நேரம்:

ஞாயிறு, 31 ஜனவரி, 2010

பலி Vs பசி - 02



மனிதனைப் பொறுத்தவரை, அடுத்தவர்களை பாதிக்காத எந்த ஒரு விஷயத்தையும் செய்ய அவனுக்கு உரிமை உண்டு. உணவிலும் அப்படியே..! அவனுக்கு சைவம் பிடித்தால் சைவ உணவு உண்ணட்டும், அசைவ உணவு பிடித்தால் அசைவ உணவு உண்ணட்டுமே..! அதை வேண்டாம் எ‎ன்று சொல்ல நாம் யார்..? (இந்த நேரத்தில் சைவ உணவை மட்டும் உண்ணும் கணவ‎ன், தன் மனைவி அசைவம் விரும்பி உண்டால் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்கிறார்கள். அந்த கணவ‎ன்மார்களுக்கு எ‎ன் ஹேட்ஸ் ஆஃப்..!) அதனால் நமக்கு எ‎ன்ன நஷ்டம்..? நாம் மாடு, யானை, குதிரை போன்ற விலங்குகளை வேலைகளுக்கு பய‎ன்படுத்துகிறோம். கோழி, ஆடு போ‎ன்றவற்றால் உணவை தவிர, மனிதனுக்கு வேறு பய‎ன் என்ன..? அதைக் கூட வேண்டாம் எ‎ன்று சொ‎ன்னால் என்ன சொல்வது..? கடவுளால் அவை படைக்கப்பட்டத‎ன் நோக்கம் மனிதனுக்கு உணவாகத்தா‎ன்.

தனக்கு அசைவம் பிடிக்காது எ‎ன்பதற்காக ஊரில் உள்ள முனியாண்டி விலாஸ்களையும், செட்டி நாடு ஹோட்டல்களையும், டெல்லி தர்பார்களையும் (பட்டியல் நீண்டு கொண்டே போகும், இத்தோடு நிறுத்தி விடுகிறே‎ன்) மூடி விட வேண்டும் எ‎ன்று ஒருவ‎ன் நினைப்பது எவ்வளவு முட்டாள்தனமோ, அது போல் தா‎ன் அசைவம் சாப்பிடக்கூடாது என்று அடுத்தவர்களை கட்டாயப்படுத்துவதும். இவ்வளவு அசைவத்திற்கு ஆரத்தி எடுத்து பேசும் நா‎ன் ஒரு சைவப் பிரியன் என்பது உங்களுக்கு தெரியுமா..? எனக்கு மிகவும் பிடித்த உணவு வற்றல் குழம்பும், கத்திரிக்காய் பச்சடியும்..! ஆனால், நா‎ன் யாரையும் அசைவம் சாப்பிடக்கூடாது என்று வற்புறுத்தியது கிடையாது..! வற்புறுத்தவும் கூடாது. எ‎ன் உடன்பிறந்த சகோதரன் பறப்பதில் விமானத்தையும், கடலில் மிதப்பதில் கப்பலையும் தவிர வேறு எல்லாவற்றையும் வெளுத்துக் கட்டுவா‎ன் (அவ‎ன் சாப்பிடும் போது எதற்கும் நா‎ன் கொஞ்சம் எட்டியே நிற்பே‎ன்..!!! விட்டால் என்னையும் விழுந்து, கடித்து தி‎ன்று விடுவானோ எ‎‎ன்று பயமாக இருக்கும்..!!). ஊரில் இருக்கும் போது நான் வெளியூர் போனால் மதிய நேரம் என்னை கற்பகம் ரெஸ்ட்டாரண்டிலோ, லஷ்மி நாராயணபவனிலோ காணலாம். காரணம், எங்கள் வீட்டில் பெரும்பாலும் அசைவ உணவே சமைக்கப்படும் என்பதால், எனக்கு பிடித்த சைவ உணவை ஹோட்டலில் “வெட்டி” விட்டுத் தான் வீட்டுக்கே போவேன்..!! (ஊரில் நிறைய சைவ ஹோட்டல்களை வாழ வைத்த பெருமை எனக்குண்டு..!).

அரசி‎ன் உத்தரவால் விலங்குகள் பலி கொடுக்கப்படுவது நி‎ன்று விடும் என்றா நினைக்கிறீர்கள்..? நிச்சயம் நடக்காது..!! அதே போல் நாட்டில் விலங்கு, பறவைகளை பலி கொடுத்து நடத்தப்படும் இறைச்சிக் கடைகளை தடை செய்ய தைரியம் உண்டா இந்த அரசுக்கு..! (அப்படி செய்தால் கசாப்பு கடைக்காரர்களி‎ன் கத்திக்கு புது வேலை வரும்..!!). நம் மாநிலத்தில் பலி கொடுக்கப்படாவிட்டால், அவை வேறு இடத்தில் பலி கொடுக்கப்பட்டு,  நாம் உண்ணாத அவற்றை வெளிமாநிலக்கார‎னோ அல்லது வெளிநாட்டுக்கார‎னோ உண்பா‎ன். இதனால் உள்நாட்டில் இறைச்சியி‎ன் விலை அநியாயத்திற்கு அதிகரிக்கும். காய்கறிகள் உண்பவர்கள் அதிகமாவதால் அதை ஈடு செய்யும் அளவுக்கு உற்பத்தி குறைவு என்பதால் காய்கறி விலையும் எகிறும். இறைச்சியை விற்பனை செய்து பிழைக்கும் பல குடும்பங்கள் நலிவடையும் (அவர்களும் தீட்டிய கத்தியை தூர வீசாமல் இ‎ன்னும் நன்றாக கூர் தீட்டிக் கொண்டு சாலைகளில் நடமாட ஆரம்பித்தால், நமக்கெல்லாம் ச‎னி உச்சம் தான்..!). இவை தா‎ன் இந்த சட்டத்தி‎னால் ஏற்படப் போகும் பல‎ன்கள்..! ஜனநாயக நாட்டில் இது போ‎ன்ற அடாவடித்தனமான அதிகார துஷ்பிரயோக சட்டங்கள் அநாவசியமானவை. அப்பாவி மக்கள் நாட்டில் பாலாறும், தேனாறும் ஓடவேண்டும் என்று ஆசைப்படவில்லை.  அவர்களின் ஒரே கனவு வறுமையற்ற, நிம்மதியான வாழ்க்கை. அதை ஆட்சியாளர்கள் அளிப்பது என்பது அத்தனை கஷ்டமான விஷயமும் இல்லை. அவர்களின் ஏக்கத்தை நிறைவேற்ற அவர்களின் எண்ணங்களை நன்கு அறிந்த, வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்கள் தெரிந்த, முக்கியமாக சமூகத்தின் மேல் அன்பு கொண்ட இதயம் வேண்டும்.

