பெருஞ்சுவர் பற்றி மட்டும் காண்போம்.


சீனப் பெ...ரு...ஞ்...சு...வ...ர்

பண்டைய உலக அதிசயங்களில் மிக மூத்தது எகிப்திய பிரடுகள் என்றால், நவீன கால அதிசயங்களில் “மூத்தவன் நான்தான்” என மார் தட்டக் கூடிய பெருமை உடையது சீனப் பெருஞ்சுவர். ஆமாம். இது கிட்டத்தட்ட 2200 ஆண்டு கால சரித்திரம் கொண்டது இந்தச் சுவர்..! இத்துடன் சீனப் பெருஞ்சுவருக்கு இன்னொரு தனி சிறப்பும் உண்டு. அது நிலவில் கால் வைத்த முதல் மனிதன் அங்கிருந்து பார்த்தபோது பூமியில் மனிதனால் உருவாக்கப்பட்ட அமைப்பு என அடையாளம் காண முடிந்த ஒரே “நிஜ அதிசயம்” என்று சொல்கிறார்கள்.  சுமார் 4200 மைல் (கிலோ மீட்டர் கணக்கில் 6757.8 கி.மீ..!) நீளத்திற்கும் கூடுதலான நீளம் கொண்டது இந்த மகா...... சுவர். டெல்லியிலிருந்து ரோம் நகரத்துக்கு விமானம் மூலம் பறந்தால் கூட இந்த தூரத்தைவிட குறைவான தூரம்தான் பயணம் செய்ய வேண்டியிருக்கும் என்றால் பாருங்களேன்..! ஆனால், இந்த சுவர் ஒரே நேர் கோடாய் இல்லாமல் அங்கங்கே வளைந்து, நெளிந்து, சுருண்டு, பள்ளத்தில் வீழ்ந்து, மீண்டும் சில இடங்களில் மலையேறி எ‎ன்று எல்லா ஜாலங்களையும் காட்டிக் கொண்டே தொடர்வதால் குறைந்த நிலப்பரப்பிவேயே அடங்கிப் போய் இருக்கிறது.

மற்ற எந்த அதிசயமும் போலன்றி இதைக் கட்டி முடிக்க 1800 ஆண்டுகள் பிடித்தன என்பதே இன்னொரு கவனிக்கத்தக்க அம்சம். கி.மு. 221-ல் தொடங்கிய இந்த சுவர் கட்டுமானம் கி.பி.1644 வரை நடந்தாக சரித்திரம் சொல்கிறது. அதாவது சீனாவை வேவ்வேறு கால கட்டங்களில் ஆண்ட மூன்று பேரரசுகளின் வாரிசுகள் பலரும் இந்தச் சுவரின் முக்கியத்துவம் அறிந்து இதில் கவனம் செலுத்தியுள்ளனர்.

காலச் சூழல் மாறியபடியே அடுத்தடுத்த சந்ததிகளின் தொழில்நுட்ப அறிவு வளர்ச்சிக்கு ஏற்றபடி இந்தச் சுவரின் பகுதிகளிலும் அதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள், கட்டப்பட்ட முறை என பலவற்றிலும் முன்னேற்றங்கள் காணப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. அது சரி..! இப்படி காலங்காலமாக அடுத்தடுத்து வந்த பலரும் எதற்காக இப்படி ஒரு நீளச் சுவரை எழுப்பக் கங்கணம் கட்டியது போல செலவிட்டார்கள் என்ற கேள்வி எழுகிறதல்லவா? இந்தச் சுவருக்கான அவசியம் அப்போது இருந்திருக்கிறது..! அது ஒரு சொல்ல மறந்த கதை..! (தங்கர் பச்சானின் படமல்ல இது..!)



தொடரும்.........

கருத்துகள் இல்லை:

Related Posts with Thumbnails