நேரம்:

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

இஸ்லாம் மார்க்கம் - ஒரு பார்வை (பகுதி-02)




இத்திரி ஆரம்பிக்க, தொடர்ந்து எழுத ஊக்கப்படுத்தியவர்களுக்கு என் நன்றிகள் உரித்தாகட்டும். இஸ்லாம் என்ற தலைப்பில் எழுதலாம் என்று தொடங்கிய நான் எதில் ஆரம்பிப்பது என்று குழப்பமாகிவிட்டது. காரணம், இஸ்லாம் பற்றி எழுத தொடங்கினால் ஆதி மனிதனான ஆதாம் நபி அவர்களிடமிருந்து தொடங்க வேண்டும். அந்த வரலாற்று நிகழ்வுகளை எழுத ஆரம்பித்தால் அத்தியாயம் அத்தியாயமாக எழுதலாம். சரி, இஸ்லாம் எழுச்சியுடன் வளர காரணமான இறுதி இறைத்தூதர் முகமது (ஸல்) அவர்களின் பிறப்பிலிருந்து எழுத ஆரம்பித்தாலும் அதை படிக்க எழுத நேரம் எனக்கும், உங்களுக்கும் வேண்டும். என் பிரச்சினையை தெரிந்தது போலவே நண்பர் தனக்கு தெரியாத விஷயங்களை கேள்வியாக கேட்டு பதிலளிக்க சொல்லியிருக்கிறார். இது மிகவும் எளிது. இதன் மூலம் மாற்று மத நண்பர்களின் மனதில் குடிகொண்டிருக்கும் குறிப்பிட்ட கேள்விகளுக்கு விடை கிடைத்து தெளிவு பெற வழி வகுக்கும். ஆனால், நண்பர் எழுப்பிய கேள்விகள் என்னை சற்றே மனம் வருந்த வைத்து விட்டது. எப்படி என்றால், ஒரே நாட்டில், ஒரே ஊரில், ஒரே தெருவில் தாயாய், பிள்ளையாய் மற்ற மத சகோதரர்களுடன் பின்னிப்பிணைந்து வாழ்ந்து வரும் இஸ்லாமியர்களின் வழிபாட்டுத்தலத்தை ஏதோ ஒரு மாயக்குகைக்குள் மந்திரக்கிளி இருக்குமோ என்ற தொனியில் கேட்டிருக்கிறார்கள். இதற்கு நான் இஸ்லாமியர்களைத் தான் குறை சொல்வேன். இஸ்லாத்தை மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்ல கடமைப்பட்ட அவர்கள் ஏதோ இமயத்தின் உச்சியில் இருப்பது போல் இருமாப்புடனும், மசூதியை மற்றவர்கள் காணக்கூடாத மாய உலகமாகவும் ஆக்கி வைத்திருக்கிறார்கள். இவர்களே இஸ்லாத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை என்பதில் எந்த ஐயமும் இல்லை.

சரி.. நாமும் விஷயத்திற்கு போகலாம். இறைவனை வணங்கும் மசூதியைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன் அதற்கு ஆதாரமுமான எல்லாம் வல்ல அல்லாஹ் (இறைவன்) யார்? அவனுடைய இயல்புகள் என்ன என்பதை சுருக்கமாக தெரிந்து கொள்வோம்.



அல்லாஹ் என்றால் என்ன..? அது யார்..??


நம்மில் பலரிடையே அல்லாஹ் என்றால் முஸ்லீம் கடவுள் என்ற எண்ணம் இருக்கிறது. அவர்கள் அப்படி சொல்லும் போது நான் அதை நகைச்சுவையாக எண்ணி சிரிப்பேன். எப்படி ஆங்கிலத்தில் கடவுளை காட் (God) என்றும், தமிழில் இறைவன், கடவுள் என்கிறோமோ அதே போல் அரபு மொழியில் அல்லாஹ் என்றால் இறைவன், கடவுள் என்று பொருள். சில நண்பர்கள் என்னிடம் "நமக்குள் ஒரே வித்தியாசம் தான். நீங்கள் அல்லாஹ்வை வணங்குகிறீர்கள், நாங்கள் கடவுளை வணங்குகிறோம்" என்பார்கள். ஆக, அவர்கள் சொல்வது போல் அல்லாஹ், கடவுள் என்ற பெயர் தானே வேறே தவிர மற்றபடி அர்த்தமும், ஆண்டவனும் ஒன்று தான். ஒரு ஊருக்கு பல வழிகள் இருக்கலாம். ஆனால், நாம் சென்று அடையும் போது அது ஒரே ஊர் தான்.



இறைவன் எப்படிப்பட்டவன்?


இந்த இறைவன் தான் இந்த உலகத்தை படைத்து, அதில் அனைத்து ஜீவராசிகளையும் படைத்து அருள்பாலிப்பவன். அவன் ஒருவன். தனித்தவன். அவனுக்கு ஈடு இணை கிடையாது. அவன் ஆணுமில்லை, பெண்ணுமில்லை (நம் கலாச்சாரத்தில் சமுதாயத்தில் புத்திகூர்மை, உழைப்பு, வலிமை என்று சிறப்பு குணங்கள் ஆணுக்கே என்று நினைப்பதால் பேச்சிலும், எழுத்திலும் இறைவனை ஆண்பாலில் குறிக்கிறோம்). அவனுக்கு வாரிசுகள் கிடையாது. அவனுக்கு பசி, தூக்கம், பலவீனங்கள், பிறப்பு, இறப்பு, தேவைகள் எதுவும் கிடையாது. அவன் ஒரு அளவிடமுடியாத மகா சக்தி. அவன் சக்திக்கு ஒரு உதாரணம் வேண்டுமென்றால் சொல்லி வைத்தது போல் அததன் வேலையை சரியாக செய்யும் பூமி, சூரியன், சந்திரன், கிரகங்கள், நட்சத்திரம் போன்ற எல்லாமே சொல்லலாம்.



மசூதி என்றால் என்ன..?


அரபு மொழியில் மஸ்ஜித் என்றால் இறைவனை வழிபடும் தலம் என்று பொருள். அதுவே தமிழில் பள்ளிவாசல், பள்ளிவாயில், மசூதி என்று அழைக்கப்படுகிறது. ஓரிறையை மட்டும் மனதில் நம்பிக்கை வைத்தவர்கள் சென்று இறைவனை வழிபடும் இடம் இது. முஸ்லீம்களின் ஐந்து கடமைகளில் ஒன்றான ஐவேளை தொழுகையை நிறைவேற்ற இங்கு தான் செல்வார்கள். இந்த மசூதிக்குள் யார் வேண்டுமானாலும் நுழையலாம், ஒரே ஒரு நிபந்தனை மட்டும் உண்டு. அவன் ஓரிறையை மட்டும் வணங்க வேண்டும். மற்றபடி சாதி, மொழி, இனம் போன்ற ஏற்றத்தாழ்வுகளுக்கு இங்கு வேலை இல்லை. மனித சமூகத்தின் சமத்துவத்தை நீங்கள் நேரில் காணவேண்டுமானால் முஸ்லீம்களின் தொழுகையின் போது காண வேண்டும். வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளை கொண்ட எல்லா மனிதர்களும் எந்த ஒரு பாகுபாடின்றி தோளோடு தோள் சேர்ந்து நிற்கும் போது அங்கு நெஞ்சை நிமிர்த்தி நிற்பது முஸ்லீம்கள் மட்டுல்ல, மானிட சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுகளுக்கு சாவு மணி அடிக்கும் மானுடமும் தான்!!



LOLLUVAATHIYAR:

நண்றி ஜாபர்
உங்கள் விளக்க அருமை
Quote:
Originally Posted by mehajaafar View Post
இஸ்லாமியர்களின் வழிபாட்டுத்தலத்தை ஏதோ ஒரு மாயக்குகைக்குள் மந்திரக்கிளி இருக்குமோ என்ற தொனியில் கேட்டிருக்கிறார்கள்.

நான் மசூதிக்குள் என்ன இருக்கும் என்று கேட்டது ஆர்வத்தினால்.
உன்மையை கூறுகிறேன். எங்கள் வீட்டுக்கு பக்கதிலேயே மசூதி இருக்கிறது.
ஆனால் நான் இதுவரை உள்ளே போனதே இல்லை.
உள்ளே பார்வையாளராக அனுமதிப்பார்களா என்று கூட எனக்கு தெரியாது என்பதை வெட்கத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.

அல்லா என்பது ஒரு பெயரல்ல, அது இரைவன் என்ற தகவல் தாங்கள் சொல்லிதான் தெரிந்தது.

தொடர்ந்து எழுதுங்கள், நாங்கள் தெரிந்து கொள்வோம். உங்களுக்கு இரைவனின் ஆசி கிட்டும்





கருத்துகள் இல்லை:

Related Posts with Thumbnails