skip to main |
skip to sidebar
நம்பிக்கையும், பகுத்தறிவும் சரிவரக் கலந்தது தான் உலக வாழ்க்கை. "இவர் தான் தன் தந்தையா..?" என்று யாரும் நிரூபணம் செய்ய விரும்புவதில்லை. நாம் அறிந்ததை நம்பிவிடுகிறோம். "இது என்ன நோய்..?" என்று அறியாது அதற்கான மருந்தை நாம் உட்கொள்வதில்லை. அதனை அறிந்த பிறகு தான் அதை தீர்க்கும் நடவடிக்கையில் இறங்குகிறோம். ஆக, நம்பிக்கை, பகுத்தறிவு ஆகிய இரண்டும் நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாமல் பின்னிப்பிணைந்து கிடக்கிறது. ஆனால், விசித்திரம் என்னவென்றால் இந்த இரண்டும் இருவேறு துருவங்கள்.! நம்பிக்கை இருக்கும் இடத்தில் பகுத்தறிவு தோற்கும், பகுத்தறிவு இருக்கும் இடத்தில் நம்பிக்கை தோற்கும். அதே போல் தான் இதயமும்.!! விஞ்ஞானம் என்ற பகுத்தறிவு கொண்டு பார்த்தால் இதயம் என்பது இரத்தத்தை சுத்திகரிக்கும் ஓர் இயந்திரம். நம் நம்பிக்கைகளின் அடிப்படையில் பார்த்தால் அன்பை இறைக்கும் கடவுளின் உறைவிடம். ஆனால், ஆழ்ந்து சிந்தித்தால் இரண்டுமே உண்மை தான். காரணம் நான் ஏற்கனவே சொன்னது போல் நம்பிக்கை, பகுத்தறிவு இரண்டும் கலந்தது தானே வாழ்க்கை..?
இதயம் ஒரு விசித்திர உறுப்பு.! சிந்தனை, செயல் உள்ளிட்ட அனைத்திற்கும் முழு முதற்பொறுப்பான மூளைக்கு கிடைக்க வேண்டிய பெயரை அதற்கு சம்பந்தமேயில்லாமல் இதயம் பெற்றிருக்கிறது. இது எப்படி ஏற்பட்டிருக்கும் என நான் சிந்தித்த வேளையில் எனக்கு கிடைத்த சில பதில்கள். மனிதர்களின் மேன்மையான குணம் அன்பு செலுத்துதல். அதை செய்வதில் தொடர்புடைய உறுப்பு மூளை. அந்த மூளை இருப்பதோ உச்சியில். எல்லாவற்றுக்கும் "நான் தான் காரணம் என்பதால் தான் நான் அனைத்தையும் விட உயரமான இடத்தில் இருக்கிறேன்" என்ற கர்வம் மூளைக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்ற கவலையால் மனித சமூகம் அன்பின் அடையாளமாய் மூளையை சொல்லாமல் புறக்கணித்திருக்கலாம். காரணம், அன்பிருக்கும் இடத்தில் கர்வத்திற்கு வேலையில்லை..!!
சரி.. அப்படியென்றால்.. அன்பை சொல்ல இதயத்தை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்..? உடம்பில் வேறு பல உறுப்புக்கள் இருக்கின்றனவே..? அதற்கும் காரணம் இருக்கிறது. இதயம் இருக்கும் இடம் உடம்பின் மையப்பகுதி. அன்பைக்கொண்டு நடுநிலையுடன் நடந்து கொள்ளவேண்டும் என்பதை குறிப்பிடுகிறது. அது மட்டுமல்லாமல், அன்பு எத்தனை பெரிய தீயவனையும் நல்லவனாய் மாற்றும் சக்தியுடையது. அதே போல் தான் இதயமும் கெட்ட இரத்தத்தை சுத்திகரித்து, நல்ல இரத்தமாக மாற்றுகிறது.!! அதுவும் சரி தான்..அப்படியென்றால் இதயம் உடம்பின் மையத்தில் இல்லாமல் ஏன் இடது புறம் இருக்கிறது.? பொதுவாகவே நம் உடலில் வலது பக்க உறுப்புக்களுக்கு பெரும் முக்கியத்துவம் இருக்கிறது. கை குலுக்குவது, சாப்பிடுவது தொடங்கி காலை எடுத்து வைத்து உள் நுழைவது வரை வலது பக்க உறுப்புகளுக்கு பெரும் முக்கியத்துவம். ஆனால், அன்பிற்கு முன்னால் எதுவும் முக்கியமல்ல.. அதனால் தான் யாரும் சீந்த நினைக்காத இடது புறத்தில் அன்பை உற்பத்தி செய்யும் இதயம் அமைந்துள்ளது.!!
பொதுவாக உண்மையை சொல்ல வைக்க தலையில் கை வைத்து சொன்னால் அது சத்தியம். ஆனால், இதயத்தின் மேல் கை வைத்து சொன்னால் அது மனசாட்சி..! சத்தியத்தை நிறைய மீறுகிறார்கள். ஆனால், மனசாட்சியை மீற நிறைய பேருக்கு துணிவிருக்காது. அப்படி மீறுபவர்கள் குற்றவுணர்ச்சியால் பெரும் சித்ரவதைக்குள்ளாவர்கள். மனசாட்சிக்கு பயந்து திருந்துபவர்கள் மகான் ஆகும் வாய்ப்பு கூட உண்டு. இன்றைய காலகட்டத்தில் உலக வாழ்க்கையில் நிறைந்து கிடக்கும் ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகளை களைந்து உலகத்தை அமைதிப்பூங்காவாக்கும் அருமருந்து அன்பு மட்டும் தான்.!
கடவுள் அன்பின் வடிவம் என்பார்கள். அந்த அன்பை உற்பத்தி செய்யுமிடம் இதயம். ஆக, என்னை பொருத்தவரை இதயம் ஒரு கோவில்..!!
இரு தமிழக தமிலர்கள்(!) சந்தித்துக்கொள்ளும் பொழுது டமிங்கிலத்தில் பேசிக்கொள்வதை பல முறை கண்டிருக்கிறேன். ஆனால், இரு ஈழத்தமிழர்கள் சந்தித்துக்கொள்ளும் பொழுது இந்த அவலம் பெரும்பாலும் நிகழ்வதில்லை. இன்றைய காலகட்டம் வரை தமிழை இணையத்தில் வளர்த்ததில் ஈழத்தமிழர்களுக்கு பெரும் பங்கு உண்டு. என்னுடைய தமிழார்வம் அதிகரித்ததற்கு இலங்கைத்தமிழர்களும் ஒரு காரணம் என்று சொல்வேன். அந்த அளவுக்கு அவர்கள் மொழிக்கு அத்தனை முக்கியத்துவம் தருகிறார்கள். ஆனால், தமிழகத்தில் தமிழ் என்பது அரசியலுக்கு மட்டுமே பயன்படுகிறது.
அடுத்து, தமிழ் மொழி பயன்பாடு என்பதில் நாட்டுக்கு நாடு, மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபடுகிறது. நம் பிள்ளை என்பதால் நம் பிள்ளையின் தவறுகளை ஒத்துக்கொள்வதில் நாம் ஆர்வம் காட்டுவதில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை நம் மொழியில் உள்ள குறைபாடுகளும், அதன் திருத்துவதில் அல்லது கடைப்பிடிப்பதில் ஆர்வம் காட்டாத தமிழர்களும். அந்த வகையில் தமிழை சரியாக பேசுவதில், மொழி வளர்ச்சியை ஊக்குவிப்பதில் எப்பொழுதும் ஈழத்தமிழர்கள் முன்னால் நிற்கிறார்கள். ஆனால், இங்கே வந்திருக்கும் உச்சரிப்பு பிரச்சினை வேறு விதமானது. தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள் பிற மொழியை குறிப்பாக ஆங்கில மொழியை எந்த வகையினர் சரியாக பேசுகிறார்கள் என்பது. பொதுவாக மிகச்சரியாக பேசுதல் என்பது பெரும்பாலும் அந்நிய மொழிக்கு பொருந்துவதில்லை.
ஒரு மொழியை அம்மொழியை தாய் மொழியாக கொண்டவனைக்காட்டிலும் மற்ற மொழிக்காரன் அத்தனை சரியாக பேசுவது எளிதான காரியமல்ல. அதனால் இங்கே இந்த வாக்குவாதம் அவசியமில்லை என்றே தோன்றுகிறது. காரணம், ஆழ்ந்து பார்த்தால் தமிழக, இலங்கை உள்ளிட்ட அனைத்து தமிழர்களிடமும் ஆங்கிலத்தை பிரயோகிப்பதில் பலவிதமான முரண்பாடுகள் இருக்கிறது. இது தமிழர்களுக்கு மட்டுமல்ல, ஆங்கிலத்தை உபயோகிக்கும் மற்ற மொழிக்காரர்களுக்கும் பொருந்தும். எனக்கு தெரிந்து அரேபியர்களுக்கு P உச்சரிப்பு ஆங்கிலத்தில் வருவதில்லை (B மட்டும் தான் உச்சரிப்பார்கள்). துருக்கியர்களுக்கு th(த்) என்பதை ஸ் என்று உச்சரிப்பார்கள். இப்படி நிறைய சொல்லலாம். Bottle என்ற வார்த்தையை அந்த மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள் உச்சரிப்பதை சரியாக தமிழில் கொண்டு வந்து எழுதி விடமுடியும் என்றோ, அதை படித்து சரியான உச்சரிப்பை கொண்டு வந்துவிட முடியும் என்றோ நான் நம்பவில்லை.
ஒரு மொழியை சரியாக கற்க அந்த மொழியை தாய்மொழியாக கொண்டவர்களை உற்று நோக்க வேண்டும். பாட்டில், போத்தல் என்பது தமிழில் அவரவர் பகுதி உச்சரிப்பிற்கேற்ப நாமாக உண்டாக்கியவையே தவிர அதற்கான ஒழுங்கான உச்சரிப்பை அந்த மொழியில், அவர்கள் உச்சரிப்பில் சொல்லும் போது மட்டுமே சரி..!! நாம் பாட்டில் அல்லது போத்தல் என்பதற்கு பதிலாக நம் மொழியில் குப்பி அல்லது குடுவை என்று சொல்வது சிறப்பு. சரி.. இப்படி எல்லாவற்றையும் நாம் பேசலாமா..? முடியாது... காரணம் நிறைய பொருட்களுக்கு, செயல்களுக்கு இன்று வரை சரியான தமிழ்ப்பதம் இல்லை. அல்லது அப்படி தமிழ்ப்பதம் இருந்து சொன்னால் புரிவதில் குழப்பம் தான் பெரும்பாலும் ஏற்படும். மொழியை வளர்க்கிறேன் என்ற பெயரில் சிலர் தமிழில் மட்டுமே பேச வேண்டும் என்று சொல்கிறார்கள். மொழியை வளர்ப்பதை விட அந்த மொழியால் நமக்குள் புரிவதில் குழப்பம் ஏற்படக்கூடாது அவசியம் என நான் நினைக்கின்றேன்.
இன்று வரை வழக்கில் மிதிவண்டி, பேருந்து என சொல்வதில்லை. சைக்கிள், பஸ் தான். ஆங்கிலம் அளவுக்கு தமிழ் அத்தனை மொழி வளம் இல்லாததும், கற்க சிரமமானதும், அதிக எண்ணிக்கையிலான எழுத்துக்களை கொண்டுள்ளதும் தமிழின் பெரும் பலவீனம். இந்த பலவீனம் எதுவும் இல்லாதது ஆங்கிலத்தின் பெரும் பலம். விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியினால் கிடைப்பவற்றிற்கான புதுப்புது பதங்களை உடனுக்குடன் ஆங்கிலத்தில் உண்டாக்கி அகராதியில் சேர்க்கிறார்கள். ஆனால், அதை நாம் பெரும்பாலும் செய்வதில்லை. தமிழை மட்டும் பேசி ஒரு முழுமையான புரிதலையுடைய சமுதாயத்தை நாம் காண முடியாது என்பதை உறுதி செய்ய இரு வேறு தமிழர்கள் ஒரே பொருளின் பெயரை இரு வகையில் உச்சரித்து இருவரும் "தான்" சொல்வது தான் சரி என்பதை கொண்டு புரிந்து கொள்ளலாம்..!! ஆனால், உண்மை இருவர் சொல்வதும் தவறு என்பது என் கருத்து.
இது போன்ற குழப்பத்தை மொழி தீர்க்க முடியாது. ஒருத்தொருக்கொருத்தர் இடையேயான புரிதலும், அறிதலும் மட்டுமே தீர்க்கும்..!!
உலகிலேயே பெட்ரோல் குறைந்த விலையில் கிடைக்கும் நாடு கத்தார் என்கிறார்கள். அது தவறான தகவல்.! உண்மையான தகவல்.. அது சவுதி அரேபியா..!! இங்கு பெட்ரோலில் இருக்கும் ஆக்டேனின் அளவை வைத்து 91 மற்றும் 95 என்று இரு வகைகளில் விற்கப்படுகிறது. அந்த இரு வகைகளிலும் ஒப்பிட்டாலும் சவுதி தான் உலகிலேயே மிகக்குறைந்த விலையில் பெட்ரோல் விற்கிறது, அதனால் தான் அது செல்வ செழிப்பில் நிற்கிறது..!!!
சவுதியில் 1 லிட்டர் (91 வகை) பெட்ரோலின் விலை=0.12 டாலர்கள்
சவுதியில் 1 லிட்டர் (98 வகை) பெட்ரோலின் விலை=0.16 டாலர்கள்
கத்தாரில் 1 லிட்டர் பெட்ரோலின் விலை= 0.21டாலர்கள்
இங்கு டீசல் விலை பெட்ரோலை காட்டிலும் குறைவே..!
இங்கு (சவுதியில்)
1 லிட்டர் பெட்ரோல் 0.12 டாலர்.
ஆனால்,
650 மி.லி தண்ணீர் 0.26 டாலர்
வேடிக்கையாக இல்லை...?!!
முதன்முதலில் பெற்ற பரிசு நெஞ்சை விட்டு அகலாது என்றாலும், வேறு வகையில் சில பரிசுகள் நம்மை அதிகம் பாதித்திருக்கும். எனக்கே அறியாமல் எனக்குள் ஒளிந்து கிடந்த திறமையை வெளிக்கொணர்ந்து பரிசு பெற வைத்த என் ஆசிரியையின் பெருமையை என்றும் மனதை விட்டகலாத நிகழ்வாக உணர்கிறேன். என் நினைவுகள் 20 வருடங்கள் பின்னோக்கி நகர்கின்றன. அப்பொழுது நான் எட்டாவது படித்துக்கொண்டிருந்தேன். நான் படித்த பள்ளிக்கு ஒரு பெருமை உண்டு. அது முன்னாள் ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமன் படித்த பள்ளி. எங்களுக்கு அப்போது ஜாஸ்மின் என்ற அன்புருவம் வகுப்பு ஆசிரியையாக இருந்தார்கள். கனிவு, கண்டிப்பு இரண்டும் கலந்த அற்புத பெண்மணி அவர்கள். நான் அப்போது அதிகம் பேசாதவன் போல் இருந்தாலும், உள்ளுக்குள் குறும்பு ஒளிவீசிக்கொண்டிருக்கும்.
