நேரம்:

வியாழன், 12 ஆகஸ்ட், 2010

இஸ்லாம் மார்க்கம் - ஒரு பார்வை (பகுதி-04)






மசூதிக்குள் காலனியுடன் போகலாமா?

தொழுகைக்கு சுத்தமென்பது அவசியம். அது உடல் சுத்தம், உடை சுத்தம், மன சுத்தம் எல்லாவற்றையும் குறிக்கும். சுத்தத்தின் அடிப்படையாகக் கொண்டதே காலணியும். காலணியுடன் போனால் சுத்தத்திற்கு பங்கம் ஏற்படும் என்றால் வெளியில் விட்டுத்தான் செல்ல வேண்டும். நம் வீட்டிலும் அப்படித்தானே..!!

சில நேரங்களில் இட நெருக்கடி, சூழ்நிலை காரணத்தால் இந்த விஷயம் அனுசரிக்கப்படும். உதாரணத்திற்கு கூட்ட நெரிசலில் காலணி தொலைந்து போக, மாறிப்போக வாய்ப்பு இருந்தால் மசூதிக்குள் எடுத்துச் சென்று அதற்கான பகுதியில் வைக்கலாம். இஸ்லாம் சூழ்நிலை பொருட்டு நிறைய அனுசரித்துக் கொள்கிறது. தொழுக இடம் கிடைக்காவிட்டால், சூழ்நிலையின் காரணமாக மசூதி இல்லாவிட்டால் தொழுக வேண்டாம் என்று சொல்லாமல் கிடைத்த வழியில் பயன்படுத்த சொல்கிறது. வீட்டில், சாலைகளில், கப்பலில், விமானத்தில் என்று கிடைத்த இடத்தில் தொழுது கொள்ளலாம். வாகனங்களில் செல்லும் போது மட்டும் திசை நிரந்தரம் இல்லை என்பதால் அது விதிவிலக்கு. தொழுகைக்கு அவசியம் சுத்தம், வெளிச்சம்.


மசூதிக்குள் செல்பவர்கள் பெரும்பாலும் வெள்ளை ஜிப்பா அனிந்து போகிறார்கள்..ஏன்?

இறைவனுக்கு பிடித்த நிறமாக வெண்ணிறம் கருதப்படுகிறது. காரணம், அதன் தூய்மை. மற்ற உடைகள் அழுக்கடைவதை விட வெண்ணிற உடை மிக எளிதில் அழுக்கை எடுத்துக் காட்டும். தொழுகையின் போது கழுத்திலிருந்து முட்டிக்கால் வரை மூடியிருக்க வேண்டும் தொப்புள் தெரியக்கூடாது. கையில் மணிக்கட்டு வரை உடை மூடியிருந்தால் கூடுதல் சிறப்பு. மற்றபடி ஜிப்பா என்பது அவசியமில்லை. அது அவரவர் விருப்பம். 

குல்லாவுடன் தான் மசூதிக்குள் செல்ல அனுமதிப்பார்களா?

தொப்பி என்பது ஒரு சிறப்பு அடையாளம். அதை அணிந்து தான் தொழ வேண்டும் என்ற அவசியமில்லை. இஸ்லாத்தில் செய்யலாம், செய்யக்கூடாது என்று சில நிபந்தனைகள் உண்டு. அவை..
ஹலால்- அனுமதிக்கப்பட்டது
ஹராம்- தடுக்கப்பட்டது.
சுன்னத் - செய்தால் சிறப்பு, ஆனால் செய்யாவிட்டாலும் தவறில்லை.
பர்ளு - அவசியம் செய்ய வேண்டும். செய்யாவிட்டால் பாவம்.

இதில் தொப்பி விஷயம் சுன்னத் பிரிவில் சேரும்.


எனக்கு தெரிந்து பெண்கள் மசூதி பக்கம் பார்த்ததில்லை. பெண்கள் மசூதிக்குள் போகலாமா?
பெண்களுக்கு என்று தனி மசூதி இருகிறதா?

 
பெண்கள் மசூதிக்கு போய் தொழ தாராளமாய் அனுமதி இருக்கிறது. ஆனால், பெண்களுக்கு வீட்டு நிர்வாகம், குழந்தை வளர்ப்பு, சமையல், கணவனை கவனித்துக் கொள்ளுதல், வீட்டு பராமரிப்பு என்று பல பொறுப்புகள் வீட்டில் உள்ளதாலும், மாதாந்திர உபாதை உள்ளதாலும் தொழுகை ஆணைப்போல் அத்தனை கட்டாயமாக்கப்படவில்லை. ஆனால், தொழலாம். பெண்களுக்கென்று தனி மசூதி கிடையாது. அதே மசூதியில் தொழலாம். ஆனால், ஆண்களோடு இணைந்து தொழாமல் அவர்களுக்கான பகுதியில் தொழ வேண்டும். 

இந்து பெண்கள் மாதவிடாய் காலங்களில் கோவிலுக்கு போக மாட்டார்கள். அதே போல் உங்கள் மதத்திலும் பழக்கம் இருகிறதா.?
 
மாதாந்திர உபாதை என்பது உடல் கஷ்டத்தையும், அசுத்தத்தையும் குறிக்கும். இந்த இரண்டு நிலையில் உள்ளவர்கள் தொழ வேண்டும் என்று இஸ்லாம் சொல்லவில்லை.


ஊரில் இருக்கும் மசூதிக்குள் தொழுகை தெரியாத ஹிந்து பார்வையாளராக வரலாமா?

மசூதி என்பது இறைவனை வழிபடும் இடம். அங்கு ஒரு இந்து நண்பர் நிச்சயம் வணங்க வரமாட்டார். அப்படி அவர் இஸ்லாமிய கொள்கையில் பற்று கொண்டு வணங்க வந்தால் அவருக்கு எந்த தடையும் இல்லை. மற்றபடி சாதாரணமாக மற்ற பணிகளுக்காக மாற்றுமதத்தவர்கள் வர எந்த பிரச்சினையும் இல்லை. உதாரணத்திற்கு மசூதியை சீரமிக்கும் போது அவர்கள் வருவதில் எந்த தவறுமில்லை. நோக்கத்தை பொறுத்து நிபந்தனைகள் மாறுபடும்.

விசேச காலங்களில் மசூதியில் எங்கள் கோவிலில் தரபடுவது போல
பிரசாதம் ஏதாது உண்டா?

மசூதி என்பது இறைவனுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு அவனை வணங்கும் இடம். அதை தவிர மற்ற செயல்களுக்கு அங்கு அனுமதி இல்லை. அப்படி நீங்கள் நல்லது செய்யும் பொருட்டு ஏழைகளுக்கு உணவளித்தல், உதவி செய்தல் போன்றவை எந்த இடத்தில் இருந்து கொண்டும் செய்யலாம். காரணம், இறைவன் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை மட்டும் பார்ப்பதில்லை, உங்கள் உள்ளத்தில் என்ன இருக்கிறது என்றும் பார்க்கிறான்.

நீங்கள் சொன்ன பிரசாத விஷயம் தர்ஹாக்களில் காணப்படும். தர்ஹா என்பதின் பிரப்பிடமே கோயில்கள் தான். இந்து கலாச்சாரத்தில் ஊறிய மனிதர்கள் அவர்கள் இஸ்லாத்தை தழுவிய பிறகு பழைய கலாச்சாரத்தை மறக்க முடியாமல் அல்லது அதன் மூலம் பயன் அனுபவிக்க தோற்றுவித்தவை தான் தர்ஹா வழிபாடு என்பதும்.

தர்ஹா வழிப்பாட்டிற்கும் கோவில் வழிப்பாட்டிற்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு.

1. கோவிலில் கடவுள் சிலையாக இருப்பார். தர்ஹாவில் சமாதியாக இருப்பார்.
2. மாலை போட்டு சிலைக்கு அலங்காரம். பச்சை விரிப்பு, மல்லிகைப்பூ மாலை சமாதிக்கு அலங்காரம்.
3. தீப ஆராதனை நடக்கும். ஊதுபத்திகள் மூலம் ஆராதனை நடக்கும்.
4. லட்டு, பொங்கல், புளியோதரை போன்றவை பிரசாதம். சர்க்கரை, பேரீச்சம்பழம், பூந்தி ஆகியவை பிரசாதம். அதில் மல்லிகை பூக்கள் அவசியம் இருக்கும்.
5. தலையில் கை வைத்து ஆசீர்வாதம் செய்வார்கள். மயிலிறகால் தடவி ஆசீர்வாதம்.
6. காணிக்கை உண்டியல் இருக்கும். இங்கும் காணிக்கை உண்டியல் இருக்கும் (அது தானே எல்லாவற்றுக்கும் ஆதாரம்)
7. வருடம் ஒரு முறை திருவிழா நடக்கும். இங்கும் கந்தூரிவிழா என்ற பெயரில் நடக்கும்.
8. திருவிழாவுக்கு முன் காப்பு கட்டப்படும். கந்தூரிக்கு முன் கொடி ஏற்றப்படும்.
9. திருவிழாவில் தேர் இழுக்கப்படும். இங்கு சந்தனக்கூடு என்ற பெயரில் அலங்கார கோபுரம் இழுக்கப்படும்.
10. முடி பொருட்கள் போன்ற காணிக்கைகள் உண்டு. இங்கும் அவை எல்லாம் உண்டு.

இப்படி நிறைய அடுக்கிக் கொண்டே போகலாம். நான் மேலே குறிப்பிட்டிருக்கும் விஷயங்கள் யாருடைய மனம் புண்படும் பொருட்டு குறிப்பிடவில்லை. என் பகுத்தறிவுக்கு தர்ஹா வழிபாடு ஏன் ஏற்புடையதில்லை என்பதை இஸ்லாம் வழியாக சொல்ல முயன்றிருக்கிறேன். மற்ற மத நம்பிக்கைகளை காயப்படுத்துவதை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது. அப்படி ஏதேனும் தாங்கள் உணர்ந்தால் சுட்டிக்காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்.

வாத்தியார் அவர்களே..! உங்கள் கேள்விகளில் எந்த சிறுபிள்ளைத்தனமும் இல்லை. மனிதனின் சிறப்பே பகுத்தறிவு தான். அதைச் செய்யத்தூண்டும் எந்த செயலும் சின்னத்தனம் இல்லை. இப்படி பலருக்கும் புரியாத, தெரியாத விஷயங்களை விளக்க வாய்ப்புக் கொடுத்த உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.




அக்னி:
பர்ளு என்றால் என்ன? மேலே கூறியுள்ளீர்கள் ஆனால் விளக்கம் இல்லை. 



 LOLLUVAATHIYAR:
அருமையான விளக்க ஜாபர் அவர்களே
தர்காவுக்கும் மசூதிக்கும் நீங்கள் வித்தியாசம் காட்டி இருகிறீர்கள்.
எனக்கு இப்பொழுதுதான் தர்கா என்றால் என்ன என்று தெரிந்தது
(நான் அதுவும் ஒரு மசூதி என்று நினைத்தேன்)

இஸ்லாத்தில் கூறபட்டுள்ள உன்மைகளை நீங்கள் கூறும் போது அது யாருடைய மனதையும் புன்படுத்தாது.


உங்கள் பதிலில் இருந்து சில சந்தேகம்


Quote:
Originally Posted by mehajaafar View Post

இஸ்லாத்தில் செய்யலாம், செய்யக்கூடாது என்று சில நிபந்தனைகள் உண்டு. அவை..
ஹலால்- அனுமதிக்கப்பட்டது
ஹராம்- தடுக்கப்பட்டது.
சுன்னத் - செய்தால் சிறப்பு, ஆனால் செய்யாவிட்டாலும் தவறில்லை.
பர்ளு - அவசியம் செய்ய வேண்டும். செய்யாவிட்டால் பாவம்.
இவற்றில் எனக்கு சுன்னத என்றால் என்ன என்றூ மட்டுமே தெரியும்



உலக முஸ்லீமகளை பற்றி எனக்கு தெரிந்து கொள்ள ஆர்வமில்லை.

இந்திய முஸ்லீம்கள் பற்றி தான் தெரிந்து கொள்ள ஆர்வம்.

என் அடுத்த சந்தேகம் இஸ்லாம பிரிவுகள் பற்றி

சியா , சன்னி என்ற பிரிவுகள் இருப்பது அனைவரும் அறிந்ததே. இவை இரண்டுக்கும் என்ன வித்தியாசம் (இருவருக்கும் அல்லா தானெ கடவுள்) ஷியா சன்னி இருவருக்கும் மசூதி வழிபாடு அமைப்பு ஒன்றுதானா
இது போன்ற வேறு பிரிவுகள் இருகிறதா?
இந்தியாவில் இருக்கும் பிரிவு என்ன (ஷியா, சன்னியா அல்லது வேறு ஏதாவது பிரிவா)

கருத்துகள் இல்லை:

Related Posts with Thumbnails