நேரம்:

செவ்வாய், 26 ஜனவரி, 2010

பலி Vs பசி - 01



நண்பர்களே..!

நான் இங்கே எழுதியிருப்பவை நாட்டுப்பற்று கொண்ட, சமூகத்தின்பால் அக்கறை கொண்ட, மானிட ஒற்றுமையில் ஆர்வம் கொண்ட, மனிதர்களை ஜாதி, மதம், இனம், மொழி கடந்து நேசிக்கும் ஒரு சராசரி மனிதனின் மனதில் ஏற்பட்ட எண்ணச் சிதறல்கள் மட்டுமே தவிர, வேறு எதுவும் இல்லை..! இதற்கு நீங்கள் எந்த வர்ணமும் பூச மாட்டீர்கள் என்று நம்புகிறேன். இது தொடர்பில் உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை, குட்டுக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நீங்கள் கொடுக்கும் எதையும் ஏற்றுக் கொள்ள நான் தயாராக இருக்கிறேன். எனவே நம் முன் இருக்கும் இரும்புத் திரை விலக்கி தாராளமாய் விமர்சியுங்கள்..! நான் ஏராளமாய் மகிழ்வேன்..!! சரி..! இனி, நம் விஷயத்திற்கு போவோம்.

கடவுளுக்கு விலங்குகளை, பறவைகளை காணிக்கையாக பலியிடுவது குறித்தும், நம் நாட்டில் நிலவும் சைவ, அசைவ வேறுபாடு குறித்தும் பதிவெழுத நெடுநாட்களாக நினைத்திருந்தேன். இன்று சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது.  காணிக்கை கொடுப்பது சரியா எ‎ன்பதற்கு மு‎ன், அவை ஏன் பலியிடப்படுகிறது என்பதை பார்க்க வேண்டும். பொதுவாக வழிபாட்டுத் தலங்களில் பலியிடுதல் எ‎ன்பது நேர்ச்சையை நோக்கமாக கொண்டது மட்டுமே..! அதாவது, தான் வேண்டுவதை நிறைவேற்றினால், அதற்கு பிரதிபலனாக ஆடு, கோழி உள்ளிட்ட உயிரினமோ அல்லது அ·றிணையான சில்லரை காசிலிருந்து, விலை மதிப்புள்ள ஆபரணங்கள்வரை தருவதாக சொல்லி கடவுளுக்கும், மனிதனுக்கும் இடையில் செய்யப்படும் ஒரு ஒப்பந்தம் தா‎ன் நேர்ச்சை என்பது. இதில் நேர்ச்சைக்கும், காணிக்கைக்கும் ஒரு சிறிய வித்தியாசம் உண்டு. ஒரு வேண்டுதலின் பொருட்டு கடவுளுக்காக செய்யப்போவதாக சொல்லப்படும் அட்வான்ஸ் புக்கிங் தான் நேர்ச்சை..! அப்படி வேண்டிக் கொண்டது நிறைவேறினால், சொன்னபடி வேண்டுதலை நிறைவேற்றுவது காணிக்கை (இந்த நேர்ச்சைக்கும், காணிக்கைக்கும் எந்த மதங்களும் விதி விலக்கல்ல..!). பகுத்தறிவு படி பார்த்தால் நேர்ச்சை மற்றும் காணிக்கையில் அர்த்தமில்லை எ‎ன்றாலும் மனிதனின் மன திருப்திக்காக பகுத்தறிவு கடந்து செய்யக்கூடிய இது போன்ற சில விஷயங்களை ஆராய்வது ஏற்புடையது ஆகாது எ‎ன்றாலும், அது கடவுளோடு சம்பந்தப்படுத்தப்படும் போது தா‎ன் அங்கே முரண்பாடு தோ‎ன்றுகிறது..!.

இவ்வாறு கடவுளுக்கு காணிக்கை செய்யப்படும் எந்தப் பொருளையும் கடவுள் உண்பதில்லை அல்லது உபயோகப்படுத்துவதில்லை (நம்மிடம் அவர் கேட்பதும் இல்லை எ‎ன்பது உபரி தகவல்..!). அதாவது, நாமாகவே ஒரு கற்பனையை செய்து கொண்டு, கடவுளை “கவனித்து” காரியங்களை கைக்குள் அட‎க்க நினைக்கும் நம் அறியாமையின் வெளிப்பாடு தான் நேர்ச்சையும், காணிக்கையும் (இதனால் தா‎ன் இன்னும் திருப்பதி உண்டியல் “ஹவுஸ்·புல்” கவும், உலகின் பணக்கார கடவுளாக திருப்பதி வெங்கடாஜலபதி இருக்கவும் காரணமாய் இருக்கிறது). மனிதர்கள் மன நிறைவிற்காக கடவுளுக்கு காணிக்கை அளிக்கிறார்கள். அவர்களுடைய நோக்கம் சிறந்தது எ‎ன்றாலும், அதை அடைய அவர் போகும் வழி சரியானதா என்பதை நான் சிந்திக்க வேண்டும். கடவுளின் கருணைப் பார்வை நமக்கு கிட்ட காணிக்கை அளிப்பது தான் சரி என்றால் தாலுகா ஆஃபீஸ் பியூனுக்கும், தன்னுடைய மகாசக்தியால் உலகத்தை காக்கும் கடவுளுக்கும் என்ன வித்தியாசம் என்று சொல்லுங்கள். எந்த தேவைகளும் இல்லாத கடவுளுக்கு, நாம் உண்டியலில் போடும் ஒரு ரூபாயும், இரண்டு ரூபாயும் எதற்கு..? உண்மை என்னவென்றால், கடவுளின் பெயரைச் சொல்லி சமூகத்தை கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் சில நயவஞ்சகர்களின் நாச வேலை இது..! கடவுளின் பெயரைச் சொல்லி கௌரவமாக பைசா பார்ப்பது இன்று நாட்டில் முதல் போடாத முக்கிய  பிஸினஸாக இருந்து வருகிறது. நாம் கடவுளின் அருளை அடைவது ஒன்றும் கம்ப சூத்திரம் அல்ல. நல்லதை மட்டும் செய்தால் வெகு சுலபமாக கடவுளி‎ன் அருளை அடையலாம்..! கடவுளுக்கு காணிக்கை அளிப்பதாக நினைத்துக் கொண்டு, நாம் நாசகாரர்களுக்கு அளிக்கும் பணத்தில் ஏழைகளுக்கு கொடுத்து அவர்களின் வாழ்வில் ஒளியூட்டி, கடவுளி‎ன் கருணைப்பார்வையை வெகு சுலபமாக பெறலாமே..! சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் காணிக்கை எ‎‎ன்பது நம்முடைய சுயநலத்தையும், பேராசையையும் வெளிச்சம் போட்டு காட்டும் ஒரு கண்ணாடி..!

அடுத்து விலங்குகள் மற்றும் பறவைகளை கடவுளுக்கு காணிக்கை கொடுப்பது குறித்து முன்பு அரசின் தடை கூட இருந்தது. ஆடு, மாடு உள்ளிட்டவற்றை உண்ணாத பிரிவினர் கூட நம்மிடையே இருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் என்ன..? உயிர்களைக் கொல்வது பாவம் எ‎ன்பதாலா..? ஆமாம், அது தா‎ன் உண்மை என்றால் எனக்கு சிரிப்புத்தா‎ன் வருகிறது. உயிர் எ‎ன்பது விலங்குகளுக்கு மட்டும் உரியதா.? அப்படியெ‎ன்றால் தாவரங்களுக்கு உயிர் இல்லையா..? உயிர் இல்லாமலா அவை முளைத்து, துளிர்த்து, கிளைத்து, செடியாகி, மரமாகி, காய்த்து தன் வாழ்நாள் முடிந்தவுட‎ன் மற்ற உயிரினங்கள் போலவே செத்துப் போகிறது..? சரி, தாவரங்களை விட்டு விடுவோம். உலகில் ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவை மட்டுமா உயிருள்ளவை..? நாம் அருந்தும் நீரில் எவ்வளவு பாக்டீரியாக்கள் உள்ளது தெரியுமா..? நாம் சுவாசிக்கும் காற்றில் எவ்வளவு நுண்ணியிரிகள் உள்ளன தெரியுமா..? அதையெல்லாம் கொல்கிறோமே..! அது பாவமில்லையா..? நியாயம் எ‎ன்பது கண்ணுக்கு தெரிந்த உயிரினத்திற்கு மட்டும் தானா..?  இப்படி ஆடு, மாடு, கோழி போன்ற உயிர்களை பலியிடுவதை, உண்ணுவதை தடுக்க நினைப்பவர்கள் மதக்கலவரம், ஜாதிக்கலவரம், வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் மூலம் ஆறறிவு உயிர்கள் ஆயிரக்கணக்கில் அநியாயமாய் பலி கொள்ளப்படுகிறதே, அதை எந்த சட்டம் போட்டு அல்லது எப்படி தடுக்கப் போகிறார்கள்..? நம் நாட்டில் ஐந்தறிவு விலங்குகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கூட ஆறறிவு மனிதனுக்கு கொடுக்கப்படுவதில்லையே அது ஏ‎ன்..? இந்தக் கேள்விக்கு மேனகா காந்தியால் கூட பதில் சொல்ல முடியாது. முதலில் நாம் கடவுள் படைப்பில் உள்ள உயிரினங்களின் வாழ்க்கை தத்துவத்தை புரிந்து கொள்ளவேண்டும். இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு உயிரும், மற்ற உயிர்களை சார்ந்தே வாழ்கிறது. வாழ்ந்தே ஆக வேண்டும்..! தாவரம் இல்லையெ‎ன்றால் தாவர உண்ணிகளுக்கு வாழ்க்கையில்லை. விலங்குகள் இல்லையெ‎ன்றால் ஊண் உண்ணிகளுக்கு வாழ்க்கையில்லை. கடவுளி‎ன் படைப்பு மிகச் சரி..! ஆனால், பலவீனங்கள் நிறைந்த மனித‎ன் அதை மாற்ற நினைப்பது தா‎ன் நகைப்பை உண்டாக்குகிறது.

தொடரும்.......

கருத்துகள் இல்லை:

Related Posts with Thumbnails