நேரம்:

செவ்வாய், 24 நவம்பர், 2009

(S)iringa (M)anasara (S)iringa..! - SMS ஜோக்ஸ்

 

SMS ஜோக்ஸ்

 

 

 

 

 

 

 

நோயாளி: டாக்டர் ரொம்ப நாளா வயிற்று வலி என்னால பொறுக்கவே முடியலை.

 

டாக்டர்:வயிறு வலிக்கும் போது ஏன் பொறுக்கப் போனிங்க ரெஸ்ட் எடுக்கலாமே?!!!...

 

 

ஒரு "சின்னத்" தத்துவம்.

 

பெண்களுக்கு பொறந்த வீடு புகுந்த வீடுன்னு இரண்டு வீடுகள் இருக்கும் போது

 

ஆண்களுக்கு பெரிய வீடு, சின்னவீடுன்னு இரண்டு வீடுகள் இருக்கக்கூடாதா?

 

 

காதலுக்கு மதிப்பெண்கள்:

 

சுமாரா காதல் பண்ணுனா 35 மார்க்

 

சூப்பரா காதல் பண்ணுனா 80 மார்க்

 

சின்சியரா காதல் பண்ணுனா

-

-

-

 

 

வேறு என்ன "டாஸ் மாக்" தான்

 

 

ஒருவர்: பஸ்ஸ்டாப்புல நின்னு மேலயே பாத்துகிட்டு இருக்கிங்களே ஏன்?

 

சர்தார்: சென்னைக்கு போற பஸ்ஸு ரெண்டு மணிக்கு "மேல" வரும்ன்னு சொன்னாங்க.

 

 

பெண்வீட்டார்: மாப்பிள்ளை என்ன பண்ணுறாரு.?

 

புரோக்கர்: அவர் நின்னா ரெயில் ஓடும் ரெயில் நின்னா மாப்பிள்ளை ஓடுவாரு

 

பெண்வீட்டார்: அப்படியா அப்படி என்ன முக்கியமான வேலைப் பார்க்குறாரு

 

புரோக்கர்: மாப்பிள்ளை ஸ்டேசன்ல முறுக்கு விக்கிறாரு.

 

 

பார்த்திபன்: வடிவேலு உன் மெடிக்கல் கடையில எல்லா மருந்தும் இருக்கா?

 

வடிவேலு: ஆமா உனக்கு என்ன மருந்து வேணும்?

 

பார்த்திபன்: அப்படின்னா ஒரு கிலோ வெடிமருந்து கொடு.

 

 

ஒருவர்: டாக்டர் நான் சிம்கார்டை முழுங்கிட்டேன்

 

டாக்டர்: கையை உள்ளே விட்டு எடுக்க வேண்டியதுதானய்யா?

 

ஒருவர்: உள்ளே விட்டுப் பாத்துட்டேன் டாக்டர் Not reachable ன்னு சத்தம் வருது

 

 

பெத்தப் பொண்ணுக்கும் எக்ஸாம் பேப்பருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு

என்னன்னா…..

 

ரெண்டையும் கட்டிக் கொடுக்கிற வரைக்கும் அடிவயிற்றுல ஒரு நெருப்பு பத்தி எரிஞ்சுக்கிட்டே இருக்கும்.

 

 

சர்தார் 1: வெயிட்டான படிப்பு படிச்சும் எனக்கு இன்னும் வேலை கிடைக்கல

 

சர்தார் 2: அப்படி என்ன படிப்பு படிச்சுருக்க

 

சர்தார் 1: pre (Kg) L(Kg) U(Kg)

 

 

கணவன்: நான் திடீர்ன்னு செத்துப் போனா நீ என்ன செய்வே?

 

மனைவி: நானும் கூடவே செத்துப் போயிடுவேங்க.

 

கணவன்: ஜோசியக்காரன் எனக்கு அப்பவே சொன்னான் நீ செத்தாலும் சனி உன் கூடவே வரும்ன்னு

 

 

ஒரு மொபைல் தத்துவம்:

 

பொண்ணுங்க மனசு தண்ணி மாதிரி

 

பசங்க மனசு மொபைல் மாதிரி

 

தண்ணி மேல மொபைல் விழுந்தாலும்

 

மொபைல் மேல தண்ணி விழுந்தாலும்

 

சேதம் என்னவோ மொபைலுக்குத்தான்.!!!

 

 

.சிறப்பு தத்துவம்.

ஒரு மஞ்சக்கயித்த உன் கையில கட்டுனா அதுக்கு பேரு காப்பு..!!

 

அதையே ஒரு பொண்ணு கழுத்துல கட்டுனா அது நீ

 

உனக்கு வச்சுக்கிட்ட ஆப்பு.!!

 

 

 

.நீதிபதி: ஏண்டா சரவணா ஸ்டோர் கடையில திருடுன?

 

திருடன்: சதா அக்காதான் "எடுத்துக்கோ எடுத்துக்கோ அண்ணாச்சி கடையில் எடுத்துக்கோன்னு சொன்னாங்க அதான் சாமி எடுத்தேன்.

 

 

நச்சுன்னு ஒரு உண்மை சொல்லுறேன் கேட்டுக்குங்க.

 

என்னதான் 220CC பல்சரிலும், 350CC ராயல் என்பீல்டுலயும் இந்த பசங்க சுத்தினாலும் ஃபாலோ பண்ணப்போறது என்னவோ 80CC ஸ்கூட்டியைதான்.

 

 

143 அப்படின்னா என்ன அர்த்தம் சொல்லுங்க.

 

I love you வா ம்ஹூம் இல்லை

 

I hate you வா இல்லவே இல்லை

 

I like you வா ம்ஹூம்

 

I miss you வா இல்லை

 

I wish you வா இல்லை இல்லை இல்லை

 

சரி நான் சரியாக சொல்லுறேன்

 

143ன்னா

-

-

நூத்தி நாப்பத்து மூன்று. (அய்யோ அடிக்க வராதிங்க)

 

 

ஹமாம் சோப் ரீ மிக்ஸ் விளம்பரம்:

 

பவித்ரா கடைக்குப் போயி ஒரு குவார்ட்டர் சரக்கு வாங்கிட்டு வர்றியாம்மா?

 

சரிம்மா.....

 

அய்யய்யோ என் பொண்ணுகிட்ட என்ன சரக்குன்னு சொல்லலியே

 

வாந்தி வருமே

 

தலைவலிக்குமே

 

ஒவர் ஹேங் ஆகுமே

 

போதை ஏறாதே

 

பவித்ரா ..........

 

என்னம்மா (பவித்ரா கையில் ஒல்ட் மங்குடன்)

 

ஓல்ட் மங்கிருக்க பயமேன்.!!!

 

 

தொண்டன்: தலைவரே நீங்க சொன்ன மாதிரி அசிஸ்டண்ட் கமிசனர போட்டுத் தள்ளிட்டோம்

 

அரசியல் தலைவர்: என்னடா சொல்லுறிங்க எப்படா நான் அசிஸ்டண்ட் கமிசனர கொல்லச் சொன்னேன்?

 

தொண்டன்: போங்க தலைவா நேத்துத்தான சொன்னிங்க ரொம்ப டென்சனா இருக்கு அந்த ஏசியப் போடுங்கடான்னு.

 

 

தண்ணீர் தெளிச்சு ஏன் கோலம் போடுறாங்க தெரியுமா?

 

ஏன்னா

 

கோலம் போட்டுட்டு அப்புறம் தண்ணி தெளிச்சா கோலம் அழிஞ்சுடும்.

 

 

காந்தி 13 வயசுல கல்யாணம் பண்ணுனாரு

 

நேரு 14 வயசுல கல்யாணம் பண்ணுனாரு

 

பாரதி 7 வயசுல கல்யாணம் பண்ணுனாரு

 

இப்பத்தான் தெரியுது நாம ஏன் வரலாற்றுல இடம் பெறலன்னு.!!

 

 

.ஜோசியர்: உங்க ஜாதகப் படி நீங்க ரொம்ப பணக்கஷ்டத்துல இருக்கனுமே

 

ஜோசியம் பார்ப்பவர்: ஆமாம் சாமி.. இப்ப உங்களுக்கு கொடுக்கக் கூட கையில் பத்துப் பைசா இல்லை.

 

 

படிக்கும் போது தூக்கம் வந்தா என்ன செய்யனும்

 

படிப்புத்தான் வரல

 

தூக்கமாவது வருதேன்னு நினைச்சு

 

சமத்தா தூங்கிடனும்.

 

 

.தினம் ஒரு kural படிக்கனும்

 

எனவே இன்னிக்கு இந்த kural படிங்க

 

"மியாவ் மியாவ் "

 

சரியா நாளைக்கு வேற kural படிக்கலாம் என்ன?(சரி சரி அழக்கூடாது)

 

 

பையன்: அம்மா எல்லா வெடியும் தீந்துப் போச்சு இந்த சிவப்பு கலர் பெரிய வெடியை விடவா?

 

அம்மா: சனியனே அது கேஸ் சிலிண்டருடா.....

 

 

.மனசு இருந்தா SMS அனுப்புங்க...

 

அன்பு இருந்தா பிக்சர் மெசேஜ் அனுப்புங்க

 

காசு இருந்தா CALL பண்ணுங்க...

 

எல்லாம் இருந்தா .....

 

உங்க செல்லை கொரியரில் அனுப்புங்க ஹி ஹி....

 

 

.ஒரு பையன் ரோட்டுல தும்மிகிட்டே போறான்

 

ஏன்?

 

ஏன்னா

 

அவன் பொடிப் பையன்.

 

 

நாம் வாழனும்னா எத்தனைப் பொண்ணை வேனும்னாலும் காதலிக்கலாம்

 

ஆனா சாவனும்னா

 

ஒரே ஒரு பொண்ணை

 

கல்யாணம் கட்டிக்கிட்டாப் போதும்.

 

 

பசங்க காதலுக்கும் பொண்ணுங்க காதலுக்கும் என்ன வித்தியாசம்.

 

பசங்க பிரண்டுன்னு சொல்லிட்டு பின்னாடி காதலிப்பாங்க

 

பொண்ணுங்க காதலிச்சுட்டு பின்னாடி பிரண்டுன்னு சொல்லுவாங்க.

 

 

.நண்பா..!! நேற்று என் கனவில் நீ வந்தாய்

 

கட்டுக்கட்டாக பணத்தினை எண்ணிக்கொண்டிருந்தாய்

 

ஆனால் ஒரு விசயம் மட்டும் புரியவில்லை

 

அது என்னவென்றால்

 

ஏன் கோவில் வாசலில் உட்கார்ந்திருந்தாய்?

 

 

ஒருவர். ஹலோ சிங்ஜி ஏன் உங்க புது வீட்டுக்கு பாடி ஸ்பிரே அடிக்கிறிங்க

 

சர்தார். ஏன்னா இது வியர்வை சிந்தி கட்டிய வீடு.

 

 

திருடர்கள் ஜாக்கிரதை என்னும் தலைப்பில் கவிதை எழுத

கண் மூடி ஒரு நிமிடம் யோசித்தேன் விழித்துப் பார்த்தால்

என் பேனாவை காணவில்லை.

 

 

இப்ப நீங்க பைசா செலவில்லாம டென்னிஸ் பார்க்கப் போறிங்க

 

IS IS IS IS IS IS IS IS IS IS

 

பாத்தாச்சா டென்னிஸை

 

மீண்டும் வருகிறென்.

 

நன்றி

 

 

.தங்கச் செயினை உருக்கினால் தங்கம் வரும்

 

வெள்ளிச்செயினை உருக்கினால் வெள்ளி வரும்

 

அதுமாதிரி சைக்கிள்செயினை உருக்கினால் சைக்கிள் வருமா?

 

 

ஒருவன்: பாவம் அந்த பொண்ணுக்கு காது கேட்காது போல நான் ஒன்னு சொன்னா அது ஒன்னு சொல்லுது

 

கேட்பவர்: ஏன் என்னாச்சு

 

ஒருவன்: நான் ஐ லவ் யூன்னு சொன்னா அதுக்கு செருப்பால அடிப்பேன்னு சொல்லுது.

 

 

 

அவளுக்கு எண்ணை பிடிக்கவில்லை

 

அதனால் எனக்கும் எண்னைப் பிடிக்கவில்லை.

 

ஆகவே

 

-

 

-

 

ரெண்டு பேரும் எண்ணை இல்லாமல் தோசை சுட்டு சாப்பிட்டோம். ஒகே.

 

 

.ஓட்டுப்போடுவதற்கான அதிகாரபூர்வ வயது 18

 

திருமணத்திற்கான அதிகாரபூர்வ வயது 24

 

இதிலிருந்து என்ன தெரியுது.

 

IT IS TOUGHER TO CONTROL A LADY THAN A COUNTRY

 

 

 

 

 

 

 

 

நன்றி: இணையம்

 

சனி, 21 நவம்பர், 2009

என்னைக்கவர்ந்த பொக்கிஷம்..!!

என்னைக்கவர்ந்த பொக்கிஷம்..!!












திரைப்படம் குறித்த பார்வை தமிழகத்தில் மிகவும் தவறான கண்ணோட்டத்திலேயே கையாளப்படுகிறது என எண்ணுகின்றேன். திரைப்படம் என்ற சக்தி வாய்ந்த ஊடகத்தை வெறும் பொழுது போக்கு, மன வக்கிரங்களுக்கு வடிகால், தனி மனித வழிபாடு என்ற ரீதியிலேயே பெரும்பாலும் தமிழர்கள் பயன்படுத்துகிறார்கள். இப்படிப்பட்டவற்றை நான் குப்பைகள் என்று வெகு சுலபமாக ஒதுக்கி விடுகிறேன். இவையெல்லாம் தாண்டி சில திரைப்படங்கள் சமூகத்திற்கு நற்கருத்து, புதிய சிந்தனை, ஒழுக்கம், ஜாதி, மத நல்லிணக்கம் ஆகியவற்றை தாங்கிய திரைப்படங்களும் வந்து நமக்கு கொஞ்சம் நம்பிக்கை அளிக்கத்தான் செய்கிறது.




அப்படிப்பட்ட திரைப்படங்களின் இயக்குநர்கள் வரிசையில் சேரன், அமீர், மிஷ்கின், வசந்த பாலன், பாலாஜி சக்திவேல், ராதாமோகன் ஆகியவர்களை சொல்லுவேன். இவர்கள் நடிகைகளின் சதையை நம்பாமல் கதையை நம்பி படமெடுத்து தமிழ் சினிமாவுக்கு புத்துயிர் கொடுப்பவர்கள். இந்த பட்டியலில் முன்னணியில் இருக்கும் சேரன் எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர். இரசிகனின் பலவீனங்களை குறி வைத்து பணத்துக்காக படமெடுத்து கல்லாவை நிறைக்க நினைக்காமல் சமூகத்துக்கு நல்லதொரு கருத்தை சொல்ல எப்பொழுதும் முயலும் சேரனின் அந்த தாகம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அந்த வகையில் அவர் எடுத்த பாரதி கண்ணம்மா, பொற்காலம், தேசிய கீதம், வெற்றி கொடி கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, மாயக்கண்ணாடி மற்றும் பொக்கிஷம் வரை அனைத்து படங்களும் தமிழ் சினிமாவில் காலம் காலமாக இருந்து வரும் ஆபாச இலக்கணங்களை உடைத்தெறிந்தவை. அருமையான கருத்துக்களை உள்ளடக்கியவை..!!எனக்கும் பிடித்தவை. இது போன்ற அழகான இயல்பான காதல் கதையில் குத்துப்பாட்டு, பஞ்ச் டயலாக், ஹீரோயிச காட்சிகளை எதிர்பார்ப்பவர்களுக்கு நான் சொல்வது "சாரி... உங்களுக்கான இளைய "தலைவலி" டைப் படம் இதுவல்ல..!!"




அவரின் சில படங்கள் வணிக ரீதியாக தோல்வியடைந்தது உண்மை தான். உதாரணத்திற்கு தேசிய கீதம், மாயக்கண்ணாடி மற்றும் பொக்கிஷம் ஆகியவை. இந்த தோல்வியை நான் சேரனின் தோல்வியாக கருதவில்லை. தமிழ் சினிமா இரசிகர்களின் இரசனைக்கான தோல்வியாகத்தான் சொல்வேன். அவரின் தவமாய் தவமிருந்து படம் பெற்றோரின் மேன்மையை சொல்லி என்னை மன உருக வைத்த படம். ஒரு நல்ல கலைஞன் என்றும் கெட்ட படைப்புகளை தர வாய்ப்பில்லை. பார்க்கும் பார்வையாளனின் இரசனையில் ஏற்பட்ட கோளாறுக்கு படைப்பாளியை ஏன் குற்றம் சொல்லவேண்டும்...? உதாரணத்திற்கு காதலின் மேன்மையை கவியழகோடு சொன்ன சமீபத்திய பொக்கிஷம் திரைப்படத்தின் தோல்வியை சொல்லலாம். காதலை அவர் சொன்ன விதத்தில் நிச்சயம் தவறு இருப்பதாக தோன்றவில்லை. ஆனால் காதலை உணர்ந்து உள்வாங்கும் குணம், மனநிலை, அனுபவம் தமிழ் இரசிகர்களிடம் குறைந்து விட்டது என்பது தான் உண்மை. இலக்கிய வடிவில் ஓர் இயல்பான திரைப்படம் என்று சேரனால் அறிமுகம் செய்யப்பட்ட அந்த படம் அதைப்போல தான் அமைந்திருந்தது. அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனா பெரும்பாலான தமிழ் இரசிகர்களால் அது நிராகரிக்கப்பட்டது வேதனைக்குரியது.




காதல் என்பதே பொழுது போக்கு மற்றும் உணர்ச்சிக்கு வடிகாலாக நினைக்கும் இன்றைய சமுதாயத்தில் அப்படி ஒரு காதலை இயல்பாக நிச்சயம் நம்மவர்களால் ஏற்க முடியவில்லை என்பது தான் உண்மை. காதலித்து, அதன் இன்ப துன்பங்களை உணர்ந்தவர்களால் இந்த படத்தை பிடிக்கவில்லை என்று சொல்ல முடியாது. எஸ் எம் எஸ், இமெயில், இண்டர்நெட் சேட் என்று தொழில்நுட்பம் வளர்ந்த இந்த காலகட்டத்தில் கடிதங்களின் முக்கியம் இல்லாமல் போய்விட்டது. ஆனால் இவை எதுவுமில்லாத காலகட்டத்தில் கடிதங்கள் தான் காதலின் தூதுவர்கள். அவை கொடுக்கும் ஏக்கம், கனவு, இம்சை, சந்தோஷம், வலி காதலர்கள் மட்டுமே உணர்ந்து புரிந்து கொள்ள வேண்டியது. நான் பட்ட உணர்வுகளை இந்த படம் காட்சிக்கு காட்சி அப்படியே பிரதிபலித்திருக்கிறது. காதலென்றாலே கல்யாணத்திற்கு முன் என்று ஆகிவிட்ட நிலையில் கல்யாணத்திற்கு பிறகான காதலை கற்பனை செய்து கூட பார்க்க நம்மவர்களால் முடியவில்லை. இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியும் மிகவும் இரசனையுடன், காதலின் சந்தோஷங்கள், வலி உணர்ந்து செதுக்கப்பட்டிருக்கிறது. சேரனும் காதல் திருமணம் செய்தவர் தான் என்பதால் திரைப்படம் இயல்பான உணர்வை வெளிப்படுத்துவதில் வெற்றி கண்டிருப்பதாக கொள்ளலாம்.




இந்த படம் மட்டுமல்ல, இதன் பாடல்களும் அதன் வரிகளும் கூட இலக்கிய வாசம் வீசுவதை அதன் சுவை அறிந்தவர்கள் உணர்ந்து இரசிப்பார்கள். உதாரணத்திற்கு நான் தினமும் கேட்கும் ஒரு பாடல் அந்த படத்தில் இடம்பெற்ற "நிலா நீ வானம் காற்று பாடல்..!!அந்த பாடல் வரிகளை கவனியுங்கள்..




நிலா நீ வானம் காற்று

மழை என் கவிதை மூச்சு

இசை துளி தேனா மலரா

திசை ஒலி பகல்

(நிலா..)




தேவதை அன்னம் பட்டாம்பூச்சி

கொஞ்சும் தமிழ் குழந்தை

சிணுங்கல் சிரிப்பு முத்தம்

மௌனம் கனவு ஏக்கம்

மேகம் மின்னல் ஓவியம்

செல்லம் பிரியம் இம்சை




இதில் யாவுமே நீதான் எனினும்

உயிர் என்றே உனை சொல்வேனே

நான் உன்னிடம் உயிர் நீ என்னிடம்

நாம் என்பதே இனிமேல் மெய் சுகம்

(நிலா..)




அன்புள்ள மன்னா.... அன்புள்ள கணவா....

அன்புள்ள கள்வனே.... அன்புள்ள கண்ணாளனே....

அன்புள்ள ஒளியே.... அன்புள்ள தமிழே....

அன்புள்ள செய்யுளே.... அன்புள்ள இலக்கணமே....

அன்புள்ள திருக்குறளே.... அன்புள்ள நற்றினையே....

அன்புள்ள படவா.... அன்புள்ள திருடா....

அன்புள்ள ரசிகா.... அன்புள்ள கிறுக்கா....

அன்புள்ள திமிரே.... அன்புள்ள தவறே....

அன்புள்ள உயிரே.... அன்புள்ள அன்பே....

இதில் யாவுமே இங்கு நீதான் என்றால்

என்ன தான் சொல்ல சொல் நீயே

பேர் அன்பிலே ஒன்று நான் சேர்ந்திட

வீண் வார்த்தைகள் இனி ஏன் தேடிட




நிலா நீ வானம் காற்று

மழை என் கவிதை மூச்சு

இசை துளி தேனா மலரா

திசை ஒலி பகல்




அன்புள்ள மன்னா....அன்புள்ள கணவா

அன்புள்ள கள்வனே... அன்புள்ள கண்ணாளனே......




சபேஷ்-முரளியின் இசையில், ஜேசுதாஸின் வாரிசு விஜய் ஜேசுதாஸ், சின்மயி குரலில் அமைந்திருக்கும் அருமையான மெலடி இது.! மயிலிறகின் வருடல், ஐஸ்க்ரீமின் இனிமை, மழையின் குளிர்ச்சி, மனதுக்கு பிடித்தவளின் கொஞ்சல், குழந்தையின் செல்ல சிணுங்கல் ஆகியவற்றை இந்த பாடலில் என்னால் உணரமுடிகிறது. கல்யாணத்திற்கு முன் காதலிப்பவர்கள், கல்யாணத்திற்கு பின் மனைவியை காதலிப்பவர்களுக்கு இந்த படம், இந்த பாடல் மிகவும் பிடிக்கும்..! நிச்சயம் பிடிக்க வேண்டும்..!! பிடிக்கவில்லை என்றால் அதற்கான காரணம் இந்த பாடலில் இல்லை.. உங்களிடம் இருக்கிறது.!!!










என்னவள் எழுதிய கடிதங்கள் மட்டுமல்ல, இந்த படமும் என்னைப் பொறுத்தவரை பொக்கிஷம் தான்..!!




மதிப்பெண்: 86/100







என்றும் அன்புடன்,

ஜாஃபர் (இதயம்)



http://idhayampesukirathu.blogspot.com






திங்கள், 16 நவம்பர், 2009

படிப்புக்கேற்ற வேலை..!!

நண்பர்களே..!!

பொதுவாகவே நம்மவர்களிடம் என்ன படிப்பு படித்தால் என்ன வேலைக்கு போகலாம் என்ற நோக்கம் இல்லாமல் படிக்கிறார்கள். அதன் பிறகு கிடைத்த வேலைக்கு போகிறார்கள்.  அவர்களின் படிப்புக்கு சம்பந்தமில்லாத ஒரு வேலை பார்ப்பதை பல வருடங்கள் கழித்து தான் உணர்கிறார்கள். ஆனால் காலம் கடந்து போன பின் அதை நினைத்து பிரயோசமில்லை. இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க என்ன படித்தால் என்ன வேலைக்கு போகலாம் என்பதை புரிய வைக்கும் வகையில் ஒரு வரைபடம் கிடைத்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பார்த்து பயனுள்ளதா என்பதை தெரியப்படுத்துங்கள். தேவைப்படுபவர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.

 

காரணம், சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே மற்றவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பது தான்..!!

 

career map.bmp

 

 

 

என்றும் அன்புடன்,

ஜாஃபர் (இதயம்)

 

http://idhayampesukirathu.blogspot.com

 

 

சனி, 14 நவம்பர், 2009

2012 - உண்மையிலேயே உலகம் அழியுமா..?

 

2012  - உலகம் உண்மையிலேயே அழியுமா..?

 

 

 

நான் பார்க்க வெகுநாட்களாக மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த படம் 2012 (Who will survive?). இது ஒரு வழியாக நேற்று வெளியாகி இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பே இப்படம் வெளியிட திட்டமிடப்பட்டு பிறகு சில காரணங்களுக்காக ரிலீஸ் தேதி தள்ளிப்போடப்பட்டது.

 

சரி.. என்ன கதை இந்த படத்தில்..? பொதுவாக ஹாலிவுட்காரர்கள் தங்கள் படங்களில் உலகத்துக்கு பெரும் ஆபத்து வருவது போலவும், அந்த ஆபத்தை அமெரிக்க ஹீரோக்கள் தடுத்து உலகத்தை காப்பாற்றுவது போலவும் நிறைய படம் எடுத்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு ஆர்மெக்டான், வல்கனோ, தி இண்டிபெண்டன்ஸ் டே ஆகியவற்றை சொல்லலாம். இந்த படத்தில் கொஞ்சம் முன்னேறி உலகம் மொத்தமும் வரும் டிசம்பர் மாதம், 2012  ஆண்டில் அழிவது போல் காட்டியிருக்கிறார்கள். ஹாலிவுட்டில் பொய்யை காட்டினாலும் அதை உண்மையை காட்டிலும் மிக நேர்த்தியாக செய்வார்கள் என்பது நமக்கு தெரிந்ததே..! அந்த வகையில் இந்த படத்தை கம்ப்யூட்டர் க்ராஃபிக்ஸ், விஷூவல் எஃபெக்ட்ஸ் போன்ற நவீன யுக்திகளை பயன்படுத்தி உலகம் எப்படி அழியும் என்பதை மிக நேர்த்தியாகவும், தத்ரூபமாகவும், பிரமாண்டமாகவும் காட்டி அசத்தி இருக்கிறார்கள்.

[2012.jpg]

பொதுவாக எந்த ஒரு அசாதாரண விஷயத்தை ஹாலிவுட்டில் சொன்னாலும் அதில் ரசிக்க கூடிய ஒரு விஷயத்தை மிகவும் அழகாக கதைக்குள் நுழைத்திருப்பார்கள். பிரமாண்ட கப்பலும், அது கடலுக்குள் மூழ்குவதும் தான் டைட்டானிக் படத்தின் கதை என்றாலும் அதன் நடுவே லியனார்டோ டி காப்ரியோ, கேட் வின்ஸ்லெட் காதலை கதைக்குள் நுழைத்து படத்தை இன்னும் சுவராஸியம் ஆக்கி இருப்பார்கள். அப்படித்தான் இந்த படத்திலும் உலகம் அழிவிற்கான அத்தாட்சியாக அவர்கள் எடுத்திருக்கும் ஒரு விஷயம்..!!

 

கி.பி 900 ஆண்டு வாக்கில் மத்திய அமெரிக்காவின் மெக்ஸிகோ பகுதியில் வாழ்ந்தவர்கள் மாயன் சமூகத்தினர். நாம் சிறு வயதில் பாடப்புத்தகத்தில் படித்த சிந்து சமவெளி நாகரீகம் போல் இவர்களின் நாகரீகமும் பரந்து விரிந்து வளர்ந்து, பிறகு ஒரு காலகட்டத்தில் ஒட்டு மொத்தமாக அழிந்து போயிருக்கின்றது. அவர்களும், அவர்களின் நாகரீகமும் அழிந்து போனாலும் உலகம் அவர்களை இன்னும் நினைவில் வைத்திருக்க காரணம் அவர்களிடம் அபரிதமாக இருந்த வானவியல் அறிவு. இன்றைய காலகட்டத்தில் வானியலை கரைத்துக்குடித்தவர்கள் கூட இவர்களின் கண்டுபிடிப்புகள், ஜோஸியங்களை கண்டு கொஞ்சம் மிரளவே செய்கிறார்கள். உதாரணத்திற்கு ஒன்று சொல்லவா..? நாம் வாழும் பூமி தனது ஆதார அச்சில் ஒவ்வொரு 72 ஆண்டுகளுக்கு ஒரு முறை 1 டிகிரி நெகிழ்வதாக கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள். எந்த வகையான அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றமும் இல்லாத காலத்தில் இவர்கள் இதை சொன்னதை அறிந்து உலகம் மூக்கில் விரலை வைக்கிறது.

 

அப்படிப்பட்ட மாயன் சமூகத்தினர் பயன்படுத்திய காலண்டரில் தான் 2012-ல் உலகம் அழியும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இப்படி அவர்கள் சொல்லும் காரணமும் மிகவும் ரசனைக்குரியது. மாயன் காலண்டர் மொத்தம் ஐந்து சுழற்சிகளைக் கொண்டதாம். ஒரு சுழற்சிக்கு 5125 ஆண்டுகள் . அதாவது மொத்தம் ஏறத்தாழ 26000 ஆண்டுகள் வருகிறது. ஒவ்வொரு 5125 ஆண்டுகள் முடியும் போதும் பூமியில் மிகப்பெரியதொரு மாற்றம் அல்லது அழிவு உண்டாகும் என்பது அவர்களின் கணிப்பு. அதன் படி இப்போது நாமிருக்கும் இந்த ஐந்தாவது மற்றும் இறுதி  சுழற்சி ஆகஸ்ட் 11 கி.மு 3114-ல் தொடங்கி வரும் 2012 டிசம்பரில் 5125 ஆண்டுகள் சுழற்சி நிறைவு பெறப்போகின்றது. அதனால் தான் 2012-.ல் உலகம் அழியும் என்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதை மையமாக வைத்து பிரமாண்டமான இந்த படமும் வந்துவிட்டது. உலகத்தின் இந்த அழிவு நிபிரு என்ற கோள் பூமியின் மேல் மோதுவதன் மூலம் நடக்கும் என்றும் மாயன்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.!!

 

நடக்க போகும் நிகழ்வுகளை முன் கூட்டியே சொல்வதில் நாஸ்ட்ராடமஸ் என்பவர் திறமைசாலியாக இருந்தார். அவர் சொன்னதில் சில நடந்தும் இருக்கிறது, நடக்காமலும் போயிருக்கிறது. ஆனால் மாயன் காலண்டரில் சொன்னபடி பூமி 2012-ல் அழியுமா என்றால் நிச்சயமாக அதற்கான விஞ்ஞான பூர்வ ஆதாரங்கள் எதுவும் நம்மிடம் இல்லை. ஆனால் இதை நினைத்து உலகத்தில் சிலர் கலவரம் அடைந்திருப்பதும் உண்மை என்பதை மறுப்பதற்கில்லை. உலகம் அழியும் கருத்தை ஏற்கனவே நாசா விண்வெளி மையம் அறிந்து கண்டு கொள்ளாமல் விட்டு விட்டாலும் இந்த படம் ஏற்படுத்த போகும் பாதிப்பை அறிந்து அதிர்ச்சியாகி கடந்த வாரம் ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் "மாயன் காலண்டர் சமாச்சாரம் ஒரு கப்ஸா..! அதை கண்டு கொள்ளாதீர்கள், கலவரம் அடையாதீர்கள் என்று கூறியிருக்கிறார்கள். மாயன் காலண்டரில் குறிப்பிட்டிருப்பது போல் நிபிரு என்ற ஒரு கோளே இல்லை என்று நாசா அடித்து சொல்லி இருக்கிறது. இருந்தாலும், ஒரு சாதாரண படத்திற்காக உலகத்தின் அதி நவீன தொழில்நுட்பத்தை கொண்ட நாசாவே அறிக்கை வெளியிட்டிருப்பதை கண்டு ஒரு வேளை மாயன் காலண்டர் உண்மையோ என நினைத்து பீதி கொள்பவர்களும் இருக்கிறார்கள்.

 

இந்த படத்தின் டைரக்டர் ரோலண்ட் எமெரிக் (Roland Emmerich) ஏற்கனவே இண்டிபெண்டன்ஸ் டே, டே ஆஃப்டர் டுமாரோ ஆகிய படங்களை இயக்கியவர். அந்த இரு படங்களும் பூமிக்கு ஏற்படப்போகும் ஆபத்தை சொல்லும் படங்கள். அவரின் அந்த படங்களை பார்த்து அதன் பிரமாண்டம், விஷூவல் எஃபெக்ட்ஸ் பார்த்து வியந்து போயிருக்கிறேன் (குறிப்பாக டே ஆஃப்டர் டுமாரோ.!). இந்த படம் அவற்றை காட்டிலும் இன்னும் மிக சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன். இங்கு சவுதியில் தியேட்டர் இல்லை என்பதாலும், ரியாத்திற்கு டிவிடி வர இன்னும் நாளாகும் என்பதாலும் நேற்று கூகிள் அம்மனிடம் டவுன்லோட் செய்ய டோரண்ட் அல்லது ஹோஸ்டிங் சைட் லிங்க் வரம் கேட்டதற்கு "இப்போதைக்கு கேமரா காப்பி தான் தர முடியும், டிவிடி முடியாது" என கை விரித்து விட்டாள். இன்னும் சில நாட்கள் காத்திருந்து தான் ஆக வேண்டும். அதை பார்த்த பிறகு தான் படம் பற்றிய விமர்சனத்தை எழுத முடியும். பொதுவாக நான் பார்த்த படங்களுக்கு தான் விமர்சனம் எழுதி இருக்கிறேன். உலக மக்களை பீதிக்குள்ளாக்கும் இந்த படம் அதிக முக்கியத்துவம் பெறுவதால் இந்த படத்தை பார்ப்பதற்கு முன்பே எழுத வேண்டிய கட்டாயம்..! இதோ எழுதியும் விட்டேன்..!! 2012-ல் உலகம் உண்மையிலேயே அழியுமா..?!!!!

 

என்றும் அன்புடன்,

 

இதயம்

 

http://idhayampesukirathu.blogspot.com

 

 

[2012+(14).jpg]

 

 

 

 

 

 

 

[2012+(15).jpg]

வியாழன், 12 நவம்பர், 2009

நவீன கைப்புள்ள..!!!

எச்சரிக்கை: இந்த கதையில் வரும் சம்பவங்கள், பெயர்கள் யாவும் கற்பனையே.. யாரையும் குறிப்பிடுவன அல்ல..!!-என்று நான் சொல்ல மாட்டேன். நீங்கள் யாரை நினைத்துக்கொண்டு படிக்கிறீர்களோ அவர்கள் தான் இந்த கதையில் வருபவர்கள். !!!!

 

 

நவீன கைப்புள்ள..!!!

 

 

 

 

 

எல்லோரும் ஜரீர் ஹெட் ஆஃபீஸ் மீட்டிங் ரூமில் கூடி உட்கார்ந்து இருக்கிறார்கள். அப்பொழுது கூட்டத்தில் பரபரப்பு...

 

ஏய்..அண்ணன் வரார்.. அண்ணன் வர்ரார்.. எல்லாரும் தள்ளி நில்லுங்க...!

 

அல்லக்கைகள் இரண்டு பக்கமும் வரஅதன் நடுவே அலம்பலாக நம் "காத்தான் குடி கைப்புள்ள" இர்ஷத் வருகிறார்.!

 

 

இர்ஷத் கூட்டத்தை பார்த்து...

 

ம்ம்ம்.... எல்லாரும் வந்தாச்சா.. அப்புறம் பர்ச்சேஸ்லேர்ந்து ஜாஃபர் வரலை, ஹெச்.ஆர்லேர்ந்து சாதிக் வரலை,  ஐ.டி-லேர்ந்து ஆசிம் வரலைன்னு குறையெல்லாம் சொல்லக்கூடாது..  ஆமா..!!  ஒரு சான்ஸ் கொடுத்தா எல்லாம் "கப்"புன்னு பிடிச்சி யூஸ் பண்ணிக்கணும்..!!

 

கூட்டத்தில் இருந்த பெரியவர் ரஸ்வி எழுந்து கோபத்துடன்...

 

ஏய்.. நாங்கல்லாம்..வருஷக்கணக்கில ஜரீர்ல வேலை பார்த்தும் அதே வேலையில் தான் இப்பவும் இருக்கோம். நீ வந்த மூணு வருஷத்திலேயே ப்ரொமோஷனுக்கு ரிக்வெஸ்ட் குடுத்தியாமே.?!!

 

அவரை இர்ஷத் எகத்தாளமாக பார்த்துவிட்டு கூட்டத்தை நோக்கி...

 

ஏண்டா... இத்துணூண்டு ப்ரொமோஷன் லெட்டர் எழுதினேன்னு இத்தனை பேரு வேலை வெட்டியெல்லாம் போட்டுட்டு வந்து உட்கார்ந்திருக்கீங்களே.. நீங்கள்லாம் விருந்தாளிக்கு பொறந்தவனுங்களாடா..?

 

பக்கத்தில் இருந்த சாதிக் முகத்தில் கொலை வெறியுடன்..

 

ஏண்டா எடுபட்ட பயலே.. . அக்ரம் கொஞ்சம் சிரிச்சி பேசினா உடனே நீ ப்ரமோஷனுக்கு அப்ளை பண்ணிடுவியா..?

 

அவரை நோக்கி புயலாய் திரும்பிய இர்ஷத் கடுப்புடன்..

 

ஏய்...ஏண்டா நீ சவுண்டு கொடுக்கிறே... ஏன் கொடுக்கிறே..?!! உன்னை எப்பவும் தனிச்சி செயல்படக்கூடாதுன்னு சொல்லி இருக்கேன்ல..?!!  ரொம்ப சவுண்ட் விட்டா உன்னை உபைத் கிட்ட போட்டு கொடுத்துடுவேன் ஆமா..! -என்றவுடன் வாயை மூடிக்கொண்டு உட்காருகிறார் சாதிக்.

 

 

பிறகு இர்ஷத் கூட்டத்தின் பக்கம் திரும்பி...

 

ஆமாய்யா.. வேலையில போட்டு வெளுத்து எடுக்கிறாய்ங்களேன்னு நினைச்சி, ஒரு நப்பாசையில ப்ரோமோஷனுக்கு ரிக்வெஸ்ட் அனுப்புனது தப்பு தான். அதனால என்னை எல்லாரும் உங்க வீட்டு பிள்ளையா நினைச்சி மன்னிச்சிக்கங்க..!!  என்று எகத்தாளத்துடன் மன்னிப்பு கேட்க.

 

கூட்டம் கொஞ்சம் கூட கொலை வெறி குறையாமல் முறைக்கிறது. அங்கிருந்த அக்ரமின் வலது கை "சோகம்" ஷஃபீக் இர்ஷத்தை பார்த்து...  

 

"செய்றதையும் செஞ்சிட்டு என்னடா மன்னிப்பு....? மொத்துங்கடா அவனை..!! - சொன்னவுடன் ஆளாளுக்கு பாய்ந்து வந்து இர்ஷத்தை பின்னி எடுக்கிறார்கள். அவர்கள் விலகி போன பிறகு பார்த்தால் அவரின் சட்டை, பேண்ட், டை எல்லாம் நார் நாராக கிழிந்து தொங்கியபடியே நிமிருகிறார்

 

அவர் அடி வாங்கியதை பொறுக்காமல் அவரின் அல்லக்கைகள் எல்லாம் கலங்கி போய் நிற்கிறார்கள். ஆனால் அவரோ அடி வாங்கிய வலி கொஞ்சம் கூட முகத்தில் காட்டாமல் தன் அல்லக்கைகளை பார்த்து...

 

டேய் எல்லாம் ரெடியாடா..?

 

அல்லைக்கைகள் அழுத படியே உடம்பு காயத்துக்கு போட மருந்து, புது பேண்ட், ஷர்ட், டை எடுத்து கொடுக்கிறார்கள்.

 

"அண்ணே.. உங்களுக்கா இந்த நிலமை..?!!"  என்று கதறி அழுகிறான் ஒரு ஆழ்ந்த அன்புள்ள அல்லக்கை..!

 

அவர்கள் கொடுத்த புது சட்டை, பேண்டை போட்டுக்கொண்டே...

 

டேய் அழாத நீ..! அழுதா அண்ணனுக்கு அசிங்கம்ல..!! நீ ஒண்ணும் கவலைப்படாதே.. இந்த அடிவாங்கின அனுதாபத்த வச்சே அண்ணன் அராம்கோவுக்கு வைஸ் ப்ரசிடண்ட் ஆகிடுவேன்ல..!!

 

டையை கொடு..!! என்று கேட்டு வாங்கி ஸ்டைலாக உதறி கழுத்தில் கட்டிக்கொள்கிறார். 

 

தான் அடி வாங்கியதை நினைத்து "ம்ம்ம்...ஏதோ உடம்பு சவுதியில் ப்ரோஸ்டும், பிரியாணியுமா தின்னதால இந்த அடியெல்லாம் தாங்குது.. இல்லாட்டி என்னாகும் நிலமை...?!!

 

பிறகு கூட்டத்தை பார்த்து...

 

சரி.. மக்கா நான் கிளம்புறேன்..நெக்ஸ்ட் மீட்டிங்ல மீட் பண்ணுவோம். ..!!!  என்று கையசைத்தபடி அல்லக்கைகளுடன் கிளம்புகிறார்.

 

அல்லக்கைகள் அவரை தூக்கி தோளில் வைத்துக்கொண்டு..

 

இடி தாங்கி இர்ஷத்..!! வாழ்க..!!

 

வலி தாங்கும் மாவீரன் இர்ஷத்.. வாழ்க..வாழ்க..!!!

 

என்ற கோஷத்துடன் அவரை கொண்டு போகிறார்கள்.!!!!

 


செவ்வாய், 6 அக்டோபர், 2009

நாடோடிகள் - விமர்சனம்

நாடோடிகள் - விமர்சனம்

வெட்டுக்குத்து, குத்துப்பாட்டு, பஞ்ச் டயலாக்குமாக படங்கள் வந்து கலங்கடித்து தமிழ் சினிமாவின் மேல் இருக்கும் நம்பிக்கையை அழிக்கும் நேரத்தில் அத்திப்பூத்தார்போல் சில படங்கள் வந்து அந்த நம்பிக்கையை பொத்திப் பாதுகாக்கும். அப்படி அரிதாக வந்து மனதை வருடும் படம் தான் நாடோடிகள்..! பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் படம் எடுத்து, அது ஓடாமல் கார்ப்பரேட் கம்பெனிகளே கையில் திருவோட்டை ஏந்தும் நிலைக்கு வரும் நிலையில் கம்பெனி என்ற சொந்த நிறுவனத்தை தொடங்கி, சிக்கனமாய் சுப்ரமணியபுரம் என்ற அழகான படம் எடுத்து, அத்தனை மனங்களையும் கொள்ளையடித்தவர் சசிக்குமார். அந்த படம் தந்த மகத்தான வெற்றிக்கு பிறகு சிறுவர்களை மையமாக வைத்து ”பசங்க” என்ற வெற்றிப்படத்தை பாண்டிராஜ் இயக்கத்தில் தயாரித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதன் வெற்றி ஆராவாரம் அடங்குவதற்குள் அவரே நடித்து, அவர் நண்பர் சமுத்திரக்கனியின் இயக்கத்தில், மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் வந்திருக்கும் படம் தான் நாடோடிகள். இந்த படம் பற்றி பேசுவதற்கு முன் படத்தின் கதையை பார்த்துவிடுவோம்.

கருணாகரன் (சசிக்குமார்) பி.ஏ ஹிஸ்டரி படித்து, வேலை தேடும் பட்டதாரி. அவனுக்கு இரண்டு உயிர் நண்பர்கள். அதில் ஒருவன் சந்திரன் (விஜய்) டிகிரி முடித்துவிட்டு சொந்தமாக கம்ப்யூட்டர் செண்டர் வைத்து செட்டிலாக கனவு காண்பவன். இன்னொருவன் பாண்டி (பரணி) வெளிநாட்டு வேலைக்காக முயற்சி செய்பவன். சசிக்குமாரின் தங்கை அபிநயா. அவளை சசிக்குமாரின் பட்டதாரி நண்பன் காதலிக்கிறான். கருணாகரனும் அவரின் தாய் மாமன் பெண் நல்லம்மாள் (அனன்யா)-ம் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலிக்கிறார்கள். ஆனால் கவர்மெண்ட் வேலை கிடைத்தால் மட்டுமே அவருக்கு பெண் கொடுப்பதாக தாய் மாமன் சொல்லிவிட்டதால் மிக தீவிரமாக கவர்மெண்ட் வேலைக்காக முயற்சி செய்கிறான்.

இந்த மூன்று நண்பர்களும் சேர்ந்து விட்டால் அந்த இடமே அதகளம் தான். ஒரே கூத்து, ஆட்டம், பாட்டம், குடி என்று ஜாலி பண்ணுவார்கள். அவர்கள் சந்தோஷத்தில் ஒரு லாரி மண்ணை அள்ளிப்போடவென்றே கருணாகரனின் நெருங்கிய நண்பன் (எக்ஸ் எம்பியின் மகன்) ஒருவன் அவன் வீடு தேடி வருகிறான். ஒரு முறை அவன் கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயல்கிறான். கருணாகரன் அவனிடம் தற்கொலை முயற்சிக்கான காரணத்தை கேட்கும் பொழுது நாமக்கல்லில் ஒரு பெரும் தொழிலதிபரின் பெண்ணும், அவனும் ஒருவரையொருவர் மனதார காதலிப்பதாகவும், அதற்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு என்பதால் தற்கொலைக்கு முயன்றதாக சொல்கிறான். அவனை காதலியுடன் சேர்த்து வைக்க கருணாகரன் க்ரூப் முடிவு செய்கிறது. அதற்கான திட்டத்தையும் தயாரிக்கிறார்கள். நண்பனின் காதலி ஊரில் பரோட்டா கடையில் வேலை பார்க்கும் கஞ்சா கருப்புவையும் இத்திட்டத்தில் சேர்த்துக்கொண்டு நண்பனின் காதலியை கடத்தி நண்பனுக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிடுகிறார்கள்.

அவளின் வீட்டை நோட்டமிடுகிறார்கள். ஒரு முறை அவள் தன் குடும்பத்தினருடன் கோயிலுக்கு வந்திருக்கும் நேரத்தில் அவளை கடத்திச்செல்ல முடிவு செய்கிறார்கள். அதற்கு முன் அவளிடம் விஷயத்தை சொல்லி சம்மதம் வாங்குகிறார்கள். இவர்களின் காதலால் எதிரும் புதிருமாக இருக்கும் இரு குடும்பங்களும் கோவிலில் இருக்கும் நேரத்தில் இவர்களின் கடத்தல் நாடகம் அரங்கேற்றப்படுகிறது. நண்பர்கள் திட்டமிட்டு இரு குடும்பங்களுக்குள்ளும் குழப்பத்தை ஏற்படுத்தி, அந்த சந்தடிசாக்கில் நண்பனின் காதலியை கடத்துகிறான் கருணாகரன். இந்த கடத்தலின் மூன்று நண்பர்களுக்கும் வெவ்வேறு வகையான ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படுகிறது. சந்திரன் ஒரு காலை இழக்கிறான். பாண்டி காது கேட்கும் சக்தியை இழக்கிறான். கருணாகரன் தன் உயிர்க்காதலையே இழக்கிறான். அவர்கள் காதலை சேர்த்து வைத்ததோடு இடைவேளை விடுகிறார்கள். படம் ஏறக்குறைய கதை முடிந்த நிலையில் ”இனி என்ன இருக்கிறது?” என்று நினைக்கும் நிலையில் இடைவேளைக்கு பிறகு வருகிறது ட்விஸ்ட்.

இந்த காதல் சேர்த்து வைக்கும் வைபவத்தால் பல கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள் அருமை நண்பர்கள். கருணாகரனின் பாட்டி உயிர் போகிறது. அவன் மேல் போலீஸ் கேஸ் ஆனதால் அரசாங்க வேலை கிடைக்கும் வாய்ப்பு போகிறது. அதனால் மாமன் மகளை கல்யாணம் செய்ய முடியாமல் போகிறது. சந்திரன் கால் ஊனமானதால் கம்ப்யூட்டர் செண்டர் வைக்க அப்ளை செய்த லோன் கிடைக்காமல் போகிறது. காது கேட்கும் சக்தியை இழந்ததால் பாண்டியின் வெளிநாட்டு ஆசை மண்ணாய் போகிறது. எல்லாம் போயும் அவர்கள் மூவருக்கும் ஒரே ஆறுதல் அவர்கள் சேர்த்து வைத்த காதல். ஆனால், அந்த காதல் தோற்றுப்போனால் அதை வாழ வைக்க நடந்த முயற்சியில் வாழ்க்கையை இழந்தவர்கள் என்ன செய்வார்கள்.? அதைத்தான் மீதிப்படத்தில் சொல்லி இருக்கிறார்கள். கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த காதல் தம்பதிகள் சுயநலத்தால் திருமண வாழ்வில் சலிப்புற்று அவரவர் வீட்டுக்கு திரும்பி பிரிகிறார்கள். சேர்த்து வைத்தவர்கள் வீறு கொண்டு எழுகிறார்கள். என்ன செய்யப்போகிறார்கள் என்று நிமிர வைக்கிறது பிறகு வரும் காட்சிகள். வித்தியாசமான கதை, வித்தியாசமான களம். மிரட்டியிருக்கிறார்கள் நாடோடிகள்.!!

சுப்ரமணியபுரத்தில் நடிப்பு, இயக்கம், பசங்க-ல் தயாரிப்பு, நாடோடிகளில் நடிப்பு என்று சசிக்குமார் ஹாட்ரிக் அடித்திருக்கிறார். மனிதருக்கு நடிப்பு அசத்தலாய் வருகிறது. நடிப்பு மட்டுமல்ல.. காமெடி வருகிறது. ஆக்ரோஷம் வருகிறது. சோகம் வருகிறது. ஆனால், அவர் ஆடும் போது தான் கொஞ்சம் என்னவோ போல் இருக்கிறது. ஆனாலும் படத்தின் மற்ற ப்ளஸ் அதையெல்லாம் மறைக்கிறது. தாய் மாமனிடம் எப்பொழுதும் “ஆனா உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு” என்று சொல்லி சிரிப்பூட்டுபவர், அதே டயலாக்கை தன் மாமன் பெண்ணை கல்யாணம் செய்ய முடியாமல் போகும் சூழ்நிலையில் சொல்லும் பொழுது நம்மால் சிரிக்க முடியாமல் மனம் கனத்துப்போகிறது. அதே போல் இரண்டாம் பாதியில் ஒரு வண்டியில் உட்கார்ந்திருக்கும் போது அவ்வழியே திருமணம் செய்த தன் மாமன் மகள் கடந்து போகும் போது உருக்கமாக கண்ணீர் விட்டு பார்ப்பவர்களை கலங்கடிக்கிறார். க்ளைமாக்ஸில் காதலை மறந்து பிரிந்தவர்களுக்கு அட்வைஸ் பண்ணுகையில் ஆக்ரோஷ நடிப்பில் மிளிர்கிறார். காதல் என்பது கல்யாணம் பண்ணிய பிறகும் அதே காதலோடு கடைசி வரை வாழ்ந்து காட்டுவதில் தான் இருக்கு என்று சொல்லும் போது உயர்ந்து நிற்கிறார்.

கல்லூரியில் அறிமுகமாகிய பரணி இந்த படத்தில் பின்னி பெடலெடுத்து இருக்கிறார். முதல் பாதி முழுதும் சிரிக்க வைத்தவர் இரண்டாம் பாதியில் கலங்க வைக்கிறார். காது இரண்டும் செவிடான பிறகு அவர் கொடுக்கும் எக்ஸ்பிரஷன்கள் ஏ-ஒன் ரகம். ”டேய்..கருணா.. அவங்களை போட்டுருவம்டா..” என்று கடைசிக்காட்சியில் உறுமும் போது முகத்தில் வெறி அனல் அடிக்கிறது. ”நீ எதையும் பார்த்தாலும் பார்க்காதவன் மாதிரி தானடா இருப்பே”என்று சொல்லி வயிறு குலுங்க சிரிக்க வைப்பவர், ”நீ என்ன அடி வாங்கினாலும் வலிக்கலேன்னு தானடா சொல்வே” என்று சொல்லி மனசை கனக்க வைக்கிறார். சித்திக்காக தன்னை திட்டும் தந்தையிடம் பேசும் காட்சிகள் உருக்கத்தை ஏற்படுத்துகிறது.

அட்டக்கருப்பில் வந்து அழகாய் காதல் பண்ணுகிறார் விஜய். அவரின் தந்தையாக வருபவர் இப்படி ஒரு தந்தை நமக்கு இல்லையே என்று ஏங்க வைக்கிறார். அப்பா, மகன் உறவை காண்பிக்க வைத்திருக்கும் காட்சிகள் மனதை தொடுகின்றன. சசிக்குமாரின் மாமன் மகளாக வரும் அனன்யா குள்ளமாக இருந்தாலும் அழகாக இருக்கிறார். எக்ஸ்பிரஷன், குறும்பு நடிப்பில் இன்னொரு ஜோதிகா தெரிகிறார். எப்போதும் தின்று கொண்டே இருக்கும் அவரை பார்த்தால் சிரிப்பு வருவது இயக்குநரின் கதாபாத்திர படைப்பிற்கு கிடைத்த வெற்றி. சசிக்குமாரின் தங்கையாக வரும் அபிநயா பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார். சசிக்குமாரின் முத்தம் வாங்க அனன்யாவும், சசிக்குமாரும் கொடுக்கும் எக்ஸ்ப்ரஷன்ஸ் ”அட.!” போட வைக்கிறது. நண்பனாக வரும் ”கஞ்சா” கருப்பு சசிக்குமார் குரூப்பிடம் மாட்டிக்கொண்டு முழிப்பதும், எதிரணியினரிடம் அடி வாங்குவதும் சிரிப்பூட்டுகிறது.

இந்த படத்தின் இயக்குநர் சமுத்திரக்கனி ஏற்கனவே உன்னை சரணடைந்தேன், நெறஞ்ச மனசு என்ற இரண்டு படங்களை இயக்கியவர். அந்த இரண்டு படங்களும் சரியாக ஓடாததால் தமிழ் சினிமாவால் ஓரங்கட்டப்பட்டு டிவி சீரியல் இயக்க போய் விட்டார். அதன் பின் சசிக்குமாரின் நட்பால் சுப்ரமணியபுரத்தில் நடித்து பிரபலமாகி, இப்போது அவரையே வைத்து நாடோடிகள் இயக்கி பெரிய அளவில் பேசப்பட்டிருக்கிறார். சுப்ரமணியபுரத்தில் சமுத்திரக்கனியை நடிக்க வைத்து சசிக்குமார் இயக்கினார். பதிலுக்கு இந்த படத்தில் சசிக்குமாரை நடிக்க வைத்து சமுத்திரக்கனி இயக்கி தன் நன்றியை தீர்த்திருக்கிறார். உண்மையில் நல்ல படத்தை தந்ததற்காக நன்றிக்கடன் பட்டவர்கள் தமிழ் சினிமா இரசிகர்கள் தான். இயக்குநர் பாத்திரத்தை செதுக்கியதிலும், காட்சிகளை வடிவமைத்ததிலும் திறமையாக சிந்தித்திருக்கிறார்.

நட்புக்காக எதையும் செய்யும் சசிக்குமார், அவர் சொல்லுவதையெல்லாம் கேட்கும் வெள்ளந்தியான நண்பன் பரணி, படித்த களையோடு, டக் இன் பண்ணின பேண்ட் ஷர்ட்டோடு எப்போதும் டிப்டாப்பாக தெரியும் விஜய், மாமன் மேல் உயிரையே வைத்திருக்கும் தீனிப்பண்டார மாமன் மகள் அனன்யா, ஊமை போல் இருந்து காதலில் கலவரம் செய்யும் அபிநயா, பரோட்டா கடையில் வேலை பார்த்தபடி எல்லோருக்கும் பயந்து சாகும் கஞ்சா கருப்பு, நேரம் கிடைக்கும் போதெல்லாம் இரண்டாவது மனைவிக்காக தன் மகனை திட்டித்தீர்த்து விட்டு ”டேய்..பாண்டி” என்று உருக்கமாக கூப்பிடும் பாண்டியின் அப்பா பெரியவர், தன் மகனுக்கு காதலிக்க டிப்ஸ் கொடுக்கும் விஜயின் மிலிட்டரி அப்பா, தன் பையன் எது செஞ்சாலும் அதில் ஒரு நியாயம் இருக்குமென்று நம்பும் சசிக்குமாரின் அப்பா, உதவி வேண்டி வந்து நட்புக்கு துரோகம் செய்யும் நண்பன், அவரின் காதலியாக நடித்த பவித்ரா, ஒரு பக்கம் மகன் பாசத்தையும் இன்னொரு பக்கம் வில்லித்தனத்தையும் காட்டும் எக்ஸ் எம்பியாக வரும் பெண், ஒரு வசனம் கூட இல்லாமல் காதலில் உதவி செய்ய வந்து போகும் பைக் நண்பன், திண்ணையில் உட்கார்ந்த படி பேரன் சசிக்குமாரை கொஞ்சும் பாட்டி, பணக்கார வில்லன், அவரின் வீட்டோடு இருக்கும் மருமகன், உதவி செய்து விட்டு அடுத்த நிமிடம் அதை ஃபோட்டோ எடுத்து ஃப்ளக்ஸ் பேனரில் போட்டு விளம்பரம் தேடிக்கொள்ளும் ”மைனர்” சின்ன மணி (இவர் இப்படத்தின் நிர்வாக தொடர்பாளர் நமோ நாராயணா) இப்படி ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் வெகு இயல்பாக செதுக்கி காட்சிகளில் ஓட விட்டிருக்கிறார். அதே போல் ஒவ்வொருவரும் தன் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் சசிக்குமார், விஜய், பரணி, கஞ்சா கருப்பு தவிர மற்ற நடிகர், நடிகையர் அனைவரும் புதுமுகங்கள். வசனங்கள் எல்லை தாண்டாமல் வெகு யதார்த்தமாய் இருக்கிறது. உதா: 'டேய் நீ அப்பா மாதிரி.... தான்.! ஆனா.. என் பொண்ணுக்கு கஷ்டம்னு வந்தா உங்கிட்டயா வந்தா..? அப்பானு எங்கிட்டதானடா வந்தா..! என்னடா ஃப்ரண்ட்..! பெத்து வளத்த பொண்ணுக்கு என்ன வேணும்னு பெத்து வளத்தவன விட உங்களுக்கு என்னடா தெரியும்..? '' என்று பெண்ணின் அப்பா சசிக்குமாரிடம் சீறும் காட்சி..!

இப்படத்திற்கு இசை சுந்தர்.சி.பாபு. நண்பனின் காதலியை கடத்தும் இடத்தில் சம்போ சிவ...சம்போ பாடல் காட்சிகளில் அனலடிக்க வைக்கிறது. ”கில்லி” படத்தின் துரத்தல் காட்சியில் வரும் ”அர்ஜுனரு வில்லு” பாட்டெல்லாம் இதனிடம் பிச்சை எடுக்க வேண்டும். வியாபார நோக்கத்திற்காக கதைக்கு தேவையில்லாமல் வைத்த ”யக்கா..யக்கா..” குத்துப்பாடல் படத்தின் தரத்தை குறைக்கிறது. ”ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா” திருவிழாப்பாடலும், சில காட்சிகளும் சுப்ரமணியபுரத்தை ஞாபகப்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை. கதிரின் கேமரா பல இடங்களில் புகுந்து விளையாடி இருக்கிறது. குறிப்பாக கோயிலில் இருந்து தொடங்கும் கடத்தலில் இருந்து, காதல் ஜோடிகளை பஸ்ஸில் ஏற்றி அனுப்பி வைப்பது வரை காட்சிகளில் தீப்பொறி பறக்கிறது. அந்த காட்சிகளில் சசிக்குமாரின் நடிப்பு வெகு அற்புதம். படம் முழுவதும் காட்சிகளிலோ, நடிகர்களின் நடிப்பிலோ ஓவர் ஆக்டிங் எதுவுமில்லாமல் இயல்பாய் இருக்கிறது. பெரும்பாலான காட்சிகள் குறிப்பாக காதல் காட்சிகளில் எதார்த்தமாக இருப்பதால் வெகுவாய் இரசிக்க முடிகிறது. இப்படத்தில் சசிக்குமாரின் தங்கையாக நடித்திருக்கும் அபிநயா பற்றி ஒரு அதிர்ச்சியான செய்தி..! அவர் தன் பெயருக்கு ஏற்றார் போல் அபிநயிக்க மட்டும் தான் முடியும். அவர் வாய் பேச முடியாதவர், காது கேளாதவர்.!! ஆனால் அந்த குறையே தெரியாமல் நடிக்க வைத்த சமுத்திரக்கனியை எத்தனை பாராட்டினாலும் தகும்.

இந்த படத்தை தயாரித்த மைக்கேல் ராயப்பன். விஜய்காந்த் கட்சியான தேமுதிக-வின் நெல்லை தொகுதி மக்களவை வேட்பாளராக போட்டியிட்டு தோற்றவர். அவர் தேர்தலில் இழந்த பணத்தை விட பல மடங்கு கூடுதலாகவே இந்த படம் அவருக்கு நிச்சயம் மீட்டுக்கொடுக்கும். திட்டமிட்ட திரைக்கதை, இயல்பான நடிப்பு, உறுத்தாத வசனம், கண்ணைக்கவரும் காட்சியமைப்பு ஆகியவற்றால் நாடோடிகள் நம்மை நகரவிடாமல் கட்டிப்போடுகிறார்கள். ஒரு நல்ல படம் எப்படி இருக்க வேண்டும் என்பதை இனியாவது இளைய ”தலைவலி”, புரட்சி மற்றும் புண்ணாக்கு நாயகர்கள் இந்த படத்தை பார்த்து புரிந்து கொள்ள வேண்டும்.!!


மொத்தத்தில் இந்த நாடோடிகள் நம்மை கவர்கிறார்கள்.!!



மதிப்பெண்: 72/100

Related Posts with Thumbnails