இப்போதெல்லாம் ஆட்சியாளர்கள் பதவியை சுயலாபத்திற்கும், ஆடம்பர வாழ்க்கைக்கும், அரசியல் எதிரிகளை பழி தீர்க்கவும் பயன்படுத்துகிறார்கள். அதற்காக அவர்கள் கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது தான் வலிக்கிறது. அரசியலுக்கு வந்து வாய்ப்பு கேட்கும் ஒவ்வொருவரையும் “இவராவது வந்து நமக்கு நல்லது செய்யமாட்டாரா..?” என்ற என்ற நம்பிக்கையில் தான் தேர்ந்தெடுத்து, ஆட்சிப் பொறுப்பை  கையில் கொடுக்கிறார்கள். ஆனால், அவர்களும் “பழைய குருடி, கதவை திறடி” கதையாக மற்றவர்கள் செய்ததையே தொடர, மக்கள் நம்பிக்கையை இழந்து வருகிறார்கள். அந்த நம்பிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதால் பதவிக்கு எந்த வகையிலும் பொருத்தமில்லாத, தகுதியில்லாதவரைக் கூட தேர்ந்தெடுக்க மக்கள் தயாராகி விடுகிறார்கள். இந்த போக்கு நாட்டிற்கு தீமையையே விளைவிக்கும் என்பதில் எந்த வித சந்தேகமுமில்லை. ஒரு நாடு சிறக்க வேண்டுமென்றால் அந்நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் தனி மனித ஒழுக்கம் சரியான முறையில் பேணப்பட வேண்டும். அதனால் உங்களை சுத்தப்படுத்துங்கள் வீடு சுத்தமாகும், உங்கள் வீட்டை சுத்தப்படுத்துங்கள் தெரு சுத்தமாகும், உங்கள் தெருவை சுத்தப்படுத்துங்கள் நாடே சுத்தப்படும்..! நம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படவேண்டும், தவறை தட்டிக் கேட்கும் மனப்பான்மை வளர வேண்டும், திறமைக்கு, தகுதிக்கு மதிப்பு கொடுக்கும் குணம் வரவேண்டும்..! நம் தாய் திருநாடு ஒரு நாள் உலக அரங்கில் முதலிடம் வகிக்கும் என்ற நம்பிக்கையை உள்ளடக்கிய கனவோடு, அந்த  நல்ல நாளுக்காய் ஏக்கத்துடன் காத்திருக்கிறேன் ஒரு உண்மையான இந்தியக் குடிமகனாய்..!! மெய்ப்படுமா  என் கனவு..???


முற்றும்..!

செவ்வாய், 26 ஜனவரி, 2010

பலி Vs பசி - 01



நண்பர்களே..!

நான் இங்கே எழுதியிருப்பவை நாட்டுப்பற்று கொண்ட, சமூகத்தின்பால் அக்கறை கொண்ட, மானிட ஒற்றுமையில் ஆர்வம் கொண்ட, மனிதர்களை ஜாதி, மதம், இனம், மொழி கடந்து நேசிக்கும் ஒரு சராசரி மனிதனின் மனதில் ஏற்பட்ட எண்ணச் சிதறல்கள் மட்டுமே தவிர, வேறு எதுவும் இல்லை..! இதற்கு நீங்கள் எந்த வர்ணமும் பூச மாட்டீர்கள் என்று நம்புகிறேன். இது தொடர்பில் உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை, குட்டுக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நீங்கள் கொடுக்கும் எதையும் ஏற்றுக் கொள்ள நான் தயாராக இருக்கிறேன். எனவே நம் முன் இருக்கும் இரும்புத் திரை விலக்கி தாராளமாய் விமர்சியுங்கள்..! நான் ஏராளமாய் மகிழ்வேன்..!! சரி..! இனி, நம் விஷயத்திற்கு போவோம்.

கடவுளுக்கு விலங்குகளை, பறவைகளை காணிக்கையாக பலியிடுவது குறித்தும், நம் நாட்டில் நிலவும் சைவ, அசைவ வேறுபாடு குறித்தும் பதிவெழுத நெடுநாட்களாக நினைத்திருந்தேன். இன்று சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது.  காணிக்கை கொடுப்பது சரியா எ‎ன்பதற்கு மு‎ன், அவை ஏன் பலியிடப்படுகிறது என்பதை பார்க்க வேண்டும். பொதுவாக வழிபாட்டுத் தலங்களில் பலியிடுதல் எ‎ன்பது நேர்ச்சையை நோக்கமாக கொண்டது மட்டுமே..! அதாவது, தான் வேண்டுவதை நிறைவேற்றினால், அதற்கு பிரதிபலனாக ஆடு, கோழி உள்ளிட்ட உயிரினமோ அல்லது அ·றிணையான சில்லரை காசிலிருந்து, விலை மதிப்புள்ள ஆபரணங்கள்வரை தருவதாக சொல்லி கடவுளுக்கும், மனிதனுக்கும் இடையில் செய்யப்படும் ஒரு ஒப்பந்தம் தா‎ன் நேர்ச்சை என்பது. இதில் நேர்ச்சைக்கும், காணிக்கைக்கும் ஒரு சிறிய வித்தியாசம் உண்டு. ஒரு வேண்டுதலின் பொருட்டு கடவுளுக்காக செய்யப்போவதாக சொல்லப்படும் அட்வான்ஸ் புக்கிங் தான் நேர்ச்சை..! அப்படி வேண்டிக் கொண்டது நிறைவேறினால், சொன்னபடி வேண்டுதலை நிறைவேற்றுவது காணிக்கை (இந்த நேர்ச்சைக்கும், காணிக்கைக்கும் எந்த மதங்களும் விதி விலக்கல்ல..!). பகுத்தறிவு படி பார்த்தால் நேர்ச்சை மற்றும் காணிக்கையில் அர்த்தமில்லை எ‎ன்றாலும் மனிதனின் மன திருப்திக்காக பகுத்தறிவு கடந்து செய்யக்கூடிய இது போன்ற சில விஷயங்களை ஆராய்வது ஏற்புடையது ஆகாது எ‎ன்றாலும், அது கடவுளோடு சம்பந்தப்படுத்தப்படும் போது தா‎ன் அங்கே முரண்பாடு தோ‎ன்றுகிறது..!.

இவ்வாறு கடவுளுக்கு காணிக்கை செய்யப்படும் எந்தப் பொருளையும் கடவுள் உண்பதில்லை அல்லது உபயோகப்படுத்துவதில்லை (நம்மிடம் அவர் கேட்பதும் இல்லை எ‎ன்பது உபரி தகவல்..!). அதாவது, நாமாகவே ஒரு கற்பனையை செய்து கொண்டு, கடவுளை “கவனித்து” காரியங்களை கைக்குள் அட‎க்க நினைக்கும் நம் அறியாமையின் வெளிப்பாடு தான் நேர்ச்சையும், காணிக்கையும் (இதனால் தா‎ன் இன்னும் திருப்பதி உண்டியல் “ஹவுஸ்·புல்” கவும், உலகின் பணக்கார கடவுளாக திருப்பதி வெங்கடாஜலபதி இருக்கவும் காரணமாய் இருக்கிறது). மனிதர்கள் மன நிறைவிற்காக கடவுளுக்கு காணிக்கை அளிக்கிறார்கள். அவர்களுடைய நோக்கம் சிறந்தது எ‎ன்றாலும், அதை அடைய அவர் போகும் வழி சரியானதா என்பதை நான் சிந்திக்க வேண்டும். கடவுளின் கருணைப் பார்வை நமக்கு கிட்ட காணிக்கை அளிப்பது தான் சரி என்றால் தாலுகா ஆஃபீஸ் பியூனுக்கும், தன்னுடைய மகாசக்தியால் உலகத்தை காக்கும் கடவுளுக்கும் என்ன வித்தியாசம் என்று சொல்லுங்கள். எந்த தேவைகளும் இல்லாத கடவுளுக்கு, நாம் உண்டியலில் போடும் ஒரு ரூபாயும், இரண்டு ரூபாயும் எதற்கு..? உண்மை என்னவென்றால், கடவுளின் பெயரைச் சொல்லி சமூகத்தை கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் சில நயவஞ்சகர்களின் நாச வேலை இது..! கடவுளின் பெயரைச் சொல்லி கௌரவமாக பைசா பார்ப்பது இன்று நாட்டில் முதல் போடாத முக்கிய  பிஸினஸாக இருந்து வருகிறது. நாம் கடவுளின் அருளை அடைவது ஒன்றும் கம்ப சூத்திரம் அல்ல. நல்லதை மட்டும் செய்தால் வெகு சுலபமாக கடவுளி‎ன் அருளை அடையலாம்..! கடவுளுக்கு காணிக்கை அளிப்பதாக நினைத்துக் கொண்டு, நாம் நாசகாரர்களுக்கு அளிக்கும் பணத்தில் ஏழைகளுக்கு கொடுத்து அவர்களின் வாழ்வில் ஒளியூட்டி, கடவுளி‎ன் கருணைப்பார்வையை வெகு சுலபமாக பெறலாமே..! சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் காணிக்கை எ‎‎ன்பது நம்முடைய சுயநலத்தையும், பேராசையையும் வெளிச்சம் போட்டு காட்டும் ஒரு கண்ணாடி..!

அடுத்து விலங்குகள் மற்றும் பறவைகளை கடவுளுக்கு காணிக்கை கொடுப்பது குறித்து முன்பு அரசின் தடை கூட இருந்தது. ஆடு, மாடு உள்ளிட்டவற்றை உண்ணாத பிரிவினர் கூட நம்மிடையே இருக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் என்ன..? உயிர்களைக் கொல்வது பாவம் எ‎ன்பதாலா..? ஆமாம், அது தா‎ன் உண்மை என்றால் எனக்கு சிரிப்புத்தா‎ன் வருகிறது. உயிர் எ‎ன்பது விலங்குகளுக்கு மட்டும் உரியதா.? அப்படியெ‎ன்றால் தாவரங்களுக்கு உயிர் இல்லையா..? உயிர் இல்லாமலா அவை முளைத்து, துளிர்த்து, கிளைத்து, செடியாகி, மரமாகி, காய்த்து தன் வாழ்நாள் முடிந்தவுட‎ன் மற்ற உயிரினங்கள் போலவே செத்துப் போகிறது..? சரி, தாவரங்களை விட்டு விடுவோம். உலகில் ஆடு, மாடு, கோழி உள்ளிட்டவை மட்டுமா உயிருள்ளவை..? நாம் அருந்தும் நீரில் எவ்வளவு பாக்டீரியாக்கள் உள்ளது தெரியுமா..? நாம் சுவாசிக்கும் காற்றில் எவ்வளவு நுண்ணியிரிகள் உள்ளன தெரியுமா..? அதையெல்லாம் கொல்கிறோமே..! அது பாவமில்லையா..? நியாயம் எ‎ன்பது கண்ணுக்கு தெரிந்த உயிரினத்திற்கு மட்டும் தானா..?  இப்படி ஆடு, மாடு, கோழி போன்ற உயிர்களை பலியிடுவதை, உண்ணுவதை தடுக்க நினைப்பவர்கள் மதக்கலவரம், ஜாதிக்கலவரம், வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் மூலம் ஆறறிவு உயிர்கள் ஆயிரக்கணக்கில் அநியாயமாய் பலி கொள்ளப்படுகிறதே, அதை எந்த சட்டம் போட்டு அல்லது எப்படி தடுக்கப் போகிறார்கள்..? நம் நாட்டில் ஐந்தறிவு விலங்குகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கூட ஆறறிவு மனிதனுக்கு கொடுக்கப்படுவதில்லையே அது ஏ‎ன்..? இந்தக் கேள்விக்கு மேனகா காந்தியால் கூட பதில் சொல்ல முடியாது. முதலில் நாம் கடவுள் படைப்பில் உள்ள உயிரினங்களின் வாழ்க்கை தத்துவத்தை புரிந்து கொள்ளவேண்டும். இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு உயிரும், மற்ற உயிர்களை சார்ந்தே வாழ்கிறது. வாழ்ந்தே ஆக வேண்டும்..! தாவரம் இல்லையெ‎ன்றால் தாவர உண்ணிகளுக்கு வாழ்க்கையில்லை. விலங்குகள் இல்லையெ‎ன்றால் ஊண் உண்ணிகளுக்கு வாழ்க்கையில்லை. கடவுளி‎ன் படைப்பு மிகச் சரி..! ஆனால், பலவீனங்கள் நிறைந்த மனித‎ன் அதை மாற்ற நினைப்பது தா‎ன் நகைப்பை உண்டாக்குகிறது.

தொடரும்.......

சனி, 23 ஜனவரி, 2010

நிலவிலிருந்தும் தெரியும் நீ..ள..சுவர்..! (பகுதி - 03)



இந்த சுவர் சில இடங்களில் 7.8 மீட்டர் உயரத்திற்கும், 5.8 மீட்டர் அகலத்திற்கும் கிட்டத்தட்ட இன்றைய நகரங்களின் முக்கிய சாலைகளைப் போன்ற அகலத்துடன் இந்த சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இவ்வளவு உழைப்பு, செல்வம் எல்லாவற்றையும் உறிஞ்சியிருந்ததாலோ என்னவோ, இன்றைக்கும் இந்த சுவர்கள் எளிதில் உடைக்க இயலாதவைகளாக உறுதியுடன் காணப்படுகின்றன. அண்மையில் பவுடோ (Baotou) என்றழைக்கப்படும் நகரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இந்த சுவர் இருப்பதாக எண்ணிய சிலர் ஒரு மேம்பாலம் கட்ட வேண்டி, இந்த சுவருக்கு குண்டு வைத்து உடைத்துள்ளனர். இதில் சுமார் 7900 சதுர அடி பரப்புக்கு சுவர் இடிப்பட்டது என்றாலும் இதற்கு கணிசமான சக்தியைப் பயன்படுத்த வேண்டியிருந்ததாம். ஆனால் இந்த சுவர் இடிப்பு பாரம்பரியப் புகழைக் கெடுத்து விடும் என்பதால் சீனாவின் மைய அரசு முயற்சியில் இப்பகுதி மீண்டும் கட்டப்பட்டு இந்த சுவருக்கு வலுவூட்டியதுடன் ஏற்கெனவே காணாமல் அழிந்து போன பண்டைய அதிசயங்கள் போன்ற நிலையே இதற்கும் உருவாகாமல் தடுக்கப்பட்டுள்ளது.


சீனப் பெருஞ்சுவர் பற்றி இ‎ன்னும் சில சுவாரசியமான தகவல்கள்

தொடர்ந்து போரையும், இதனால் ஏற்பட்ட மனப் போராட்டங்களையும் சந்தித்து வந்ததாலோ என்னவோ தற்காப்பு நடவடிக்கைகள் பலவற்றில் சீனர்கள் அப்போதே ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். பாதுகாப்பு அரணாக எழுந்த சுவரையும் இதற்காக நன்றாகவே இவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள் எனவும் தெரிய வருகிறது. சுவரின் முழு நீளத்திலும் குறிப்பிட்ட சில இடைவெளியில் பாதுகாப்பு கோபுரங்களையும் இவர்கள் எழுப்பியிருந்தனர். இந்த பாதுகாப்புக் கோபுரங்களில் இருந்து மற்ற பகுதிகளுக்கு சமிக்ஞை தரும் ஏற்பாடுகளும் ஏராளமாக இருந்தன எனச் சொல்கின்றன குறிப்புகள். எதிரிகள் யாரும் படையெடுத்து வருவதை ஒரு பகுதியில் இருக்கும் காவலர்கள் அடையாளம் கண்டுவிட்டால், மற்ற பகுதிகளில் இருப்பவர்களுக்கு அதைத் தெரிவிக்க கோபுரத்தில் இருந்து புகை எழுப்புவார்களாம். இந்தப் புகை எழுப்ப காட்டுச் செடிகள், தழை மற்றும் நரிகளின் சாணம் போன்றவை பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை கிளப்பும் வித்தியாசமான புகையை வெளியேற்றவும் 'ஒருவழி', 'இருவழி' என பல புகை வெளியேற்றும் நுட்பங்கள் அந்நாளில் நடைமுறையில் இருந்துள்ளது.


இன்றைய நாகரிகத்தில் காங்கிரீட் கட்டிடங்களில் வலுவூட்ட பயன்படுத்தப்படும் இரும்புக் கம்பிகள் போன்ற தொழில்நுட்பம் அந்நாளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளதும் இந்த சுவர் கட்டுமானத்தில் தெரிகிறது. ஆனால் அப்போது கம்பிகளுக்கு பதிலாக சிவப்பு வில்லோ மரத்தின் நார்கள் இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. இத்துடன் கோபி பாலைவனப் பகுதிகளை ஒட்டிய இடங்களில் சுவர் எழுப்ப கற்கள் கிடைக்காத நிலையிலும் மணற்பாங்கான மண்ணைக் கொண்டே வேறு சில பொருட்களைச் சேர்த்து உறுதியான செங்கற்களைச் செய்யும் அறிவும் சீனர்களுக்கு இருந்திருக்கிறது என்பது சுவர் பற்றிய ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. இப்படி பல வழிகளிலும் பல நூதனத் தகவல்களை அந்நாளைய சீன மக்களின் அறிவியல் அறிவை, முன்னேற்றத்தை விளக்கும் இன்னும் பல விஷயங்களையும் சீனப் பெருஞ்சுவர் என்ற வரலாற்றுச் சின்னம் நமக்கு அடையாளம் காட்டுகிறது.

இப்படி தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் சீனா கலாச்சாரத்திலும், பண்பாட்டிலும் சிறந்து விளங்கும் இந்தியாவுக்கு பெரும் தலைவலியாகிப்போனது காலத்தின் கொடுமையென்று தான் சொல்ல வேண்டும்..!!



முற்றும்.....!






வியாழன், 21 ஜனவரி, 2010

நிலவிலிருந்தும் தெரியும் நீ..ள..சுவர்..! (பகுதி - 02)




இன்றைய உலக வர்த்தக மய  சூழ்நிலையில் 'வேறுவழியில்லை' எனப் புரிந்துகொண்ட சீனா தங்களது கம்யூனிசக் கட்டுப்பாட்டுகளில் பல மாற்றங்களைச் செய்துகொண்டு பொருளாதாரக் கொள்கை வட்டங்களை உடைத்துக் கொண்டு வெளியே வர முயன்றதும், உலக நாடுகள், உலகச் செல்வம் என எல்லாம் அங்கே பாய்வது போலத்தான் அந்நாளிலும் ஒரு பாய்ச்சல் சீனாவை நோக்கி..!ஆனால், அன்று பாய்ந்தது சீனாவின் எதிரிகள். சீனாவில் இருந்த செல்வச் செழிப்பைக் கொள்ளையடிக்க, இவர்கள் வரிசையாக அடுத்தடுத்து பாய்ந்தார்கள். ஓய்வின்றி எந்நாளும் இவர்களுடன் போரிட்டு எல்லைகளைக் காத்துக் கொள்ளவே பெரும்பாலான நேரத்தைச் செலவிட வேண்டியுள்ளது என எண்ணிய அந்நாளை சீன மன்னர்கள் எதிரிகளுக்கு 'செக்' வைக்க எண்ணி எழுப்பியதுதான் இந்தச் சுவர்
.
ஆனால் இன்றைக்கு உலக அதிசயமாகத் திகழும் இந்தச் சுவரோ சுற்றுலா விரும்பிகளைக் கவரும் அளவு சுவாரஸ்யமான தகவல்களை உள்ளடக்கியதாகத் திகழ்வதுடன், உலக நாடுகள் பலவற்றிலிருந்து இந்நாட்டுக்குத் தேவையான அந்நியச் செலாவணியையும் ஈட்டித் தரும் கற்பக விருட்சமாகவும் விளங்குவது கவனிக்கத்தக்கது. அடுத்து இச்சுவற்றின் சரித்திரம் பற்றி பார்ப்போம்.

சீனப் பெருஞ்சுவர் சரித்திரம்

கிழக்கில் கொரியா நாட்டு மலைப் பகுதிகளில் பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்கும் இந்தச் சுவர் மேற்கு திசை நோக்கி ஓடி 'அப்பாடா' என ஆடி அமர்வது கோபி பாலைவனப் பகுதிகளுக்கு முன்பு. கி.மு. 221-ல் சீனாவின் பகுதிகளை ஆண்ட...'க்வின்' பேரரசை உருவாக்கிய 'க்வின் ஷி ஹாங்' என்ற அரசன்தான் இந்த சுவர் எழுப்ப அட்சரம் போட்டாராம். இவரது பேரரசு 3000 மைல் நீளத்துக்கு வால் போல நீண்டிருந்தால் மனிதனால் எப்படி எல்லாப்பகுதிகளையும் கட்டுப்படுத்த முடியும் பாவம்..! இதற்கும் இந்த ஆள் ஒன்றும் அத்தனை 'லேசுப்பட்டவன் அல்ல' என்கிறது சீனக் குறிப்புகள். சீன அறிஞரான 'கன்·பூஷியஸ்' எழுதிவிட்டுப் போயிருந்த அரசியல் பாடங்கள் மக்களை திசைதிருப்பி தடம் மாற்றி விடுகின்றன என்று சொல்லி அவற்றை எல்லாம் தேடிப்பிடித்து தீ வைத்து எரித்த கொடுங்கோல் ம‎ன்னன் இவர். பேரரசை விரிவாக்குகிறேன் பேர்வழி என போரிட்டு, அதில் போர்க் கைதிகளாகச் சிக்கியவர்களையும், உள்நாட்டில் குற்றம் சுமத்தப்பட்ட சிறைக் கைதிகளையும் அடிமைகளாக நடத்தி அவர்களின் வியர்வையில்தான் இந்த சுவர் எழும்பத் தொடங்கியிருக்கிறது. ஆரம்பத்தில் நாளொன்றுக்கு 4 அங்குல உயரமும், 1 மைல் நீளமும் என சுவர் வளர்ச்சி காணத் தொடங்கியது எனத் தெரிகிறது. ஆனால் அவர் இறந்தவுட‎ன் 'இதற்காகத்தான் காத்திருந்தேன்' என்பது போல அந்நாட்டு எதிரி 'ஷியாங் நூ' என்பவன் சீனா மீது படையெடுத்து கொள்ளையடித்துள்ளான். அவனைப் போன்ற பலரிடமிருந்தும் நாட்டையும், அதன் செல்வத்தையும் காக்க கிட்டத்தட்ட அடுத்த 70 வருஷங்கள் வரை போராட்டம் நடந்துள்ளது. அதன்பின் இதில் வெற்றிகண்ட 'ஹீன்' பேரரச ராஜாக்கள் மீண்டும் சுவர் கட்டுமானத்தில் கவனம் செலுத்தியுள்ளனர். இப்பேரரசின் சிறந்த அரசர் என கூறப்படும் 'ஹீன்--டி' மட்டும் 300 மைல் நீளத்திற்கு இந்த சுவரை நீட்டியிருக்கிறார். 

ஆனாலும் கூட இந்த அதிசயத்தின் குறிப்பிடத்தக்க வளர்ச்சி, முன்னேற்றம் என குறிக்கப்பட்டுள்ளது இறுதியாக வந்த 'மிங்' பேரரசு காலத்தில் உருவான சுவற்றைத்தான். கி.பி. 1360-களின் பிற்பகுதியில் உருவான இந்த பேரரசு காலத்தில் தொழில்நுட்பம் கணிசமான முன்னேற்றம் கண்டிருந்தது. மற்ற இரு பேரரசு காலத்தில் உருவான மொத்த நீளத்தை விடவும் அதிக நீளத்திற்கு இந்த அதிசயத்தை வளர்த்து விட்டவர்கள் இவர்கள்தான். முந்தைய காலத்தில் ஆங்காங்கே மலை, காடு பகுதிகளில் விடப்பட்ட இடைவெளிகளை எல்லாம் நிரப்பும் நோக்கில் இந்த சுவரை இட்டு நிரப்பி இணைப்பு கொடுத்தது இவர்களது காலத்தில்தான். மலைப் பிரதேசங்கள் சிலவற்றில் 70 டிகிரி கோணத்தில் இந்த சுவரை மலையேறி உச்சி நோக்க வைத்ததும் இவர்களே. இதற்காகும் ஏராளமான செலவுக்காக சீனாவின் பாரம்பரிய பட்டு, வாசனைப்பொருட்கள், டீ உள்ளிட இன்ன பிற பொருட்களை வெளிநாடுகளுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்து பொருள் ஈட்டி வந்திருக்கிறார்கள், 'மிங்' பேரரசுகாலத்தில். கூடவே கட்டி முடித்த சுவர் பகுதிகளில் பாதுகாப்புக்காக ஆங்காங்கே பீரங்கிகளையும் வாங்கி வந்து நிறுவி நாட்டை வலுப்படுத்தியிருக்கிறார்கள்..!



தொடரும்.........



ஞாயிறு, 17 ஜனவரி, 2010

நிலவிலிருந்தும் தெரியும் நீ..ள..சுவர்..! (பகுதி - 01)





நண்பர்களே..!

நடைமுறை வாழ்க்கையில் சாதாரணமாக நிகழாத விஷயம் நிகழ்ந்தால் அதை நாம் அதிசயம் எ‎ன்கிறோம். அது போல் எல்லோராலும் செய்ய முடியாத ஒரு விஷயத்தை தனி மனிதனோ அல்லது குழுவோ செய்யும் போது அந்த விஷயத்தையும் அதிசயம் என்கிறோம். அது போல் மனிதனால் உருவாக்கப்பட்ட உலக அதிசயங்களைப் பற்றி கொஞ்சம் பேசுவோமா..?

உலக அதிசயங்களைப் பொருத்தவரை இரண்டு விதமாக ‏பிரிக்கலாம். 1. பண்டைய கால அதிசயங்கள் (Ancient Wonders)  2. நவீன கால அதிசயங்கள் (Modern Wonders). அவை எ‎ன்னென்ன....??

I. பண்டைய கால அதிசயங்கள் (Ancient wonders)
    1. எகிப்து பிரமிடுகள் (Egypt Pyramids)
    2. பாபிலோன் தொங்கும் தோட்டம் (Hanging gardens of Babylon)
    3. ஒலிம்பியா ஜீயஸ் சிலை (Statue of Zeus at Olympia)
    4. எபிசஸ் ஆர்டிமிஸ் கோவில் (Temple of Artemis at Ephesus)
    5. ஹாலிகர்னாஸஸ் மசூதி (Mosque at Halicarnassus)
    6. ரோட்ஸ் கொலோஸ்ஸஸ் சிலை (Colossus Statue at Rhodes)
    7. அலெக்ஸாண்ட்ரியா கலங்கரை விளக்கம் (Lighthouse at Alexandria)

இந்த பட்டியல் ஒருவர் தயாரித்தது அல்ல. பல கிரேக்க அறிஞர்கள் பல்வேறு தருணங்களில் தொகுத்து பிறகு ஒரு வழியாக முடிவு செய்யப்பட்ட பட்டியல்.


நவீன அதிசயங்கள் பற்றி சரியான, தெளிவான கருத்து  இல்லை. அவரவர் வசதிக்கும், இரசனைக்கும் ஏற்ப தொகுத்துக்கொண்டிருக்கிறார்கள். அவற்றில் பெரும்பாலானோரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நவீன அதிசயங்களை கீழே கொடுத்திருக்கிறே‎‎‎‎‎‎‎‎ன்.

II. நவீன அதிசயங்கள் (Modern wonders)
    1. இத்தாலியின் பிசா சாய்ந்த கோபுரம் (Pisa’s Tower)
    2. இந்தியாவின் தாஜ் மகால் (India’s Tajmahal)
    2. சீனப்பெருஞ்சுவர் (Great Wall of China)
    4. அமெரிக்காவின் எம்பயர் ஸ்டேட் கட்டிடம் (Empire State Building)
    5. கிரேக்க நாட்டில் உள்ள பார்த்தினான் (Greek’s Parthinan)
    6. ரோம் நகரத்தில் உள்ள கொலோசியம் (Rome’s Colosium)
    7. அமெரிக்காவின் லிபர்டி சிலை (America’s Liberty Statue)

சாரி..! இந்தப் பட்டியலில் 8-வது உலக அதிசயமாக ஐஸ்வர்யா ராய்-ஐ சேர்க்க முடியாது. பிறகு வரலாற்றுக்கு துரோகம் செய்தவ‎ன் ஆகிவிடுவேன்...!!

எல்லா உலக அதிசயங்களைப்பற்றியும் ஒரே நாளில் தெரிந்து கொள்ள நமக்கு நேரம் போதாததால், இன்று சீனப்பெருஞ்சுவர் பற்றி மட்டும் காண்போம்.


சீனப் பெ...ரு...ஞ்...சு...வ...ர்

பண்டைய உலக அதிசயங்களில் மிக மூத்தது எகிப்திய பிரடுகள் என்றால், நவீன கால அதிசயங்களில் “மூத்தவன் நான்தான்” என மார் தட்டக் கூடிய பெருமை உடையது சீனப் பெருஞ்சுவர். ஆமாம். இது கிட்டத்தட்ட 2200 ஆண்டு கால சரித்திரம் கொண்டது இந்தச் சுவர்..! இத்துடன் சீனப் பெருஞ்சுவருக்கு இன்னொரு தனி சிறப்பும் உண்டு. அது நிலவில் கால் வைத்த முதல் மனிதன் அங்கிருந்து பார்த்தபோது பூமியில் மனிதனால் உருவாக்கப்பட்ட அமைப்பு என அடையாளம் காண முடிந்த ஒரே “நிஜ அதிசயம்” என்று சொல்கிறார்கள்.  சுமார் 4200 மைல் (கிலோ மீட்டர் கணக்கில் 6757.8 கி.மீ..!) நீளத்திற்கும் கூடுதலான நீளம் கொண்டது இந்த மகா...... சுவர். டெல்லியிலிருந்து ரோம் நகரத்துக்கு விமானம் மூலம் பறந்தால் கூட இந்த தூரத்தைவிட குறைவான தூரம்தான் பயணம் செய்ய வேண்டியிருக்கும் என்றால் பாருங்களேன்..! ஆனால், இந்த சுவர் ஒரே நேர் கோடாய் இல்லாமல் அங்கங்கே வளைந்து, நெளிந்து, சுருண்டு, பள்ளத்தில் வீழ்ந்து, மீண்டும் சில இடங்களில் மலையேறி எ‎ன்று எல்லா ஜாலங்களையும் காட்டிக் கொண்டே தொடர்வதால் குறைந்த நிலப்பரப்பிவேயே அடங்கிப் போய் இருக்கிறது.

மற்ற எந்த அதிசயமும் போலன்றி இதைக் கட்டி முடிக்க 1800 ஆண்டுகள் பிடித்தன என்பதே இன்னொரு கவனிக்கத்தக்க அம்சம். கி.மு. 221-ல் தொடங்கிய இந்த சுவர் கட்டுமானம் கி.பி.1644 வரை நடந்தாக சரித்திரம் சொல்கிறது. அதாவது சீனாவை வேவ்வேறு கால கட்டங்களில் ஆண்ட மூன்று பேரரசுகளின் வாரிசுகள் பலரும் இந்தச் சுவரின் முக்கியத்துவம் அறிந்து இதில் கவனம் செலுத்தியுள்ளனர்.

காலச் சூழல் மாறியபடியே அடுத்தடுத்த சந்ததிகளின் தொழில்நுட்ப அறிவு வளர்ச்சிக்கு ஏற்றபடி இந்தச் சுவரின் பகுதிகளிலும் அதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள், கட்டப்பட்ட முறை என பலவற்றிலும் முன்னேற்றங்கள் காணப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. அது சரி..! இப்படி காலங்காலமாக அடுத்தடுத்து வந்த பலரும் எதற்காக இப்படி ஒரு நீளச் சுவரை எழுப்பக் கங்கணம் கட்டியது போல செலவிட்டார்கள் என்ற கேள்வி எழுகிறதல்லவா? இந்தச் சுவருக்கான அவசியம் அப்போது இருந்திருக்கிறது..! அது ஒரு சொல்ல மறந்த கதை..! (தங்கர் பச்சானின் படமல்ல இது..!)



தொடரும்.........

வெள்ளி, 15 ஜனவரி, 2010

நம்ப ”முடி”யவில்லை..!!




நண்பர்களே..!

இனி நீங்கள் யாரிடமாவது கோபப்பட்டால் எதிராளியை “நீ என் முடிக்கு சமம்..!” என்று வார்த்தையை விட்டு விடாதீர்கள். அது எவ்வளவு பெரிய தவறு என்பது இந்த பதிவை படித்தால் உங்களுக்கு புரியும்.

தலையின் வழுக்கையை மறைக்க உபயோகிக்கும் விக் பெரும்பாலும் மனிதர்களின் தலையிலிருந்து எடுக்கப்பட்ட உண்மையான முடியைக் கொண்டு தான் தயாரிக்கப்படுகிறது. செயற்கையாக தயாரிக்கப்படும் “விக்”குகளுக்கு மக்களிடையே அவ்வளவாக வரவேற்பு கிடையாது. உலகத்திலேயே விக் தயாரிப்பில் சீனாவுக்குத்தான் முதலிடம். அமெரிக்கா இரண்டாவது இடத்தைப் பிடிக்கிறது. ஐரோப்பா உள்ளிட்ட மேலை நாடுகளுக்கு மூன்றாவது இடம்.

விக் தயாரிப்பு இன்று ஒரு லாபகரமான தொழில். இந்தியாவில் இருந்து வருடம் ஒன்றுக்கு 250 கோடி ரூபாய்க்கு தலைமுடி ஏற்றுமதி செய்யப்படுகிறது (ஆண்டவா..!) இந்தியர்களின் முடி கருப்பாகவும், நீளமாகவும், அடர்த்தியாகவும் இருப்பதால்  அதை வாங்க வெளிநாடுகளுக்கிடையே போட்டியும், வரவேற்பும் அதிகம் (முடி விஷயத்தில் மட்டும் தான் என்று நினைக்கிறேன்..!). இந்தியாவில் முடி சேகரிக்கும் தொழில் ஒரு லாபமான குடிசைத் தொழிலாகவே வளர்ந்து விட்டது. தலை சீவும்போது சீப்பு மூலம் உதிர்ந்து வரும் முடி குப்பைக்குப் போகிறது. இந்த குப்பையிலிருந்து முடிகளைச் சேகரிக்க கூட ஆட்கள் உண்டு. இவ்வாறு சீப்பு மூலம் கழியும் முடி மட்டும் வருடத்திற்கு 4 யிரம் டன் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவிலிருக்கும் கோயில்களிலிருந்து மட்டும் ஆண்டுக்கு 500 டன் முடி கிடைக்கிறது.

உலகத்திலேயே பணக்கார சாமியான திருப்பதி ஏழுமலையான் கோவிலிருந்து மட்டும் ஆண்டுக்கு 300 டன் முடி கிடைக்கிறது. நல்ல ஆரோக்கியமாக உள்ள ஒரு கிலோ முடி எட்டாயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. (இனி பார்பரிடம் முடி வெட்டி விட்டு வரும் போது செலவுக்கு அவரிடமே பணமும் கேட்க வேண்டியது தான்..!). 6 பெண்களை மொட்டை அடித்தால் ஒரு கிலோ முடி கிடைக்கிறது (பெண்ணின் தலையைத்தான் சொன்னேனே தவிர பெண்ணுடைய  தந்தையின் தலையை அல்ல..!). முடியின் மதிப்பை வைத்தே தலை முடிக்கு கருப்புத் தங்கம் என்ற பெயரும் உண்டு.

இன்னும் ஒரு இனிப்பான ரகசியம் ரகசிய சொல்லட்டுமா..? சாக்லெட் தயாரிப்பதற்கு முடி மிகவும் அவசியம்..! முகம் சுளிக்காதீர்கள். சாக்லெட் தயாரிப்பதற்கு உபயோகப்படும் ஒரு வித ரசாயனம் முடியை ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் கொண்டு வரும் போது கிடைக்கிறது.

ஒரு எச்சரிக்கை: நல்ல ஆரோக்கியமாக உள்ள ஒரு கிலோ முடி எட்டாயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 6 பெண்களை மொட்டை அடித்தால் ஒரு கிலோ முடி கிடைக்கிறது என்பதன் மூலம் கையில் செலவுக்கு பணம் இல்லை என்றால் எத்தனை பேரை பிடிக்க வேண்டும், அதில் எத்தனை பேருக்கு மொட்டை அடிக்க வேண்டும் என்று தெரிந்து விட்டது. ஆனால் ஒரு விஷயத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும். நம் ஊர் அரசியல்வாதிகளுக்கு இந்த தகவல் கிடைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். “நாம் தினம், தினம் கோடிக்கணக்கான பேருக்கு மொட்டை அடிக்கிறோம், ஆனால் அதற்கேற்ற பைசா வருவதில்லையே..?!” என்ற சிந்தனையில் அவர்கள் இருக்கிறார்களாம். இந்த விஷயம் தெரிந்தால் பிறகு நமக்கு திண்டாட்டம்தான்..!!

இதெல்லாம் படிச்சிட்டு ”என்னால ”முடி”யலை...!!”ன்னு தானே சொல்றீங்க..?!! ஆவ்வ்வ்வ்வ்..!!!!





(பிடிச்சி) இருந்தாக்கா (ஓட்டு) அள்ளிக்கொடுங்க , இல்லாட்டி (பின்னூட்டத்தில்) சொல்லிக்கொடுங்க..!! 

 

செவ்வாய், 12 ஜனவரி, 2010

ஆணென்ன.. பெண்ணென்ன... எல்லாம் ஓரினம் தான்..!!





நண்பர்களே..!

நம் நாட்டில் உள்ள மிக முக்கியமான பிரச்சினைகளில் பெண் சிசுக்கொலையும் ஒ‎ன்று. விஞ்ஞானம் வளர்ந்த இந்த நவீன யுகத்திலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. படித்த குடும்பங்களில் கூட ஆண் குழந்தை எ‎‎ன்றால் சந்தோஷப் படுவதும், பெண் குழந்தை எ‎ன்றால் கவலைப்பட்டு, வெறுப்பதும் சர்வ சாதாரணமாகி விட்டது. அது மட்டுமல்லாமல் அந்த குழந்தையை பெறுவதை தாய் தா‎ன் நிர்ணயிப்பது போல எண்ணி அவளைக் கொடுமைப் படுத்துவதும்.. ஏ‎ன் கொலை கூட செய்வதும் நடக்கிறது. இதன் உண்மை நிலை பற்றி அறியாமல் நம்மவர்கள் செய்யும் அட்டகாசம் இருக்கிறதே சொல்லி மாளாது. நம்மில் இது பற்றி தெரிந்தவர்கள் நிறைய பேர் இருந்தாலும், தெரியாதவர்கள் சிலராவது இருப்பார்கள். அவர்களுக்கு இது உதவியாக இருக்கும். எந்த ஒரு விஷயத்திற்கும் பலதரப்பட்ட, எதிர்மறையான கருத்துக்கள், மூட நம்பிக்கைகள் இருப்பது இயல்பு. இந்த விஞ்ஞான உலகத்தில் எதையும் ராய்ந்து, உண்மை நிலை என்ன கண்டுபிடிப்பது என்பது சுலபமாகி விட்டது. எனவே விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப் பட்ட கருத்துக்களை ஏற்றுக்கொள்வது தான் ஏற்புடையதாக இருக்கும். சரி.. ! இனி நம் விஷயத்திற்கு வருவோம். கருவில் ஆண், பெண் பாலினம் எப்படி நிர்ணயிக்கப் படுகிறது..? அதைப் பற்றி கொஞ்சம் தெளிவாக காண்போம்.

குழந்தை பிறப்பை பொறுத்தவரை பாலினத்தில் மொத்தம் இரண்டே வாய்ப்புகளே. ஒன்று ஆண், மற்றது பெண் (அலி என்பது மிகவும் அரிதாக, மரபணுக்களுக்குள் நடக்கும் விபரீத மாற்றத்தினால் ஏற்படுவது. எனவே அதை நாம் விட்டு விடுவோம்). பெரும்பாலானாவர்கள் எண்ணுவது போல் ஆண், பெண் பாலினம் நிர்ணயிக்கப் படுவது விந்தணுக்களின் எண்ணிக்கையினால் அல்ல. ஒரு சொட்டு விந்தில் பல மில்லியன் கணக்கான விந்தணுக்கள் இருந்தாலும் அதில் ஒன்றே ஒன்று தான் கரு முட்டையை துளைத்து உள்ளே செ‎ன்று  கருவை உண்டாக்குகிறது. விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகமிருக்குமானால் விரைவில் கரு உண்டாக அதிக வாய்ப்பிருக்கிறதே தவிர, வேறு எதற்கும் சம்பந்தமில்லை.

உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினத்திற்கும் (தாவரத்தையும் சேர்த்து) அதன் தனித்தன்மையை (originality) உணர்த்த மரபணுவில் ஒரு விஷயம் உண்டு. அதற்கு குரோமோசோம் (Chromosome) என்று ங்கிலத்தில் சொல்வார்கள். ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒரு குறிப்பிட்ட இரட்டைப்படை எண்ணில் மட்டுமே குரோமோசோமின் எண்ணிக்கை இருக்கும். அந்த உயிரின் ஆண்பாலும், பெண்பாலும் தன்னில் பாதியாக குரோமோசோமை தந்து தன் இன உயிரியை உருவாக்குகின்றன. உதாரணத்திற்கு பாலுட்டிகளில் மனிதன்-46 குரோமோசோம்கள், தாவரத்தில் அவரைச்செடி-16. இதில் மனிதன் தன் இன உயிரியான இன்னொரு குழந்தையை உருவாக்க ஆணிலிருந்து 23 குரோமோசோம்களும், பெண்ணிலிருந்து 23 குரோமோசோம்களும் சேர்ந்து மனித உயிராக வருகிறது. 46 குரோமோசோம் என்றால் அது மனித உயிரினமாக இருக்குமே தவிர வேறு எதற்கும் வாய்ப்பில்லை.

அடுத்து இதில் ஆண், பெண் பால் எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? பிறக்கப் போவது ஆணா, பெண்ணா என்பது ஆணிடமிருந்து தான் தீர்மானிக்கப் படுகிறது எ‎ன்பது  எவ்வளவு ஆச்சரியமான உண்மை..! எப்படியென்றால் மனிதனிடம் (பாலுட்டிகளிடம்) ஆணிடத்தில் எப்போதும் XY என்ற குரோமோசோம்கள் தான் இருக்கும். அதே போல் பெண்ணிடம் எப்போதும் XX என்ற குரோமோசோம்கள் தான் இருக்கும். அதாவது,

ஆண் - XY
பெண்- XX

கலவியின் அடுத்து நடக்கும் கரு உருவாக்கத்தில் ஆணிடம் உள்ள Y குரோமோசோம் பெண்ணிடம் உள்ள X குரோமோசோமுடன் (கவனிக்கவும்: பெண்ணிடமிருந்து X குரோமோசோம்கள் மட்டும் இருப்பதால் X மட்டும் தான் வரும்) சேர்ந்தால் (XY) அது ஆண் குழந்தை. அல்லது ஆணிடம் உள்ள X குரோமோசோம் பெண்ணிடம் உள்ள X குரோமோசோமுடன் சேர்ந்தால் அது பெண் குழந்தை.

பெண் (XX)-ல் X----------------
ஆண் (XY)-ல் Y----------------- ===> X+Y= XY (ஆண் குழந்தை)


ஆண் (XY)-ல் X-----------------
பெண் (XX)-ல் X---------------- ===> X+X= XX (பெண் குழந்தை)


இந்த வாய்ப்பாடு எல்லா மாமியார்களுக்கும் தெரிந்தால் பெண் குழந்தைகளைப் பெற்றதற்காக தன் மருமகள்களைக் கொடுமைப் படுத்த மாட்டார்கள். காரணம் எந்தக் குழந்தை பெறுவது என்பது அந்த மாமியார் பெற்ற த‎ன் சீமந்த புத்திரன் கையில் தான் உள்ளது..! இதுவும் ஒரு வகையில் ஆண்டவனின் சித்து விளையாட்டுத்தான்..!!! 






Related Posts with Thumbnails