நேரம்:

சனி, 14 நவம்பர், 2009

2012 - உண்மையிலேயே உலகம் அழியுமா..?

 

2012  - உலகம் உண்மையிலேயே அழியுமா..?

 

 

 

நான் பார்க்க வெகுநாட்களாக மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த படம் 2012 (Who will survive?). இது ஒரு வழியாக நேற்று வெளியாகி இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பே இப்படம் வெளியிட திட்டமிடப்பட்டு பிறகு சில காரணங்களுக்காக ரிலீஸ் தேதி தள்ளிப்போடப்பட்டது.

 

சரி.. என்ன கதை இந்த படத்தில்..? பொதுவாக ஹாலிவுட்காரர்கள் தங்கள் படங்களில் உலகத்துக்கு பெரும் ஆபத்து வருவது போலவும், அந்த ஆபத்தை அமெரிக்க ஹீரோக்கள் தடுத்து உலகத்தை காப்பாற்றுவது போலவும் நிறைய படம் எடுத்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு ஆர்மெக்டான், வல்கனோ, தி இண்டிபெண்டன்ஸ் டே ஆகியவற்றை சொல்லலாம். இந்த படத்தில் கொஞ்சம் முன்னேறி உலகம் மொத்தமும் வரும் டிசம்பர் மாதம், 2012  ஆண்டில் அழிவது போல் காட்டியிருக்கிறார்கள். ஹாலிவுட்டில் பொய்யை காட்டினாலும் அதை உண்மையை காட்டிலும் மிக நேர்த்தியாக செய்வார்கள் என்பது நமக்கு தெரிந்ததே..! அந்த வகையில் இந்த படத்தை கம்ப்யூட்டர் க்ராஃபிக்ஸ், விஷூவல் எஃபெக்ட்ஸ் போன்ற நவீன யுக்திகளை பயன்படுத்தி உலகம் எப்படி அழியும் என்பதை மிக நேர்த்தியாகவும், தத்ரூபமாகவும், பிரமாண்டமாகவும் காட்டி அசத்தி இருக்கிறார்கள்.

[2012.jpg]

பொதுவாக எந்த ஒரு அசாதாரண விஷயத்தை ஹாலிவுட்டில் சொன்னாலும் அதில் ரசிக்க கூடிய ஒரு விஷயத்தை மிகவும் அழகாக கதைக்குள் நுழைத்திருப்பார்கள். பிரமாண்ட கப்பலும், அது கடலுக்குள் மூழ்குவதும் தான் டைட்டானிக் படத்தின் கதை என்றாலும் அதன் நடுவே லியனார்டோ டி காப்ரியோ, கேட் வின்ஸ்லெட் காதலை கதைக்குள் நுழைத்து படத்தை இன்னும் சுவராஸியம் ஆக்கி இருப்பார்கள். அப்படித்தான் இந்த படத்திலும் உலகம் அழிவிற்கான அத்தாட்சியாக அவர்கள் எடுத்திருக்கும் ஒரு விஷயம்..!!

 

கி.பி 900 ஆண்டு வாக்கில் மத்திய அமெரிக்காவின் மெக்ஸிகோ பகுதியில் வாழ்ந்தவர்கள் மாயன் சமூகத்தினர். நாம் சிறு வயதில் பாடப்புத்தகத்தில் படித்த சிந்து சமவெளி நாகரீகம் போல் இவர்களின் நாகரீகமும் பரந்து விரிந்து வளர்ந்து, பிறகு ஒரு காலகட்டத்தில் ஒட்டு மொத்தமாக அழிந்து போயிருக்கின்றது. அவர்களும், அவர்களின் நாகரீகமும் அழிந்து போனாலும் உலகம் அவர்களை இன்னும் நினைவில் வைத்திருக்க காரணம் அவர்களிடம் அபரிதமாக இருந்த வானவியல் அறிவு. இன்றைய காலகட்டத்தில் வானியலை கரைத்துக்குடித்தவர்கள் கூட இவர்களின் கண்டுபிடிப்புகள், ஜோஸியங்களை கண்டு கொஞ்சம் மிரளவே செய்கிறார்கள். உதாரணத்திற்கு ஒன்று சொல்லவா..? நாம் வாழும் பூமி தனது ஆதார அச்சில் ஒவ்வொரு 72 ஆண்டுகளுக்கு ஒரு முறை 1 டிகிரி நெகிழ்வதாக கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். எந்த வகையான அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றமும் இல்லாத காலத்தில் இவர்கள் இதை சொன்னதை அறிந்து உலகம் மூக்கில் விரலை வைக்கிறது.

 

அப்படிப்பட்ட மாயன் சமூகத்தினர் பயன்படுத்திய காலண்டரில் தான் 2012-ல் உலகம் அழியும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இப்படி அவர்கள் சொல்லும் காரணமும் மிகவும் ரசனைக்குரியது. மாயன் காலண்டர் மொத்தம் ஐந்து சுழற்சிகளைக் கொண்டதாம். ஒரு சுழற்சிக்கு 5125 ஆண்டுகள் . அதாவது மொத்தம் ஏறத்தாழ 26000 ஆண்டுகள் வருகிறது. ஒவ்வொரு 5125 ஆண்டுகள் முடியும் போதும் பூமியில் மிகப்பெரியதொரு மாற்றம் அல்லது அழிவு உண்டாகும் என்பது அவர்களின் கணிப்பு. அதன் படி இப்போது நாமிருக்கும் இந்த ஐந்தாவது மற்றும் இறுதி  சுழற்சி ஆகஸ்ட் 11 கி.மு 3114-ல் தொடங்கி வரும் 2012 டிசம்பரில் 5125 ஆண்டுகள் சுழற்சி நிறைவு பெறப்போகின்றது. அதனால் தான் 2012-.ல் உலகம் அழியும் என்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதை மையமாக வைத்து பிரமாண்டமான இந்த படமும் வந்துவிட்டது. உலகத்தின் இந்த அழிவு நிபிரு என்ற கோள் பூமியின் மேல் மோதுவதன் மூலம் நடக்கும் என்றும் மாயன்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.!!

 

நடக்க போகும் நிகழ்வுகளை முன் கூட்டியே சொல்வதில் நாஸ்ட்ராடமஸ் என்பவர் திறமைசாலியாக இருந்தார். அவர் சொன்னதில் சில நடந்தும் இருக்கிறது, நடக்காமலும் போயிருக்கிறது. ஆனால் மாயன் காலண்டரில் சொன்னபடி பூமி 2012-ல் அழியுமா என்றால் நிச்சயமாக அதற்கான விஞ்ஞான பூர்வ ஆதாரங்கள் எதுவும் நம்மிடம் இல்லை. ஆனால் இதை நினைத்து உலகத்தில் சிலர் கலவரம் அடைந்திருப்பதும் உண்மை என்பதை மறுப்பதற்கில்லை. உலகம் அழியும் கருத்தை ஏற்கனவே நாசா விண்வெளி மையம் அறிந்து கண்டு கொள்ளாமல் விட்டு விட்டாலும் இந்த படம் ஏற்படுத்த போகும் பாதிப்பை அறிந்து அதிர்ச்சியாகி கடந்த வாரம் ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் "மாயன் காலண்டர் சமாச்சாரம் ஒரு கப்ஸா..! அதை கண்டு கொள்ளாதீர்கள், கலவரம் அடையாதீர்கள் என்று கூறியிருக்கிறார்கள். மாயன் காலண்டரில் குறிப்பிட்டிருப்பது போல் நிபிரு என்ற ஒரு கோளே இல்லை என்று நாசா அடித்து சொல்லி இருக்கிறது. இருந்தாலும், ஒரு சாதாரண படத்திற்காக உலகத்தின் அதி நவீன தொழில்நுட்பத்தை கொண்ட நாசாவே அறிக்கை வெளியிட்டிருப்பதை கண்டு ஒரு வேளை மாயன் காலண்டர் உண்மையோ என நினைத்து பீதி கொள்பவர்களும் இருக்கிறார்கள்.

 

இந்த படத்தின் டைரக்டர் ரோலண்ட் எமெரிக் (Roland Emmerich) ஏற்கனவே இண்டிபெண்டன்ஸ் டே, டே ஆஃப்டர் டுமாரோ ஆகிய படங்களை இயக்கியவர். அந்த இரு படங்களும் பூமிக்கு ஏற்படப்போகும் ஆபத்தை சொல்லும் படங்கள். அவரின் அந்த படங்களை பார்த்து அதன் பிரமாண்டம், விஷூவல் எஃபெக்ட்ஸ் பார்த்து வியந்து போயிருக்கிறேன் (குறிப்பாக டே ஆஃப்டர் டுமாரோ.!). இந்த படம் அவற்றை காட்டிலும் இன்னும் மிக சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன். இங்கு சவுதியில் தியேட்டர் இல்லை என்பதாலும், ரியாத்திற்கு டிவிடி வர இன்னும் நாளாகும் என்பதாலும் நேற்று கூகிள் அம்மனிடம் டவுன்லோட் செய்ய டோரண்ட் அல்லது ஹோஸ்டிங் சைட் லிங்க் வரம் கேட்டதற்கு "இப்போதைக்கு கேமரா காப்பி தான் தர முடியும், டிவிடி முடியாது" என கை விரித்து விட்டாள். இன்னும் சில நாட்கள் காத்திருந்து தான் ஆக வேண்டும். அதை பார்த்த பிறகு தான் படம் பற்றிய விமர்சனத்தை எழுத முடியும். பொதுவாக நான் பார்த்த படங்களுக்கு தான் விமர்சனம் எழுதி இருக்கிறேன். உலக மக்களை பீதிக்குள்ளாக்கும் இந்த படம் அதிக முக்கியத்துவம் பெறுவதால் இந்த படத்தை பார்ப்பதற்கு முன்பே எழுத வேண்டிய கட்டாயம்..! இதோ எழுதியும் விட்டேன்..!! 2012-ல் உலகம் உண்மையிலேயே அழியுமா..?!!!!

 

என்றும் அன்புடன்,

 

இதயம்

 

http://idhayampesukirathu.blogspot.com

 

 

[2012+(14).jpg]

 

 

 

 

 

 

 

[2012+(15).jpg]

கருத்துகள் இல்லை:

Related Posts with Thumbnails