ஆசிரியர்களை நக்கல் அடிப்பது, அவர்களைப்போலவே நடப்பது, அவர்கள் பேசுவதை மிமிக்ரி செய்வது போன்றவற்றை செய்வேன். நான் நன்கு படிப்பவன் என்பதால் என் குறும்புகளை ஆசிரியர்களும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஆசிரியர்கள் வகுப்புக்கு வரும் வரை மேலே சொன்னவற்றை செய்து மாணவ நண்பர்களை மகிழ்விப்பேன். அவர்களின் பாராட்டு எனக்கு பெரும் ஊக்க மருந்தாக இருந்தது. எனக்கு மிமிக்ரி நன்றாக செய்ய வருகிறது என்று என்னை ஏற்றி விட்டதில் அப்போது ஒலிநாடாவில் தன் மிமிக்ரி நிகழ்ச்சிகளை வெளியிட்டு வந்த மயில்சாமி (இப்போதைய நடிகர்), இலட்சுமணன் (லஷ்மண் ஸ்ருதி இசைக்குழுவின் உரிமையாளர்) இரட்டையரின் ஒலிநாடா ஒன்றை உறவினரிடமிருந்து பெற்று, அதை அப்படியே பேசி பயிற்சி செய்து வந்தேன். நான் பயிற்சி செய்ததை பள்ளி வகுப்பில் பாடமில்லாத நேரங்களில் அவர்களிடம் செய்வேன். அவர்களும் என்னை ஆஹா..ஓஹோ என புகழ்வார்கள்..!
அந்த சூழ்நிலையில் அந்த ஆண்டின் பள்ளியின் இலக்கிய போட்டிகள் தேதி அறிவிக்கப்பட்டது. நான் வழக்கம் போல் பேச்சு, கட்டுரை போட்டிகளுக்கு பெயரை அளித்து விட்டு என் வேலை முடிந்ததாக இருந்து விட்டேன். ஒரு நாள் வகுப்பில் ஜாஸ்மின் அவர்கள் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது நடிப்பு, பலகுரல் போட்டிக்கு பெயர் கொடுக்குமாறு பள்ளியின் பணியாளர் எங்கள் வகுப்பிற்குள் வந்தார். ஜாஸ்மின் அவர்கள் பாடத்தை நிறுத்திவிட்டு "யார் யார் கலந்து கொள்ளப்போகிறீர்கள்..?" என்றார். ஒருவரும் வாயை திறக்காததால் ஆசிரியைக்கு பெரும் ஏமாற்றம். தன் வகுப்பு மாணவர்களில் ஒருவர் கூட இந்த போட்டிகளில் கலந்து கொள்ளும் தகுதியில் இல்லையே என்ற வருத்தமாக இருந்திருக்கலாம். பெரும் ஏமாற்றத்துடன் பெயர் எடுக்க வந்தவரை அனுப்பி விட்டார். என்னைப்பற்றி அவருக்கு அதிகம் அறிந்திருந்தாலும் என் பலகுரல் ஆர்வம் அவர் அறியாதது..!! என்னைப்பார்த்து "நீ பேச்சு, கட்டுரைப்போட்டிக்கு பெயர் கொடுத்துவிட்டாயா..?" என்று சந்தேகத்துடன் கேட்டார்..!! நடிப்பு, பலகுரல் போட்டிக்கான மாணவர்கள் கிடைக்காத மனநிலை அப்படி அவரை கேட்க வைத்தது. நான் எழுந்து "கொடுத்துவிட்டேன் டீச்சர்..!" என்றேன்..!! "இந்த போட்டியில் கலந்து கொள்ள ஒருத்தனுக்கு கூடவா விருப்பம் இல்லை..?" என்றார்கள். அப்போது கடைசி பெஞ்ச் அஞ்சாநெஞ்சன் சிதம்பரம் "பேரு கொடுத்த போதுமா..ஜெயிக்கணும்ல...?!!" என்று சொல்ல மாணவர்கள் கொல்லென்று சிரித்தார்கள்..!!
ஜாஸ்மின் அவர்களுக்கு கடும் கோபம்..!! "ஒருத்தனுக்கும் போட்டியில் கலந்துக்க துப்பில்ல.. பேச்சுக்கு மட்டும் குறைச்சலில்ல..!" என்று பொரிந்தார்கள். அப்போது "வில்லத்தன" குடியரசன் எழுந்து "டீச்சர்..***** சூப்பரா மிமிக்ரி பண்ணுவான் டீச்சர்..!" என்றான்..!! மற்ற மாணவர்களும் ஆமா..ஆமா.. என்று ஒத்து ஊதினார்கள். ஆசிரியையின் பார்வை ஆச்சரியத்துடன் என் பக்கம் திரும்பியது. பார்வையில் "அப்படியா..?" என்ற கேள்வி..!! நான் "இல்லை டீச்சர்.. சும்மா விளையாட்டுக்கு.... " என்று இழுத்தேன்.. மற்றவர்களோ "இல்லை டீச்சர்... அவன் பொய் சொல்றான்.. நல்லா செய்வான்.. அவனை செய்ய சொல்லுங்க.." என்று போட்டுக்கொடுத்தார்கள்..! ஆசிரியை என்னை அருகில் அழைத்தார். "நீ திறமைசாலிங்கிறது எனக்கு தெரியும். உனக்குள்ள இன்னும் பல திறமை ஒளிஞ்சிருக்கலாம்.. நீ வெளிப்படுத்தினா தான் எங்களுக்கு அது தெரியும். நாங்களும் உன்னை உற்சாகப்படுத்தவும், வளரவும் உதவும். உண்மையா சொல்லு... நீ மிமிக்ரி செய்வியா..?" என்றார். நான் தயக்கத்துடன் "ஓரளவு செய்வேன்..." என்றேன். "யார் மாதிரி..?" என்று கேட்டார். நான் அதற்கு "கலைஞர், எம்.ஜி.ஆர், நம்பியார், சிவாஜி, ரஜினி..... என்று இழுத்தேன்..! என் கண்களை ஊடுருவி பார்த்தார். அவர் பார்வையில் நம்பிக்கையின்மை அப்பட்டமாய் பளிச்சிட்டது..! "சரி.. கலைஞர் மாதிரி பேசு..!" என்றார்..!!
நான் திடீரென்று ஒரு மிமிக்ரி கலைஞனின் மனநிலைக்கு மாறி கலைஞரின் கர, கர குரலை வரவழைத்துக்கொண்டு...
மண்ணெண்ணெய் வாங்க
ரேஷன் கடை தன்னை அடைந்தேன்.
தென்னை போல் வளர்ந்த ஒருவன்
பார்த்துக்கேட்டான் என்னை...
நல்லெண்ணெயா..? கல்லெண்ணெயா..?.
என்ன எண்ணெய் வேண்டுமென்று..!!
நல்லெண்ணெய் நம்மிடம் உண்டு...!
கல்லெண்ணெய் கடைக்குள் உண்டு..!!
பாமாயில் என்றொரு பகட்டு எண்ணெயும்
பலகை மீது உண்டு..!
மண்ணெண்ணெய் இல்லை..
என்ன செய்யச்சொல்கிறீர்கள் என்னை என்றா..... ........
என்று நான் தொடர்ந்து கொண்டிருக்கும் போதே "நிறுத்துடா..!" என்ற குரல் என்னை நடுங்க வைத்தது. ஜாஸ்மின் அவர்கள் தான் அது.! "அய்யய்யோ... நாம் செய்தது அவருக்கு பிடிக்கவில்லை போலிருக்கிறது.!" என்று அடக்கத்துடன் நிறுத்திவிட்டு, அமைதியா இருந்தேன். முகத்தில் கோபக்கனல் தெறிக்க "உனக்கு மிமிக்ரி தெரியும்னு இத்தனை நாள் எனக்கு ஏன் சொல்லலை...?" என்று கேட்டார்..! ஏறக்குறைய என் தாய்க்கு இணையாக எல்லாவற்றையும் சொல்லும் அவரிடம், இதை நான் சொல்லாத வருத்தம் அவர் முகத்தில் தெரிந்தது..! குற்றவுணர்வுடன் தலை குனிந்தேன். "உடனே போய் உன் பெயரை பலகுரல் போட்டிக்கு கொடுத்துட்டு வா.. உனக்குத்தான் முதல் பரிசு... எழுதி வச்சிக்க" என்றார். என் மேல் உள்ள பாசத்தில் என்னை பங்கு கொள்ள சொன்னாலும், எனக்குத்தான் முதல் பரிசு என்றது மிகவும் அதிகப்படியான கற்பனையாக தெரிந்தது. காரணம், இது வரை நான் மிமிக்ரி போட்டியில் கலந்து 2, 3 வது பரிசை பெற்றிருந்தாலாவது பரவாயில்லை. இது வரை போட்டியில் பங்கெடுத்ததே இல்லை..!! ஒருவேளை ஒரு தாயின் அதிகப்படியான பாசத்தின் வெளிப்பாடோ..? உடன் ஓடிப்போய் பெயர் கொடுத்துவிட்டு வந்தேன்.
திட்டமிட்டபடி இலக்கியப்போட்டிகள் நடைபெற்றன. அதன் முடிவுகள் ஆண்டுவிழாவில் அறிவிக்கப்பட்டு பரிசளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது..!!
ஆண்டுவிழாவும் வந்தது..!! வட்டாட்சியர் தலைமையில் விழா வெகு சிறப்பாக நடந்தன. இறுதியில் இலக்கிய விழா போட்டிக்கான முடிவும், பரிசளிப்பும் நடந்தன. மிமிக்ரி போட்டி முடிவை வெகு ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தேன். பலகுரல் போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவர் ******* என்று என் பெயர் அறிவிக்கப்பட்ட போது என்னால் நம்பவே முடியவில்லை. முதல் முயற்சியிலேயே ஜாக்பாட்டா..? இத்தனைக்கும் மற்ற போட்டிகளுக்கு போல் நான் எதுவும் இதற்காக உழைக்கவே இல்லை. ஜாஸ்மின் அவர்களின் ஊக்கம் தான் எனக்கு பெரும் சக்தியை கொடுத்தது. என் பெயர் சொல்லப்பட்டதும் மேடைக்கு அருகில் ஆசிரியர்கள் அமர்ந்திருக்கும் பகுதியில் இருந்த ஜாஸ்மின் அவர்களின் விழிகள் என்னை தேடுவதை உணர்ந்தேன். அவர்கள் முகத்தில் நினைத்ததை சாதித்த பூரிப்பு. உடனே எழுந்தேன்... மேடை நோக்கி ஓடினேன்.. பரிசை பெற்று மற்றவர்கள் போல் தன் இடத்தில் சென்று அமராமல், ஜாஸ்மின் அவர்களின் இடம் நோக்கி சென்று அவர்களின் கையில் சான்றிதழ் மற்றும் பரிசை கொடுத்துவிட்டு பசுவின் தடவலுக்காய் ஏங்கும் கன்றுக்குட்டி போல் கண்ணீர் மல்க நின்றேன். எதுவும் பேச முடியா உணர்ச்சிகமான சூழ்நிலை அது.! ஜாஸ்மின் அவர்கள் எழுந்து செல்லமாய் முதுகில் தட்டிக்கொடுத்து, முன்னுச்சி முடியை கலைத்து "கீப் இட் அப்..!" என்றார். அவர் விழியும் கலங்கியிருப்பதை என்னால் உணர முடிந்தது. அதிலிருந்து நானும் ஜாஸ்மின் அவர்களுக்கு செல்லப்பிள்ளை போல் ஆனேன்.
இன்று அவர்கள் எங்கு உள்ளார்களோ எனக்கு தெரியாது. ஒரு ஆசிரியையாய் மட்டும் இல்லாமல் தாயாயும் இருந்து எனக்கு வழிகாட்டிய தருணங்கள் இது போல் நிறைய.! இருந்தாலும் இதை நான் குறிப்பிட்டு சொல்லக்காரணம் எனக்குள் ஒளிந்து கிடந்த ஒரு திறமையை அந்த தாயுள்ளத்தால் தான் கண்டுணர முடிந்தது. இன்று நான் பெண்களை மிகவும் மதிக்க ஜாஸ்மின் அவர்களும் ஒரு காரணம். என்னை கடந்து சென்ற பெண்களில் அவரை என்றும் என்னால் மறக்கமுடியாது, அவரால் பெற்ற அந்த பரிசையும் மறக்க முடியாது..!! இந்த பதிவை அவர்களின் அன்பிற்கு அர்ப்பணிக்கிறேன்.!!
தசாவதாரம் படத்தை நான் பார்த்துட்டேன்.. பார்க்கலை..!! என்ன.. என் பதில் குழப்புதா..? ஆமா.. நானும் படத்தை பார்த்தேன்.. ஆனால் முழுதும் பார்க்கலைங்கிறது தான் அதுக்குள்ள இருக்குற செய்தி..! தசாவதாரம் படத்தை சவுதியில் கேமரா பிரிண்டில் வரும் சிடியிலோ, இணையத்தில் சுட்டி தேடி பதிவிறக்கி பார்க்கிற படமோ கிடையாது. அதை நவீன தொழில்நுட்பம் இருக்கும் தியேட்டர்ல நிறைவா பார்க்கிறது தான் சரி..! அது இல்லாத அரைகுறை உணர்வு தான் என்னை முழுதும் பார்க்க விடாம நிறுத்திடிச்சி..! ஒருவேளை நான் அதை முழுதும் பார்த்திருந்தா அதில் இருக்கிற குறைகள் கமல்-ங்கிற திறமைசாலி கலைஞனின் படைப்பை நிராகரிக்க வச்சிடுமோங்கிற கணிப்பு காரணமா இருந்திருக்கும்..!! நமக்கு யார் மேலயோ இருக்கிற கோபத்தை யார் மேலயோ காட்டுற பழக்கம் புதுசில்லையே..!!
