என்னைக்கவர்ந்த பொக்கிஷம்..!!
திரைப்படம் குறித்த பார்வை தமிழகத்தில் மிகவும் தவறான கண்ணோட்டத்திலேயே கையாளப்படுகிறது என எண்ணுகின்றேன். திரைப்படம் என்ற சக்தி வாய்ந்த ஊடகத்தை வெறும் பொழுது போக்கு, மன வக்கிரங்களுக்கு வடிகால், தனி மனித வழிபாடு என்ற ரீதியிலேயே பெரும்பாலும் தமிழர்கள் பயன்படுத்துகிறார்கள். இப்படிப்பட்டவற்றை நான் குப்பைகள் என்று வெகு சுலபமாக ஒதுக்கி விடுகிறேன். இவையெல்லாம் தாண்டி சில திரைப்படங்கள் சமூகத்திற்கு நற்கருத்து, புதிய சிந்தனை, ஒழுக்கம், ஜாதி, மத நல்லிணக்கம் ஆகியவற்றை தாங்கிய திரைப்படங்களும் வந்து நமக்கு கொஞ்சம் நம்பிக்கை அளிக்கத்தான் செய்கிறது.
அப்படிப்பட்ட திரைப்படங்களின் இயக்குநர்கள் வரிசையில் சேரன், அமீர், மிஷ்கின், வசந்த பாலன், பாலாஜி சக்திவேல், ராதாமோகன் ஆகியவர்களை சொல்லுவேன். இவர்கள் நடிகைகளின் சதையை நம்பாமல் கதையை நம்பி படமெடுத்து தமிழ் சினிமாவுக்கு புத்துயிர் கொடுப்பவர்கள். இந்த பட்டியலில் முன்னணியில் இருக்கும் சேரன் எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர். இரசிகனின் பலவீனங்களை குறி வைத்து பணத்துக்காக படமெடுத்து கல்லாவை நிறைக்க நினைக்காமல் சமூகத்துக்கு நல்லதொரு கருத்தை சொல்ல எப்பொழுதும் முயலும் சேரனின் அந்த தாகம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அந்த வகையில் அவர் எடுத்த பாரதி கண்ணம்மா, பொற்காலம், தேசிய கீதம், வெற்றி கொடி கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, மாயக்கண்ணாடி மற்றும் பொக்கிஷம் வரை அனைத்து படங்களும் தமிழ் சினிமாவில் காலம் காலமாக இருந்து வரும் ஆபாச இலக்கணங்களை உடைத்தெறிந்தவை. அருமையான கருத்துக்களை உள்ளடக்கியவை..!!எனக்கும் பிடித்தவை. இது போன்ற அழகான இயல்பான காதல் கதையில் குத்துப்பாட்டு, பஞ்ச் டயலாக், ஹீரோயிச காட்சிகளை எதிர்பார்ப்பவர்களுக்கு நான் சொல்வது "சாரி... உங்களுக்கான இளைய "தலைவலி" டைப் படம் இதுவல்ல..!!"
அவரின் சில படங்கள் வணிக ரீதியாக தோல்வியடைந்தது உண்மை தான். உதாரணத்திற்கு தேசிய கீதம், மாயக்கண்ணாடி மற்றும் பொக்கிஷம் ஆகியவை. இந்த தோல்வியை நான் சேரனின் தோல்வியாக கருதவில்லை. தமிழ் சினிமா இரசிகர்களின் இரசனைக்கான தோல்வியாகத்தான் சொல்வேன். அவரின் தவமாய் தவமிருந்து படம் பெற்றோரின் மேன்மையை சொல்லி என்னை மன உருக வைத்த படம். ஒரு நல்ல கலைஞன் என்றும் கெட்ட படைப்புகளை தர வாய்ப்பில்லை. பார்க்கும் பார்வையாளனின் இரசனையில் ஏற்பட்ட கோளாறுக்கு படைப்பாளியை ஏன் குற்றம் சொல்லவேண்டும்...? உதாரணத்திற்கு காதலின் மேன்மையை கவியழகோடு சொன்ன சமீபத்திய பொக்கிஷம் திரைப்படத்தின் தோல்வியை சொல்லலாம். காதலை அவர் சொன்ன விதத்தில் நிச்சயம் தவறு இருப்பதாக தோன்றவில்லை. ஆனால் காதலை உணர்ந்து உள்வாங்கும் குணம், மனநிலை, அனுபவம் தமிழ் இரசிகர்களிடம் குறைந்து விட்டது என்பது தான் உண்மை. இலக்கிய வடிவில் ஓர் இயல்பான திரைப்படம் என்று சேரனால் அறிமுகம் செய்யப்பட்ட அந்த படம் அதைப்போல தான் அமைந்திருந்தது. அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனா பெரும்பாலான தமிழ் இரசிகர்களால் அது நிராகரிக்கப்பட்டது வேதனைக்குரியது.
காதல் என்பதே பொழுது போக்கு மற்றும் உணர்ச்சிக்கு வடிகாலாக நினைக்கும் இன்றைய சமுதாயத்தில் அப்படி ஒரு காதலை இயல்பாக நிச்சயம் நம்மவர்களால் ஏற்க முடியவில்லை என்பது தான் உண்மை. காதலித்து, அதன் இன்ப துன்பங்களை உணர்ந்தவர்களால் இந்த படத்தை பிடிக்கவில்லை என்று சொல்ல முடியாது. எஸ் எம் எஸ், இமெயில், இண்டர்நெட் சேட் என்று தொழில்நுட்பம் வளர்ந்த இந்த காலகட்டத்தில் கடிதங்களின் முக்கியம் இல்லாமல் போய்விட்டது. ஆனால் இவை எதுவுமில்லாத காலகட்டத்தில் கடிதங்கள் தான் காதலின் தூதுவர்கள். அவை கொடுக்கும் ஏக்கம், கனவு, இம்சை, சந்தோஷம், வலி காதலர்கள் மட்டுமே உணர்ந்து புரிந்து கொள்ள வேண்டியது. நான் பட்ட உணர்வுகளை இந்த படம் காட்சிக்கு காட்சி அப்படியே பிரதிபலித்திருக்கிறது. காதலென்றாலே கல்யாணத்திற்கு முன் என்று ஆகிவிட்ட நிலையில் கல்யாணத்திற்கு பிறகான காதலை கற்பனை செய்து கூட பார்க்க நம்மவர்களால் முடியவில்லை. இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியும் மிகவும் இரசனையுடன், காதலின் சந்தோஷங்கள், வலி உணர்ந்து செதுக்கப்பட்டிருக்கிறது. சேரனும் காதல் திருமணம் செய்தவர் தான் என்பதால் திரைப்படம் இயல்பான உணர்வை வெளிப்படுத்துவதில் வெற்றி கண்டிருப்பதாக கொள்ளலாம்.
இந்த படம் மட்டுமல்ல, இதன் பாடல்களும் அதன் வரிகளும் கூட இலக்கிய வாசம் வீசுவதை அதன் சுவை அறிந்தவர்கள் உணர்ந்து இரசிப்பார்கள். உதாரணத்திற்கு நான் தினமும் கேட்கும் ஒரு பாடல் அந்த படத்தில் இடம்பெற்ற "நிலா நீ வானம் காற்று பாடல்..!!" அந்த பாடல் வரிகளை கவனியுங்கள்..
நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா
திசை ஒலி பகல்
(நிலா..)
தேவதை அன்னம் பட்டாம்பூச்சி
கொஞ்சும் தமிழ் குழந்தை
சிணுங்கல் சிரிப்பு முத்தம்
மௌனம் கனவு ஏக்கம்
செல்லம் பிரியம் இம்சை
இதில் யாவுமே நீதான் எனினும்
உயிர் என்றே உனை சொல்வேனே
நான் உன்னிடம் உயிர் நீ என்னிடம்
நாம் என்பதே இனிமேல் மெய் சுகம்
(நிலா..)
அன்புள்ள மன்னா.... அன்புள்ள கணவா....
அன்புள்ள கள்வனே.... அன்புள்ள கண்ணாளனே....
அன்புள்ள ஒளியே.... அன்புள்ள தமிழே....
அன்புள்ள செய்யுளே.... அன்புள்ள இலக்கணமே....
அன்புள்ள திருக்குறளே.... அன்புள்ள நற்றினையே....
அன்புள்ள படவா.... அன்புள்ள திருடா....
அன்புள்ள ரசிகா.... அன்புள்ள கிறுக்கா....
அன்புள்ள திமிரே.... அன்புள்ள தவறே....
அன்புள்ள உயிரே.... அன்புள்ள அன்பே....
இதில் யாவுமே இங்கு நீதான் என்றால்
என்ன தான் சொல்ல சொல் நீயே
பேர் அன்பிலே ஒன்று நான் சேர்ந்திட
வீண் வார்த்தைகள் இனி ஏன் தேடிட
நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா
திசை ஒலி பகல்
அன்புள்ள மன்னா....அன்புள்ள கணவா
அன்புள்ள கள்வனே... அன்புள்ள கண்ணாளனே......
சபேஷ்-முரளியின் இசையில், ஜேசுதாஸின் வாரிசு விஜய் ஜேசுதாஸ், சின்மயி குரலில் அமைந்திருக்கும் அருமையான மெலடி இது.! மயிலிறகின் வருடல், ஐஸ்க்ரீமின் இனிமை, மழையின் குளிர்ச்சி, மனதுக்கு பிடித்தவளின் கொஞ்சல், குழந்தையின் செல்ல சிணுங்கல் ஆகியவற்றை இந்த பாடலில் என்னால் உணரமுடிகிறது. கல்யாணத்திற்கு முன் காதலிப்பவர்கள், கல்யாணத்திற்கு பின் மனைவியை காதலிப்பவர்களுக்கு இந்த படம், இந்த பாடல் மிகவும் பிடிக்கும்..! நிச்சயம் பிடிக்க வேண்டும்..!! பிடிக்கவில்லை என்றால் அதற்கான காரணம் இந்த பாடலில் இல்லை.. உங்களிடம் இருக்கிறது.!!!
என்னவள் எழுதிய கடிதங்கள் மட்டுமல்ல, இந்த படமும் என்னைப் பொறுத்தவரை பொக்கிஷம் தான்..!!
மதிப்பெண்: 86/100
என்றும் அன்புடன்,
ஜாஃபர் (இதயம்)
http://idhayampesukirathu.blogspot.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக