skip to main |
skip to sidebar
சிலரைப் பார்த்திருக்கிறீர்களா..! பையன் பத்தாவது படித்துக் கொண்டிருப்பான், அதே வகுப்பில் அந்தப் பெண்ணும். இருவரும் காதலிப்பதாக நினைத்துக் கொள்வார்கள். அதற்கென்றே தமிழ் சினிமாவில் வரையறுக்கப்பட்ட நிறைய சேட்டைகளையும் செய்வார்கள். ஒரு நாள் எதிர்பாராத விதமாக அந்தப் பெண் தனிமையில் இருக்கும் போது அவன் வயதுக் கோளாறில் சேட்டை ஏதோ செய்ய, அதை யாராவது பார்த்து, அது வீட்டுக்கு தெரிந்து பெண்ணுக்கு படிப்பு கட்டாகும், ஆணுக்கு முதுகுத் தோல் உரியும். அதன் பிறகு அவன் அந்தப் பெண் பக்கமே திரும்ப மாட்டான், அந்தப் பெண்ணும் அப்படியே..! இதே இன்னும் கொஞ்ச அட்வான்ஸாக போய் ஊர்க் கலவரம் வரை போவதும் உண்டு. இப்போது இந்த இருவருக்குமிடையே இருந்த உறவு என்ன..? அது தான் காதலா..? நிச்சயமாக இல்லை. அது ஆண், பெண் பாலின ஹார்மோன்களின் சாகசம். எதிர்பாலினரிடம் ஏற்படும் இனக்கவர்ச்சி (infatuation)..! ஒரு குறிப்பிட்ட வயதில் இந்த மாயையிலிருந்து நாம் யாரும் தப்ப முடியாது. அவருக்கு வயது 40, அந்த ஊரில் இருக்கும் தன் கணவனை இழந்த பெண் மேல் இவருக்கு ஒரு ஈர்ப்பு, அவளுக்கும் அப்படியே..! ஊருக்கு பயந்து, யாருக்கும் தெரியாமல் நடு இரவில் அந்தப் பெண்ணை போய் சந்தித்து வருவார். ஒரு நாள் அப்படி போகும் போது யாராவது பார்த்து விட்டால் போச்சு..! அதற்கப்புறம் அந்தப்பக்கம் தலை வைத்துக் கூட அவர் படுக்க மாட்டார். அதற்கு பெயரென்ன..? அதுவும் இனக்கவர்ச்சிதான் என்றாலும் நம்மூரில் அதற்கு செல்லமாக வேறு பேர் வைத்துக் கூப்பிடுவார்கள் (இந்த விஷயத்தால் தான் குடும்பத்தில் நிறைய கொலைகள் விழுவதாக தினந்தந்தி நிருபர்கள் கூறுகிறார்கள். அதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்..!).
இதிலிருந்து காதலுக்கு எப்படி கண் இல்லையோ, அது போலதான் வயதும் இல்லை. காதலிப்பவர் மற்றும் காதலிக்கப்படுபவர் எந்த வயதிலும் இருக்கலாம் னால், அது தான் முதல் காதல் உணர்வாக இருக்க வேண்டும். இதென்ன கலாட்டா என்கிறீர்களா..? அய்யா..! நான் யார் சொன்னதையாவது மொழிபெயர்த்து உங்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கவில்லை. காதலைப் பற்றின என்னுடைய பார்வையைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஏற்றுக் கொள்வதும், கொள்ளாததும் உங்கள் இஷ்டம்..! உடனே நீங்கள் கேட்பீர்கள்..? நீ வாழ்க்கையில் ஒரு முறைதான் காதலித்திருக்கிறாயா என்று ..? யார் சொன்னது அப்படி..! நிறைய..! அதாவது காதலிப்பதாக நினைத்திருக்கிறேன், என்னையுமறியாமலேயே..! அந்த வகையில் பார்க்கப் போனால் என்னுடைய முதல் (!) காதல் நான் எட்டாவது படிக்கும் போது ஏற்பட்டது..! (சிரித்தால் அப்புறம் நான் சொல்ல மாட்டேன்..!!). அதற்கு காதல் என்று நானாக அர்த்தம் செய்து கொண்டேன் (அந்த அமர காதல் (!) அந்தப் பெண்ணிடம் நான் கேட்ட ஹீரோ பேனாவை கொடுக்காததால் முறிந்து போனது சோகமான கதை..!!!). ஆனால் இப்போது மூளைக்கு உரைக்கிறது அது காதல் அல்ல என்று..! சரி..! காதல் எந்த வயதில் வரும் என்று எனக்குத் தெரிந்ததை சொல்லிவிடுகிறேன். அதற்கு நேரமில்லை, காலமில்லை. ஆனால் நிச்சயம் வரும். அந்த நேரத்தை சரியாக தன் பகுத்தறிவை கொண்டு கண்டறிந்து, அதைப் பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டும். அந்தக் காதலில் உறுதியாக இருந்து, எந்தப் பிரச்சினை வந்தாலும் எதிர்கொண்டு முறியடித்து, திருமணம் செய்து, அந்த காதலை திருமணத்திற்கு பிறகும் இம்மி கூட குறையாமல் தொடருங்கள். அப்போது தெரியும் வாழ்க்கை எவ்வளவு சுவையானது, சுகமானது என்று..!
நான் சொன்ன அந்தக் காதல் இருபாலினராலும் உணரப்பட வேண்டும். ஒருதலைக் காதல் இந்த வகையில் சேராது. ஒருதலைக்காதல், உண்மைக்காதல் என்ற வார்த்தைகளைக் கேட்டாலே எனக்கு சிரிப்பு தான் வருகிறது. காதல் என்பது இரு உள்ளங்களின் சங்கமம் தான். பிறகு ஒரு ஆணின் அல்லது ஒரு பெண்ணின் நேசம் மட்டும் எப்படி காதலாகும்..? அடுத்து அதென்ன உண்மைக் காதல்..? அப்படியென்றால் காதலில் பொய்க்காதலும் உண்டா..? காதல் என்றால் அங்கு உண்மைக்கு மட்டுமே இடமுண்டு. காதலைக் கெடுத்ததில் சினிமாவுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் சினிமாவில் காட்டப்படுவது தான் காதல் என்று அர்த்தப்படுத்தி அதனால் கிடைக்கும் பலனை பலரும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் (அன்றாட செய்திகளை கவனித்தால் புரியும்). காதலுக்கான அர்த்தம் தெரிய சினிமா தான் காதலின் அகராதியாக புரட்டப்படுகிறது. இது நிழலை நிஜமாக நம்பியதால் வந்த வினை. காதல் சுகமானது, இதமானது, புனிதமானது. மேன்மையானது. காதலுக்கு யாரையும் சந்தோஷப்படுத்தத் தெரியுமே தவிர, காயப்படுத்தத் தெரியாது.!!
தொடரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக