நேரம்:

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

கனவுலகின் கம்பீர விருது - ஆஸ்கார்..! - 01



இன்றைய உலகில் சிபாரிசு, அதிர்ஷ்டம் இல்லாத இடமேயில்லை என்றாலும் கூட, திறமைக்குத் தனி இடம், மரியாதை இருக்கத்தான் செய்கிறது. ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு நாட்டிலும், பிரதேசத்திலும் திறமைகள் அங்கீகரிக்கப்பட்டு அதன் அடையாளமாக விருதுகளும் கூட வழங்கப்பட்டுத்தான் வருகின்றன. அந்த வகையில் ஜிகினா உலகமான திரைப்படத்துறையில் உலகின் முதல் தர விருதாகத் திகழ்வது ஆஸ்கார் (Oscar) விருது. 2009-ம் ஆண்டின் சிறந்த படங்களுக்கான ஆஸ்கார் விருது வழங்கும் விழா வரும் மார்ச் மாதம் 7-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் கனவுலகத்தின் கம்பீர விருதான ஆஸ்கார் பற்றி கொஞ்சம் பார்ப்போமா..?!!

ஆரம்பத்தில் அமெரிக்காவின் ஹாலிவுட் பகுதிகளில் விளையாட்டாகத் தொடங்கிய இந்த விருது வழங்கும் சம்பவம் இன்றைக்கு உலகம் முழுதும் உள்ள எல்லா நாடுகளிலும் மதிக்கப்படும், திரை உலகின் உன்னத அடையாளமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இத்துடன் சந்தேகத்திற்கிடமின்றி முதல் தகுதி பெற்றது என அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் விருதாகவும் இது உருமாறியிருக்கிறது. ஆஸ்கர் விருது அறிவிப்பு என்பது இன்றைக்கு இந்தியாவின் கடைக்கோடி கிராமமான “கொட்டாம்பட்டி” கோவிந்தசாமியிலிருந்து, “லாஸ் ஏஞ்சல்ஸ்” லாரா வரை எல்லாரையும் கவரும் விஷயமாக மாறி விட்டாலும் கூட இந்த விருதின் பின்னணி, அத‎ன் வளர்ச்சி போன்றவற்றில் புதைந்து கிடக்கும் நிறைய விஷயங்கள் பலருக்குத் தெரியாது.

”ஆஸ்கார்” என்பதே இந்த விருதுக்கான பெயர் என்று இன்று மாறிப் போ‎னாலும் இதன் நிஜப் பெயர் அதுவல்ல..! ஆமாம்..! இந்த விருதி‎ன் உண்மையான ஆரம்பப் பெயர் அகாடமி விருது (Academy Award) என்பதுதான்.

1927-ம் ண்டு அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா மாநிலத்தின் ஒரு மூலையில் இருந்த திரைப்படத்துறைத் தொடர்புடையவர்கள் பலர் சேர்ந்து அடித்த 'உருப்படியான' அரட்டையில்தான் இந்த ஜடியா உருவானது. இதற்கென அவர்களெல்லாம் சேர்ந்து தி அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் (The Academy of Motion Picture Arts and Science) என்ற ஒரு அமைப்பை உருவாக்கினார்கள். இந்த அமைப்பு ஆண்டுதோறும் வெளியாகும் திரைப்படங்களில் சிறந்தவைகளைத் தேர்ந்தெடுத்து அந்த படத்திற்கும் அதை உருவாக்கியவர்களுக்கும் கெளரவம் செய்ய, பாராட்ட விருது வழங்குவது என முடிவெடுத்தார்கள். அதை இந்த அமைப்பின் பெயரிலேயே 'அகாடமி அவார்ட்' எனவும் குறிப்பிட முடிவானது. இந்த அமைப்பு உரு பெற்ற வெகு விரைவிலேயே கிட்டத்தட்ட 5000 முதல் 6000 வரையிலான திரைப்படக் கலைஞர்கள் இதில் உறுப்பினர்களாக ஆகிவிட்டனர். ஆனாலும் அகாடமி தொடங்கியது வெறும் 36 உறுப்பினர்களுடன்தான். அகாடமியின் முதல் தலைவர் டக்ளஸ் ஃபேர் பேங்க்ஸ் என்பவர். இன்றைக்கு அகாடமியில் உறுப்பினர்கள், இணை உறுப்பினர்கள், இயக்குனர்கள், செயலாளர், பொருளாளர், தலைவர் என ஒரு பெரும் கூட்டமே இந்த அகாடமியின் செயல்பாட்டை, நிர்வாகத்தை, இதன் சொத்துகளை, வருமானத்தை கவனித்து வந்தாலும் அகாடமியின் ஆரம்ப நாட்களில் ஏன், 1946 வரை கூட வாடகைக் கட்டடத்தில்தான் அகாடமி செயல்பட்டு வந்தது..!

அகாடமியின் முதல் விருது 1929-ம் ஆண்டு மே மாதம் 16-ம் தேதியன்று வழங்கப்பட்டது. முதல் முறை இந்த விருது வழங்கப்பட்டபோது இந்த நிகழ்ச்சியை சீந்துவாரில்லை. ஹாலிவுட் நகரத்தின் ரூஸ்வெல்ட் ஹோட்டலில் 'ப்ளாசம் ரூம்' என்ற அறையில் நடந்த விருந்து ஒன்றில் இவ்விருது வழங்கல் தொடங்கியது. விருது பெறப் போவது யார் என்பதை முன்னதாகவே முடிவு செய்த அந்நாளைய அகாடமி இதை அன்றைய தின, மாலைப் பத்திரிகைகளுக்கு செய்தியாக கொடுத்திருந்தும், அந்த முதல் விழாவில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை வெறும் 250 மட்டும் தா‎ன். அந்த நாளிலேயே இதற்கு கட்டணமாக 10 அமெரிக்க டாலர்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்ததுதான் காரணமோ என்னமோ..! ஆனால் இரண்டாம் ஆண்டிலேயே இந்த விருதுக்கான மவுசு கூடத் தொடங்கி விட்டது. பத்திரிகைகள் இதையும் ஒரு பொருட்டாக கவனிக்கத் தொடங்கி விட்டன என்பது ஒருபுறமிருக்க, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்து வானொலி இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியைத் தொகுத்து ஒரு மணி நேர நிகழ்ச்சியாக அன்று ஒலிபரப்பியது. அன்றிலிருந்து 'அகாடமி அவார்ட்' நிகழ்ச்சி அடுத்தடுத்து வானத்தை பார்த்தபடி வளர்ந்து கொண்டேதான் வருகிறதேயன்றி கீழ் நோக்கவில்லை.!!

தொடரும்..!

கருத்துகள் இல்லை:

Related Posts with Thumbnails