skip to main |
skip to sidebar
நண்பர்களே..!
காதலர் தினத்தை கொண்டாடும் வகையில் இன்றைய பதிவு காதல் ஸ்பெஷலாக மலர்கிறது.
நீங்கள் காதலித்திருக்கிறீர்களா..! உங்களிடம் போய் நான் கேட்கிறேன் பாருங்கள்..! நீங்கள் தான் அந்த விஷயத்தில் ரேகாவின் தந்தையாயிற்றே (அதாங்க..! "காதல் மன்னன்" ஜெமினி கணேசன்..!!). சரி..! காதல் பற்றி உங்க கருத்து என்ன..? என்னது..? என் கருத்து என்னவா..? என்னங்க..! சின்னப் பையன்கிட்ட போய் இந்த மாதிரி கேள்வியெல்லாம் கேட்டுக் கொண்டு..?! சரி..! நீங்கள் வற்புறுத்தி கேட்பதால் சொல்கிறேன். காதல் என்றால்.....அதென்ன அங்கே யாரோ சத்தம் போடுகிறார்கள்..? ஹலோ..! எதுவாக இருந்தாலும் நேரடியாக என்னிடம் கேளுங்கள். தூரத்தில் இருந்து கொண்டு முனக வேண்டாம். சரி..! என்னிடம் என்ன கேட்க வேண்டும் கேளுங்கள்..?! நண்பர்களே..... இவர் என்ன கேட்டார் பார்த்தீர்களா..? காதலைப் பற்றி எனக்கு என்ன தெரியும்..? என்று கேட்கிறார். ஏதோ கொஞ்சம் தெரியும் என்று நினைக்கிறேன். ஒரே பெண்ணையே நினைவு தெரிந்தது முதல் நேசித்து, அந்த நேசம் காதலாக மலர்ந்து, ஏகப்பட்ட போராட்டங்களுக்கிடையில் அந்தப் பெண்ணையே மணந்தவன் நான். அதனால் காதல் எனக்கும் கொஞ்சம் தெரியும், அதைப் பற்றி பேசவும் எனக்கு தகுதி இருக்கிறது என்று நினைக்கிறேன். ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு நடிகைகளோடோ அல்லது நடிகர்களோடோ உருண்டு, புரண்டு காதல் செய்வதாக நடிக்கும் நடிகர், நடிகையரிடம் பத்திரிக்கையாளர்கள் “காதலைப் பற்றி உங்கள் கருத்து என்ன..?” என்று கேட்கும் போது, அதற்கு அவர்கள் அமெரிக்கையாக காதலைப் பற்றி வியாக்கியானம் பேசலாம். ஆனால் காதலித்தவன் (உண்மையாக..!), காதலித்த பெண்ணையே கரம் பிடித்தவன், அந்த பெண்ணையே இன்னும் காதலித்துக் கொண்டிருப்பவனான நான் பேசக் கூடாதா..? இதென்ன அநியாயமாக இருக்கிறது..??!! எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள் ஐயா..!!
காதலுக்கு நம்மவர்கள் கற்பித்து வைத்திருக்கும் அர்த்தம் அபத்தமானது. சிலருக்கு காதல் என்றால் பொழுது போக்கு, சிலருக்கு தகுதி, சிலருக்கு கௌரவம், சிலருக்கு அவமானம், சிலருக்கு அசிங்கம், சிலருக்கு வேதனை, சிலருக்கு கெட்ட வார்த்தை, வெகு சிலருக்கு மட்டும் அது உயிர்..! இந்த வெகு சிலரால் தான் காதல் இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. முதலில் காதல் என்றால் என்ன..? காதலிக்க பொருத்தமான வயது என்ன..? சொல்லுங்கள்..! சரி..! என் கருத்தை சொல்கிறேன். என்னைப் பொறுத்தவரை காதல் என்பது ஆண், பெண் இரு பாலினருக்கிடையே ஏற்படும் ஒரு இனிமையான, அற்புதமான உணர்வின் (உணர்ச்சியல்ல..!) பரிமாறல்..!! அந்த உணர்வு பரிமாறல் அவர்களுக்கிடையே ஏற்படும் நேசம், புரிந்து கொள்ளுதல், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றால் உறுதியடைந்து இறுகும் நிலை. இந்த நிலையில் இருவருக்குமிடையே இருக்கும் அன்பில் பொய் இருக்காது, போலித் தனம் இருக்காது, சுய நலம் இருக்காது. சரி..! அது எந்த வயதில் வரும்..? அது ஒரு மர்மமான விஷயம்..!
அதை சொல்வதற்கு முன் உங்களிடம் ஒரே ஒரு கேள்வி..! நீங்கள் எத்தனை முறை காதலித்திருக்கிறீர்கள்..! அதற்கு மூன்று வகையான பதில்கள் மட்டும் உங்களிடம் இருக்கும். A.ஒன்றுக்கு மேற்பட்ட முறை. B.எதுவும் இல்லை. C. ஒரே ஒரு முறை தான், ஆனால் அது இன்னும் தொடர்கிறது..! இதில் ஒன்றுக்கு மேற்பட்டமுறை என்று சொன்ன A பிரிவினருக்கு இரண்டு வகையான பதில்கள். 1. நீங்கள் காதலின் அர்த்தம் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். 2. காதலின் பெயரால் பெண்களை வஞ்சித்துக் கொண்டிருக்கிறீர்கள் (உங்களை எப்போது வேண்டுமானாலும் போலீஸ் பிடிக்கலாம்..!). அடுத்து இரண்டாம் வகையான B பிரிவினருக்கு இரண்டு வகையான பதில்கள்..! 1. நீங்கள் இன்னும் பால் குடி மறக்க வில்லை. 2. உங்கள் வாழ்க்கையை வாழத் தெரியாமல் வீணடித்துக் கொண்டு இருக்கிறீர்கள். மூன்றாம் வகையான C வகை மனிதர்கள். ம்ம்..! உட்காருங்கள்..! நீங்கள் தான் எனக்கு வேண்டும் ராஜா..!! மற்ற A-யும், B-யும் சத்தம் போடாமல் இங்கிருந்து நடையைக் கட்டுங்கள். இல்லாவிட்டால் போலீஸிடம் பிடித்துக் கொடுத்து விடுவேன்..! இந்த C பிரிவில் காதலித்துக் கொண்டிருப்பவர்களில் கல்யாணம் ஆகாதவர்கள் மட்டுமல்ல, ஆனவர்களும் கூட இடம் பெறவேண்டும். மேலே உள்ள என் கேள்வியை இன்னும் ஒரு முறை நன்றாக பார்க்கவும். அங்கு கல்யாணம் ஆன, ஆகாத என்ற எந்த நிபந்தனையும் நான் குறிப்பிட வில்லை. சரி..! இனி நாம் விட்ட இடத்திற்கே வருவோம். காதல் எந்த வயதில் வரவேண்டும், வரும் என்று எந்த வரம்பும் கிடையாது. ஆனால் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் தவறாமல் வரும் வைரஸ் தான் காதல்.!!
தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக