புலி வருது, புலி வருது கதையாக, கடந்த இரு வருடங்களுக்கு மேலாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்"படுத்திக்கொண்டிருந்த" எந்திரன் திரைப்படம் கடைசியாக ஒரு சுபயோக தினத்தில் உலகமெங்கும் (!!) வெளியாகி விட்டது. ஆனால், வெளிவந்தது புலியா அல்லது எலியா என்பதை உங்களுடைய முடிவிற்கே விட்டு விடுகிறேன். ஆனால் எந்திரன் திரைப்படத்தை பாராட்டியோ அல்லது கடுமையாக விமர்சித்தோ பதிவு போடாவிட்டால் பதிவுலகில் பதிவர் என்ற தகுதியை நான் இழக்க நேரிடும் என்ற நிலைக்கு அஞ்சி, பதிவர்கள் ஜோதியில் கலக்க ஆசைப்பட்டு நானும் ஒரு எந்திரன் பதிவை எழுதும் நிலைக்கு தள்ளப்பட்டேன் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்..!! (ஸ்ஸ்ஸ்ஸப்பாஆஆஆஆஅ....இப்பவே கண்ணக்கட்டுது..!!)
திரைப்படம் மேலான தமிழ் சினிமா இரசிகர்களின் ஆர்வம் மிகவும் கவலைக்குரியது. இந்த முறை விடியற்காலை 5 மணிக்கே காலைக்கடன்களை கூட முடிக்காமல் எந்திரன் படம் பார்க்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானார்கள் என்றால் அவர்களின் ஆசையை, வெறியை என்னவென்று சொல்ல..?!!. அதற்கு மேலாக ரஜினியின் ரசிக கண்மணிகள் அலகு குத்தி காவடி, பாலாபிஷேகம் என்று இன்னும் என்னென்ன செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திருந்த மாட்டோம் என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்து விட்டார்கள். ஒரு திரைப்படத்தை திரைப்படமாகவும், ஒரு நடிகரை நடிகராகவும் பார்க்க முடியா இவர்களின் பகுத்தறிவு(!!) கவலையளிக்கிறது.
சன் குழுமம் திரைப்படத்துறையில் இறங்கி இத்தனை நாளும் படங்களை வாங்கி மட்டுமே வெளியிட்டு வந்தார்கள். அப்படி வாங்கி வெளியிட்ட படங்களுக்களுக்கே அவர்கள் செய்த அலப்பறைகளை தமிழ் சமூகம் இன்றும் அறிந்து வருகிறது. படம் வெளியாகும் முன்பே "வெற்றி நடை போடுகிறது" என்று அவர்களின் எல்லா சேனல்களிலும் ஃபில்டப் கொடுப்பார்கள் என்று நகைச்சுவையாக கூட சொல்வதுண்டு. அப்படிப்பட்டவர்கள் களத்தில் இறங்கி சொந்தமாக ஒரு திரைப்படத்தை தயாரித்தால்..?!! அதுவும் அந்தப்படம் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினியை கதாநாயகனாகவும், அவரே பல வருடங்களாக தனக்கு ஜோடியாக நடிக்க மாட்டாரா என்று ஏங்கிய ஐஸ்வர்யா ராயை கதாநாயகியாகவும் கொண்டு தமிழ் சினிமாவின் "காஸ்ட்லி" டைரக்டர் என்று சொல்லப்படும் ஷங்கரின் இயக்கத்தில் அந்த படம் உருவாகிறது என்றால் எதிர்பார்ப்புக்கு சொல்லவும் வேண்டுமா...? இது போதாதென்று இந்திய படங்களிலேயே அதிக பட்ஜெட், இந்திய சினிமாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களின் கூட்டு உழைப்பில் உருவாக்கம் என்று வெளி வந்திருக்கும் எந்திரன் ஏற்படுத்திய எதிர்பார்ப்பு கொஞ்ச நஞ்சமல்ல..!! மார்க்கெட்டிங் யுக்தியில் கரை கண்ட சன் நிறுவனம் இந்த படத்தின் விளம்பரத்திற்கு செய்த தந்திரங்களை எழுதவே பல பதிவுகளை போடலாம். இந்திய திரையுலக வரலாற்றில், உலக திரைப்பட வரலாற்றில் படத்தின் ட்ரைலரை வெகு ஆடம்பரமாக வெளியிட்ட ஒரே நிறுவனம் இதுவாகத்தான் இருக்கும். அதன் பிறகு இசை வெளியீடு, படம் பற்றிய கலைஞர்களின் பேட்டிகள் என்று ஒரு வழி பண்ணி விட்டார்கள் தமிழ் ரசிகர்களை..!! நல்ல வேளை போஸ்டர் வெளியிடுவதையும் ஒரு விழாவாக நடத்தவில்லை என்பது பெரும் ஆறுதல். ஒருவேளை இனி வெளியிடும் படங்களுக்கு அதையும் அவர்கள் செய்யக்கூடும்.
இந்த படத்தின் கதையை ஏற்கனவே நம்மவர்கள் அலசி, ஆராய்ந்து, துவைத்து, காய போட்டுவிட்டதால் நானும் அரைத்த மாவையே அரைக்காமல், எந்திரன் படத்தை பார்த்த பின் நான் உணர்ந்தவற்றை எழுதியுள்ளேன். இந்த படம் ஷங்கரின் 10 வருட கனவு என்று ஊடக வாயிலாக அறிந்தேன். நான் சிறுவயதில் எழுத்தாளர் சுஜாதா எழுதிய "என் இனிய இயந்திரா" என்ற விஞ்ஞானக்கதையை மிகவும் விரும்பி படிப்பேன். அதன் தாக்கத்தில் தான் இந்த ரோபோவின் கதை உருவானது என்று ஷங்கர் சொன்னதாக எனக்கு ஞாபகம். இந்த விஞ்ஞானக்கதையை அப்பொழுதே திரைப்படமாக எடுக்க முடியாமல் போக அன்றைய தொழில்நுட்பம், அதிக செலவு, அத்தனை பிரபலமில்லாத ஷங்கர் போன்ற காரணங்கள் இருந்திருக்கலாம். நான் சொன்ன அனைத்தும் ஒன்றாக கூடி வந்த சமயம் தன் 10 வருட கனவை சன் குழும செலவில் நிறைவேற்றி இருக்கிறார் ஷங்கர். பொதுவாக ரஜினிக்கு இருக்கும் மாஸ் அவரின் படங்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது வழக்கம். இதனால் திரைப்படத்தின் பட்ஜெட் அதிகமாக இருப்பதும், போட்ட முதலுக்கு மேல் எடுக்க ரஜினியை முழுதும் பயன்படுத்தி கொள்வதும் மற்றும் இன்ன பிற விஷயங்களில் காம்ப்ரமைஸ் செய்து கொள்வதும் தவிர்க்க இயலாதவை (அந்த இன்ன பிற விஷயங்களில் முக்கியமான ஒன்று கதை பற்றி கவலை படாதது). ரஜினி என்ற பெயர் இருந்தாலே போதும், படத்தை ஓட்டி விடலாம் என்று கருதும் அளவிற்கு திரைப்படத்துறையில் அவரின் ஆதிக்கம் இருக்கிறது. ஆனால் ஒரு திரைப்படம் வெற்றியடைய அவர் மட்டும் போதாது என்பதை நிரூபித்து தோல்வி அடைந்த படம் குசேலன். எந்திரனில் கதை என்பது பெரிதாக இல்லாவிட்டாலும் ரஜினி, ஐஸ்வர்யா ராய், ரஹ்மான் இசை, பிரமாண்டம், தொழில்நுட்பம் போன்றவற்றை வைத்து எந்திரனை கரை சேர்க்க முயன்றிருக்கிறார் ஷங்கர். அவர் முயற்சியில் வெற்றி அடைந்திருக்கிறார் என்பதையும் இங்கே ஒத்துக்கொண்டு தான் ஆக வேண்டும்.
60 வயது ரஜினியை ஹீரோவாக காட்ட தைரியம் நிறைய வேண்டும். ஷங்கர் நவீன வசதிகளை நம்பி களம் இறங்கியது மட்டுமல்லாமல், ரஜினியையும் இளம் ஹீரோவாக காட்ட முயன்றிருக்கிறார். எந்த படத்திலும் இல்லாத ரஜினியின் எதார்த்த அறிமுக காட்சி இத்திரைப்படத்தில் ஷங்கரின் ஆளுமைக்கு எடுத்துக்காட்டு. திரைப்படங்களில் நடிகர்களை விட இயக்குநர்களின் ஆளுமை அதிகரித்து வருவது தமிழ் சினிமாவில் ஆரோக்கியமான மாற்றம். கடந்த படங்களை போல் இந்த படத்திலும் ரஜினியின் முதுமையை இனம் காண முடியாத மேக்கப், இளவயதுக்குரிய விக், உடைகள், டூப் சாகஸங்கள் என்று இந்த படத்திலும் செய்திருக்கிறார்கள். ஆனால் எந்த ரஜினி படத்திலும் செய்யாத ஒரு முயற்சி இந்த படத்தில் கையாளப்பட்டிருக்கிறது. இதை பெரும்பாலான விமர்சகர்கள் சுட்டிக்காட்டாதது ஆச்சரியம். அவர்களுக்கு இது தெரியவில்லையா அல்லது கண்டு கொள்ளவில்லையா என்பது தான் என் கேள்வி. பொதுவாக படங்களின் சண்டைக்காட்சிகள், ஆபத்தான காட்சிகளில் கதாநாயகனின் அருமை உணர்ந்து டூப் போடுவார்கள். காட்சிகளில் அவர்களின் முகம் தெரிந்து விடாதவாறு அதை கவனமாகவும் ஷூட் செய்வார்கள். இங்கே ஒரு சுவராஸியமான விஷயத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். நடிகர்களில் ப்ரூஸ் லீ டூப் போடாதவர் என்று கேள்வி பட்டிருக்கிறேன். அவரைப்பற்றிய இன்னொரு ஆச்சரிய விஷயம் ஒன்று உண்டு. பொதுவாக திரைப்படத்தில் நாம் காணும் ஒரு செகண்ட் காட்சிக்கு 30 ஃப்ரேம்கள் பயன்படுத்தப்படும். அதில் சண்டைக்காட்சிகளை விறுவிறுப்பாக காட்ட ஃப்ரேம்களின் எண்ணிக்கை கூட்டப்படும் போது சண்டைக்காட்சிகள் வேகமாக தெரியும். ஆனால் ப்ரூஸ்லீயின் சண்டைக்காட்சிகளில் அவரின் அசைவுகள் இயல்பாகவே மிகவும் வேகமாக இருக்கும் என்பதால் அவரின் ஸ்டண்ட் ஸ்டெப்ஸ் தெரியாமல் போகுமாம். அதனால் ஃப்ரேம்களின் எண்ணிக்கையை குறைத்து, வேகத்தை குறைத்து காட்டுவார்களாம்.
ரஜினி ஒரு உச்ச நட்சத்திரம் என்பதால் இவரின் படங்களில் சர்வ சாதாரணமாக டூப் காட்சிகள் இருக்கும். ஆனால் இந்த படத்தில் விமர்சகர்கள் அனைவரும் குறிப்பிட்ட ஒரு விஷயம் சண்டைக்காட்சிகளில் ரஜினியின் வேகம், சுறுசுறுப்பு..!! ஆனால், அவை டூப் நடிகரை வைத்து எடுக்கப்பட்டது என்று சொல்லமுடியாத அளவுக்கு நிஜமான ரஜினியே இருந்ததை போன்ற உணர்வு. 60 வயது ரஜினியின் இந்த வேகம் என்னை ஆச்சரிய பட வைத்தது. அதே நேரம் ஃப்ரேம்களின் கூட்டல் யுக்தியை போல் இல்லாமல் இயல்பாகவும் இருந்தது. அது மட்டுமில்ல்லாமல் படத்தில் விஞ்ஞானி ரஜினியும், ரோபோ ரஜினியும் வரும் காட்சிகளில் இருவரும் சந்தித்துக்கொள்ளவது, உரையாடுவது, ஒருவரை ஒருவர் அணைத்துக்கொள்வது உள்ளிட்ட காட்சிகள் கம்ப்யூட்டர் க்ராஃபிக்ஸ் மூலம் செய்யப்பட்டது போல் இல்லாமல் அத்தனை பர்ஃபெக்ட். நான் ஆச்சரியத்துடன் கூகிளை கிண்டிய போது தான் என் ஆச்சரியத்தின் பின்னணி உண்மை புரிந்தது. அலெக்ஸ் மார்ட்டின் என்ற அயல்நாட்டு ஸ்டண்ட் நடிகரை மிகவும் புதுமையான முறையில் ரஜினியின் டூப்பாக இந்த படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள். அதாவது ரஜினி முகத்தை பிரதியெடுத்தது போல் ஒரு மாஸ்க் உருவாக்கி அதை அவருக்கு போட்டுவிட்டு, ரஜினி ஹேர்ஸ்டைலில் ஒரு விக்கையும் வைத்து விட்டார்கள். ஒரு மனிதனை எளிதாக அடையாளம் காண உதவும் கண்களை ரஜினியின் கண்ணாடி அணியும் வழக்கத்தை பயன்படுத்தி கண்ணாடி போட்டு கண் துளையையும் மறைத்து விட்டார்கள். இந்த படத்தில் அவரை வைத்து எடுத்த சண்டைக்காட்சிகள் அத்தனையும் உண்மையிலேயே புயல் வேகம் தான். ஆனால் படம் பார்ப்பவர்களுக்கு ரஜினியின் வேகமாக அது கருதப்பட்டிருக்கிறது. நிறைய விமர்சனங்களில் ரஜினி இந்த படத்தில் கடுமையாக உழைத்திருப்பதாகவும், சிட்டி ரோபோ ரஜினி இளமையாக தெரிவதாகவும் எழுதியிருந்தார்கள். உண்மையை சொல்லவேண்டுமென்றால் அது ரஜினியின் உருவமுமில்லை..அவரின் உழைப்புமில்லை.. அது மார்ட்டினுடையது...!!! பெரும்பாலான காட்சிகளில் சிட்டி ரோபாவாக வருவது ரஜினி அல்ல, அவரின் டூப்..!! இந்த படத்துக்காக ரஜினி கடுமையாக உழைத்திருக்கிறார் என்பது சுத்த ஹம்பக்..!! சொகுசாக நடித்ததற்கு அவருக்கு கிடைத்த தொகை கொஞ்ச நஞ்சமல்ல, 30 கோடிகள் என்று சொல்லப்படுகிறது.
எந்திரனில் சிட்டி ரோபோ ரஜினியாக சண்டைக்காட்சிகளில் நடித்த அலெக்ஸ் மார்ட்டின்
கதை நடக்கும் களமாக இன்றைய சென்னை காட்டப்படுகிறது. இன்றைய சென்னை மனித ரோபோ புழங்கும் காலகட்டத்தோடு கொஞ்சமும் பொருந்தவில்லை. கதை நடக்கும் காலத்தை இன்னும் 10, 15 வருடங்கள் கழித்து காட்டி இருந்தால் கொஞ்சம் பொருத்தமாக இருந்திருக்கும். படத்தின் பட்ஜெட்டில் பெரும்பகுதி ரஜினி, ஷங்கர், ஐஸ்வர்யா சம்பளத்துக்கே போயிருக்கிறது. அடுத்த இடத்தில் இருப்பது க்ராபிக்ஸ் செலவு. இந்திய திரையுலகில் இத்தனை அதிகமாக எந்த படத்திலும் க்ராஃபிக்ஸ் செய்ததில்லை. ஆனால், கிராமத்திலிருந்து வந்தவர்களெல்லாம் ஹாலிவுட், உலக சினிமாக்களை கரைத்து குடித்து வைத்திருக்கும் இந்த காலகட்டத்தில் எந்திரனின் க்ராபிக்ஸில் அத்தனை சுத்தம் மற்றும் இயல்பில்லை என்று தான் சொல்ல வேண்டும். பெரும்பாலான விமர்சகர்கள் படத்தின் க்ராஃபிக்ஸ் ஹாலிவுட் தரம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஹாலிவுட் நிறுவனம் செய்து கொடுத்தது ஹாலிவுட் தரத்தில் இருப்பது தான் நியாயம். ஆனாலும், அதை விட கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கிறது. வேண்டுமானால் இந்தியப்படங்களில் முதன்மையான தரம் என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம். ஃபியோவுல்ஃப் என்றதொரு அனிமேஷன் படத்தில் நடிகர்களை அச்சு அசலாக அனிமேஷன் செய்திருந்தார்கள். இனி வரும் காலங்களில் நடிகர்களின் கால்ஷீட்டுக்கு அழும் பணத்தை அனிமேஷன்காரர்கள் பங்கு போட்டுக்கொள்ளலாம். நடிகர்களின் உருவத்தை பயன்படுத்த மட்டும் ஒரு தொகையை கொடுக்க வேண்டியிருக்கும். அந்த கான்செப்டில் ரஜினியை மையமாக வைத்தே "சுல்தான் தி வாரியர்" என்ற படம் சில ஆண்டுகளாக தயாரிப்பில் இருப்பது அனைவரும் அறிந்ததே..!!
சயின்ஸ் ஃபிக்ஸன் திரைப்படங்களில் ரசிகர்களை கவர தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்தினால் போதும். ஆனால் இந்த படத்தில் அசட்டுக்காமெடிகள் படத்தின் வேகத்திற்கு ஸ்பீட் பிரேக்கர்களாக இருக்கிறது. ஜூனியர் சயிண்டிஸ்டாக காட்டப்படும் கருணாஸ், சந்தானத்தின் காமெடி சகிக்கவில்லை. சந்தானத்தின் காமெடியோ வெறும் காமநெடி.!! வில் ஸ்மித் நடித்த ஐ ரோபோட், ராபின் வில்லியம்ஸ் நடித்த பைசென்டினியல் மேன், கீனு ரீவ்ஸ் நடித்த மேட்ரிக்ஸ் படங்களின் பாதிப்பு எந்திரனின் பல காட்சிகளில் தெரிகிறது. மனிதர்களின் வசதிகளுக்காக உருவாக்கப்படும் ரோபாட்கள் மனிதர்களுக்கு எதிராக கிளம்புவது (ஐ ரோபாட்), மனிதர்கள் பல நூறு வடிவம் எடுத்து சண்டையிடுவது (மேட்ரிக்ஸ்) அந்த படங்களை நினைவு படுத்தும். ரோபோவின் தோற்றம் பைசென்டினியல் மேன் பட ரோபோவின் நகல். ரஜினி என்ற நடிகரை வைத்து கோடிகளை கொட்டி தான் படம் எடுக்க வேண்டும் என்பதில்லை. குறைந்த பட்ஜெட்டில் நகைச்சுவை படம் எடுத்தால் கூட அது வெற்றிப்படமாகத்தான் அமையும். சன் டிவி கொட்டிய அத்தனை கோடிகளுக்கு பதிலாக பல மடங்கு தொகையை தமிழர்களிடமிருந்து உறிஞ்சி எடுக்காமல் விடமாட்டார்கள். தமிழர்களுக்கு இதெல்லாம் ஒரு விஷயமா என்ன..? அவர்கள் தான் எதையும் தாங்கும் இதயம் படைத்தவர்கள் ஆயிற்றே..!!
மொத்தத்தில் எந்திரன் தமிழர்களை ஏமாற்ற தெரிந்த தந்திரன்..!!