படத்தை பத்தி சொல்லணும்னா இந்த திரியோட தலைப்பு மாதிரி படம் முழுதும் கமல்..கமல்..கமல் தான்..!! கமல் திறமைக்கான பரிணாம வளர்ச்சியின் அடுத்த படியை இரசிகர்கள்கிட்ட அழுத்தமா சொல்றதுக்கு ஆஸ்கார் ரவிச்சந்திரனின் செலவில் கமலுக்காக செய்யப்பட்ட பிரமாண்ட விளம்பரம் தான் இந்தப்படம். அடுத்தவன் செலவில் அவருக்கு விளம்பரம் செஞ்சிருந்தாலும் மக்களின் ஆதரவு இல்லாட்டி கமலுக்கு இருக்கிற புகழும் போயிடுற ரிஸ்க்கும் ஏகத்துக்கு இதில் இருக்கு. ஆனாலும், திறமையை மட்டுமே நம்பும் கமல், இந்த முறை திறமையை மட்டும் நம்பி அதிக ரிஸ்க் எடுத்திருக்கார், ஆஸ்கார் ரவிச்சந்திரனை விட..!! ஏன்னா.. பணம் போய்ட்டா சம்பாதிச்சிடலாம்... ஆனால், புகழை தக்க வச்சிக்கிறது தான் ரொம்ப கஷ்டம். அந்த தைரியத்துக்கே முதல்ல அவரை நெஞ்சார பாராட்டலாம். இந்த படத்துக்காக அவர் எடுத்துக்கிட்ட கடும் உழைப்பு, கடந்த ஆளவந்தான் மாதிரி காலை வாராம அவர் கழுத்தில் பூ மாலை போட்டிருக்கு..!!
பொதுவா கதையை வச்சிக்கிட்டு தான் நடிகர்கள், தலைப்பு உள்ளிட்ட எல்லாத்தையும் தேர்ந்தெடுப்பாங்க..!! இங்கே கமல் மனசில் மின்னிய 10 அவதார ஆசை தசாவதாரம்-கிற தலைப்பா உருவெடுத்து, பிறகு அது கே.எஸ்.ரவிக்குமார், ஆஸ்கார் ரவிச்சந்திரன் என்று எல்லாத்தையும் தேர்ந்தெடுக்க வச்சிருக்கு..! தொழில் பக்தி இல்லாதவன் திறமைசாலியா உருவாகிறதில்ல.. அதில் உருப்படுறதும் இல்ல..! மக்களின் மனம் போன இரசனை கமல்-ங்கிற நல்ல திறமையான கலைஞனை பல தடவை காயப்படுத்தியிருந்தாலும் இந்த முறை கை கொடுத்து ஆதரவா காயங்களுக்கு மருந்து தடவியிருக்காங்க..!! படத்தில் கதைன்னு ஒண்ணும் இல்ல.. இல்லாட்டி என்ன.. ? படம் 3 மணி நேரத்துக்கு மேல படம் ஓடினாலும் அலுக்காம இருக்க கமல் நிறைய அசத்தியிருக்கார். ஃப்ரேமில் சும்மா வந்து நின்னுட்டு பல கோடிகளை அள்ளிக்கிட்டு போற சினிமா கொள்ளையர்களுக்கு நடுவுல சினிமாவிலேயே விழுந்து, புரண்டு, சம்பாதிச்சி, அழிச்சின்னு அத்தனையும் செய்ற கமலை நாம பாராட்ட வேண்டியது அவசியம்.
கமலோட திறமைங்கிறது நடிப்புங்குற கலையோட பரிமாணத்தை கொஞ்சமாவது புரிந்தவர்களுக்கு மட்டுமே புரிஞ்ச ஒண்ணு..!! அதை புரியாதவங்க அந்த கலைக்கு அவர் கொடுக்கிற விலைகள், படுற கஷ்டங்களுக்காகவாவது அவரை பாராட்டணும்..!! அதான் ஒரு உண்மையான கலைஞனுக்கு நாம் செய்யற மரியாதை..!!!
காலத்திற்கேற்போல் மாறி வரும் மக்களின் இரசனையை கணித்து, அதற்கு தகுந்தாற் போல் படைப்புக்களை தருவது யாராலும் முடியாது. அது தெரிந்திருந்தால் எல்லோரும் திரைப்பட தொழிலுக்கு வந்து விடுவார்கள். அது மட்டுமல்லாமல் ஒரு படைப்பாளியால் சரியாக கணிக்கத்தெரிந்தால் சில நேரங்களில் தன் நிலை இறங்கி மலிவான படைப்பையும் அவன் தரவேண்டிய கட்டாயம் ஏற்படலாம். நல்ல, திறமையான படைப்பாளிகள் அந்த அளவிற்கு இறங்குவதில்லை.
ஒரு நடிகராக அதிகம் அறியப்பட்ட கமலின் நடிப்பை சிலாகிக்கும் போது கமலிடம் நடிப்பில் இருக்கும் குறைகளற்ற தன்மை உறுதியாகிறது. பிறகு ஏன் கமல் மேல் ஏன் இத்தனை அஸ்திர தாக்குதல்கள்.? காரணம், கமல் என்ற கலைஞனின் மீதான இரசிகர்களின் அதிகப்படியான எதிர்பார்ப்பு தான். படத்தில் ஒளிப்பதிவு சரியில்லை என்றாலும் கூட "கமல் படத்தில் பெயருக்கு தான் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள்.. மற்றபடி அவர் தான் எல்லாவற்றையும் செய்வார்" என்ற நினைப்பு நம்மிடம் இருக்கிறது. அவர் மீதான அந்த அதிகப்படியான எதிர்பார்ப்பே படத்தில் இருக்கும் குறைகள் ஒவ்வொன்றையும் கமலுடன் இணைத்து பேச வைக்கிறது. தசாவதாரம் படத்தில் குறைகளாக சொல்லப்படும் பல விஷயங்கள் இயக்குநர், மற்றும் தொழில்நுட்ப கலைஞர் சம்பந்தப்பட்டவை. மேக்கப் சரியில்லை என்றால் அது மேக்கப் கலைஞர் மற்றும் அதனை சிறப்பாக அமைவதை உறுதி செய்ய வேண்டிய இயக்குநரின் கடமை. இந்த படத்தில் கே.எஸ்.இரவிக்குமார் பிறகு என்ன தான் செய்தார்..? அவரைப்பற்றி ஏன் குறைகள் சொல்வதில்லை.? குறைகள் மட்டுமல்ல.. பாராட்டுக்களும் அவருக்கு இல்லவே இல்லை. இந்த படத்தை இயக்கியதன் மூலம் கே.எஸ்.இரவிக்குமார் தனக்கான தனித்தன்மையை இழந்ததாக நான் நினைக்கிறேன்.
ஆக, ஒரு நல்ல கலைஞன் தன் மேல் அதிக எதிர்பார்ப்பை கொண்டிருக்கும் இரசிகனை திருப்தி படுத்துவது கடமை என்று ஒரு புறம் இருந்தாலும், அந்த முயற்சியில் அவன் சிறிதளவு வெற்றி பெற்றாலும் பாராட்டவும் தயங்க கூடாது. ஏனென்றால் அதிக அளவு எதிர்பார்ப்பு என்கிற போதே அதில் வெற்றியடையும் வாய்ப்பும் குறைவாக இருப்பதை நாம் புரிய வேண்டும்.
கமல் எதையும் தெளிவாக யோசித்து தான் செய்கிறார். ஆனால், அவர் யோசிப்பதை, செய்வதை புரிந்து கொள்ளும் உயர்ந்த இரசனை நம்மிடம் இல்லை என்பது தான் உண்மை. குழந்தையின் புத்திசாலித்தன கேள்விக்கு பதிலளிக்கா முடியா இயலாமை தந்தையின் நிலையில் தான் அவரை குறை சொல்லும் இரசிகர்கள் இருக்கிறார்கள். கமலின் நடிப்பில் வெளிப்படுத்தும் சின்ன, சின்ன விஷயங்களை அறிந்து கொள்ளக்கூட பலரால் முடியவில்லை. அதை அறிந்தவர்கள் கமலின் நடிப்பை குறை சொல்ல நிச்சயம் தயங்குவார்கள்.
திரைப்படம் என்ற பொழுதுபோக்கு ஊடகத்தில் கதை என்பது இருந்து தான் ஆக வேண்டுமா..? திரைப்படத்தினுள் நம்மை இழுத்துச்செல்ல கதை தான் அவசியம். ஆனால், அந்த இழுக்கும் செயலை நடிப்பு, பிரமாண்டம் போன்ற இன்ன பிற விஷயங்கள் செய்தால் கதை பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்..? ஆதவன் ஹேராம் படத்தை பற்றி சொல்லி, அருமையான படம் என்று அவரே ஒத்துக்கொண்டுள்ளார். ஆனால், ஹேராம் படத்தின் தோல்வி ஒட்டுமொத்த தமிழ் சினிமா இரசிகர்களின் தரமற்ற இரசனையை காட்டியது என்ற உண்மையை ஒப்புக்கொள்வீர்களா..?. படத்தை பாராட்டிய சிலர் கூட கமல் 3 மொழிகளை வைத்து படத்தில் வைத்து சொல்லி குழப்பி விட்டதாக சொல்கிறார்கள். மூன்று மொழிகள் தொடர்புடைய கதைக்களத்தில் தமிழை மட்டும் காட்டினால் அதன் நிஜத்தன்மை பாதிக்கப்படாதா..? இதே சிலர் தான் தசாவதாரம் பற்றிய விமர்சனத்தில் பஞ்சாபி சிங் கமல் தமிழில் பாட்டு பாடுவது பற்றி கிண்டல் அடித்திருந்தார்கள். எதை செய்தாலும் குற்றம் சொல்வது அதை செய்வது மிகவும் சுலபம் என்பதாலா..?
நிச்சயம் கமலின் அற்புத நடிப்புக்கு தீனி போடும் களம் இந்திய சினிமா அல்ல..!! நிர்வாண மக்களின் ஊரில் கோவணம் கட்டிய கமலை குறை சொல்லும் சூழல் அவருக்கு பொருத்தமானதல்ல. அவரின் ஹேராம் தோல்வி அடைந்த போது அதற்கு சொல்லப்பட்ட பல காரணங்களில் அவர் ராணி முகர்ஜியோடு நடித்த நெருக்க்க்க்க்க்க்கமான காட்சிகளை சொன்னார்கள். நானும் உடன் படுகிறேன். ஆனால், அதே காலகட்டத்தில் வந்த ஆபாச குப்பையான "துள்ளுவதோ இளமை" எப்படி ஓடியது..? குறை சொல்வது எளிது..! நிறை அளிப்பது மிக, மிக கடினம்..!!